பேராதனை பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் மீதான தாக்குதல் தொடர்பில் 12 பல்கலை மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மற்றும் அவரது வீட்டின் மீது நேற்று முன்தினம் (10) இரவு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், தொடர்புடைய 12 மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த மாணவர்களின் கல்வியை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் திலக் பண்டார தெரிவித்தார்.
சம்பவத்துடன் மேலும் பல மாணவர்களுக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஏனையோரை அடையாளம் காணவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த அத்துல சேனாரத்ன சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவரது வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் நேற்று இரவு (10) நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அவரது மகனின் கார் மோதியதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலருடன் ஏற்பட்டட வாக்குவாதத்தை தொடர்ந்து குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
https://sinhala.teachmore.lk/?p=928