மாணவர்களின் ஆக்கச் சிந்தனையை எவ்வாறு மேம்படுத்தலாம்.?
How to improve students’ creative thinking
S.Logarajah SLTES, Lecturer,
Batticaloa National College of Education.
மாணவர்களின் ஆக்கச் சிந்தனையை எவ்வாறு மேம்படுத்தலாம்.
இப்பொழுது எமது பாடசாலைகளில் விஞ்ஞான, தொழிநுட்ப புத்தாக்கக் கண்டுபிடிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்துச் செய்தி ஊடகங்களில் வெளிவருவதைப் பார்க்கின்றோம். இது வரவேற்கத்தக்க ஒரு புரட்சி எனலாம். ஆனால் விஞ்ஞான, தொழிநுட்ப கண்டுபிடிப்பு மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானவை அல்ல. மற்ற துறைகளிலும் புத்தாக்கம் தேவை. புதியவையும் புதுமையும் தேவை. கவிதை, சமையல், பயிர்வளர்த்தல், விலங்குகள் வளர்த்தல், தோட்டக்கலை ……… என இப்படியே அடுக்கலாம் இன்னும் ஆயிர்க்கணக்கான துறைகள் புத்தாக்கம் படைக்க காத்துக் கிடக்கின்றன.
ஆக்கச் சிந்தனைத் திறன் என்றால் என்ன? (What is Creative thinking?)
ஆக்கச் சிந்தனை என்பது புத்தாக்கம் படைப்பதற்குத் தேவையான ஓர் அடிப்படை சிந்தனை. ஒருவரின் கற்பனை வளம் அவரின் ஆக்கச் சிந்தனையைக் வெளிப்படுத்திக் காட்டுகிறது என்கின்றார்கள். ஆனாலும் ஆக்கச் சிந்தனை நல்ல விளைபயனை தரவேண்டும். இல்லையெனில் அந்த ஆக்கத்தால் பயனேதுமில்லை.
பொதுவாக எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், கவிஞர்கள் எல்லாம் கற்பனை மிகுந்தவர்கள். அதனால்தான் அவர்களால் சுவைமிகுந்த படைப்புக்களைத் தரமுடிகிறது.
பாடசாலை மாணவர்கள், நோபல் பரிசுக்கு தகுதி பெறுகிற அளவிற்கு உலகமே வியக்கும் புதுமை அல்லது புத்தாக்கத்தை உருவாக்க முடியா விட்டாலும் (Big- Creativity, Big-C) சிறிய வகை புத்தாக்கம் செய்யவாவது பழக்கலாம்.
உண்மையில் மாணவர்களும் அந்தளவுக்கு ஆற்றல் உள்ளவர்கள்தான். ஒரு கட்டத்தில் அந்தத் திறமை வெடித்துக் கிளம்ப, பாடசாலைப் பருவத்திலே அவர்களை Mini- Creativity, Little- Creativity சிறிய புத்தாக்கங்களைச் செய்யப் பழக்க வேண்டும். அவர்கள் நூல் ஏட்டில் உள்ளதை உள்வாங்கி மனப்பாடம் பண்ணி அப்படியே பரீட்சையில் ஒப்புவித்து புள்ளிகளைப் பெறுவது மட்டும் போதாது. புதுமை, புத்தாக்கம் படைக்கும் ஆர்வத்தையும் ஊக்குவிக்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டின் மனித வளம், தொழிற்துறைகள் எல்லாம் ஆக்கச் சிந்தனை மிகுந்தவர்களைச் சார்ந்து இருக்கிறது. இனி புத்தாக்கம் நிறைந்த கண்டுபிடிப்புகளைத் தருவோர் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆளுமைகளாகக் கொண்டாடப்படுவர். புதிய கண்டுபிடிப்புகள் சிக்கல்களுக்கு புதுத் தீர்வுகளைக் கொடுக்க வேண்டும்.
ஆக்கச் சிந்தனையும் புத்தாக்கமும் :
– மற்றவர்களின் வேலையை எளிதாக்கவும் துரிதப்படுத்தவும் வேண்டும்.
– அதிக வேலையைச் செய்ய உதவ வேண்டும்.
– சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க வேண்டும்.
– பாதுகாப்பைத் தர வேண்டும்.
– இரசனையை அதிகரிக்க வேண்டும்.
– நிலைபேண் தன்மையுடையதாய் இருக்க வேண்டும்.
மாணவர்களின் ஆக்கச் சிந்தனையை மேம்படுத்த பயன்படுத்தக் கூடிய சில நுட்பங்கள்:
- மாணவர்களுக்கு பிடித்த துறைகள் (passion) என்ன என்பதைக் கேட்டறிந்து அவற்றை பாடத்தில் இணைக்கலாம்.
- ‘பாடத்தில் தவறுகள் செய்வதால் ஒருவர் கெட்டிக்காரர் அல்ல’ எனும் உளவியல் நோயைப் போக்க மாணவர்கள் தவறு செய்து கண்டுபிடிக்கும் இயல்புவழியைக் காட்ட வேண்டும். புதியது படைக்க ஊக்குவிக்க வேண்டும். அவை பாடம் தொடர்பாக இருக்க வேண்டும் என்பதில்லை.
- மாணவர் புதிய தேடல்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்க வேண்டும்.
- ஒவ்வொரு செயற்பாட்டிலும் (Tasks) “உருவாக்கு”, “வடிவமை”, “கற்பனை செய்”, “கண்டுபிடி”, “ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளை முன்வை” எனும் வார்த்தைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- மாணவர்கள் படைக்கும் ஒவ்வொன்றையும் மதிக்க வேண்டும். மாணவரைப் படைக்கும் ஆற்றல் உள்ளவராக உருவகிக்க அவர் உள்ளத்தில் தான் ஒரு படைப்பாளி எனும் எண்ணத்தைப் பதிக்க வேண்டும்.
பரீட்சைகள் பற்றியக் கவலைகள் இல்லாது மாணவர்கள் ‘படைக்கும்’ ஆற்றலை வளர்க்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் படைக்கும் ஆற்றல் பல் துறைகளிலும் பெருக வேண்டும். அது பெரிய ஆக்கமாக (Big Creativity) ஒரு காலத்தில் உருவெடுக்கும்.
ஒவ்வொருநாளும் பாடத்தைத் தயார் செய்யும் போது “உருவாக்குவர்” , “வடிவமைப்பார்” , “கற்பனை செய்வர்” , “புதிதாக்குவார்” , “மாற்றங்கள் செய்வார்” இப்படி சொற்களைப் கற்றல் பேறுகளில் இணைக்க வேண்டும். அப்போது சிறு வகை படைக்கும் ஆற்றல் மாணவர்களிடம் வெளிப்படுவதைக் காணலாம்.
கல்வியில் உயர்சிந்தனைத் திறன்களைக் (Higher Order Thinking Skills) கற்றல் கற்பித்தலின் வழி ஆசிரியர்கள் மாணவர்களிடம் கொண்டு செல்ல உதவும் கருவிதான் வினாக்கள். சரியான வினாக்களை வினாவுவதன் மூலம் மாணவர்கள் உயர்ச்சிந்தனைக்கு ஆட்பட வேண்டும். மாணவர்களுக்குச் சிந்திக்கும் முறையைக் கற்றுக் கொடுத்து அதை ஒரு கலாசாரமாக மாற்ற வேண்டும். சிந்தித்துப் பார்த்த பின்புதான் பதில் சொல்லவும் வேண்டும் என்ற கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும். அனுமானங்கள் செய்யவும், அதற்கு ஆதாரங்கள் தேடவும் சரியான வினாக்களை தொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வினாக்கள் எந்தவகை சிந்தனைத் திறன்களை ஊக்குவிக்கும் என்பதை அறிந்து கொள்ள பாடசாலைகளில்களில் புளூம் வகைப்பாடு (Bloom’s Taxonomy) எனும் வழிகாட்டியை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும். . அது ஆறு நிலைகளைக் கொண்டிருக்கின்றது.
நிலை 1 : மனனம் ( Remembering)
நிலை 2: தெளிதல் (Understanding)
நிலை 3: பயன்படுத்தல் (Applying)
நிலை 4: பகுப்பாய்தல் (Analysing)
நிலை 5: மதிப்பிடுதல் (Evaluating)
நிலை 6: ஆக்குதல் (Creating)
இவற்றில் 3-6 வரை உயர்ச்சிந்தனைத் திறன்களை ஊக்குவிக்கும். இதை அடிப்படையாக வைத்தே மாணவரை வகுப்பறையில் ஆசிரியர்கள் கணிப்பீடு செய்ய வேண்டும். பரீட்சைக்கும் வினாப்பத்திரங்களை தயாரிக்க வேண்டும். எனவே இந்த Blooms Taxonomy இல் ஆசிரியர்கள் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வகுப்பறை கணிப்பீட்டில் மாணவருக்கு வழங்கப்படும் புள்ளிகள் 6 நிலைகளைக் (Band) குறிக்கும்.
நிலை 1 தெரியும்
மனனம் செய்தும் அனுபவத்தில் பார்த்தும் ஞாபகத்தில் வைத்திருக்கும் நிலை. ஆகக் குறைந்த திறன்.
உதாரணம். ஐஸ்கிறீம் என்றால் என்னவென்று தெரியும்
நிலை 2 தெரியும் , புரியும்
ஞாபகத்தில் இருக்கும் ஒன்று பற்றி அறிந்து புரிந்து வைத்திருத்தல்.
உதாரணம். ஐஸ்கிறீம் வகைகள், செய்யத் தேவைப்படும் பொருட்கள், அளவு, வெப்பநிலை, துணைப்பொருட்கள் பற்றி அறிந்தும் புரிந்தும் வைத்திருத்தல்.
நிலை 3. தெரியும், புரியும், செய்து காட்டவும் முடியும்.
உதாரணம்: ஐஸ்கிறீம் தயாரிக்கத் தேவைப்படும் அனைத்தையும் பயன்படுத்தி மாணவரே செய்து காட்டுகிறார்.
(இந்த நிலையை அடைந்து விட்டாலே ஒரு மாணவர் தேர்ச்சி மட்டத்தை அடைந்து விட்டார் என்பது பொருள்)
எனவே, ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரையும் குறைந்தது நிலை 3 வரைக்கும் வழிகாட்டி உயர்த்த வேண்டும்.
நிலை 4 தெரியும் , புரியும், செய்துகாட்ட முடியும், பகுப்பாய்ந்து விளக்க முடியும்.
உதாரணம்: ஐஸ்கிறீம் தயாரித்துக் காட்டி அதை உருவாக்க தேவைப்படும் பொருட்கள் எவ்வாறு மாறுகின்றன, அதன் சத்துக்கள் என்ன என்பதை விளக்கி பிறருக்கும் கற்றுக் கொடுக்க முடியும்
நிலை 5 தெரியும் , புரியும், செய்துகாட்ட முடியும், பகுப்பாய்ந்து விளக்க முடியும், மதிப்பீடு செய்ய முடியும்
உதாரணம்: ஐஸ்கிறீம் தயாரித்துக் காட்டி, பிறருக்கும் விளக்கி, அதன் குறை, நிறைகளை மதிப்பீடு செய்து, எதை தவிர்க்க வேண்டும் என்பதையும் கூற முடியும்
நிலை 6. தெரியும் , புரியும், செய்து காட்டமுடியும், பகுப்பாய்ந்து விளக்க முடியும், மதிப்பீடு செய்ய முடியும், புதிய, வித்தியாசமான நேர்த்தியான , கூடுதல் மதிப்பு மிகுந்த ஒன்றை உருவாக்க முடியும்.
உதாரணம்: நேர்த்தியான , சுவை மிகுந்த, சத்தான, வித்தியாசமான ஐஸ்கிறீம் ஒன்றை சொந்தமாக தயாரிக்க முடியும். அதை விற்பனைக்கும் கொண்டு செல்ல முடியும்.
எனவே வகுப்பறைக் கணிப்பீடு Bloom’s Taxanomy யை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட வேண்டும்.
ஆறாவது நிலைக்கு மாணவரை கொண்டு செல்லுதல் என்பதே ஆசிரியருக்கு கிடைக்கும் மாபெரும் கற்பித்தல் வெற்றி. மூன்றாம் நிலையை அடைந்துவிட்டாலே மாணவர்கள் பாடசாலைக்கு வெட்டியாக சென்று வரவில்லை என்று பொருள்.
“கற்க கசடற கற்பவைக் கற்றபின் நிற்க அதற்குத் தக”
சி.லோகராஜா, விரிவுரையாளர்,
தேசிய கல்வியியல் கல்லூரி, மட்டக்களப்பு