மட்டக்களப்பு மாவட்ட க.பொ.த உயர்தர தொழிநுட்பக் கற்கை நெறி தொடர்பான ஒரு கண்ணோட்டம்
சி. கவியரசன் (B.A, National Diploma In Teching, PGD In Special Needs Education, Professional Diploma In Counselling, National Diploma In Career Guidance, MEd 1st Class)
அறிமுகம்
கற்றல் என்பது அறிவூட்டம், தொழில் வாய்ப்பு, வருமானத்தை பெற்றுக் கொள்ளுதல், கௌரவத்தை ஏற்படுத்திக் கொள்ளல் முதலான நோக்கங்களைப் பிரதான இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. பேர்டினனின் அவர்களின் கருத்துப்படி கல்விக்கான கலைத்திட்டம் என்பது பன்முக உற்பத்தி மேம்பாடு, தொழில் சந்தைக் கேள்வி, உற்பத்தி சார்ந்த வெளியீடு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட மனித வளங்களை உருவாக்குவதாக அமைதல் வேண்டும் என்பதாகும். இவருடையகூற்றின் உட்கிடை கலைத்திட்டம் மாணவர்களின் எதிர்கால வேலை உலகின் தேவையை நிறைவு செய்யும் வகையில் அமைய வேண்டும் என்பதாகும். அவற்றிலும் கல்வி அறிவுட்டத்தின் ஊடாக தொழில் வாய்ப்பை உருவாக்கி அதனூடாக வருமானத்தை பெறும் மூல உபாயமாக கற்றல் அமைய வேண்டும் என்பதேயாகும். இந்த அடிப்படையில் முதன்மையான உலக நாடுகள் கல்வியினூடாக புத்தாக்கம் (Innovation throughEducation) என்பதை 21 ஆம் நூற்றாண்டின் கல்வித் திட்டமிடலின் குறிக்கோளாக் கொண்டு கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கை கல்வி வரலாற்றில் மேலைத்தேயத்தவர்களின் வருகைக்கு முன்னர் திண்ணைப்பள்ளிகளிலும் பிரிவெனாக்களிலும் கல்வி அறிவூட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. இவற்றில் தொழில் சார்ந்த வகையில் சுதேச மருத்துவம், சோதிடம் மற்றும் ஆன்மீகப் போதனைகள் இடம்பெற்று வந்துள்ளன. காலனித்துவ ஆட்சியாளர்கள் மதக்கல்விப் போதனைக்காக மெதடிஸ்த மிஷன் மற்றும் றோமன் கத்தோலிக்கப் பாடசாலைகளை நிறுவி அதற்கேற்ற வகையில் கல்விக்கான கலைத்திட்டத்தை வகுத்து நெறிப்படுத்தி வந்தனர். குறிப்பாக இலங்கையின் நிருவகிப்பு 1796 இல் பிரித்தானியர் வசப்பட்டதைத் தொடர்ந்து காலனித்துவக் நிருவாகிகளைக் கொண்டு குறைந்த கூலியில் நிருவகிப்பை நிறைவு செய்ய முடியாமையால் சுதேசிகளுக்கான ஆங்கில மொழி பாடசாலைகளை நிறுவி காலனித்துவ நிருவகிப்பிற்கு ஏற்ற கல்வியினை வழங்கி வந்தனர்.
கல்வியை தொழில் வாய்ப்பிற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதற்கான சிந்தனைகள் டொனமூர் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து பரிணாமம் அடைவதைக் காணலாம். குறிப்பாக 1932 இல் C.W.W கன்னங்கரா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட ஹந்தேச கிராமியக் கல்வித்திட்டத்தின் பெரும்பகுதி தொழில் விருத்தியை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் கல்வி தொடர்பான விசேட செயற்குழு அறிக்கைக்கு அமைய 1943 ஆம் ஆண்டு 11 மத்திய மகாவித்தியாலத்தையும், 1944 இல் 54 மத்திய மகாவித்தியாலயத்தையும் உருவாக்கி பொதுக் கல்விப் பாடங்களுக்கும் செயன்முறைத் தொழில் பயிற்சிப் பாடங்களுக்கும் அமைய பாடசாலைக் கலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இவற்றுள் கைவேலை, மனையியல், உலோகவேலை, மரவேலை, பூச்சிவேலை, நெசவுவேலை, வேளாண்மை, செய்முறை விஞ்ஞானம், வர்த்தகம் முதலான தொழில் துறைப் பாடங்களுக்கான கலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. (SpecialCommittee Report. 1943). இவை தொழில் கல்வியை இலக்காக கொண்ட கற்பித்தல் முறையாக அமையலாயிற்று.
இலங்கையில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் இருந்து தேசியத்தினதும் சமூகத்தினதும் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு பாடசாலை மாணவர்களுக்கான பொதுக் கல்விக்கான கலைத்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இலங்கையில் 1972 இல் பாடசாலை மட்டத்தில் தொழில் முன்னிலைப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறான தொழில் முன்னிலைப் பாட அறிமுகம் என்பவற்றைத் தொடர்ந்து வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வி மற்றும் செயன்முறைத் தொழிநுட்பம், தேர்ச்சி மையக்கலைத் திட்டம், இணை மற்றும் மறைக் கலைத்திட்ட செயற்பாடுகள் எனப் பல்வேறு மாற்றங்கள் இலங்கையின் பாடசாலைக் கல்விக் கலைத்திட்டத்தில் கொண்டுவரப்பட்ட போதிலும் அவை பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பை உருவாக்குவதற்கு போதுமான பங்களிப்பை செய்யவில்லை என்பது 21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தகாலத்தில் புலப்படத் தொடங்கியது.
இதன் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் கல்வி வேலைத் திட்டங்களில் இன்று அமுல்படுத்தப்பட்பட்டு வரும் தொழிநுட்பப் பாடத்துறையானது நாட்டின் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப தொழிநுட்பக் கல்வி பாடசாலை மாணவர்களை வளப்படுத்த வேண்டும் எனும் சிந்தனையுடன் உதயமாவதைக் காணலாம். இச் சிந்தனையின்படி மாறி வரும் தேசிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் சந்தைகளில் மனித வளத் தேவைகளுக்கு அமைவாகும் வகையிலும் தொழில் துறையின் மதிப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் அறிவையும் பயிற்சியையும் பெற்றுக் கொடுப்பது தொழில் நுட்ப்பக் கல்வியின் நோக்கமாகும். அந்த வகையில் உயர்தர வகுப்புக்களில் தொழிநுட்பப் பாடங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தொழில் வாய்ப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக அமையலாயிற்று.
அந்த வகையில் இன்றைய உலகமயமாதலுக்கும் நவீன தொழிநுட்ப உலகிற்கும் பொருத்தமான தொழிற்படையை உருவாக்க வேண்டியது இலங்கையைப் பொறுத்தவரை காலத்தின் கட்டாய தேவையாக அமையலாயிற்று. கைத்தொழில் மயமாக்கம் மற்றும் தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக தொழிற்படை பன்மடங்கு விரிந்து செல்வதால் நவீன தொழில் சந்தைக் கேள்ளிகளுக்கு ஏற்ற வகையில் அறிவு, திறன், ஆற்றல் மற்றும் சிறந்த மனப்பாங்கையும் மாணவர்களிடம் வளர்க்க வேண்டியது பாடசாலைகளின் முக்கிய பணியாக அமையலாற்று. அதன் அடிப்படையில் கல்வி அமைச்சின் 2012 – 2016 வரையான நடுத்தரக்கால கல்வி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் மூலம் 1000 இடைநிலைப் பாடசாலைகள் மற்றும் 5000 ஆரம்பப் பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக தொழிநுட்பக் கல்வி பின்வரும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 2013 ஆம் ஆண்டில் இருந்து உயா்தர வகுப்புக்களுக்கு நடைமுறைக்கு வருவதைக் காணலாம்.
தொழிநுட்ப பாட உருவாக்கத்தின் நோக்கங்கள்
பாடசாலை மட்டக் கல்வியை முடித்துக் கொண்டு பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொருத்தமான தொழில் வாய்ப்பினையும் போதுமான வருமானத்தையும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கலைத்திட்டம் ஈட்டிக் கொடுக்கவில்லை. மேலும் வேலைவாய்ப்பின்மைக்கு அடிப்படைக் காரணமாக கற்ற கல்வி அமையாமையால் அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. வெறும் புத்தக் கல்வி மாத்திரம் நாட்டின் விருத்திக்குகந்ததல்ல. புத்தகக் கல்வியோடு செயன்முறைசார் தொழில் கல்வியை உருவாக்குவதன் மூலம் எதிர்கால சமுகத்திற்கு பொருத்தமான தொழில் வாய்ப்பையும் போதுவான வருமானத்தையும் ஈட்டிக் கொடுக்கும் வகையில் பாடசாலை மட்டத்தில் உயா்தரத்தில் தொழிநுட்ப பாடங்கள் உருவாக்கப்பட்டன. எனவே இலங்கையின் பாரம்பரிய கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக அமையலாயிற்று.
தொழில் திறன் கல்வியை விருத்தி செய்ய வேண்டிய அவசியம்
இலங்கையில் 2013 ஆம் ஆண்டு தொழிநுட்ப பாடம் அறிமுகமாகும் வரை க.பொ.த உயர்தர வகுப்பில் அதி கூடிய மாணவர்கள் கலைத்துறையில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருந்தனர். இலங்கையில் 2012/2013 கல்வியாண்டில் 241629 மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையை முடித்து பாடசாலைகளில் இருந்து வெளியேறி இருந்தனர். இவர்களுள் 70 வீதமானவர்கள் கலை மற்றும் வர்த்தகத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதை பின்வரும் புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன.
இவர்களுள் 17 சதவீதமான மாணவர்கள் மாத்திரம் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றிருந்தனர். அதிலும் 200552 மாணவர்கள் அதாவது (83 வீதமான) மாணவர்கள் தொழில் திறன் அற்ற புத்தகக் கல்வியுடன் மாத்திரம் வெளி வருகின்றனர். இவர்கள் தமக்கென தொழில் ஒன்றை உருவாக்கும் திறன் அற்றவராகக் காணப்படுகின்றனர். அவை மட்டுமன்றி கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டம் பெற்றவர்களின் கல்வி, தொழில் நிலைக் கல்வியாக அமையாமையினால் அவர்கள் உடனடி வேலைவாய்ப்பைப் பெற முடியாதவர்களாகக் காணப்பட்டனர். அதிலும் பலா் பட்டம் பெற்று எட்டாண்டுகளுக்கு பின்னரே அரச சேவைத் துறையில் மாத்திரம் தொழில் வாய்ப்பினைப் பெறக் கூடியதாக இருந்தனா். அவை மட்டுமன்றி க.பொ.த உயர்தரத்தில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாதவா்களுக்கு அவர்கள் கற்ற கல்வியானது எந்தவித தொழில் வாய்ப்பையும் உருவாக்க முடியாத நிலைக்கு இட்டுச் செல்வதாக அமையலாயிற்று.
தொழிநுட்பத் தேர்ச்சியும் வருமானமும்
ஒருவரது தொழில் முயற்சி சார்ந்த வருமானத்தைத் தீர்மானிப்பதில் தொழிநுட்பத் தேர்ச்சி முக்கிய காரணியாகச் செயற்படுகின்றது. அதன் பொருட்டு தேசிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் சந்தைகளில் மனித வளத் தேவைகளுக்கு அமைவாகும் விதத்தில் தொழிநுட்பத் திறன் விருத்தியை ஏற்படுத்தல் நாட்டின் விருத்திக்கு அவசியமானதாக அமைகின்றது. 2021 ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் தொழில் வாய்பினைப் பெறும் இலங்கையர்களின் இயலளவை நோக்கும் போது 26 வீதமானவர்கள் முற்றாகவே தொழில் தேர்ச்சி அற்றவர்களாகக் காணப்படுவதுடன் இவர்களுள் தொழிலுக்கான இயலளவு பெற்றவர்களாக 31 வீதமானவர்களும் விசேட தொழில் வல்லுனர்களாக 5.5 வீதமானவர்கள் மட்டுமே காணப்படுகின்றனர் என்பதைப் பின்வரும் புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன.
இவர்களுள் 28.5 வீதமானவர்கள் வீட்டுப்பணிப் பெண்களாக் காணப்படுகின்றனர். இப்பணிப் பெண்களுக்குக் கூட இலங்கையின் பாடசாலை அல்லது உயர்தரக் கல்வி தொழிநுட்பம் சார்ந்த திறன்களைப் பெறுவதில் எத்தகைய பங்களிப்பையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். தொழில் தேர்ச்சி இன்மை காரணமாக இவர்கள் வெளிநாடுகளில் தமது படிப்பிற்க்கேற்ற தொழிலையும் தொழிலுக்கேற்ற போதிய வருமானத்தையும் பெற முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். இத்தகைய தொழிநுட்பப் பாடத்தினூடாக பொருத்தமான பயிற்சி ஏனைய திறன்கள் போன்றவற்றை பெறும் வாய்ப்புக்கள் வழங்கப்படும் நோக்கில் தொழிநுட்பப் பாடங்கள் பின்வரும் நோக்கங்களை அடையும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
- அறிவுசார் பொருளாதார விருத்திக்காக மானிட மூலதனத்தை அடிப்படையாக கொண்டதாக பாடசாலை முறைமையினை மாற்றியமைத்தல்.
- தொழில் சந்தையில் அதிகரித்துவரும் கேள்விக்குப் பொருத்தமான தொழில் திறன் உள்ள தொழில் படையணியை உருவாக்குதல்.
- இளைஞர்களின் வேலையின்மையைக் குறைத்து நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்தல்.
- நாளாந்த வாழ்விற்குப் பயன்படத்தக்க வகையில் மாணவர்களின் தொழிநுட்பத் திறன்களை விருத்தி செய்தல்.
- பிரச்சனைகளுக்கு தொழிநுட்ப ரீதியான தீர்வுகளை விருத்தி செய்வதற்கான திறன்களை மேம்படுத்தல்.
- தொழிநுட்பக் கல்வியை வழங்குவதன் மூலம் பொருத்தமான வேலை வாய்ப்பினை வழங்குதல்.
- அதிகமான மாணவர்கள் கலைத்துறையில் கற்பதன் மூலம் நாட்டின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே ஏற்படும் இடைவெளியைக் குறைத்தல்.
- தேசிய தொழில் தகைமை தொகுதியை NVQ சட்டகத்தின் அடிப்படையில் மாணவர்களை அவர்களின் தொழில்சார் கல்வியைத் தொடர இயலுமானவராக்குதல்
அபிவிருத்தி அடைந்த ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்கு காரணம் அந்நாடுகளின் கல்விக் கலைத்திட்டத்தில் தொழிநுட்பப் பாடத்துறையை பல்கலைக்கழக கல்விக்கு ஏற்ற வகையில் சமாந்தரமாக பாடசாலைகளில் அபிவிருத்தி செய்தமையும் மற்றும் அப் பாடத்துறையை பாடசாலைகளில் காணப்படும் ஏனைய பாடங்களுடன் முறையான தொடர்பைப் பேணியமையுமாகும். ஆசியக் கண்டத்தில் தொழிநுட்பத்துறையில் முன்னிலை வகிக்கும் யப்பான், சீனா போன்ற நாடுகளும் ஏனைய வளர்ச்சியடைந்த தாய்வான் மலேசியா, கொரியா போன்ற நாடுகளும் தமது பாடசாலைக் கலைத்திட்டத்தில் தொழிநுட்பத் துறையை எதிர்கால வேலை உலகிற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து வெற்றி கண்டுள்ளன.
இலங்கையில் 2013 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுள் 23000 மாணவர்கள் மாத்திரம் பல்கலைக்கழக உயர் கல்வியைத் தொடர்வதற்காக அனுமதியை பெற்றிருந்தனர். ஏனைய 340000 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்து தொடர் கல்வி வாய்ப்புக்கள் எதுவும் இன்றி பாடசாலைக் கல்வி முறையில் இருந்து விலகி செல்வது கல்விக் கொள்கையின் பாரிய குறைபாடாக காணப்பட்டது. இக்குறைபாட்டை நேரிய முறையில் எதிர் கொள்ள தக்க வகையில் க.பொ.த உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவா்களுக்கு தொழிநுட்பப் பாடம் 2013 ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையின் பொதுக்கல்வித்துறையில் க.பொ.த உயர்தரப் பிரிவில் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடத்துறைகள் 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைமுறையிலிருந்தன. உலகில் மிக வேகமாக மாற்றமுறும் தொழில் கேள்விகளுக்கு ஏற்ற திறன்களையும் தேர்ச்சிகளையும் கொண்ட எதிர்கால தொழில் வல்லுனர்களை உருவாக்கும் நோக்குடன் 2013 யூன் 15 ஆம் திகதி தொழிநுட்ப பாடப் பிரிவு (Technology Stream) எனும் பெயரில் 25/2013 எனும் 2013.06.11 திகதியிட்ட சுற்றுநிருபப்படி க.பொ.த உயர்தரப் பிரிவிற்கு அறிமுகம் செய்யப்பட்டதுடன் க.பொ.த உயர்தரப் பிரிவு தொழிநுட்பப் பாடத்த்தையும் இணைத்து ஐந்து பிரிவுகளாக்கப்பட்டது.
இச் செயற்பாடானது இலங்கை பொதுக்கல்வி வரலாற்றில் பாரிய திருப்புமுனை என அப்போதைய தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் W.M அபேரத்ன பண்டார குறிப்பிட்டிருந்தார். மேலும் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞான கணித தொழிநுட்பத்துறைக்கான 25 வீதத்தை 35 வீதமாக அதிகரிப்பதற்கும், கலைப்பாடத்துறையின் பங்கேற்ப்பை 51 வீதத்தில் இருந்து 25 வீதமாகக் குறைப்பதற்கும் தகவல் தொழில்நுட்ப அறிவாற்றலை 35 வீதத்திலிருந்து 75 வீதத்தால் அதிகரிப்பதற்கும் தொழில் நுட்பக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. இத் தொழிநுட்பப் பாடநெறியை கற்கும் மாணவர்கள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் கீழ்வரும் தகைமைகளை நிறைவு செய்வதுடன் பின்வரும் பாடங்களை தமது கற்கையின் பொருட்டு தெரிவு செய்ய முடியும்.
தகைமைகளும் பாடத்தெரிவும்
இக் கற்கை நெறியைத் தெரிவு செய்யும் மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் தமிழ், கணிதம் உட்பட மூன்று பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இப் பாடத்துறையைப் பின்பற்றுபவர்கள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் கட்டாயம் சித்தி பெற்றிருக்க வேண்டும். அத்தோடு இவா்கள் கீழ்வரும் முதலிரு பாடங்கள் இரண்டுடன் மூன்றாவது விருப்பத் தெரிவுப் பாடத்தில் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுத்து மொத்தமாக மூன்று பாடங்களை பின்வரும் முறையில் தெரிவு செய்ய முடியும்.
1. பொறியியல் தொழிநுட்பம் (EngineeringTechnology) அல்லது உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல் (Bio system Technology)
2. தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம் (Scence for Technology)
3. விருப்பத் தெரிவிற்கான பாடத்தொகுதி – மாணவர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்பவும் பாடசாலையில் காணப்படும் ஆசிரிய வளத்திற்கு ஏற்பவும் பின்வரும் பாடங்களில் இருந்து ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
வணிகக்கல்வி, புவியியல், மனைப்பொருளியல்
பொருளியல், கணக்கீடு, தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்,
ஆங்கிலம், சித்திரம், விவசாய விஞ்ஞானம்,
தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்
மேலும் இத்தொழிநுட்ப கலைத்திட்டத்தில் பொறிமுறை தொழிநுட்பத்தினூடாக குடிசார் இயந்திரம் மற்றும் மின்னியல் தொழிநுட்பங்களின் கோட்பாடுகளும் பயிற்சிகளும் இத்துறையின் உள்ளடக்கங்களாகக் காணப்படுவதுடன் உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல் பாடப்பரப்பினுள் உணவு அறுவடைக்குப் பின் விவசாயம், உயிர்வளத் தொழிநுட்பங்களின் கோட்பாடுகளும் பயிற்சிகளும் காணப்பகின்றன. மேலும் தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம் பாடத்தினுள் பௌதீகவியல், இரசாயனவியல், கணிதம், உயிரியல் தொழிநுட்பம் போன்ற பாடங்களுக்குத் தேவையான கோட்பாடுகளும் இவ் கலைத்திட்டத்தின் உள்ளடக்கப்பட்டுள்ளமை இக்கற்கை நெறியின் சிறப்பம்சமாகும்.
பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர் முறைமைகள் தொழிநுட்பம் ஆகிய பாடங்கள் கோட்பாடுகள் மட்டுமன்றி பிரயோகப் பயிற்சி, தேர்ச்சி விருத்திகளையும் உள்ளடக்கியுள்ளது. இதுவரை காலமும் வகுப்பறைப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் வேறு தொழிநுட்பம் சார் நிறுவனங்களுக்குச் சென்று பயிற்சி பெறும் போது உற்சாகமாக செயற்படச் கூடிய வாய்ப்பினைப் பெறுகின்றனர். மாணவர்கள் வகுப்பறையிலும் ஆய்வு கூடத்திலும் கற்கும் கல்விக்கு மேலதிகமாக செயன்முறைப் பயிற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட விசேட வேலைத்தளங்களுக்குச் சென்று நேரடி அறிவூட்டத்தைப் பெறக் கூடிய வசதியினையும் வாய்ப்பினையும் இக்கற்கை நெறி வழங்கி வருகின்றது. இப் பாடநெறியைத் தொடர்கின்ற பாடசாலைகள் கல்வி அமைச்சு, தொழிநுட்பக் கல்லூரிகள், VTA (தொழில் பயிற்சி நிறுவனம்) NAITA போன்ற நிறுவனங்களின் தொழில் ஆற்றல் மிக்கவர்களிடம் இருந்து நிபுணத்துவ உதவியைப் பெற்று வருகின்றன.
கல்வி அமைச்சும், இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் விருத்தி அமைச்சும் இணைந்து பிரயோக செயற்பாடுகளுக்காக புள்ளி வழங்கி வருகின்றன. இரண்டு வருட முடிவில் மூன்று பாடங்களுக்கும் கோட்பாட்டு பரீட்சை பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்பட்டு வருகின்றது. உயிர் முறைமைகள் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பம் ஆகிய இரு பாடங்களுக்கு கோட்பாட்டுப் பரீட்சைக்கு 75 புள்ளிகளும், பயிற்சி நிறுவனங்களில் மேற்கொண்ட பிரயோக செயற்பாடுகளுக்கு 25 புள்ளிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஒரு மாணவனின் அறிவையும் திறனையும் ஆற்றலையும் மதிப்பீடு செய்ய வாய்ப்புக் கிடைப்பதுடன் தொழில் மற்றும் தொழிநுட்பத் திறனுள்ள மாணவன் 25 வீதப் புள்ளிளிகளைப் பெறுவதற்கான வாய்ப்பினையும் பெற்றுத் தருகின்றது. இவ்வாறான தகைமைகளையும் விதிமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் ஒன்பது மாகாணங்களில் 2013 ஆம் ஆண்டிலிருந்து 244 பாடசாலைகளில் தொழிநுட்பக் கற்கைகளை கற்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கு மகாணத்தில் 2013 ஆம் ஆண்டு 20 பாடசாலைகளில் ஆரம்பிப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இருந்தும் அவற்றுள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பாடசாலைகளிலும், அம்பாறை மாவட்டத்தில் 06 பாடசாலைகளிலும், திருகோணமலை மாவட்டத்தில் 05 பாடசாலைகளும் அடங்கலாக 17 பாடசாலைகளில் இவ் தொழிநுட்பப் பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பின்வரும் ஐந்து கல்வி வலயங்களில் 2013 ஆம் ஆண்டில் 06 பாடசாலைகளில் தொழிநுட்பப் பாடநெறி ஆரம்பிக்கப்பட்டதோடு மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிநுட்பப் பிரிவுப் பாடசாலைகளின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு வரை பின்வருமாறு 25 ஆக அதிகரிக்கப்படலாயிற்று.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வலய ரீதியாக க.பொ.த உயா்தர தொழிநுட்பப் பிரிவு விரிவாக்கம் (2013-2022)
மட்டக்களப்புக் கல்வி வலயம்
- இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு – 2013
- மகஜனா கல்லூரி, மட்டக்களப்பு – 2016
- மெதடிஸ்தமிஷன் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு – 2017
பட்டிருப்புக் கல்வி வலயம்
- களுதாவளை மகாவித்தியாலயம் – 2013
- பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயம் – 2014
- பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் – 2017
- கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம் – 2018
- பெரியகல்லாறு மத்திய மகாவித்தியாலயம் – 2018
- செட்டிபாளையம் மகாவித்தியாலயம் – 2019
கல்குடா கல்வி வலயம்
- வந்தாறுமூலை மத்திய கல்லூரி – 2013
- கிரான் மத்திய கல்லூரி – 2015
- வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம் – 2016
- கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் – 2017
- கறுவாக்கேணி விக்கினேஸ்வரா கல்லூரி – 2017
- செங்கலடி மத்திய கல்லூரி – 2018
- கல்குடா நாமகள் வித்தியாலயம் -; 2019
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்
- ஓட்டமாவடி மத்திய கல்லூரி – 2013
- அன்னூர் மகா வித்தியாலயம் வாழைச்சேனை – 2013
- காத்தான்குடி மத்திய கல்லூரி – 2013
- அலிகார் மத்திய கல்லூரி, ஏறாவூர் – 2015
- றகுமானியா மகாவித்தியாலயம், ஏறாவூர் – 2015
- மாக்கன்மாக்கார் தேசிய பாடசாலை, ஏறாவூர் – 2015
- மீறாவாலிகா மகா வித்தியாலயம், காத்தான்குடி – 2017
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்
- முதலைக்குடா மகாவித்தியாலயம் – 2014
- கன்னங்குடா மகாவித்தியாலயம் – 2017
(மூலம்: கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், 2013 – 2023)
இவ்வாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கணித விஞ்ஞானத் துறையுடன் தொழிநுட்பப் பாடத்துறையை ஆரம்பித்த 25 பாடசாலைகள் 1 AB super என்ற விசேட பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டன. இவ் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி கற்ற மாணவர்கள் முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு 345 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதோடு அவர்களில்40 மாணவர்கள் முதல் தடவையாக தொழிநுட்பத்துறைக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டம் 2854 கிலோ மீற்றர் பரந்த பிரதேசத்தில் 101 பாடசாலைகளில் தொழிநுட்பப் பாடங்களைத் தொடங்கக் கூடிய வாய்பினைப் பெற்றிருந்த போதிலும் இதுவரை 24 பாடசாலைகளில் மாத்திரம் இத் தொழிநுட்பப் பாடங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
தொழிநுட்பக் கற்றல் துறையின் முன்னேற்றம்
பொறியியல் தொழிநுட்பம், உயிர் முறைமைகள் தொழிநுட்பம் முதலான பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு எட்டாண்டுகள் கழியும் வேளையில் தேசிய மட்டத்தில் 17787 மாணவர்கள் பொறியியல் தொழிநுட்பத்திற்கும் 9367 மாணவர்கள் உயிரியல் தொழிநுட்பப் பாடத்தோடும் இணைந்து கொள்ளும் வாயப்;பைப் பெற்றுள்ளமையைப் பின்வரும் புள்ளி விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
இத் தொழிநுட்பப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பிரதான நோக்கம் கலைத்துறையில் கல்வி கற்கும் மாணவர்களின் தொகையைக் குறைப்பதாகும். தொழிநுட்பக் கற்கை நெறி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் கல்வியாண்டான 2012/2013 இல் கலைத்துறையில் கல்விகற்று உயா்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் தொகை 102851 காணப்பட்ட அதே வேளை 2021/2022 இத்தொகை 107002 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் உயிர் முறைமைகள் தொழிநுட்பத் துறையில் சித்தியடையூம் மாணவர்களின் தொகை 73.2 வீதத்தாலும், பொறியியல் தொழிநுட்பத்தில் சித்தியடையும் மாணவர்களின் தொகை 68.83 வீதத்தாலும் அதிகரித்துள்ளமை மாணவர்கள் இத் தொழிநுட்பப் பாடத் துறையில் காட்டும் மேலான அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
க.பொ.த உயா்தர தொழிநுட்பப் பாடம் தொடர்பான மாவட்ட மட்ட மதிப்பீடு
நாடு பூராகவும் தொழிநுட்பப் பிரிவை தெரிவு செய்யும் மாணவர்களை மட்டக்களப்பு மாவட்டத்துடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்தளவான மாணவர்களே இக் கற்கை நெறியில் இணைந்து கொள்கின்றனர். தேசிய ரீதியாக ஒப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு உயர்தர தொழிநுட்பப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் தொகை பதினெட்டு மாவட்டங்களில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் தொகையை விட குறைவாக அமைவதை பின்வரும் வரைபடம் தெளிவுபடுத்துகின்றது.
அவற்றிலும் குருநாகல், கம்பகா, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற்றிய மாணவர்களின் தொகையிலும் மூன்று மடங்கிற்கு அதிகமான மாணவர்கள் தோற்றுவதோடு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இவற்றிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தளவான பாடசாலைகளில் மட்டுமே இக்கற்கை ஆரம்பிக்கப்பட்டமையும் போதிய ஆசிரிய வளமும் ஏனைய அடிப்படைக் கட்டமைப்புகளின் மட்டுப்பாடுமே அடிப்படைக் காரணமாக அமையலாயிற்று.
க.பொ.த உயா்தர தொழிநுட்ப பாடநெறிக்கான உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக அனுமதி
இக்கற்கை நெறியில் உயர்கல்வியைப் பெறும் வகையில் 2015 ஆண்டு இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தொழிநுட்ப்பவியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டன. க.பொ.த உயர்தர தொழிநுட்பப் பிரிவில் சித்தி பெறும் மாணவர்கள் 2016 இல் இருந்து பல்கலைகழக அனுமதியைப் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தொழிநுட்பவியல் இளமாணி (B.TECH) பட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் அரசாங்கம் தொழில் பயிற்சி நிறுவனங்களை அனேக மாவட்டத்தில் அமைத்து அவற்றில் இக்கற்கை நெறிக்கான உயர் தொழிநுப்பக் கல்வியை தெளிவு செய்யும் மாணவர்களுக்கு தொழிநுட்பவியல் டிப்ளோமா மற்றும் உயர் தொழிநுட்பவியல் டிப்ளோமா சான்றிழ்களை வழங்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றன.
இத்தொழிநுட்ப பாடநெறியில் பல்கலைக்கழகங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக பொறியியல் தொழிநுட்பம் (Engineering Technology)(ET), உயிர்முறைகள் தொழிநுட்பம் (Biosystem Technology) (BST), தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information Communication Technology) (ICT) ஆகிய மூன்று பிரிவூகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இப்பிரிவு தெரிவுப் பாடங்களில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக தெரிவு செய்யும் பட்சத்தில் தகவல் தொடா்பாடல் தொழிநுட்பத்திற்கும் ஏனைய இத்துறைசார் கற்றை நெறிகளுக்கும் விண்ணப்பிக்க முடியும். அத்துடன் உயர் தொழிநுட்பக் கல்வி நிறுவகத்தில் (ATI) தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தில் உயர் டிப்ளோமா (HNDIT) NVQ –5&6 கற்றை நெறியினையும் தொடரமுடியும்.ஏனையவர்கள் “Univotech” தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் (இரத்மலானை) தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப்பத்திலும் ஏனைய தொழிநுட்பப் பாடத்தெரிவுகளுக்கு ஏற்ற வகையில் (NVQ-7) கற்கை நெறியை நேரடியாக தொடரவும் முடியும். இக்கற்கை நெறியை பல்கலைக்கழக மட்டத்தில் நிறைவு செய்வோர் B.Tech (Bachelor ழf Technology) பட்டத்தைப் பெறமுடியும்.
தேசிய கல்வியியல் கல்லூரிக்கு பிரதானமாக தொழிநுட்பப் பாடநெறிக்கு விண்ணப்பிப்பதுடன் ஏனைய பாடத்தெரிவுகள் மற்றும் பெறுபேறுகளின் உயர்தரங்களின் அடிப்படையில் ஏனைய பாடநெறிகளுக்கும் விண்ணப்பிக்க முடியும். இத்தொழிநுட்பப் பிரிவில் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் NVQ- 4 தொழில் தகைமையினைப் பெறுவர். பின்னர் பல்கலைக்கழக கல்லூரி (Univesity college), ஜேர்மன்தொழிநுட்பக் கல்லூரி (German Tech,College of Technology), ஒருகொடவத்தை இயந்திர தொழிநுட்பக் கல்லூரி, கட்டுநாயக்க பொறியியல் தொழிநுட்பக் கல்லூரி போன்ற மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில் பயிற்சி நிலையங்களிலும் NVQ – 5 மற்றும் NVQ – 6 வரைநிறைவு செய்து Univotech இல் NVQ – 7 கற்கை நெறியை தொடர முடியும்.
இத் துறையில் உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைய வில்லையாயின் 18 மாதக் கற்கை நெறியை மேற்குறிப்பிட்ட மூன்றாம் நிலை தொழில் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்த நிறுவகங்களில் பூர்த்தி செய்யும் பட்சத்தில் NVQ – 4 ஆக கருதப்படும். இவ்வாறானவர்கள் கூட தொடர்ச்சியாகக் கற்பதன் ஊடாக NVQ – 7 தொழிநுட்பமானிப் பட்டத்திற்கான கற்கையை தொடர முடியும். தொழிநுட்ப பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு தசாப்த காலம் நிறைவடையும் வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவோரில் 1.2 வீதமானவர் மட்டுமே தொழிநுட்பத் துறையில் பல்கலைக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்று பல்கலைக்கழகம் செல்வோரை நோக்கும் போது பின்வருமாறு அமைகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த உயா;தரத்தில் தோற்றியோரும் தொழிநுட்பப் பிரிவில் தோற்றியோர் சித்தியடைந்தோர் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானோர் (2015-2021)
(மூலம் – இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் (20215-2021)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை 45083 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றியதோடு இவர்களில் 4736 மாணவர்கள் தொழிநுட்பப் பாடங்களுக்கு தோற்றியுள்ளனர். இவர்களுள் 2834 மாணவர்கள் தொழிநுட்பப் பாடத்தில் சித்தியடைந்ததோடு அவர்களுள் 552 மாணவர்கள் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுள் பொறியியல் தொழிநுட்பப் பிரிவில் 321 மாணவர்களும் உயிர் முறைமைகள் தொழிநுட்பவியலில் 230 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். மொத்தமாக மேற்குறித்த 7 ஆண்டு காலப்பகுதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுடன் ஒப்பிடும் வேளையில் 1.22 வீதமான மாணவர்கள் மட்டும் தொழிநுட்ப பாட நெறிக்காக பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றிருப்பதைக் காணலாம். மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலய ரீதியாக பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகளின் தொழிநுட்பப் பாடம் சார்பாக 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டோர் விபரம் பின்வருமாறு அமைகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களில் 23 பாடசாலைகளில் தொழிநுட்பப் பாடங்களை கற்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றுள்ளனர். அவற்றுள் 7 முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து 2015 ற்கும் 2021 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 206 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவை இக்காலப்பகுதியில் தொழிநுட்பப் பாடங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் 37 வீதமாக அமைகின்றது. இவ் மாவட்டத்தில் வலய மட்டத்தில் தொழிநுட்பப் பாடம் சார்ந்து மட்டக்களப்பு மத்தி வலயம் முதல் நிலையில் இருந்த போதிலும் பட்டிருப்பு வலயத்தின் கீழ் செயற்படும் களுதாவளை மகாவித்தியாலயத்தில் இருந்து 2015 – 2021 காலப்பகுதியில் 121 மாணவர்கள் இப் பாட நெறிக்காக பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இத்தொகை மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகம் சென்றவர்களின் மொத்தத் தொகையில் 22 வீதமாக அமைவது குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கற்கை நெறிகளுள் மாணவர்களின் கல்விக்கேற்ப தொழில் வாய்ப்பினை வழங்கக் கூடிய தொழிநுட்பக் கல்வியாக இக்கற்கை நெறி அமைந்த போதிலும் எதிர்பார்த்த இலக்கினை அடைவதில் பின்வரும் சவால்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
தொழிநுட்ப பாட நெறியின் இலக்கினை அடைவதில் எதிர் கொள்ளும் சவால்கள்
மகத்துவம் மிக்க திட்டமான திறன்கள் ஆராச்சி மற்றும் தொழில் புரட்சிக்காக கல்வித் துறையை உள்வாங்குவதன் மூலம் நாட்டிற்கு ஏற்ற வகையில் கல்வியையும் அறிவையும் மீளமைப்பதே இக்கற்கை நெறியின் இலக்காகும். மட்டக்களப்பு மாணவர்களைப் பொறுத்தவரை இக்கற்கை நெறி இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடநெறிகளுள் மிகவும் பயன்பாடு மிக்க பாடநெறியாக விளங்குகின்றது. பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு காலதாமதமற்ற முறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்பினை பெற்றுக் கொடுப்பதில் இக்கற்கை நெறி பெரிதும் துணையாக அமைகின்றது. இருப்பினும் இக்கற்கை நெறியின் இலக்கினை அடைவதில் பின்வரும் காரணிகள் எதிர்மறைச் செல்வாக்கைச் செலுத்துகின்றன.
பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்பு போதுமான அளவு ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை
தேசிய ரீதியாக தொழிநுட்ப பாடத்திற்கான முக்கியத்துவம் வழங்கப்பட்ட போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள உயர்தரப் பாடசாலைகளில் தொழிநுட்பப் பாடங்களைத் தொடங்கக் கூடிய 101 பாடசாலைகள் தகுதிபெற்றிருந்தும் 24 பாடசாலைகளில் மாத்திரமே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றிலும் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற நகரங்களில் அருகருகே உள்ள பாடசாலைகளுக்கு அரசியல் செல்வாக்குக் காரணமாக தொழிநுட்பக் கற்கையை கற்பிப்பதற்கான முன்னுரிமை அனுமதி வழங்கப்பட்டமை அனைவரும் கல்வி கற்ப்பதில் சம அந்தஸ்த்து என்பதை புறக்கணிப்பதாக அமைகின்றது. குறிப்பாக கல்வி நிலையிலும் தொழில்வாய்ப்பிலும் மிகவும் பின்தள்ளப்பட்ட மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் இரண்டு பாடசாலைகள் மாத்திரமே தொழிநுட்பப் பாடங்களை தொடங்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தொழிநுட்ப பாடத்தைக் கற்பதற்குப் போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காமை
தொழிநுட்பக் கற்கை நெறி செயன்முறைக் கற்பித்தல் முறையூடன் தொடர்புடைய கற்கை நெறியாகும். இக்கற்கை நெறிக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இக்கற்கை நெறிக்காக சகல பாடசாலைகளிலும் சகல வசதிகளையூம் கொண்ட தொழிநுட்ப ஆய்வூ கூடம்;இ விஞ்ஞான ஆய்வூ கூடம்;இ தொழிநுட்பக் கட்டிடம்;இ தகவல் தொழிநுட்பப் பிரிவூஇ ஒன்று கூடல் மண்டபம் அடங்கிய மகிந்தோதய கட்டத் தொகுதி அமைக்கப்படுவதாக உறுதி கூறப்பட்ட போதிலும் 2016 ஆம் ஆண்டுகளின் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிநுட்பப் பாடம் ஆரம்பிக்கப்பட 17 பாடசாலைகளில் இவ்வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்தில் கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியில் இத் தொழிநுட்பக் கற்கை நெறி 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையால் 2021 ஆம் ஆண்டு எவரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இத் துறையில் தோற்றவில்லை. இவ்வாறான சு+ழலில் மாணவர்கள் தொழிநுட்ப அறிவூ+ட்டத்தை எவ்வாறு பெற முடியூம் என்பது கேள்விக் குறியாக அமைகின்றது. இதன் காரணத்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் பழைய புத்தகக் கல்விக்கே செல்ல வேண்டியதாயிற்று.
தொழில் சந்தைக்கு போதுமான தொழிநுட்பத்துறை அறிமுகப்படுத்தப்படாமை
தொழில் சந்தை நூற்றுக்கணக்கான தொழிநுட்பத்துறையோடும் வேறுபட்ட தொழிநுட்பத்தோடும் தொடர்புடையதாக அமைகின்றது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் தொழில் சந்தையின் தேவைக்கும் கேள்விக்கும் ஏற்றவாறு தொழிநுட்பம் தொடர்பாக பல கற்கை நெறிகள் இருந்த போதிலும் மட்டுப்படுத்தப்பட்ட தொழிநுட்பக் கற்கை நெறிகளே இங்கு மேற் கொள்ளப்படுகின்றன. அவை மட்டுமன்றி ஆரம்பிக்கப்பட்ட தொழிநுட்பப் பாடங்களின் கலைத்திட்டங்கள் மட்டுப்பாடுடையனவாக விளங்குகின்றன. எனவே மூன்றாம் நிலைக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை சர்வதேச மற்றும் தேசிய கேள்விக்கு ஏற்ற வகையிலும் புதிய தொழிநுட்பத்தை உள்வாங்கத்தக்க வகையிலும் கலைத்திட்டத்தை மறுசீரமைத்து விஸ்தரிப்பது மேலும் பயனுறுதி மிக்கதாக அமையூம்.
மட்டுப்பாடான ஆசிரிய வளம்
தொழிநுட்பப் பாடங்கள் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் குறித்த பாடத்திற்கான கலைத்திட்டத்தை கற்பிக்க கூடிய ஆசிரிய வளப் பற்றாக்குறை மாணவர்கள் நிறைவான அறிவூ+ட்டத்தைப் பெற முடியாத நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இத்திட்டத்தின் கீழ் முதல் தடவையாக பயிற்றுவிக்கப்பட்ட 300 ஆசிரியர்களுள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இக் கற்கை நெறிக்கென பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் மிகக் குறைந்தளவினரே இணைக்கப்பட்டிருந்தனர். அனேகமான பின்தள்ளப்பட்ட பாடசாலைகளில் நிறைவாக குறித்த ஒவ்வொரு கற்கை நெறிக்கும் போதுமான ஆசிரிய வளம் இல்லாமையால் மாணவர்கள் தமது கற்கை நெறியினை செவ்வனே நிறைவூ செய்ய முடியாதவர்களாகவூம் இடைநடுவில் கற்கையை நிறுத்தி ஏனைய பாடநெறிகளை நோக்கி நகர்வடைவதையூம் அவதானிக்க முடிகின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட உயர்கல்வி வாய்புக்கள்
க.பொ.த உயர்தரத்தில் தொழிநுட்பத்துறை சார்ந்து சித்திபெறும் மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிக்கான இட ஒதுக்கிடானது மிகவூம் மட்டுப்பாடாக உள்ளது. உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தேசிய கல்வியியல் கல்லூரிக்கு வருடாந்தம் 6 மாணவர்கள் மட்டுமே இத்துறைசார்ந்து உள்ளீர்க்கப்படுகின்றனர். இத்தொகை மாவட்ட மட்டத்தில் சித்தியடையூம் மாணவர்களின் தொகையில் 1 வீதத்திலும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதே போன்று பாடசாலை மட்டக் கல்வியை நிறைவூ செய்வோருக்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவோரின் தொகையை மிகவூம் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைகின்றன.
பாடசாலை மட்ட தராதர முரன்பாடு
தொழிநுட்பப் பாடத்துறை ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்காலத்தில் 1 AB சுப்பர் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட அதே வேளை மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்கு முன்பே 1 AB பாடசாலைகளாக தரமுயத்தபட்டதோடு மாவட்டத்தில் முதன்மைப் பாடசாலைகளாக செயற்படும் பல பாடசாலைகள் தொழிநுட்ப பாடங்கள் ஆரம்பிக்கப்படாமை காரணமாக 1 AB பாடசாலைகளாக இருந்து 1 AB சுப்பர் பாடசாலைகளாக தரமுயரும் வாய்ப்பிழந்த பாடசாலைகளாக விளங்குகின்றன.
முடிவுரை
இலங்கையில் பல்கலைக்கழகங்களில் கல்விகற்ற பலர் வேலையின்மையால் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியவர்களாக உள்ளனர். சிலர் பட்டப்படிப்பின் பின் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூட தொழில்வாய்பைப் பெறுகின்றனர். அனேகமானவருக்கு கற்ற கல்விக்கு ஏற்ற தொழில் வாய்ப்பு கிடைப்பதில்லை. சிலர் தொழில் வாய்ப்பைப் பெற்ற போதிலும் அத்தொழில் போதிய வருமானத்தை ஈட்டிக் கொடுக்கவில்லை. உள்நாட்டில் தொழில் வாய்பற்றவர் வெளிநாடுகளில் தொழில் வாய்பை நோக்கி நகர்ந்த போதிலும் பொருத்தமான தொழில் வாய்ப்பையோ அல்லது போதுமான வருமானத்தையோ இலங்கையின் கல்விப் பின்புலம் உருவாக்கி கொடுக்கவில்லை. எனவே தொழிநுட்பப் பாடத்துறை மூலம் கல்வி கற்றவர் தான் கற்ற கல்வி மூலம் ஏதாவது ஒரு தொழில் வாய்ப்பைப் உருவாக்கிக் கொள்ள பெரிதும்உதவூம். மேலும் இக் கற்கைநெறியானது உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும் இக்கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பொருத்தமான ஆசிரிய வளம் இல்லாமை, போதுமான உபகரணங்கள் வழங்கப்படாமை, வரையறுக்கப்பட்ட அளவிலான உயர்கல்வி வாய்ப்பு, அரசியல் ஆதிக்கத்தோடும் இனம் சார்ந்த அல்லது அரசியல் பின்புலம் சார்ந்த குறித்த சில பாடசாலைகளில் மட்டும் இக்கற்கை நெறிக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் முதலான காரணங்களால் தொழிநுட்ப பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டதன் இலக்கினை அடைய முடியாத நிலை ஏற்படுகின்றது. இவற்றை நிவர்த்தி செய்வதன் ஊடாக பொருத்தமான தொழில் வாய்ப்பினையும் போதுமான வருமானத்தையும் ஏற்படுத்தக் கூடிய தொழில்படையை உருவாக்க முடியும்.
உசாத்துணைகள்
PER/A/HED/A/2019/4(2019) கலைப் பிரிவு பாடவிதானத்தின் கீழ் கல்வியில் ஈடுபடும் போக்கு மற்றும் கலைப்பிரிவு பட்டதாரிகளின் வேலையின்மை. அறிக்கை, தேசிய கணக்காய்வு அலுவலகம், கொழும்பு.
Commisioner Genaral, Performance Of Candidates, G.C.E A/L Examination, 2015, 2016 ,2017 ,2018, 2019, 2020, 2021), (Department Of Examination, Issurupaya.
தேசிய கல்வி ஆணைக்குழு, (2003), இலங்கையின் பொதுக்கல்வி பற்றிய தேசிய கொள்கைச் சட்டமொன்றிற்கான ஆலோசனைகள், இலங்கை.
பொதுக் கல்வி தேசிய ஆணைக்குழு, (2009), இலங்கையின் பொதுக் கல்விக்கான தேசிய கல்விச்சட்டம், கொழும்பு.
கையிலாயபிள்ளை.அ, (2013) கல்வித் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் புதிய தொழில் நுட்பத்துறை, ஸ்ரீஸ்கந்தநாதம் மணிவிழா மலர், ஆன்திரா அச்சகம், யாழ்ப்பாணம்.
ஜெயலெட்சுமி இராசநாயகம், (2020), இலங்கையில் க.பொ.த. உயர்தர வகுப்புக்களில் தொழில் நுட்ப்பப் பாடத்தறை அறிமுகம், நடைமுறைகள், எதிர்பார்ப்புகள், சவால்கள், ராஜ ஜெபம், நியு எவக்கிறின் பிறின்டேர்ஸ், கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
கல்வி அமைச்சு, (2012), கல்வியின் புதிய நோக்கு மற்றும் முன்னேற்றத்தின் வழி காட்டல்கள் இசுறுப்பாய, கொழும்பு.
தேசிய திட்டமிடல் திணைக்களம், (2010) இலங்கை ஆசியாவில் மலர்ந்துவரும் ஆச்சரியம், கொழும்பு.
சின்னத்தம்பி.மா(2014) இலங்கையின் தொழில் நுட்ப்ப மற்றும் தொழில் நுட்பவியல் கல்வி: தேக்க நிலையில் இருந்து பேண்தகு நிலைக்கு நகர்த்தல், சீமாட்டி லீலாவதி நினைவுப் பேருரை.
Mohan Lal Grero (2013), Benefite Of Introducing The Technology Stream, benifits – introducing – technology – stream, WWW.ft.lk2013/08/02
Mohan Lal Grero (2019), Mismatch Between The Education System And The Job Market In Sri Lanka With Special Reference To Soft Skills, Colombo.