நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் விரைவில் புதிதாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 2,000 பேருக்கு புதிதாக அதிபர் நியமனங்கள் விரைவில் வழங்கப்படுமெனவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதேவேளை,விஞ்ஞானம் மற்றும் கணித பாட கற்கைநெறிகளுக்காக மேலும் 2 புதிய கல்வியியல் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சிகளைப் பெற்ற 4,286 பேருக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. ஆசிரிய நியமனங்களை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க 2 கல்வியியல் கல்லூரிகளை அமைப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இதுவரையில் நாட்டில் 20 கல்வியியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதை துரிதமாக்கி ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 4,000 அதிபர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் 2,000 பேருக்கு அதிபர் நியமனங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வித்துறையில் மனித வள மற்றும் பௌதீக வளத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (Thinakaran)