தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதற்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன.
பிரதேசத்தின் பாடசாலையில் காணப்படும் வெற்றிடங்களின் படி கணிப்பிடப்பட்ட ஆளணியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகப்பரீட்சை இவ்வாரம் ஆரம்பமாகியுள்ளது.
ஏனைய வருடங்களை விட இம்முறை விண்ணப்ப படிவம் நிகழ்நிலையில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று கோரப்பட்டு பின்னர் அது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
2016,2017 ஆகிய இரு வருடங்களும் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய சுமார் 8000 மாணவர்கள் இவ்வாறு உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
ஒவ்வொரு பாடங்களுக்கும் குறிப்பிட்ட தேசிய கல்வியியல் கல்லூரிகளில் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. அக்கல்லூரிகள் குறித்த நேர்முகப்பரீட்சையில் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்கான பொறுப்பானவர்கள் எனலாம்.
நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அழைப்புக்கடிதங்கள் கிடைத்துள்ளன.
ஆனால் அனைத்துத் தகைமை இருந்தும், உயர்ந்த இஸட் புள்ளிகள் பெற்றும் அழைப்புக்கடிதங்கள் கிடைக்காத பலர் தமது விண்ணப்பத்திற்கு என்ன நடந்து என அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றதை அவதானிக்க முடிகின்றது.
பிரதேச பாடசாலையில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் உள்ளீர்ப்பு நடைபெற்றாலும், ஒரே பிரதேசத்தில் ஒரே பாடத்திற்கு விண்ணப்பித்த குறைந்த இஸட் புள்ளிகளைக் கொண்டவருக்கு அழைப்புக்கடிதம் கிடைக்கப்பெற்றுள்ள அதே வேளை ஒப்பீட்டளவில் உயர்ந்த இஸட் புள்ளிகள் பெற்றுள்ளவர்களுக்கு அழைப்புக்கடிதம் கிடைக்காத சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
கல்வி அமைச்சிடம் இது குறித்து விசாரித்த போது, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படமாட்டாது என்று ஒற்றை வார்த்தையில் கல்வி அமைச்சு பதிலளித்துவருகின்றது.
குறித்த நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலின் முழுவடிவம் கல்வி அமைச்சிடம் மிக இரகசியமாக இருக்கின்றதாக அறியமுடிகின்றது. அதிலிருந்து ஒவ்வொரு பாடங்களுக்கும் ஒவ்வொரு கல்லூரி என நேர்முகப்பரீட்சைக்கான பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் விண்ணப்பம் நிராகரிக்க்பபட்டவர்களுக்கு எந்த அறிவிப்பும் கல்வி அமைச்சு செய்ய வில்லை.
நேர்முகப்பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களது பெயர்பட்டியலை பகிரங்கமாக வெளியிடப்படவல்லை என்பதோடு இணையத்தள வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு என்ன நடைபெற்றது என்றும் மர்மமாகவே உள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சிடம் வினவியபோது,
எமக்கு கிடைத்தவற்றில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் நாம் எவ்வாறு பதிலளிப்பது என குழந்தைத் தனமான பதிலையே வழங்குகின்றனர்.
ஒன்லைன் விண்ணப்பங்கள் ஒரு பரீட்சார்த்த முயற்சி, அதனை நாம் எதற்கும் பயன்படுத்தப் போவதில்லை என்றும் கல்வி அமைச்சு விளக்கம் அளித்தது.
நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டும் கடிதம் உரிய நேரத்தில் கிடைக்காத, அல்லது ஏதோ ஒரு காரணத்தால் கடிதம் கிடைக்காத விண்ணப்பதாரியின் நிலை என்ன என்பதை கல்வி அமைச்சு தெளிவுபடுத்த மறுக்கிறது.
ஆனால், குறித்த பாடநெறிக்கு போதுமான மாணவர்கள் தெரிவு செய்யப்படாதபோது, அடுத்த கட்டத்திலுள்ளவர்கள் சிலருக்கு நேர்முகப்பரீட்சை நடைபெற்று அவர்கள் உள்வாங்கப்படுவர் என்பதை தேசிய கல்வியல் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டாவது பட்டியல் தொடர்பாக நீண்டகாலமாக சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவதை கல்வித் துறையில் அனுபவம் உள்ள எவரும் அறிவர்.
இந்தக் குழப்பங்களையும் சந்தேகங்களையும் நீக்கும் வகையில் கல்வி அமைச்சு விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் தமது விண்ணப்பம் தொடர்பான விபரங்களை அறியும் வகையில் நேர்முகப்பரீட்சை பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
அல்லது
தெரிவு செய்யப்படாதவர்களுக்கு அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டடு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.
அநீதி இழைக்கப்படமாட்டாது என்று உறுதியாகக் கூறும் வகையில் இந்த நேர்முகப்பரீட்சைக்கான நடைமுறைகள் காணப்படவில்லை என்பதை பலரும் அழுத்தமாக பதிந்து வருகின்றனர்.