அத்தியாவசிய கற்பித்தல் திறன்களின் பட்டியல்
A list of essential teaching skills
S.Logarajah SLTES, Lecturer,
Batticaloa National College of Education.
அத்தியாவசிய கற்பித்தல் திறன்களின் பட்டியல்
A list of essential teaching skills
வெற்றிகரமான வகுப்பறைப் பயிற்சிகளுக்கு பங்களிப்புச் செய்யும் திறன்களை அத்தியாவசிய கற்பித்தல் திறன்களாக அடையாளம் காணலாம். அவை பின்வருமாறு,
1. திட்டமிடல் மற்றும் தயார்படுத்துதல் (Planning and preparation)
ஒரு பாடத்தை மையமாகக் கொண்ட கல்வி நோக்கங்கள், மற்றும் கற்றல் விளைவுகளைத் தேர்ந்தெடுத்தல், மற்றும் அவற்றை எவ்வாறு அடையலாம் என்பது இதில் அடங்கும். பின்வரும் உட்திறன்கள் இதில் முக்கியமானவையாகும்.
- பாடத்திட்டத்தில் தெளிவான நோக்கங்களும் குறிக்கோள்களும் இருத்தல்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்தின் உள்ளடக்கம், முறைகள் மற்றும் கட்டமைப்பு மாணவரின் கற்றலுக்குப் பொருத்தமாய் இருத்தல்.
- முன்னைய மற்றும் எதிர்கால பாடங்களுடன் தொடர்புறும் வகையில் பாடத்தை திட்டமிடுதல்.
- பொருட்கள், வளங்கள் மற்றும் உபகரணங்கள் நன்கு தயாரிக்கப்பட்டு உரிய நேரத்தில் சரிபார்க்கப்படுதல்
- அனைத்து திட்டமிடல் முடிவுகளும் மாணவர்களையும் சூழலையும் கவனத்தில் கொள்ளுதல்.
- பாடம் மாணவர்களின் கவனம், ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை வெளிப்படுத்தவும் பராமரிக்கவும் ஏற்றதாய் திட்டமிடப்படுதல்.
2. பாடத்தை முன்வைத்தல் (Lesson presentation)
கற்றல் அனுபவத்தில் மாணவர்களை வெற்றிகரமாக ஈடுபடுத்தும் திறன் இதுவாகும். குறிப்பாக அறிவுறுத்தல்களின் தரம் என்பது மிகப் பிரதானமாகக் கொள்ளப்படுகிறது. இதில் பின்வரும் உட்திறன்கள் முக்கியமானவையாகும்.
- ஆசிரியரின் முன்வைக்கும் பாணியானது, வளர்ச்சி, நிதானம், தன்னம்பிக்கை மற்றும் நோக்கத்துடன் பாடத்தில் ஆர்வத்தை உருவாக்குதல்.
- ஆசிரியரின் அறிவுறுத்தல்களும், விளக்கங்களும் மிகவும் தெளிவானவையாகவும், மாணவர்களது தேவைக்குப் பொருத்தமானவையாகவும் இருத்தல்
- ஆசிரியரின் கேள்விகள் பல்வேறு வகைப்பட்டதாகவும், பல்வேறு பரப்பு எல்லைகளைக் கொண்டதாகவும் இருப்பதோடு, அவை பரவலாகக் கேட்கப்படுதல்.
- மாணவரின் கற்றலை வளர்ப்பதற்கு பல்வேறு வகையான, பொருத்தமான கற்றல் அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுதல்.
- மாணவர்கள் தீவிரமாக பாடத்தில் பங்கேற்கவும், அவர்கள் தமது சொந்த வேலைகளை ஒழுங்கமைக்கவும், வாய்ப்புக்கள் வழங்கப்படுதல்.
- ஆசிரியர் மாணவர்களின் கருத்துக்கள், பங்களிப்புக்களை மதித்தல். ஆர்வம் காட்டுதல். அவர்களின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் பங்களிப்புச் செய்தல்.
- மாணவர்களால் மேற்கொள்ளப்படும் பணிகள் அவர்களின் தேவைகளுக்குப் பொருந்துதல், பொருட்கள், வளங்கள், உதவி ஆகியவை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல்.
3. பாட முகாமைத்துவம் (Lesson management)
மாணவர்களின் கவனம், ஆர்வம் மற்றும் பங்கேற்பை உறுதிப்படுத்த பாடத்தின் போது நடைபெறும் கற்றல் நடவடிக்கைகளை நிர்வகிப்பதிலும் ஒருங்கமைப்பதிலும் உள்ள திறன்கள் இதில் அடங்கும்.
- பாடத்தின் ஆரம்பம் மென்மையானது, விரைவானது மற்றும் பின்பற்ற வேண்டியவைக்கான நேர்மறையான மனரீதியான ஆயத்த நிலையை உருவாக்குகிறது.
- மாணவர்களின் கவனம், ஆர்வம், பாடத்தின் மீதுள்ள ஈடுபாடு ஆகியன பேணப்படுகின்றன.
- பாடத்தின் போது மாணவர்களின் முன்னேற்றம் கவனமாகக் கண்காணிக்கப்படுகின்றது.
- மாணவரது முன்னேற்றத்தை ஊக்குவிக்க ஆக்கபூர்வமான பயனுள்ள கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
- செயற்பாடுகளுக்கிடையிலான மாற்றங்கள் மென்மையானவை.
- வெவ்வேறு செயற்பாடுகளுக்குச் செலவழித்த நேரம் நன்கு முகாமை செய்யப்படுகிறது.
- பாடத்தின் அசைவு மற்றும் ஓட்டம் பாடம் முழுவதும் பொருத்தமான மட்டத்தில் சீர் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.
- தேவையான சந்தர்ப்பங்களில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
- பாடத்தின் முடிவு நேர்மறையான விளைவுகளைக் கொண்டுள்ளது.
4. வகுப்பறைக் பருவநிலை(Classroom climate)
நேர்மறையான அணுகுமுறைகளை நிறுவுவதற்கும், பராமரிப்பதற்குமான திறன்கள் மற்றும் பாடத்தை நோக்கி மாணவர்களை ஊக்குவித்தல் என்பன அடங்கும். இதில் பின்வரும் உட்திறன்கள் முக்கியமானவையாகும்.
- வகுப்பறைக் பருவநிலையானது, நோக்கம் சார்ந்ததாகவும், பணி சார்ந்ததாகவும், நெகிழ்வுப் போக்குடையதாகவும், மறையாக ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருக்கின்றது.
- ஆசிரியர் அதிக எதிர்பார்ப்புக்களை அமைப்பதன் மூலம் மாணவர்களைக் கற்பதற்கு ஊக்குவிக்கின்றார்.
- ஆசிரியர் – மாணவர் உறவு பெரும்பாலும் பரஸ்பர மரியாதை மற்றும் ஆதரவை அடிப்படையாகக் கொண்டவை.
- ஆசிரியரின் கருத்துக்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் வளர்ப்பதாய் உள்ளன.
- வகுப்பறையின் தோற்றம் மற்றும் தளவமைப்பு பாடம் குறித்த மாணவர்களின் நேர்மறையான நடவடிக்கைகளுக்கு உகந்ததாகும். மேலும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு உகந்ததாகும்.
5. ஒழுக்கம் (Discipline)
நல்ல ஒழுங்கைப் பேணுவதற்கான திறன் மற்றும் எந்தவொரு மாணவரினதும் தவறான நடத்தையைச் கையாளுவதிலுள்ள திறன் என்பனவாகும். இதில் பின்வரும் உட்திறன்கள் முக்கியமானதாகும்.
- நல்ல ஒழுக்கம் பெரும்பாலும் நேர்மறையான வகுப்பறைச் சூழ்நிலை, தாபிக்கப்பட்ட பாட முன்வைப்பு மற்றும் முகாமைத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டது.
- ஆசிரியரின் அதிகாரம் தாபிக்கப்பட்டு மாணவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
- மாணவர்களது நடத்தை தொடர்பான தெளிவான விதிகளும் எதிர்பார்ப்புக்களும் ஆசிரியரால் பொருத்தமான நேரத்தில் தெரிவிக்கப்படுகின்றன.
- மாணவர்களது நடத்தை கவனமாக ஆசிரியரால் கண்காணிக்கப்படுகிறது. மற்றும் தவறான நடத்தைகளுக்கு முன்கூட்டியே பொருத்தான நடவடிக்கைகள் ஆசிரியரால் எடுக்கப்படுகின்றன.
- விசாரணை, ஆலோசனை, கல்வி உதவி, கண்டனம் மற்றும் தண்டனை மூலம் மாணவர்களது தவறான நடத்தைகள் கையாளப்படுகின்றன.
- மோதல்கள் தவிர்க்கப்படுகின்றன, மற்றும் குறைக்கப்படுகின்றன.
6. மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல் (Assessing pupils’ progress)
மாணவரது முன்னேற்றத்தை மதிப்பிடும் திறனானது இரு மாதிரிகளைக் கொண்டது. ஒன்று மாணவர்களது மேலதிக வளர்ச்சிக்கு உதவுதல். மற்றையது தேர்ச்சி அறிக்கை வழங்குதல். இதில் பின்வரும் உட்திறன்கள் முக்கியமானவையாகும்.
- பாடங்களின் போதும் அதற்குப் பின்னரும் மாணவர்களின் நிலையை குறித்துக் கொள்வது, முழுமையானது மற்றும் ஆக்கபூர்வமானது மற்றும் வேலை சரியான நேரத்தில் திரும்பும்.
- மதிப்பீடுகள் பற்றிய பின்னூட்டல் மாணவர்களின் நிலையறிதல் மற்றும் திருத்தமாக இருப்பது மட்டுமல்ல மேலும் முயற்சிகளை ஊக்குவித்தல், சுய கருத்துக்களைப் பேணவும், பொருத்தமான மாணவர்களுடன் பணிபுரிதல் போன்ற சுய உறவுகளைப் பேணுதல்.
- பல்வேறு மதிப்பீட்டுப் பணிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை முறையான மற்றும் சுருக்கமான நோக்கங்களை உள்ளடக்கியது. முன்னேற்றம் குறித்த பல்வேறு பதிவுகள் வைக்கப்பட்டுள்ளன.
- மாணவர்களின் பணி மற்றும் சொந்த முன்னேற்றம் குறித்த அவர்களின் சொந்த மதிப்பீடுகளை வளர்ப்பதற்கான சில வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.
- கற்பித்தலின் செயற்றிறன், உற்பத்தித்திறன் மற்றும் மேலும் ஒரு முன்னேற்றத்திற்கான ஒரு அடித்தளம் இடப்பட்டுள்ளதா? என்பதை அடையாளம் காண மாணவர்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல் பயன்படுகிறது. மதிப்பீடானது மாணவர்களின் மேலதிக வளர்ச்சிக்காக அவர்கள் பயன்படுத்தும் ஆய்வுத்திறன் மற்றும் கற்றல் உத்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
7. பிரதிபலிப்பு மற்றும் மதிப்பீடு (Reflection and evaluation)
- எதிர்கால பயிற்சியை மேம்படுத்த ஒருவரின் தற்போதைய கற்பித்தல் பயிற்சியை மதிப்பீடு செய்வது தொடர்பான திறன்கள்.
- எதிர்கால திட்டமிடல் மற்றம் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ள பாடங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
- பயனுள்ள வளர்ச்சிக்கான அம்சங்களை அடையாளம் காணும் நோக்கில் தற்போதைய வளர்ச்சி தொடர்ந்தும் கருத்தில் கொள்ளப்படுகிறது.
- தற்போதைய நடைமுறை மறுபரிசீலனை செய்வதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
- ஆசிரியர் தனது நேரத்தையும் முயற்சியையும் வினைத்திறனான செயற்படுத்தத்தக்கவாறு ஒழுங்கமைக்க முடியமா? என்பதை தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறார்.
- மன அழுத்தங்களின் மூலங்களைக் கையாள அவர் பயன்னடுத்தும் உத்திகள், நுட்பங்களை ஆசிரியர் தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறார்.
ஒரு பாடத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான ஒருவழி பொதுவாக அனைத்து ஆசிரியர்களிடமும் இருக்கும். ஆனால் ஒருவருக்கு முதலில் சில பாடங்களை கற்பிக்க முயற்சி செய்கையில் இவ் அடிப்படை போதாது என்பதை சில ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
நீண்டகால கற்பித்தல் அனுபவம் நிச்சயமாக எவ்வாறு கற்பிப்பது? என்பதைப் பற்றிச் சிந்திக்க ஒரு பரந்த கட்டமைப்பை வழங்குகிறது. ஆனால் ஆசிரியர் என்ற பாத்திரத்தை ஏற்றுக் கொண்டவுடன் முழு அளவிலான கற்பித்தல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது.
எடுத்துக்காட்டாக புதிய ஆசிரியர்கள் அனுபவிக்கும் பொதுவான பிரச்சினை என்னவென்றால் எப்போது, என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிப்பதாகும். ஒரு விளக்கத்தை அளித்த பின் மாணவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை எனில் மீண்டும் அதே விளக்கத்தை கூறுவதைத் தவிர வேறு வழியில்லை. பல்வேறு விகிதங்களில் பணி புரியும் மாணவர்களை சமாளிக்கத் தெரியாமை, அவர்களை எவ்வாறு கையாள்வது என்ற பிரச்சினை.
எந்த பாடத்திட்டக் கூறுகளைக் கற்பிப்பதில் அதிக கவனம் முக்கியத்துவம் தேவை என்பது தெரிவதில்லை. அவர்களால் கட்டுப்படுத்த முடியாத மாணவர்களை என்ன செய்வது என்று தெரிவதில்லை.
கற்பித்தல் திறன்களின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்த சில ஆய்வுகள் தொடக்க ஆசிரியர்களை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுடன் ஒப்பிட்டுள்ளன. ஆரம்ப ஆசிரியர்கள் பெரும்பாலும் மாணவர்களுடனான தனியான பரிமாற்றங்களில் ஈடுபடுவதைக் குறிக்கின்றது. இதனால் பல்வேறு இடங்களில் என்ன நடக்கிறது என்பது பற்றிய ஒட்டு மொத்தமான பார்வையை இழக்க நேரிடும்.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் மறுபுறம் வகுப்பின் மற்ற மாணவர்களுக்குமிடையில் தங்கள் கவனத்தைப் பிரித்து வேறு இடங்களில் என்ன நடக்கின்றது என்பது குறித்து சரியான முறையில் கருத்துத் தெரிவிக்க அதிக திறன் கொண்டவர்கள்.
உசாத்துணை :
Kyriacou CHRIS 2007), Essential Teaching Skills, Nelson Thornes Ltd, Delta Place United Kingdom.
சி.லோகராஜா
விரிவுரையாளர்
தேசிய கல்வியியல் கல்லூரி
மட்டக்களப்பு.
®®®®®®®®®®®®®®