தேசிய கல்வியியல் கல்லூரி கற்கை நெறியை வெற்றிகரமாகப் பூரணப்படுத்திய 4286 பேருக்கு ஞாயிற்றுக் கிழமை நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்த நியமனங்கள் உள்ளீர்ப்பு வர்தமானி அறிவித்தலுக்கு முரணாக கல்வி அமைச்சு அதிகாரிகளின் கண்மூடித் தனமான தீர்மானமாக பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான உள்ளெடுப்புச் செய்யபட்டவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நியமனங்கள் உள்ளீர்ப்பு வர்த்தமானி அறிவித்தலை புறந்தள்ளி தான்தோன்றித் தனமான தீர்மானத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதகா ஸ்டாலின் குற்றம் சாட்டிள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், 2015 மே 8 ஆம் திகதி 1914 ஆம் இலக்க வர்த்தமானியின் உப அறிவித்தல் 6.1.1 க்கு ஏற்ப 2015 ஆம் ஆண்டு உள்ளீர்க்கப்படுவதற்கான அடிப்படையாக குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் 2018 ஆம் ஆண்டு நிலவும் வெற்றிடங்கள் கருதப்பட்டன.
இதன் படி பிரதேசத்திற்குப் பிரதேசம் இஸட் புள்ளிகளும் வேறுபட்டன.
வெற்றிடம் காணப்படும் பிரதேசத்தில் இஸட் புள்ளி அடிப்படையில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் வெற்றிடம் காணப்படாத போது கூடுதலான இஸட் புள்ளிகள் இருப்பினும் அவரை தேசிய கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளவில்லை.
இதனால் உயர் இஸட் புள்ளி வெற்றவர்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஞாயிறு நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தேசிய பாடசாலைகளுக்கே நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். 10174 மொத்த பாடசாலைகளில் வெறும் 353 தேசிய பாடசாலைகளே காணப்படுகின்றன.
இருப்பினும் 4286 ஆசிரியர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இந்த 353 பாடசாலைகளில் நியமித்திருப்பது எந்த வகையில் நியாயமானது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாம் கோரிய பிரதேச பாடசாலை அன்றி ஊவா மாகாண ஆசிரிருக்கு மேல்மாகாணத்திலும் வடக்கு மாகாண ஆசிரியருக்கு ஊவா மாகாணத்திலும் வட மத்திய மாகாண ஆசிரியர்கள் வேறு தூர மாகாணங்களுக்கும் என நியமிக்கப்பட்டுள்ளமையினால் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் பெரும் விசனம் அடைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளதோடு இந்நிலமை சரி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு பொருத்தமற்ற வகையில் நியமிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுக்கான ஒழுங்குமுறை ஒன்று ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் பொருத்தமான வகையில் மீள் நிலைப்படுத்தல் வழங்கப்படல் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான நியமனங்களுக்கான தேசிய கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைக்கு வர வேண்டும் என்றும ்அவர் கோரியுள்ளார்.