கல்வியின் மெக்கா பின்லாந்து
(இது யாருடைய வகுப்பறை எனும் நூலில் இருந்து)
யுனிசெப் அமைப்பு உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய ஒரு தரவரிசையை 2006ல் வெளியிட்டது. அதற்குக் கிடைத்த ஆதரவால் அவ் வகை முடிவுகளைப் பின் ஆண்டு தோறும் வெளியிட்டது. தென்கிழக்கு ஆசியாவின் குழந்தைகள் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்த மதிப் பெண் பெற்றாலும், அப்பாடங்களை ஆர்வம், மகிழ்ச்சி, தன் ஈடுபாட்டோடு கற்பதில் கடைசிக்குத் தள்ளப்பட்டனர். கணிதமும், அறிவியலும் தேர்வு அடிப் படையில் பெரிய அளவிற்கு உயர்த்திப் பிடிக்கப்பட்டாலும் இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் நோபல் பரிசு அறிவியலில் பெறுவது வரை செல்லும் அறி வியல் ஆர்வம் பூஜ்யத்தை விட சில புள்ளிகளே அதிகம் இது சீனா, ஜப்பான், மற்றும் கொரியாவுக்கும் பொருந்தும். உலகிலேயே குழந்தைகள் மகிழ்ச் சியாகக் கற்கும் அந்தத் தர வரிசையில் பின்லாந்தின் இடம் என்ன ? கல்வி மதிப்பெண் வரிசையில் தொடர்ந்து முதலிடமோ அல்லது இராண்டாமிடமோ வகிக்கும் அந்த நாடு யுனிசெப் மகிழ்ச்சி அட்டவணையில் கூட மூன்றாமிடத் தில் இருப்பதுதான் உலக அளவில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது.
ஏற்கெனவே பல்கலைக்கழகப் பட்டம் ஒரு நாட்டில் ஏறத்தாழ எல்லாரும் 100 சதவீதம் பெறுகிற உலகின் ஒரே நாடாக பின்லாந்து உள்ளது. தொழில் வளர்ச்சி, தனிமனித வருமானம் ஆகியவற்றில் தன்னிறைவு. “நோக்கியா” உட்பட உலகப் பொருளாதார ஜாம்பவான் நிறுவனங்களின் பங்குகளை பின் லாந்து அரசே தன் வசம் வைத்துள்ள அளவுக்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்ட நாடு அது. எழுத்தறிவு என்பது இன்னும் பாதி மக்கள் தொகைக்குச் சற்றுக் கூடுதலாக இருக்கும் நம் நாட்டோடு ஒப்பிட்டுப் பார்ப்பது பொருந்தாது என்றாலும், இதே கட்சி ஜனநாயக பாரளுமன்ற ஆட்சி அதிகாரம், அரசியல் சட்டம் கொண்ட நாட்டில் கல்வி இவ்வளவு உயரத்திற்குச் சென்றுள்ளதால் அடிப்படைகளை நாம் கண்டிப்பாக ஆராய்ந்து அறிய வேண்டும்.
நாம் மட்டுமல்ல, பின்லாந்தில் என்ன நடக்கிறது? வகுப்பறை ரகசியம் என்ன என்பதைக் காண உலகமே அதை நோக்கி விரைகிறது. இன்றைய கார்ப்பரேட் உலகில் கல்விச் சுற்றுலா என்பதே அந்த நாட்டிற்கு இன்று 27 சதவிகித அந்நியச் செலாவணி வருமானத்தை வாரி வழங்குமளவிற்கு அந்த நாட்டு வகுப்பறையைப் பார்த்து கற்றுக் கொள்ள ஆண்டுதோறும் நேரடியாக அங்கே விஜயம் செய்யும் கல்வியாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சிங்கப்பூர் குழந்தைகள் இலக்கிய சர்வதேச எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் குழுமத்தின் மாநாடு ஒன்றில் பின்லாந்தின் பதினொரு ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தார்கள். அவர்களோடு நம் பாணியில் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பினிஷ் எனும் மொழியே அங்கே ஆட்சி அதிகார மக்கள் மொழி என்றாலும் பின்லாந்தின். ஆசிரியர்கள் பிரஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறன் பெற்றிருக்கிறார்கள்.
ஆண்டுக்கு சுமார் 15,000 வெளிநாட்டுப் பிரிநிதிகள் பின்லாந்தின் பள்ளிக்கல்வி குறித்து அறிந்து வர உலகின் சுமார் 56 நாடுகளிலிருந்து படை எடுக்கிறார்கள். உண்மையிலேயே நாம் கற்றுக் கொள்ள பல பாடங்கள் உண்டு. என்னைக் கவர்ந்த முதல் விஷயம் பின்லாந்தில் ஒருகுழந்தை பள்ளிக்கு அனுப்பப்படும் வயது ஏழு! நம் ஊரில் பிறக்கும்போதே ஒரு நர்சரிப் பள்ளியில்… சரி மீதியை நான் எழுதத் தேவையில்லை. பின்லாந்தின் கல்விமுறை தேர்வுகளே இல்லாத கல்விமுறை. அனைத்து வகைத் திறமையான குழந்தைகளும் ஒரே வகுப்பில் பயில்கின்றன. நமது ஏணிப்படி முறை கல்வி பின்லாந்தின் அடிப்ப்டையாகும்.
13 வயது ஆகும் வரை வகுப்பில் யார் முதல் , யார் எந்த இடம் என தரம் பிரிப்பதே கிடையாது. அப்படி அந்த வயதில் பிரித்து சொல்ல வேண்டுமானால்; பெற்றோர்கள் முறைப்படி விண்ணப்பித்தால் மட்டுமே சொல்வார்கள். ஒவ்வொரு திறனுக்கும் ( கவனிக்க: பாடமில்லை திறன் !!) 7, 8 பாடப்புத்தகங்கள் இருக்கும் , அதில் எதையும் தேர்ந்தெடுக்கும் உரிமை குழந்தைக்கு மட்டுமே உண்டு.
ஏழு வயதில் பள்ளிக்கு வரும் ஒரு குழந்தை முதலில் 3 ஆண்டுக்கு பாதி வருடங்களுக்கு பாதி நாட்களுக்கு மேல் ஏராளமான விடுமுறை. எக்கச்சக்கமான இசை, ஓவியம், விளையாட்டு, ஜிம், கொஞ்சமாக எழுத, கணக்கிட, படிக்க, கற்க என பள்ளிக்கூட அமைப்பு செயல்படுகிறது.
உயர்நிலைப்பள்ளியை வருட அடிப்படையில் கடக்கும் ஒரு மாணவர், தான் 4 வது உயர்நிலைப் படிநிலையில் இருந்தாலும் தேவைப்பட்டால் ஒரு வாரம் முதல் படிநிலைக்கு சென்று ஒரு அடிப்படையை கற்று திரும்ப வரவும் வசதி உள்ளது. இத்தககைய சுதந்திரத்தை மாணவர்களே சுயமாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
எந்த போட்டியும் இல்லாத கற்றல்முறை அமலில் உள்ள பின்லாந்தில் என்னை அதிர்ச்சி அடைய வைத்த விசயத்திற்கு வருகிறேன். அங்கே கல்வி முழுக்க முழுக்க அரசே நடத்தும் விசயமாக உள்ளது. திருவாளர் டோமிஷ் ரெய்னர் – இவர் ஜெர்மனிக்காரர். பின்லாந்தில் ஆசிரியராக இருக்கிறார். இந்திய தனியார் பள்ளிகளை பற்றி நான் குறிப்பிட்டபோது அதிர்ச்சி அடைந்தார். அரசே பள்ளிகள் நடத்தும்போது இவர்களிடம் ஏன் போக வேண்டும் என கேட்டதற்கு என்னிடம் பதில் இல்லை. அரசு தான் அளிக்கும் கல்வியில் சுணக்கம் காட்டுகிறதோ என்பதை அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டார்கள். ஒரு தனியார் பள்ளிக்கூடம் இல்லாத பின்லாந்தில் தனி கவன டியூசன் என்ற பேச்சுக்கே இடமில்லை! தனது ஜெர்மனியை விட இந்த விசயத்தில் பின்லாந்தே சிறந்தது என்றார் ரெய்னர். ஹெலன்ஸ்கி எனும் பின்லாந்தின் மாகாணத்தில் வாண்டா எனும் பெரிய நகரில் வியர்போலா எனும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவாளார் பெக்க கெய்ஸ்மன் , என்னோடு பகிர்ந்த விசயங்களை கோர்வையாக உங்களுக்கு வழங்குவது கொஞ்சம் சிரமம்தான். ஒரு தலைமையாசிரியர் சர்க்கஸின் பபூன் போன்றவர் என்கிறார் கெய்ஸ்மன். எல்லொரையும் சிரிக்க வைப்பவர் மாதிரிதான் அவர் தெரிவார். ஆனால் யானை மீது சவாரி செய்யும் ஆள் வரவில்லையெனில் என்றால் இவருக்கு ஏறத்தெரிய வேண்டும். அதாவது , பள்ளிக்கூட வாட்ச்மேன் முதல் ஒரு திறன்மிக்க ஆசிரியர் வரை எல்லொரது வேலையிலும் ஈடுபடவும், அதேசமயம் எப்பொதும் குழந்தைகளை சுமை மறந்து குதூகலிக்க வைக்கவுமான நெருக்கத்தைப் பேணவும் வேண்டும்.
தேர்வுகளை அடிப்படையாகக் கொள்ளாத ஒரு கல்வி முறையில் குழந்தைகள் உலக அளவிலான தேர்வில் முதலிடம் பெறுவது நகைமுரண். இவர்களுக்கு அதற்காக எந்த பிரத்யேக பயிற்சியும் கிடையாது என்று அவர் மாநாட்டில் குறிப்பிட்டபோது அங்கே கூடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளிக்கூடம் பற்றி பிற விஷயங்களில் என்னைக் கவர்ந்தவை;
1. பின்லாந்து பள்ளிகளில் குழந்தைகள் வகுப்பறைக்குள் செருப்பு அணிந்து வருவதில்லை.வீட்டைப் போலவே உணர வெறுங்காலொடு மகிழ்ச்சியாக சுற்றுக்கிறார்கள்!
2. வீட்டுப்பாடம் என்பது குழந்தைகள் எதை விரும்பிச் செய்தாலும் அதுதான் வீட்டுப்பாடம். ஆசிரியர் பிரேத்யேகமாக வீட்டுப்பாடம் தருவது கிடையாது.
3. தனிப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்குமான மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும் அவர்களது ஆரோக்கியத்தைப் பேணவும் பள்ளியில் மருத்துவ ஆலோசகர் உண்டு.
4. வகுப்பறை நகரும் தன்மை கொண்ட குழுவாக இருக்கிறது என்றாலும் அங்கே தொழில்நுட்ப வகுப்பறை என்கிற பம்மாத்து இல்லை. ஆசிரியர்கள் நம் நாட்டைப் போலவே, சாக்பீஸ், கரும்பலகை வாய்மொழி பயிற்றுமுறையையே கடைபிடிக்கிறார்கள். காகிதங்களை அடிப்படையாகக் கொண்டதே அவர்களது வகுப்பு பங்கேற்றல்.
5. வகுப்பறைகளைக் கணினி மயமாக்காத வளர்ந்த நாடாக இன்றும் பின்லாந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை வளர்ந்த நாடுகள் (குறிப்பாக அமெரிக்க கல்வியாளர்கள்) கேலி செய்கின்றனர்.
ஆனால் மாற்றங்கள் வராமலில்லை. உலக அளவிளான நெருக்கடியால் பின்லாந்து பெற்றோர்கள் பள்ளிகளுக்குப் பலவகையில் படை எடுத்து வீட்டுப்பாடம், தேர்வுமுறை ஆகியவற்றில் மாற்றங்கள் கோருகிறார்கள். என்றாலும் கியூபா, வெனிசுவேலா போன்ற நாடுகள் நேரடியாக பின்லாந்தின் கல்விமுறையைத் தனது பிரஜைகளிடம் அமல்படுத்தி வெற்றி கண்டதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பின்லாந்து கல்வி மாதிரியை நமக்கு நன்றாகத் தெரிந்த காரணங்களுக்காக, கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றன.
பின்லாந்தின் குழந்தைகளை, கல்வி, குழந்தைகளாக மட்டுமே நடத்துகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இதெல்லாம் அங்கே எப்படி சாத்தியம்.சமூக விழிப்புணர்வுத் தர வரிசை குழந்தைகள் உரிமை குறித்த விழிப்புணர்வில் நடத்தப்பட்டால் பின்லாந்து கண்டிப்பாக அதில் முதலிடம் பெறும். வயதுக்கு மிஞ்சிய வேலைகள் செய்வதை சாதனை என்றோ வேகமான துரிதமான வளர்ச்சியைக் காட்டும் போஷாக்கு பானங்கள் விளம்பரத்தையோ நீங்கள் பின்லாந்தில் கொடுத்துவிட்டுச் சட்டத்திடமிருந்து தப்ப முடியாது.
ஆசிரியர் பயிற்சி என்பது பின்லாந்தின் பாடங்களிலேயே நாம் கற்க வேண்டிய முக்கிய அம்சமாகும். எந்த அளவிற்குக் கல்வி அங்கே குழ்ந்தை மையக் கல்வியாகச் செயலூக்கம் பெற்றுள்ளதோ அந்த அளவிற்கு ஆசிரியர்களிடமிருந்து மிக அதிகப் பங்களிப்பை அது ஒரு நிபந்தனையாகக் கொண்டுள்ளது. பின்லாந்தில் ஒரு ஆசிரியராக இருப்பது நம் நாட்டில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குச் சமமான அந்தஸ்தை வழங்குகிறது. காரணம் அவர்களுக்கு தரப்படும் ஊதியம். ஆனால் அது மட்டும் அல்ல. அந்த நாடு ஆசிரியர்களை முழுமையாக நம்புகிறது. தேசிய பட்ஜெட் தயாரிப்பிலிருந்து அயல் விவகாரம் வரை அனைத்து வகை குழுக்களிலும் உயர்மட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களும் இடம் பெறுவதை அந்த நாட்டு சட்டம் கட்டாயமக்குகிறது.
ஆனால் ஆசிரியர் ஆவது அவ்வளவு சுலபமல்ல. நம் நாட்டைப் போல ”போக்கற்றவனுக்குப் போலீஸ் வேலை, வக்கற்றவனக்கு வாத்தியார் வேலை” எனும் அணுகுமுறை அங்கு இல்லை. இப்போது நம் நாட்டில் அது மாறி வருகிறது என்றாலும் அங்கே பின்லாந்து பள்ளிக் குழந்தைகளிடையே மூன்று குழந்தைகளில் ஒருவர் ஆசிரியர் ஆவதைத் தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆசிரியர் ஆவதற்கான தேசிய அளவு பயிற்சிக்குப் பள்ளி முடித்தபின் ஐந்து வருடங்கள் அதற்கான பிரேத்யேக உறைவிடப் பள்ளிகளில் கடும் பயிற்சி தரப்படுகிறது. கல்வி முழுக்கவும் அரசு சார்ந்தது என்பதால் இந்த ஆசிரியர் பயிற்சி நிலையங்கள்( அவற்றைக் கல்லூரி என்று அவர்கள் அழைப்பது கிடையாது; அதில் நுழைய ஒரு நுழைவு தேர்வும் கிடையாது) தன் விருப்ப ஆசிரிய முனைப்பு உளவியல் சார்ந்த முப்பது பக்க சுயவிபரக் கேள்விகளைக் கொடுத்து உங்களுக்கு அதற்கான மன உந்துதல், குழந்தைகள் நேசத்திற்கான இயல்பு உள்ளதா என பரிசோதித்து ஆசிரியர் பயிற்சியாளர்களைத் தேர்வு செய்து கொள்கின்றன.
இதைத் தவிர ஆறுமாதம் ராணுவப் பயிற்சி, ஒரு முழு வருடம், விதவிதமான பள்ளிகளில் நேரடி வகுப்பறைத் திறனாக்கப் பயிற்சி, ஏதவாது ஒரு பாடத்தில் செயல்திட்டம், குழந்தை உரிமைகள் பயிலரங்கம் நாட்டின் சட்டதிட்டங்கள் குறித்த தேசிய அமைப்புகளிடமிருந்து பங்கேற்புச் சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி (மருத்துவத் துறை சான்று) என ஒரு ஆசிரியர் முழுமை பெறுகிறார். ஒரு பள்ளியில் மாணவர்களின் ஆகக் கூடுதல் அறுநூறு மாணவர்களைத் தாண்டக்கூடாது. பதினேழு பேர் படித்தாலும் உள்ளுர் அளவில் பள்ளிகளை மூடக்கூடாது. ஒரு வகுப்பறையில் கூடுதலாக 26 மாணவர்கள் இருக்கலாம். ஆசிரியர் – மாணவர் விகிதாசார அடிப்படையில் பின்லாந்து உலகத்தின் ராஜா!
குறிப்பு: இது யாருடைய வகுப்பறை எனும் நூலிலிருந்து