- சட்டக் கல்லூரி மாணவர் நுழைவுப் பரீட்சை விவகாரம்
- 03 வருடங்களின் பின் தீர்மானிக்க நீதி அமைச்சு முடிவு
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரமே நுழைவுப் பரீட்சைக்குத் தோற்ற முடியுமென்ற தீர்மானத்தை, மூன்று வருடங்களுக்கு ஒத்தி வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்களை கவனத்திற் கொண்டே, இத்தீர்மானத்தை மூன்று வருடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விமல் வீரவன்ச எம்பி நேற்று (09) சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்கள் தமது தாய்மொழியில் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பளிக்குமாறு பாராளுமன்றத்தில் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் சட்ட ஆய்வுக் கவுன்சிலிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. மீண்டும் இது தொடர்பில் நேற்று முன்தினம், நான் வலியுறுத்தியுள்ளேன். சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரமே பரீட்சைக்கு தோற்ற வேண்டுமென 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலும் சட்ட ஆய்வு கவுன்சிலிடம் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழியில் மாத்திரமே நுழைவுப் பரீட்சைக்கு தோற்ற முடியுமென 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை,
அந்த வகையில் வர்த்தமானிக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்க வேண்டுமென்ற காரணத்தினால் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி வரை பிற்போடுமாறு சட்ட ஆய்வு கவுன்சிலிடம் நான் வலியுறுத்தியுள்ளேன். இடைப்பட்ட மூன்றாண்டு காலத்துக்கு மாணவர்களின் தாய் மொழி உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தியுள்ளேன். சட்ட ஆய்வு கவுன்சிலிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான தீர்மானம் கிடைத்ததும் அதனை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
https://sinhala.teachmore.lk/?p=897