அடிப்படைக் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துதல்
Enhancing Primary teaching Skills
S.Logarajah SLTES
Lecturer, Batticoloa National College of Education
கற்பித்தல் திறன் – அறிமுகம்
கற்பித்தலை ஒரு விஞ்ஞானமாகக் கருதும்போது கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டில் ஓர் அறிவியல் தளத்தை வழங்க அதன் ஒவ்வொரு அம்சங்களையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். திறன் சார்ந்த தொழிலாளியின் பல்வேறுபட்ட நிழல்கள் மற்றும் கோடுகள் ஒன்றிணைவதன் மூலம் கலைப்படைப்பு வண்ணம் பெறுகின்றது. இவ்வாறே ஆசிரியரின் பல்வேறு திறன்கள் ஒன்றிணைந்து கற்பித்தலை அழகுபடுத்துகின்றன. கற்பித்தல் திறன்களில் தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியருக்கு தனது கற்பித்தல் குறித்து திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படும். இதன் விளைவாக கற்பித்தலோடு தொடர்புடைய அனைத்து வேலைகளையும் அவர் வெற்றிகரமாக நிறைவேற்றுவார்.
கற்பித்தல் மாணவர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஓர் ஆசிரியர் ஒருவரின் பொருள் சார்ந்த அறிவையும், அவரின் மனதையும், ஆளுமையையும் வளர்ப்பதில் பங்களிப்புச் செய்யலாம்.
திறமையான ஆசிரியராக இருப்பதன் சாராம்சம் மாணவர்களை வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வதோடு அதை செய்யவும் முடிவதாகும்.
பயனுள்ள கற்பித்தல் என்பது முதன்மையாக ஆசிரியர் விரும்பும் கற்றல் வகையைக் கொண்டுவருவதில் வெற்றி பெறும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு கற்றல் செயற்பாட்டை அமைப்பதில் அக்கறை கொண்டுள்ளது. என்ன செய்வது என்பதைத் தீர்மானிப்பதும் அதனைச் செய்து முடிப்பதும் இங்கு பிரதானமானவையாகும்.
ஒரு வெற்றிகரமான ஆசிரியராக இருக்க இளஞ்சிறார்களின் மனதை ஊக்குவிப்பதற்கான ஆர்வமும் ஒவ்வொரு மாணவனும் உரிய தேர்ச்சியை அடைவதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பும் தேவையாகிறது.
- ஒரு ஆசிரியர் பாடவிதான நோக்கங்களுக்கேற்ப வேலைத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புக்களைத் தயார் செய்வார்.
- மாணவர்களுடன் உறவை ஏற்படுத்துவதன் மூலமும் கற்றல் வளங்களை ஒழுங்காக வைத்திருப்பதன் மூலமும் வகுப்பறையில் நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலமும் நீங்கள் கற்றலை எளிதாக்குவார்.
- வயது, திறன், மற்றும் இயலுமைகளுக்கேற்ப சிறார்களிடம் உன்னத வளர்ச்சியை ஏற்படுத்த பொருத்தமான திறன்களையும், சமூகத் திறன்களையும் வளர்த்து வளர்பதே ஆசிரியரின் பிரதான பணியாகும்.
- ஆசிரியர் மாணவர்களின் முன்னேற்றத்தினை மதிப்பீடு செய்து அவர்களை தேசிய பரீட்சைக்குத் தயார் செய்வார்.
- மாணவர்களின் அறிவை முந்தைய கற்றலுடன் இணைத்து அதை மேலும் ஊக்குவிப்பதற்கான வழிகளை உருவாக்கு செய்வார்.
ஆசிரியரொருவர் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்வதற்கு கற்பித்தல் திறன்களை மேம்படுத்திக் கொள்வது தேவையான ஒன்றாகவே காணப்படுகின்றது.
கற்பித்தல் திறன்கள் – வரையறை
கற்பித்தல் திறன்களை வரையறுப்பது பின்வருவனவற்றில் ஒன்றாகும்
- கற்பித்தல் திறன் என்பது மாணவர்களின் கற்றலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எளிதாக்கும் ஆசிரியரின் நடத்தையாகும்.
- கற்பித்தல் திறனில் மாணவர்களின் கற்றலை அதிகரிக்கும் ஆசிரியரின் அனைத்து நடத்தைகளும் அடங்கும்.
- கற்பித்தல் திறன் என்பது ஆசிரியரின் கற்பித்தல் கலை, ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையிலான தொடர்பின் தன்மை போன்றவற்றை உள்ளடக்கியது.
- கற்பித்தல் திறன் என்பது பாடத்தைக் கற்பித்தலுடன் தொடர்புடைய நடத்தைகளின் தொகுப்பாக வரையறுக்கப்படுகின்றது. இது ஆசிரியரிடமோ அல்லது பயிற்சியாளரிடமோ விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டு வருவதில் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
- அலென் என்பவரது கருத்துப்படி கற்பித்தல் திறன் என்பது கற்பித்தலின் செயல் ஆகும்.
- ரேனி என்பாரது கருத்துப்படி திறன் என்பது கற்பித்தல் செயற்பாடுகளினதும், நடத்தைகளினதும் வெளிப்பாடு ஆகும்.
- என்.எல்.கேஜ் (1938) அவர்களது கருத்துப்படி “கற்பித்தல் திறன் என்பது ஓர் ஆசிரியர் தனது வகுப்பறையில் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட அறிவுறுத்தல், நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் ஆகும். இவை கற்பித்தலின் பல்வேறு கட்டங்களுடன் அல்லது ஆசிரியர் செயல் திறனின் தொடர்ச்சியான ஓட்டத்துடன் தொடர்புடையவையாகும்.”
- ஆசிரியர் கல்வியியலாளர்களுக்கான ஆசிய நிறுவனம் (1972) ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை “ஆசிரியரின் நடவடிக்கைகள் என வரையறுக்கின்றது”, இது மாணவர்களில் விரும்பத் தக்க மாற்றங்களைக் கொண்டுவருவதில் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். மற்றும் ஆசிரியரின் செயல் திறனின் தொடர்ச்சியான ஓட்டத்துடன் தொடர்புடையது.
- பாஸி (1968) கூறுகையில், மாணவர்களின் கற்றலை எளிதாக்கும் நோக்கத்துடன் நிகழ்த்தப்படும் கற்பித்தல் செயல்கள் அல்லது நடத்தைகள் அனைத்தும் கற்பித்தல் திறன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- இதே போல் வ்ராக் (2005) கற்பித்தல் திறன்களை மாணவர்களின் கற்றலை எளிதாக்க ஆசிரியர்கள் பயன்படுத்தும் உத்திகளாகப் பார்க்கின்றார்.
- Kyriacou (2007) கற்பித்தல் திறன்களை ஆசிரியர்களின் தனித்துவமான மற்றும் ஒத்திசைவான செயற்பாடுகளாகக் காண்கின்றார். இது மாணவர்களின் கற்றலை வளர்க்கின்றது.
வாய்மொழி மற்றும் சொற்கள் அல்லாத செயல்களின் மூலம் மாணவர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக கற்றுக்கொள்வதை எளிதாக்குவதற்கும், ஆதரிப்பதற்கும் மேற்கொள்ளப்படுகின்ற ஆசிரியரின் நடத்தைகள் கற்பித்தல் திறன்களாகும் என்பதையே மேற்கூறிய வரைவிலக்கணங்கள் அனைத்தும் குறித்து நிற்கின்றன.
எனவே கற்பித்தல் திறன்கள் ஆசிரியர் செயற்பாடுகளை மேற்கொண்ட விதம் மற்றும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் என்ன முடிவுகளை மேற்கொண்டுள்ளார் என்பதோடு தொடர்புடையதாக விளங்குகின்றது.
சுருங்கக் கூறின் கற்பித்தல் திறன் என்பது ஆசிரியரின் நடத்தையை வரைவிலக்கணப்படுத்தவதாக இருக்கின்றது. அல்லது ஒரு செயற்பாட்டை ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் நேர்த்தியாகப் பயன்படுத்துவதைக் குறித்து நிற்கின்றது.
திறன் எனும் சொற்பதத்தை நுணுக்கமான முறையிலும் விரிவான முறையிலும் உபயோகித்துக் கொள்ள முடியும்.
உதாரணமாக
ஒரு பாடத்தை திட்டமிட்டு ஒழுங்கமைத்து கற்போருக்கு அர்த்தமுள்ள வகையில் உருவாக்குதல்.
கற்பித்தல் திறன்களின் தேவை மற்றும் முக்கியத்துவம்.
எந்தவொரு தேசத்தினதும் பொருளாதார வளர்ச்சியும் அதன் பண்புத்தரமும் அந்நாட்டின் மனிதவள வளர்ச்சியைப் பொறுத்ததே என்பதை நீங்கள் அறிவீர்கள். மனிதவள வளர்ச்சியின் திறவு கோல் திறன்கள் ஆகும். இந்த திறன்கள் எந்த மட்டத்தில் வழங்கப்படுகின்றது என்பதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது. இது பெரும்பாலும் அத்திறன்களை வழங்குபவர்களைப் பொறுத்தே அமையும்.
எனவே எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யவிருக்கும் மனித வளங்களான மாணவர்களுக்கு அத் திறன்களை வழங்க எமக்குத் திறமையான ஆசிரியர்கள் தேவை. இந்த திறன்களை வழங்கும் ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை திறமையாகச் செய்யமுடியும். இதைச் செய்ய அவர்கள் தமக்குத் தேவையான திறன்களை அவர்களே பெற வேண்டும். எனவே சிறந்த ஆசிரியராக இருப்பதற்கான அத்தியாவசிய திறன்கள் என்ன, இந்த திறன்களை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
கற்பித்தல் திறன்களின் தன்மை (Nature of Teaching Skills)
வெற்றிகரமான கற்பித்தலுக்கு அறிவு, முடிவெடுத்தல் மற்றும் செயல் ஆகிய மூன்றும் அவசியமாகும். திறன்களை அடிப்படையாகக் கொண்ட இம் மூன்று கூறுகளுக்குமிடையிலான வேறுபாடு மிக முக்கியமானதாகும். ஏனென்றால் திறமையான கற்பித்தல் என்பது சிந்திக்கக் கூடிய ஒரு செயற்பாடாகும். எனவே ஆசிரியராக திறமையை வளர்த்துக் கொள்வதென்பது ஒரு சூழ்நிலையில் ஆசிரியர். எடுக்கும் முடிவுகள் பற்றிய அவரது அறிவை வளர்த்து விரிவாக்குவதோடு குறிப்பிடத்தக்க செயலை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதுமாகும்.
கிட்டத்தட்ட அனைத்து ஆசிரியர்களும் தங்கள் அடிப்படைப் பயிற்சியின் போது அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கவனிக்க சிறிது நேரம் செலவிடுவார்கள். இத்தகைய அவதானிப்பு மிகவும் பெறுமதி வாய்ந்தது. மற்றொரு ஆசிரியரின் கற்பித்தலை அவதானிப்பதன் மூலம் தமது கற்பித்தல் பற்றிய உங்கள் சொந்த யோசனைகளைத் தூண்டலாம். மாதிரிக் கற்பித்தல் ஊடாக இதனைச் செயற்படுத்தலாம். இதன் மூலம் நல்லது, கெட்டது இருவிதமான படிப்பினைகளும் கிடைக்கும்.
உதாரணமாக மற்றொரு ஆசிரியரால் தகுந்த ஆயத்தங்களுடன் தயாரிக்கப்பட்ட சிறப்பான செயற்பாட்டுப் பத்திரமொன்றை அல்லது சில குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்ட செயற்பாட்டுப் பத்திரமொன்றை அவதானிக்கின்ற போது தமது செயற்பாட்டுப் பத்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டக் கூடும். மேலும் சக ஆசிரியரின் கற்பித்தல் தொடர்பான முடிவுகளுடன் கற்பித்தல் தொடர்பான தமது சொந்த முடிவை அடிக்கடி பொருத்த முற்படும் போது ஏற்படும் ஆக்கபூர்வமான பதட்டம் காரணமாக அவதானிப்பு தூண்டப்படுகின்றது.
எடுத்தக்காட்டாக முழு வகுப்பிற்குமாக ஆசிரியரால் வடிவமைத்த பரிசோதனையையும் சக ஆசிரியர் ஒருவர் சிறு குழுவொன்றுக்கு வடிவமைத்த பரிசோதனையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் சாதக பாதகங்களைத் தெரிந்து கொள்ளலாம். அது தமது கற்பித்தல் பற்றி சிந்திக்கத் தூண்டும். கற்பிப்பதற்கு முன்னும் பின்னும் சிறிது நேரம் கலந்துரையாடுவதன் மூலம் வகுப்பறை அவதானிப்பின் நன்மைகளை அடைந்து கொள்ளலாம்.
கற்பித்தல் திறன்களின் முக்கிய அம்சங்கள்
(Features of Teaching Skills)
பல ஆண்டுகளாக வகுப்பறைக் கற்பித்தல் திறன்கள் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. சேவை முன் பயிற்சி மற்றும் சேவைக்கால பயிற்சியளிப்பதில் ஆர்வமுள்ளவர்கள், கற்பித்தல் செயற்றிறனில் தரத்தைக் கண்காணிப்பதில் ஈடுபடுபவர்கள், ஆசிரியர் மதிப்பீட்டுத் திட்டங்களில் ஈடுபடுபவர்கள் ஆகியோரின் ஆராய்ச்சிகள் இதில் அடங்கும். இம் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக கற்பித்தலை நோக்காகக் கொண்டவையாகும். கற்பித்தல் திறன்களை ஒட்டுமொத்தமாக மூன்று துறைகளில் நோக்கலாம்.
- கற்பித்தல் திறன்கள் என்பதினுள் குறிக்கோள் மற்றும் குறிக்கோளை இயக்கும் நடத்தை ஆகியவை அடங்கும்.
- ஆசிரியர்களின் நிபுணத்துவ நிலை, கற்பித்தலின் துல்லியம், மென்மை, மற்றும் உணர்திறன் ஆகியவற்றை நிரூபிக்கின்றது.
- கற்பித்தல் திறன்களை, பயிற்றுவிப்பதன் மூலமும் பயிற்சி செய்வதன் மூலமும் மேம்படுத்தலாம்.
கற்பித்தல் திறன்களின் ஆய்வுகள் (Studies of Teaching Skills)
- கற்பித்தல் திறன்களின் ஆய்வுகள் பொதுவாக புதிய ஆசிரியர்களால் இத்திறன்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன மற்றும் காண்பிக்கப்படுகின்றன என்பதையும், புதிய ஆசிரியர்கள் அனுபவமிக்க ஆசிரியர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதையும் மையமாகக் கொண்டுள்ளன. (Wragg 2015).கற்றலை எளிதாக்க ஆசிரியர்கள் பயன்படுத்தும் உத்திகளாக கற்பித்தல் திறன்களை wragg காண்கின்றார். மேலும் அந்த உத்திகள் திறமைவாய்தவர்கள் என்று தீர்ப்பளிக்கத் தகதியுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. திறமை மீண்டும் மீண்டும் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் wragg வாதிடுகின்றார். தனியே குறிப்பிட்ட திறன்களில் கவனம் செலுத்துவது உதவாது என்றும் சுட்டிக்காட்டுகின்றார். ஏனெனில் அவை சூழலுக்கு வெளியே குறைந்த அர்த்தமுள்ளதாக மாறும். வகுப்பறை முகாமைத்துவம் போன்ற பரந்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய திறன்களை பகுப்பாய்வு செய்வது நல்லது என wragg நம்புகின்றார்.
- ஆசிரிய மாணவரிடையே திறன்களை வளர்ப்பதில் பெருமளவான ஆய்வாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். பல எழுத்தாளர்கள் அனுபவமுள்ள ஆசிரியர்கள் திறன்களைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளனர். அவர்கள் கற்பித்தலை ஒரு சிக்கலான அறிவாற்றல் திறனாக கருதுகின்றனர். அவர்கள் ஒரு பாடத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் நடாத்துவது என்பது பற்றிய அறிவு மற்றும் கற்பிக்கப்பட வேண்டிய உள்ளடக்கத்தைப் பற்றிய அறிவு அகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இத்திறன்கள் ஆசிரியருக்கு பாடத்திட்டத்தை உருவாக்க மற்றும் மாறும் சூழ்நிலைகளின் வெளிச்சத்தில் விரைவான முடிவுகளை எடுக்க உதவுகின்றது.
- புதிய ஆசிரியர்களுக்கும், அனுபவமிக்க ஆசிரியர்களுக்கமிடையிலுள்ள வித்தியாசம் என்னவென்றால், அனுபவமிக்க ஆசிரியர்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட செயல்களின் தொகுப்புக்களை உருவாக்கியுள்ளனர். அவை நெகிழ்வாகப் பயன்படுத்தக் கூடியவை, மற்றும் நிலைமைகளுக் கேற்றவாறு சிறிய முயற்சியுடன் மாற்றியமைக்கப்படுகின்றன. இங்கே ஒரு பயனுள்ள ஒப்புமை என்னவென்றால் ஒரு உணவகத்திற்குச் செல்வது. நாம் பல வகையான உணவகங்களுக்குச் சென்றதும் அங்கு பொதுவாக செயற்படும் செயல்முறை குறித்த அறிவை நாம் வளர்த்துக் வளர்த்துக் கொள்வோம். ஒரு மேசையைக் கண்டுபிடித்தாலும் அல்லது ஒன்றைக் காண்பித்தாலும் மெனுவிலிருந்து ஓடர் செய்வது எப்படி? பணத்தை எப்போது எப்படிச் செலுத்த வேண்டும். அத்தகைய அனுவபம் ஒரு புதிய உணவகத்திற்குச் சென்று நாம் விரும்புவதைப் நியாயமான முறையில் திறம்படச் சமாளிக்க உதவும்.
- இதேபோல் அனுபவமிக்க ஆசிரியர்கள் சூழ்நிலைகளின் உடனடிக் கோரிக்கைகளுக்கு பொருத்தமான நடத்தையை தேர்ந்தெடுப்பதற்கான பலவிதமான நடத்தைகளின் தொகுப்பை உருவாக்கியுள்ளனர். இது வினாவுக்கு விடையளிக்க முடியாத ஒரு மாணவனைக் கையாள்வதா, அல்லது யன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் மற்றொரு மாணவனைக் கவனிப்பதா. உண்மையில் ஆரம்ப வருடங்களில் புதிய ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதைச் செய்ய முடியும் என்ற அவர்களின் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- பல ஆய்வாளர்களது கருத்துப்படி கற்பித்தல் திறனினுள்ள ஓர் முக்கிய அம்சம் அதன் ஊடாடும் தன்மையாகும் (Interactive) பாடத்தின் போது ஆசிரியரின் நடவடிக்கைகள் தொடர்ந்து மாறிவரும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். அவற்றில் பல எதிர்பாராதவையாக இருக்கலாம். வகுப்பறையில் ஓர் ஆசிரியரின் செயல்திறன் பாடம் எவ்வளவு சிறப்பாகச் செல்கிறது என்பதிலும் அவர்களால் செயல்கள் எவ்வாறு மாற்றியமைக்கப்படுகின்றன மற்றும் எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதிலேயே தங்கியுள்ளன.
- ஓர் ஆசிரியருக்கு நன்றாகக் கற்பிப்பது எப்படி என்று தெரிந்திருக்கலாம். ஆனால் மாணவ ஆசிரியர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வது எவ்வாறு? அவர்களுக்கு உதவுவது எவ்வாறு என்ற பாத்திரங்களை வகிப்பது இலகுவானதல்ல.
அத்தியாவசிய கற்றல் திறன்களை வரையறை செய்தல்
(Defining essential teaching skills)
கற்பித்தல் திறன் என்பது மாணவர்களின் கற்றலை வளர்ப்பதை நோக்காகக் கொண்டுள்ள ஆசிரியரின் தனித்துவமான மற்றும் ஒத்திசைவான செயல்களாகும்.
இதுவரை நாம் கற்பித்தல் திறன்கள் குறித்து ஆராய்ந்ததன் அடிப்படையில் கற்பித்தல் திறன் குறித்த மூன்று முக்கிய கூறுகளை தெளிவாகக் கண்டு கொள்ளலாம்.
- அறிவு : பாடத்தைப் பற்றிய ஆசிரியரின் அறிவு, மாணவர்கள், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள், கற்றல் – கற்பித்தலில் செல்வாக்குச் செலுத்தும் பிற காரணிகள் மற்றும் ஒருவரின் சொந்த கற்பித்தல் திறன்களைப் பற்றிய அறிவு.
- தீர்மானம் எடுத்தல் : ஒரு பாடத்திற்கு முன்னும் பாடத்திற்குப் பின்னரும் நிகழும் சிந்தனை மற்றும் தீர்மானமெடுப்பதை உள்ளடக்கியது. மற்றும் நல்ல கல்வி வெளியீடுகளை சிறந்த முறையில் எவ்வாறு அடைவது பற்றியது.
- செயல்: மாணவரின் கற்றலை வளர்ப்பதற்கு ஆசிரியரால் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான நடத்தைகளை உள்ளடக்கியது.
- கற்பித்தல் திறன்களின் முக்கிய அம்சம் என்னவென்றால் அவை குறிக்கோள், குறிக்கோள்களை நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்றன. மாணவர்களின் கற்றலை அடிப்படையாகக் கொண்ட கல்வி முடிவுகளை எவ்வாறு திறம்பட வழங்குவது என்பது அதன் பரந்த அம்சமாகும்.
- கற்பித்தல் திறன்கள் பாடத்திற்கு முன்னும் பின்னரும் எழும் குறுகியகால, உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் அதன் முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக:
- “குறிப்பிட்ட தலைப்பு ஒன்றின் முக்கிய பகுதிகளை எவ்வாறு பவர் பொயிட் (Power Point) செயலியில்; முன்வைப்புச் செய்வது?”
- “முழு வகுப்பிற்கும் விளக்கமளித்துக் கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்டுப் பேசும் மாணவன் பேசுவதை நிறுத்த எவ்வாறு சமிக்ஞை செய்யலாம்”.
- “மாணவரது ஆக்கத்தில்; ஒரு குறைபாட்டை முன்னிலைப்படுத்த மாணவரது படைப்பின் பகுதியை மதிப்பிடும் போது நான் என்ன எழுத முடியும்?”
- கற்பித்தல் திறன்கள் பயனுள்ள கற்பித்தலின் நீண்ட கால பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டுள்ளன. அதாவது “எந்த பாடநூல் தொடர் எனது மாணவர்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்கிறது.”
- “எனது பாட அறிவை நான் எவ்வாறு சிறப்பாகப் புதுப்பிக்க முடியும்.”
- “எதிர்வரும் ஆண்டுகளில் மாணவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரீட்சைகளுக்கு அவர்களை எவ்வாறு தயார் செய்வது?”
அத்தியாவசிய கற்பித்தல் திறன்களை அடையாளம் காணுதல்
(Identifying essential teaching skills)
அத்தியாவசிய கற்பித்தல் திறன்களின் பட்டியலை அடையாளம் காண்பதிலுள்ள சிக்கல் என்னவென்றால் கற்பித்தல் திறன் என்பது பாடங்களைத் திட்டமிடுவது போன்ற பரந்த பொதுத் திறன்களிலிருந்து மாறுபடுகிறது. உதாரணமாக குறிப்பிட்டதொரு சூழ்நிலையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்க ஒரு மாணவர் காத்திருக்க வேண்டிய பொருத்தமான நேரம் எவ்வளவு? போன்றவை.
ஒட்டுமொத்தமாக கற்பித்தல் திறன்களைக் கருத்தில் கொள்ளும் போது ஆசிரியர்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் கற்பித்தல் திறன்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதோடு தொடர்புடைய பரந்த மற்றும் பொதுத் திறன்களில் கவனம் செலுத்துவது மிகவும் பயனுடையதாக இருக்கும்.
இந்த பொதுத் திறன்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை விளக்குவதற்கும் வெளிச்சம் பெறுவதற்கும் உதவும் போது மேலும் குறிப்பிட்ட சிறப்புத் திறன்கள் குறித்து கலந்துரையாடலாம். ஆயினும் கற்பித்தலின் தன்மையைப் பொறுத்தவரை பொதுவான திறன்கள் எதுவானாலும் அவற்றில் கவனம் செலுத்தி அவற்றுக்கிடையேயான தொடர்பு குறிக்கப்படும்.
- அதிக எதிர்பார்ப்புக்கள்
- திட்டமிடல்
- முறைகள் மற்றும் உத்திகள்
- மாணவர் முகாமைத்துவம் மற்றும் ஒழுக்கம்
- நேரம் மற்றும் வள முகாமைத்துவம்
- மதிப்பீடு
- வீட்டுப்பாடம்
பல ஆண்டுகளாக ஆசிரியர் கல்வியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் கற்பித்தல் திறனை பட்டியலிட முயன்றுள்ளனர். இப்பட்டியலில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆயினும் பல்வேறு ஆவணங்களைக் கருத்தில் கொள்ளும் போது கற்பித்தல் திறன்களின் பொதுவான பட்டியலை அடையாளம் காண முடியும்.
இத்தகைய கற்பித்தல் திறன் பட்டியல்கள் தொடக்க மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைச் செயற்பாடுகள் பற்றிச் சிந்திக்கவும், வளர்க்கவும் உதவுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
பயனுள்ள ஆசிரியர் தொடர்பான ஆக்கங்கள் பயனுள்ளதாக கருதப்படும் ஆசிரியர்களால் காண்பிக்கப்படும் திறன்களைப் பற்றிய ஏராளமான பொருள்களையும் அளித்துள்ளன. பொதுவாக ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தலில் பின்வரும் திறன்களைக் காண்பிப்பதாகத் தெரிகிறது.
- ஒழுங்கான,கவர்ச்சியான கற்றல் சூழலை நிறுவுதல்.
- கற்றல் நேரத்தை அதிகரிப்பதன் மூலமும் கல்வி சார் முக்கியத்துவத்தைப் வலியுறுத்துவதன் மூலமும் கற்றல் – கற்பித்தலில் கவனத்தைக் குவித்தல்.
- நன்கு கட்டமைக்கப்பட்ட பாடங்கள் மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள்; மூலம் நோக்கத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளலும், நோக்கத்தோடு கற்பித்தலும்.
- உயர்ந்த மட்ட எதிர்பார்ப்புக்கள், மற்றும் நுண்ணறிவு சார்ந்த சவால்களை வழங்குதல்.
- முன்னேற்றத்தைக் கண்காணித்தல் மற்றும் விரைவான சரியான பின்னூட்டல்களை வழங்குதல்.
- தெளிவான மற்றும் நியாயமான ஒழுக்கத்தை ஸ்தாபித்தல்.
ஆசிரியர் மதிப்பீடு மற்றும் செயலாற்றுகை மீளாய்வுகளில் கற்பித்தல் திறன்கள் பற்றிய மற்றுமொரு முக்கியமான ஆதாரத்தைக் காணலாம். பாடங்களில் நிரூபிக்கப்பட்ட கற்பித்தல் திறன்கள் எந்தளவிற்கு திட்டமிடல் மற்றும் பண்புத்தர அளவீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆசிரியர் மதிப்பீடுகள் செயலாற்றுகை மீளாய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
இவை பின்வரும் பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன.
- தயாரிப்பு மற்றும் திட்டமிடல் (Preparation and planning)
உதாரணம்: பாடசாலையின் கலைத்திட்ட வழிகாட்டல்கள் தொடர்பான குறுகிய கால நோக்கங்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பலவிதமான உபகரணங்கள் வளங்களை அறிவதும் அவற்றைப் பயன்படுத்துவதுமாகும்.
- வகுப்பறை ஒழுங்கமைப்பு மற்றும் முகாமைத்துவம் (Classroom organization and management)
உதாரணம்: நேரத்தையும், இடத்தையும் அதிகபட்ச நன்மைக்காகப் பயன்படுத்துதல். மற்றும் ஒரு செயற்பாட்டிலிருந்து மற்றொரு செயற்பாட்டிற்கான மென்மையான மாற்றத்தை உறுதி செய்தல்.
- தொடர்பாடல் திறன் (Communication skills)
உதாரணம்: வினாக்கேட்டல் மற்றும் திறம்பட விளக்கமளித்தல்.
- மாணவர்களுக்கான வேலைகளை ஒழுங்கமைத்தல்
(The setting of work for pupils)
உதாரணம் : வேலைகள் வயதுக்கும் திறனுக்கும் பொருத்தமாகவும், தரமாகவும், நோக்கத்தை காண்பிப்பதாகவும் இருத்தல்.
- மாணவரது வேலைகளை மதிப்பிடலும் அதற்கான பதிவுகளைப் பேணுதலும் (Assessment of pupils’ work and record keeping)
உதாரணம் : இதன் மூலமாகக் கிடைக்கும் பின்னூட்டல் மாணவர்களுக்குத் தமது எதிர்காலப் பணிகளை மேம்படுத்த உதவும்.
- குறித்த பாடவிடயம் தொடர்பான அறிவு (Knowledge of relevant subject matter)
உதாரணம் : குறித்த விடயப்பரப்பு பற்றிய அறிவானது மாணவர்களை ஒரு பாதுகாப்பான புரிதலை நோக்கி வளர்க்கவும் வழிநடத்தவும் உதவும்.
- மாணவர்களுடனான உறவுகள் (Relationships with pupils)
உதாரணம் : குழந்தைகளின் வார்த்தைகள் எண்ணங்கள் மீது உண்மையான ஆர்வத்தையும் மரியாதையையும் காட்டுகின்றது. மற்றும் ஆளுமையை விட குழந்தைகளின் நடத்தையில் கவனம் செலுத்துகிறது.
பிரித்தானியாவின் கல்வி மற்றும் திறன்கள் திணைக்களம் (DfES) ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளில் நல்ல வகுப்பறைப் பயிற்சிக்கு உதவும் கற்பித்தல் திறன்கள் பற்றி அதிக கவனம் செலுத்துள்ளது. இவற்றில் பல்வேறு வகையான வகுப்பறைப் பயிற்சிகளில் ஆசிரியருக்கு உதவும் பொருட்கள் மற்றும் பயிற்சிகள் இடம் பெற்றுள்ளன.
கல்வி மற்றும் திறன்கள் திணைக்களம் (DfES) கற்பித்தல் திறன்கள் தொடர்பாக பல்வேறு தேசிய உபாயங்களைப் பரிந்துரை செய்துள்ளது. இடைநிலைப் பாடசாலைகளைக் கருத்தில் கொண்டு பின்வரும் பகுதிகளில் கற்பித்தல் திறன்களைக் கையாளும் பயிற்சிப் பொதி ஒன்றை உருவாக்கியுள்ளது.
- பாடங்களை வடிவமைத்தல்
- கட்டமைக்கப்பட்ட கற்றல்
- கற்பித்தல் மாதிரிகள்
- குறைவான தேர்ச்சி மட்டத்தை உடையோருக்கான பாடம் வடிவமைப்பு
- உட்படுத்தலுக்கான பாடம் வடிவமைப்பு
- பாடத்தை ஆரம்பித்தலும் முழுமைப்படுத்துதலும்
- திறமையான கற்பித்தல்
- மாதிரிக் கற்பித்தல்
- வினாக்கேட்டல்
- விளக்குதல்
- கற்றலுக்கு வழிகாட்டுதல்
- குழு வேலை
- செயலில் ஈடுபடும் நுட்பங்கள்
- பயனுள்ள கற்பவர்களை உருவாக்குதல்
- கற்றலை மதிப்பீடு செய்தல்
- வாசிப்புத் திறனை வளர்த்தல்
- எழுதுந் திறனை வளர்த்தல்
- கற்றலை மேம்படுத்த ICT அறிவை பயன்படுத்துதல்
- கற்றலில் முன்னணி வகித்தல்
- பயனுள்ள கற்றலை வளர்த்தல்
- கற்றலுக்கான நிபந்தனைகளை உருவாக்குதல்
- கற்றலுக்கான சூழ்நிலையை மேம்படுத்துதல்
- கற்றல் பாணிகள்
இது போன்ற கற்பித்தல் திறன்களைக் கையாளும் பொதிகளை DfDS வலைத் தளத்திலிருந்து (www.dfes.gov.uk) இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
கற்பித்தல் திறன்களின் பண்புத் தரங்கள்
(Qualities of teaching skills)
பிரித்தானியாவின் Her Majesty’s Inspectorate (HMI) மற்றும் கல்வித் தர நிலைகளுக்கான அலுவலகம் The Office for Standards in Education (Ofsted) என்பன பல ஆண்டுகளாக பாடசாலைகளை அவதானிக்கும் போது பெறப்பட்ட கற்பித்தல் தரத்தைக் கையாளும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
கல்வியின் தரநிலை தொடர்பான வருடாந்த அறிக்கை, பாடசாலையை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் கையேடுகள் மற்றும் துணைப்பொருட்களின் வெளியீடுகள், மேலும் குறிப்பிட்ட பாடங்கள், நிலைகள் மற்றும் தலைப்புக்கள், கற்பித்தலின் குறிப்பிட்ட அம்சங்களை மையமாகக் கொண்ட கண்டுபிடிப்புக்கள் பற்றிய அறிக்கைகள் மற்றும் புதிதாக தரப்படுத்தப்பட்ட ஆசிரியர்களின் கற்பித்தல் தரம் என்பன இதனுள் அடங்குகின்றன.
இந்த அறிக்கைகளிலிருந்து நல்ல கற்பித்தல் நடைபெறும் போது பாடசாலை ஆய்வாளர்கள் காண்பிக்க முற்படும் கற்பித்தல் திறன்களின் தெளிவான படமொன்றை ஒருவர் கட்டியெழுப்பிக் கொள்ள முடியும்.
(Ofsted) அளிக்கும் பின்வரும் விளக்கங்களிலிருந்து இதனை ஊகித்துக் கொள்ளலாம்.
- பாடங்கள் நோக்கத்துடனான உயர்ந்த எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்துதல்.
- மாணவர்களுக்குத் தங்கள் சொந்த வேலையை ஒழுங்கமைக்க வாய்ப்புக்களை வழங்குதல் வேண்டும். அதாவது மாணவர்களை அதிகபடியான ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
- பாடங்கள் மாணவர்களுக்கு பொருத்தமானதாகவும் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் நிலைபேறுடையதாகவும், வெளிப்பட வேண்டும். அது மாணவர்களால் சவாலானதாக கருதப்பட வேண்டும்.
- வழங்கப்படும் வேலைகள் மாணவர்களின்; திறன்களுக்கும், கற்றல் தேவைகளுக்கும் பொருந்துவதாய் இருத்தல் வேண்டும்.
- மாணவர்களின் மொழிவளம் அபிவிருத்தி செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். இதில் ஆசிரியர்களின் வினாக்கேட்கும் திறன் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
- பல்வேறு வகையான கற்றல் நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும்.
- நல்ல ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு இருத்தல் வேண்டும். பெரும்பாலும் மாணவர்கள் திறமையான முகாமைத்துவத்தின் கீழ் இருக்க வேண்டும். அவர்கள் பாடத்தில் ஈடுபாடும் பரஸ்பர மரியாதையையும் கொண்டிருக்க வேண்டும்.
“தரநிலைகளுக்கான அலுவலகம்” (Ofsted) புதிய அடிப்படைகளை உருவாக்குவதற்காக கற்பித்தல் திறன்களோடு தொடர்புடைய விடயங்களை காலத்துக்குக் காலம்; மாற்றம் செய்து வருகிறது.
உதாரணமாக ஒவ்வொரு குழந்தை பற்றிய நிகழ்ச்சி நிரலையும் பாடங்களை அவதானிக்கும் அட்டவணையையும் திருத்தியுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி நிரலோடு தொடர்புடைய கற்பித்தல் திறன்களும் சீரமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சிநிரல் மாணவர் செயல்திறனை அவர்களது நல்வாழ்வோடு கைகோர்த்துச் செல்ல முற்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கான ஐந்து வெளியீடுகளையும் அடையாளம் கண்டுள்ளது.
- ஆரோக்கியமாக இருப்பது :
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும், அவர்களின் சுய மரியாதையை வளர்த்துக் கொள்ளவும், நன்றாக உணவு உண்ணவும் குடிக்கவும், சுறுசுறுப்பான வாழ்க்கையை நடாத்தவும் மாணவர்களுக்கு உதவுதல்.
- பாதுகாப்பாக இருப்பது :
மாணவர்களைக் கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல் மற்றும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருத்தல்.
- மகிழ்ந்திருப்பதும் உயர் நிலையை அடைவதும் :
மாணவர்கள் தமது பணி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் நல்ல முன்னேற்றமடையவும், கல்வியை மகிழ்வாக அனுபவிக்கவும் உதவுதல்.
- நேரான பங்களிப்பை வழங்குதல் :
மாணவர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புக்களைப் புரிந்து கொண்டு சமூக வாழ்க்கையில் பங்கேற்பதை உறுதி செய்தல்.
- சமூக, பொருளாதார நல்வாழ்வை அடைதல் :
எதிர்கால வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களையும், அறிவையும் பெற மாணவர்களுக்கு உதவுதல்.
இதன் அடிப்படையில் ஒருபாடத்தில் பின்வரும் பண்புத்தரங்கள் முதன்மையாகத் காணப்படுகின்றன.
1 .சிறந்த உறவுகள் மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகவும் உகந்தவை.
- அனைத்து மாணவர்களுக்கும் சவால் விடுவது மற்றும் அவர்கள் பணி புரியும் எந்தத் தரத்தையும் விரிவு படுத்துவது.
- மாணவர்களது பணியை மதிப்பீடு செய்வது வெற்றிகரமாக கற்பிக்க உதவுகிறது. மற்றும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த யோசனையை மாணவர்களுக்கு வழங்குகிறது.
உசாத்துணை :
Kyriacou CHRIS 2007), Essential Teaching Skills, Nelson Thornes Ltd, Delta Place United Kingdom.
சி.லோகராஜா, விரிவுரையாளர்
தேசிய கல்வியியல் கல்லூரி, மட்டக்களப்பு.