மாணவர்களின் விமர்சன சிந்தனை திறனை எவ்வாறு மேம்படுத்துவது.
HOW TO IMPROVE STUDENTS’ CRITICAL THINKING SKILLS.
S.LOGARAJAH
LECTURER,
BATTICALOA NATIONAL COLLEGE OF EDUCATION
21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் (21st century skills)
21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் என்பது திறன்கள், திறமைகள் மற்றும் கற்றல் மனப்பான்மைகளை உள்ளடக்கியது, இவை 21 ஆம் நூற்றாண்டில் சமூகத்திலும் பணியிடங்களிலும் வெற்றி பெறுவதற்குத் தேவை என அடையாள காணப்பட்டுள்ள திறன்கள் ஆகும். இது வேகமாக மாறிவரும் எண்ணிமயமாக்கல் சமுதாயத்தில் வெற்றிக்கான தயாரிப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான திறன்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்த திறன்களில் பல ஆழ்ந்த கற்றலுடன் தொடர்புடையவை, இது விமர்சன சிந்தனை, பிரச்சினை தீர்த்தல் மற்றும் குழுப்பணி போன்ற திறன்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திறன்கள் வழக்கமான அறிவு சார்ந்த கல்வித் திறன்களிலிருந்து வேறுபடுகின்றன.
விமர்சன சிந்தனை / பகுத்தறிவுச் சிந்தனை (Critical thinking )
விமர்சன சிந்தனை திறன் என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசியமான திறன்கள் ஆகும். அவதானிப்பு, அனுபவம் அல்லது தொடர்பு மூலம் பெறப்பட்ட தகவலை பகுப்பாய்வு செய்வதும் மதிப்பீடு செய்வதும் அவற்றில் அடங்கும். விமர்சன சிந்தனையின் முக்கிய சொத்து கேள்வி கேட்கும் திறன் ஆகும். ஆயினும் விமர்சன சிந்தனை என்பது முடிவுகள் எடுப்பதற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தேவைப்படும் திறன் என்று சொல்லிவிட்டு நாம் சும்மா கடந்து செல்ல முடியாது.
நாணயத்தை சுண்டிப் போட்டு ‘பூவா தலையா’ பார்த்து முடிவெடுத்த காலங்கள் எல்லாம் காலாவதியாகி விட்டன. இரண்டு ஏணிகள் உண்டு, எந்த ஏணியைத் தேர்வு செய்வது என்பதற்கு எளிய வழியாகப் பூ விழுந்தால் அது, தலை விழுந்தால் இது என முடிவுகள் எடுப்பது எல்லாம் அறிவுடமை ஆகாது.
அதற்காக 21 ம் நுர்ற்றாண்டுக்கு முன்னர் பகுத்தறிவுச் சிந்தனை இருக்கவில்லை என்பது பொருளல்ல. சிக்கலான பிரச்சனைக்கு முடிவு எடுப்பது ஒரு அறிவார்ந்த செயலாகப் பார்க்கப்படும் கதைகள் உண்டு. அவ்வாறான ஒரு கதையை இங்கே தருகின்றேன்.
முன்னொரு காலத்தில் பணக்காரன் ஒருவனின் இரண்டு மனைவிகள் ஒரு வீட்டில் வசித்து வந்தனராம். ஒருத்திக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை. மற்றொருத்திக்கு குழந்தை ஒன்று இருந்தது. இருவருமே குழந்தையை அன்பொழுக பராமரித்து வருகின்றனர். திடீரென்று ஒரு நாள் பணக்காரன் இறந்துவிட, இவ்விரு பெண்களுக்குமிடையில் பகை ஏற்படுகிறது. குழந்தைப் பேறு இல்லாதவள் அக்குழந்தை தன்னுடையது, தானே ஈன்றெடுத்தத் தாய் என முறையிடுகிறாள். ஊரார் யாருக்கும் உண்மைத் தெரியாததால், விடயம் அரண்மனைக்குச் செல்கிறது. அரசனிடம் தீர்ப்புக் கேட்கப்படுகிறது.
அரசன் குழந்தையைக் கொண்டுவரச் சொல்லி இந்தக் குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாக கொடுக்கிறேன் எனக்கூற, பத்துமாதம் சுமந்து பிள்ளையைப் பெற்றத்தாய் கண்ணீர் விட்டுக் கதறுகிறாள். முழுப்பிள்ளையையும் மற்றவளிடம் கொடுத்துவிட சம்மதிக்கின்றாள். குழந்தைப் பாக்கியம் இல்லாத பெண்மணி அலட்டிக் கொள்ளாமல் நிற்பதைப் பார்த்த அரசர் உண்மையான தாயை அடையாளம் கண்டு அவளிடம் குழந்தையை ஒப்படைக்கின்றார். பிரச்சனையைத் தீர்க்க அரசர் கையாண்ட இந்த முடிவு மிகச்சிறந்த உத்தியாக , அறிவார்ந்த பகுத்தறிவுத் திறனாக காட்டப்பட்டது.
21 ஆம் நூற்றாண்டில் தகவலுக்குப் பஞ்சமில்லை. கைவிரலிடுக்கில் கைப்பேசியில், கணினியில் பல்லாயிரம் தகவல்கள் காட்சிக்கு உள்ளன. அவற்றில் எது உண்மை எது பயன் மிக்கது என முடிவெடுக்கும் சாதுரியம் பயன்பட விமர்சன சிந்தனை வேண்டும். பகுத்தாய்ந்தும் பார்க்க வேண்டும்.
ஆசிரியராக விமர்சன சிந்தனையை வளர்க்க பயன்படுத்தக்கூடிய பல நுட்பங்கள் உள்ளன. அந்தத் திறனின் அவசியத்தையும் அந்தத் திறனை உக்குவிக்கத் தேவைப்படும் கருவிகளையும் உத்திகளையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
- கதைகளைச் சொல்லி விவாதித்து பகுப்பாய்து முடிவெடுக்க வாய்ப்பு வழங்குங்கள்.
ஆரம்ப பாடசாலைகளில் கதைகள் சொல்வதன் மூலம் பகுத்தறிந்து முடிவெடுக்கும் வாய்ப்புக்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
- மாணவர்கள் படித்த கதைகளை மீண்டும் கூறும்படி அவர்களை ஊக்குவியுங்கள் இது உண்மைகளை பட்டியலிடுவதற்குப் பதிலாக, முக்கிய யோசனையை முன்னிலைப்படுத்த அவர்களுக்குக் கற்பிக்கும்.
- கதையில் நேரடிடியாக பதில் அளிக்கப்படாத விடயங்கள் பற்றிய வினாக்களைக் கேளுங்கள். இது மாணவர்கள் தமது புரிதலின் அடிப்படையில் சொந்த முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தும். உதாரணம் : “கதாசிரியர் தனது வாசகர்களிடம் என்ன சொல்ல விரும்பினார்?” அல்லது “ஏன் கதாபாத்திரம் இதைச் செய்தது?”
- கதையில் கதாபாத்திரங்கள் மற்றும் சூழல் கூறுகளை பகுப்பாய்வு செய்ய மாணவர்களை ஊக்குவியுங்கள். ஒரு மாணவனுக்கு கதைக்குள்ளும் அதற்கு வெளியேயும் ஒப்பிட்டுப் கற்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
- மாணவர்களுக்கு அவர்களின் சொந்த வாழ்க்கை அல்லது அவர்களைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுடன் கதைகளை தொடர்புபடுத்த கற்றுக்கொடுங்கள். புதிய வழிகளில் பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி தொகுக்கப்பட்ட ஒரு முக்கியமான விமர்சன சிந்தனைத் திறனை உருவாக்குவதற்கான ஆரம்பம் இது.
2. அவதானித்து தீர்மானங்களை எடுக்க வாய்ப்பு வழங்குங்கள்.
- மாணவர்கள் பொருள்கள் அல்லது தகவல்களின் விரிவான அவதானிப்புகளை செய்யத் தொடங்கியவுடன், அவர்கள் முடிவுகளை எடுக்க முடியும் மற்றும் அவர்களின் அவதானிப்பின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்க முடியும்
- மாணவர்கள் தமது சொந்த முடிவுகளை எடுக்க ஊக்குவிக்க ஏன் எதற்கு என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும். இது அவர்களது வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவதானிப்பு விமர்சன சிந்தனையின் தொடக்கமாகும். இந்த வகை மண்ணுக்கு எந்த வகை தவரங்களைப் பயிரிடலாம். எது அதிக விளைச்சலைத் தரும். எது அதிக இலாபத்தைத் தரும் என எண்ணிப்பார்ப்பது, கேள்விகள் எழுப்புவது விமர்சன சிந்தனையின் வெளிப்பாடு. ‘ஏன்’ ‘எதற்கு’ எனும் கேள்விகள் விமர்சன சிந்தனையை வளர்த்தெடுக்கும். இதுவே அறிவியல் சிந்தனைக்கு அடிப்படை.
- எந்த துறையைத் அல்லது பாடநெறியை தேர்ந்தெடுத்துப் படித்தால் வேலை வாய்ப்பு அதிகம், போட்டிகள் குறைவு என்பதை ஆய்ந்து அறிந்து பின் முடிவெடுக்கப் பகுத்தறியும் சிந்தனை வேண்டும். இது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் கேட்க வேண்டிய பகுத்தறிவுக் கேள்விகள்.
- அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களில் கூட தீர்மானமெடுத்தல் என்பது என்பது பகுத்தறிவுத் தேவைப்படும் ஒரு செயல்திறன் ஆகும். பாடம் தொடர்புடையக் கேள்விகள் மட்டுமின்றி அன்றாட வாழ்க்கை தொடர்பான கேள்விகள் கூட பகுத்தறியும் சிந்தனையைத் தூண்டும்.
(எ.கா) ஏன் முடி நரைக்கிறது.? காரணங்கள் என்ன? இந்தக் காரணங்களைக் கண்டுபிடித்து அந்த காரணங்களைத் தீர்ப்பதன் மூலம் முடி நரைப்பதைத் தடுக்க மருந்து கண்டுபிடிக்க முடியும்.
3. பொருள்களையும் நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வாய்ப்பளியுங்கள்.
- இது விடயங்களிலுள்ள உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை அடையாளம் காணவும், தகவல்களை பகுப்பாய்வு செய்யவும் வகைப்படுத்தவும் குழந்தைகளை அனுமதிக்கிறது. அத்தகைய செயல்பாட்டின் ஒரு எளிய உதாரணம்,
- 4. 4ஒரு அப்பிளை ஒரு ஒரேஞ் நிறத்துடன் ஒப்பிடுமாறு கேட்கலாம். முடிந்தவரை பொதுவான மற்றும் தனித்துவமான அம்சங்களைக் கண்டறிய அவர்களுக்கு வாய்ப்பளிக்கவும். ஒப்பீடுகள் மற்றும் முரண்பாடுகள் கதைகளிலும் பயன்படுத்தப்படலாம். இது விமர்சன சிந்தனையின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. மாணவர்கள் கதையின் கதாபாத்திரங்கள், சூழல், மற்றும் பிற கூறுகளை பகுப்பாய்வு செய்கிறார்கள், வெவ்வேறு கதைகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை பட்டியலிடுகின்றனர்.
4. குழுவாகக் கற்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுங்கள்
- மாணவர்கள் ஒரு குழுவாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம், ஒருவருக்கொருவர் கருத்துக்களை விவாதிப்பதன் மூலம் விமர்சன சிந்தனையை வளர்ப்பதற்கு ஆசிரியர் உதவலாம். இது மாணவர்களை ஒன்றாக கதைகளைப் படிக்கவும் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஊக்குவிக்கும். இது வயதான மாணவர்களிடையே ஆரோக்கியமான வாதங்களுக்கு வழிவகுக்கும், அங்கு அவர்கள் பேசவும் அவர்களின் பார்வையைப் பாதுகாக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.
- ஆரம்பப் பிரிவு மாணவர்களை மணல் விளையாட்டு, நீர் விளையாட்டு, சவக்காரக் குமிழிகளுடன் விளாயாடல் போன்றவற்றில் அவர்களது ஆக்கத்திறனை ஊக்குவியுங்கள்.அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கேள்விகளைக் கேளுங்கள்.
5. முடிவுகள் சொல்லப்படாத கதைகளை வழங்குங்கள்
- விமர்சன சிந்தனையை வளர்ப்பதற்கான மற்றொரு வழி, முடிவின்றிய கதைகளைச் கூறி பின்னர் மாணவர்களை தாமாக சிந்திக்க வைத்து அவர்களே கதையை முடிப்பதற்கும். தமது சொந்த முடிவுகளை எடுப்பதற்கும் வாய்ப்பளியுங்கள் “அடுத்து என்ன நடந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்பதன் மூலம் இதைச் செய்யலாம்.
6. சிந்தனை. வரைபடத்தை பயன்படுத்த பழக்கப்படுத்துங்கள். குறிப்பாக காரணமும் விளைவும் (cause and effect) எனும் படத்தைப் பயன்படுத்துங்கள்
(எ.கா.) காரணங்கள் —->பாடசாலை வேலையைச் செய்யாதிருத்தல்–> என்ன விளைவுகள்
என்னுடைய & நம்முடைய (Mine and Combine ) எனும் கருவியை பயன்படுத்த பழக்கப்படுத்துங்கள்
7. என்னுடைய & நம்முடைய (Mine and Combine ) எனும் கருவியைக் கொண்டு பிறரின் கருத்தறிந்து, பின் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்க மாணவரைப் பழக்குதல்
(எ.கா)
என்னுடைய கருத்து
நண்பன் A யின் கருத்து
நண்பன் B யின் கருத்து
நண்பன் C யின் கருத்து
முடிவு: எங்களின் ஒன்றுபட்டக் கருத்து
8. Force field analysis, gap analysis, need analysis போன்ற கருவிகளைப் பயன்படுத்த பழக்கப்படுத்துங்கள்.
Force field analysis, gap analysis, need analysis போன்ற கருவிகள் கூட தரவுகளின் அடிப்படையில் பகுத்தாய்ந்து முடிவெடுக்கும் திறனை வலுப்படுத்தும். ஆசிரியர்கள் இதுபோன்ற பகுத்தறிவுச் சிந்தனை உத்திகளை மாணவருக்கு அறிமுகப்படுத்தி அதைப் பயன்படுத்தப் பழக்கப்படுத்தி வந்தால், இக்கட்டான சூழலில் மாணவர்கள் பதறாமலும், பூவா தலையா போட்டுப் பார்க்காமலும் அறிவார்ந்து முடிவுகள் எடுக்கும் திறமை வளரும்.