தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து பல்வேறு துறைகளும் பாதிப்படைய ஆரம்பித்துள்ளன.
பொருளாதாரம், அரச நிர்வாகம், சுற்றுலா என்ற பட்டியலில் கல்வித் துறையும் இடம்பிடித்துள்ளது.
புதிய அரசாங்கத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக திரு. விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை அடுத்து கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி இருப்பினும் மிக முக்கியான கடமைகள் தொடர்பான இழுபறி நிலை உருவாகியுள்ளது.
வருடாவரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும் இலவச சீருடை கடந்த வருடங்களில் வவுசர்களாக வழங்கப்பட்டன. திரு. விஜேதாச பதவி ஏற்றதும் சீருடை வவுசர் முறை நீக்கப்பட்டு சீருடைத் துணி வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். இருப்பினும் குறிப்பிட்ட இக்காலப்பகுதிக்குள் சீருடையை வினியோகிப்பது சாத்தியமற்றது என தெரிவருகின்றது.
பாடநூல்கள் அச்சிட்டு வினியோகம் வருட இறுதியில் ஆரம்பித்து விடுவது வழக்கம். ஆனால் புதிய அமைச்சர் பதவி ஏற்றதன் பின்னர், பாடநூல்களில் காணப்படும் பழைய அமைச்சர் திரு. அகில விராஜ் காரியவசத்தின் ஆசிச் செய்தியை அகற்றி தனது ஆசிச் செய்தியை பிரசுரிக்க வேண்டும் என கல்வ ிஅமைச்சர் வேண்டிக் கொண்டதற்கு இணங்க பாடநூல் வினியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக் கட்டடங்கள் திறப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த போதிலும் அவற்றில் புதிய அரசாங்கத்தின் பிரதமர், கல்வி அமைச்சர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற வேண்டும் என்பதற்காக புதிய பெயர் விபரக் கல் பதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தொடர்பான பரீட்சைகள் நியமனங்கள் பல பிற்போடப்பட்டுள்ளன.
தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் (2012 வழக்கு) இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு மற்றும் பல நேர்முகப் பரீட்சைகள் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. பாடசாலை மேற்பார்வையாளர், பாடசாலை சபை, புதிய கல்வித் திட்டம் முதலான எண்ணக்கருக்களும் கேள்விக்குட்பட்டுள்ளன.
மிக விரைவில் இயல்பு நிலையை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒழுங்குகளை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால் 2019 ஆம் வருட ஆரம்பம் பாடசாலை ஒழுங்கு சீர் குலைய ஆரம்பித்து விடும் என்பது மட்டும் உறுதி.