வாசிப்பில் இடர்படும் மாணவர்களை ஊக்குவித்தல்
சபீக் NMM
விரிவுரையாளர், கல்வி உளவியல் துறை, கல்வி பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்.
வாசிப்பு என்பது கற்றலின் அடிப்படையாகும். வாசிப்பு நிகழ்கால மற்றும் எதிர்கால கற்றல் அனுபவங்களுக்கும் அடைவுகளுக்கும் அடிப்படையாகின்றது. மொழி விருத்தியும் வாசிப்பினூடாகவே இடம்பெறுகின்றது. கணிதம், விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானத்துறையினைக் கற்றுக்கொள்வதிலும் மொழி முக்கிய பங்காற்றுகின்றது. வாசிப்பில் இடர்படும் போது பிள்ளைகளால் மொழியினை விருத்தி செய்து கொள்ள முடியாமல் போவதுடன் விரக்தி நிலைக்கும் ஆளாகின்றனர்.
அனுபவங்கள் ஊடாக எழுத்துக்களுக்கு கருத்து வழங்கும் செயன்முறையே வாசிப்பாகும் என அன்டர்சன் குழுவினர் வாசிப்பினை வறையறை செய்கின்றனர் (1985). வாசிப்பின்போது எழுத்துக்களை கிரகித்து அடையாளப்படுத்தும் செயன்முறை இடம்பெறுகின்றது. இச்செயன்முறையின் போது பிள்ளைகள் எழுத்துக்களுக்கு ஏற்ற ஒலிகளை வழங்கி மனதில் ஏற்கனவே பதியப்பட்ட அனுபவங்கள் ஊடாக கிரகித்து கருத்தினை பெற முயற்சிக்கின்றனர். இவ்வாறு கருத்தினைப் பெறுவதன் மூலம் இவ்வுலகு பற்றிய புலக்காட்சியை விருத்தி செய்து செய்துகொள்கின்றனர்.
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் பத்து வீதமான மாணவர்கள் வரை வாசிப்பில் இடர்படுவதாகவும் ஸ்கண்டிநேவிய நாடுகளில், அது ஒன்று முதல் இரண்டு வீதமாகக் காணப்படுவதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. வாசிப்பில் இடர்படும் மாணவர்கள் தம்மைப்பற்றி தாழ்வான எண்ணக்கருவினை வளர்த்துக் கொள்வதே அவர்களால் வாசிப்பில் சிறந்து விளங்க முடியாமல் இருப்பதற்கான காரணமாகும். காரான்ஸா மற்றும் அபாஸா (2015), சொரோனோ (2019) மற்றும் சமுத்ரா (2019) ஆய்வுகளில் வாசிப்பில் இடர்படும் மாணவர்கள் தம்மைப் பற்றிய தாழ்வான எண்ணக்கருவினைக் கொண்டிருப்பதாகவும் அதனால் ஏற்படும் விரக்தி நிலை கற்றலில் பின்தங்குவதற்கு அடிப்படையாக அமைவதாகவும் கண்டறிந்துள்ளனர். வாசிப்பில் இடர்படும் மாணவர்கள் கற்றலில் விரக்தியுற்று காலப்போக்கில் பாடசாலையை விட்டு இடைவிலகும் துர்ப்பாக்கிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். மாணவர்களின் விரக்தி நிலையைப் போக்கி கற்றலில் ஆர்வத்துடன் அவர்களை ஈடுபடச் செய்வதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியுள்ளனர்.
பிள்ளை விருத்திச் செயன்முறையின் போது ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் தாக்கங்கள் பிள்ளைகளைப் பாதித்து அவர்களை கற்றலில் பின்தங்கச் செய்துவிடுகின்றன (DSM-5, 2013). அவை சீர் செய்யப்படாது தொடரும் போது நிரந்தரமான பாதிப்பினை உண்டுபன்னுகின்றன. ஆனால் அவற்றை ஆரம்ப கால கட்டங்களில் கண்டறிந்து முறையான பயிற்சிகள் சிகிச்சைகளை வழங்குவதனூடாக பாதிப்பினை இழி நிலைக்குக் கொண்டு வர முடியும்.
முக்கியமாக மொழி விருத்தியின் முக்கிய கட்டமான பிள்ளைப் பருவத்தில் மாணவர்கள் பாடசாலையுடன் தொடர்புறுகின்றனர். சராசரியாகப் பிள்ளைகளின் வாசிப்பு விருத்தியானது ஒன்பது வயதுக்குள் உச்சத்தை எட்டிவிடுகின்றது. இவ்வேளையில் அந்த தேர்ச்சியை அடைந்து கொள்ள முடியாதவர்கள் ஆசிரியர்கள் மூலம் முறையாக இனங்காணப்பட்டு அவர்களுக்கான பரிகார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் வாசிப்பில் இடர்படும் மாணவர்களை ஊக்குவிக்க முடியுமாகின்றது.
வாசிக்கத் தெரியாது அல்லது முடியாது என்பது ஒரு பிரச்சினையே தவிர அது பிள்ளையின் முழு மொத்த குறைபாடும் அல்ல. தீவிர உடலியல் மற்றும் உளவியல் குறைபாடுகளுடைய பிள்ளைகள் தவிர்ந்த அனைத்து பிள்ளைகளிலும்; அறிவு மட்டத்தில் சிறு ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டாலும் அவர்களாலும் கற்றுக்கொள்ள முடியும். எனவே ஆசிரியர்கள் வாசிப்பில் இடர்படும் மாணவர்கள் தொடர்பாக கவனம் செலுத்துதல் வேண்டும்.
வாசிப்பில் இடர்படும் மாணவர்களைப் பரிகார கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அதேவேளை அவர்களிடத்தில் காணப்படும் உடன்பாடான பண்புகளை வெளிப்படுத்துவதன் ஊடாகவும் ஊக்குவிக்க முடியும். முக்கியமாக அவர்கள் தம்மைப்பற்றிக் கொண்டுள்ள தாழ்வான எண்ணக்கருவினை இழிநிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் உயர்வான எண்ணங்களையும் சிந்தனைகளையும் பிள்ளைகளிடத்தே விதைக்க முடியும். பிள்ளைகள் தம்மைப் பற்றி உடன்பாடான மனப்பாங்கினைக் கொண்டிருப்பது அவர்களின் ஊக்கல் நடத்தையாக அமைவதுடன் அவர்களின் அடைவு மட்டத்தையும் தீர்மானிக்கும் காரணியாக அமைந்துவிடுவதாக (Yawkley, 1980) ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், ஆசிரியர்கள் மாணவர்களின் சுய எண்ணக்கருவினை மாற்றி அவர்களாளலும் முடியும் என்ற வகையில் ஊக்குவிக்கும் போது மாணவர்கள் வாசிப்பில் அக்கறை காட்டுவதாக விங்பீல்ட் (Wigfield, Guthrie, Tonks, & Perencevich, 2004) குழுவினரின் ஆய்விலும் கண்டறியப்படடுள்ளது.
மேலும் பிள்ளைகள் தம்மைப் பற்றி கொண்டிருக்கும் கருத்தினை உயர்வானதாக மாற்றி அமைப்பதற்கு பிள்ளைகளின் மகிழ்ச்சியான மனநிலை உதவுகின்றதாக பின்லாந்து அரசின் ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மகிழ்ச்சியான பிள்ளைகள் சிறப்பாகக் கற்கின்றனர் என்பது பின்லாந்து நாட்டின் கல்விக் கொள்கைகளில் உள்ளடக்கப்பட்டிருப்பதால் பிள்ளைகளின் நலன் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது.
பிள்ளைகளை மதித்தல், கண்ணியப்படுத்துதல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளுதல், உதவி செய்தல் மற்றும் அவர்கள் மீது அன்பு செலுத்துதலின் போது பிள்ளைகள் மகிழ்ச்சியடைகின்றனர். விசேடமாக பிள்ளைகள் தம்மைப் பற்றிய சுயமதிப்பை உயர்வாகக் கருதும் வகையில் அவர்களின் நல்ல பண்புகள் எடுத்துச் சொல்லப்படும் போது மகிழ்ச்சியடைகின்றனர்.
மனிதத்துவ அணுகுமுறையாளர்கள் மனிதனை உயர்வாகக் கருதுவதை ஊக்குவிக்கிறனர். அவர்களின் தேவைகள்; மற்றும்; உணர்வுகளை மதிப்பதையும் கண்ணியப்படுத்தப்படுவதையும் வலியுறுத்துகின்றனர். பிள்ளைகள் உயர்வாக மதிக்கப்படும் போது தாமும் சிறந்தவன் தான் என்ற எண்ணம் அவர்களிடத்தே விருத்தியடைகின்றது. தம்மைப் பற்றிய கணிப்பினை உயர்டையச் செய்வதுடன் தன்னால் முடியும் என்ற உத்வேகம் அவனுள் எழுகின்றது. பிள்ளைகள் மதிக்கப்படும் போதும் கண்ணியப்படுத்தப்படும் போதும் அந்த மதிப்புக்கு ஏற்ற நிலையை அடைய முயற்சிக்கின்றனர்.
மேலும் பிள்ளகைள் மதிக்கப்படும் போது அவர்களின் சமூக மனவெழுச்சி பண்புகள் உடன்பாடானதாக அமைவதுடன் சுயகட்டுப்பாடு போன்ற திறன்களும் விருத்தியடைகின்றன. அதனால் சமுதாயம் பற்றிய தமது எண்ணக்கருவினை உடன்பாடானதாக அமைத்துக் கொள்கின்றனர். மேலும் சமுதாயத்தில் தனது பொறுப்பு பற்றிய கவனம் அதிகரிப்பதோடு சமுதாயத்தில் தான் முக்கியமானவன் என்ற எண்ணக்கருவும் விருத்தியடைகின்றது.
மாணவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக:
• அவர்களின் பெயர்கூறி அழைத்தல்.
• அவர்களின் விசேட திறன்களை மாணவர் மத்தியில் சிலாகித்து பேசுதல்.
• எதிர்காலத்தில் அவர்களால் சாதிக்கத் தக்க விடயங்களை சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புபடுத்தி பேசுதல்.
• பிறர் எம்மை எவ்விதம் மதித்து நடக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோமோ அவ்விதமே அவர்களையும் மதித்து நடத்தல்.
• தனியாள் வேறுபாடுகளை இனம், மதம், நிறம், பால, பொருளாதார நிலைமை மற்றும் வயது வேறுபாடுகள் கடந்து மதித்தல்.
• மாணவர்களது கருத்துக்களைக் காது தாழ்த்தி கேட்டல்.
• மாணவர்களது மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்றல்.
• அவர்களின் செயல்களின் விளைவுகள் பற்றி விளக்கி கூறுதல்;.
• பிழைகள் காணப்படும் போது தனியாகச் சந்தித்து திருத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்லுதல்.
• அவர்கள் இத்தவறிலிருந்து மீழும் போது ஏற்படப் போகும் நல்ல விளைவுகள் பற்றி விளக்குதல் போன்ற வழிமுறைகளை மாணவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாகப் பயன்படுத்தலாம்.
அடுத்து மாணவர்களின் அடைவுகளைப் பாராட்டுதலும் மாணவர்களை மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றக்கூடிய காரணியாக அமைகின்றது. வகுப்பறையில் இடம்பெறும் ஒவ்வொரு விரும்பத்தக்க அடைவினையும் பாராட்டுவது இன்றியமையாததாகும். அது சிறிய விடயமாயினும் அல்லது பெரிய விடயமாயினும் சரியே. மாணவர்கள் என்போர் முழு தனியன் என்ற வகையில் அவரிடம் காணப்படும் கற்றல் சாராத மற்றும் அடைவு சாராத பண்புகளும் பாராட்டப்படல் வேண்டும். பாராட்டுக்கள் பின்வரும் வகையில் அமைந்திருப்பது சிறப்பானது.
• உடனுக்குடன் அவ்வப்போது பாராட்டுதல்.
• பொதுப்படையாக அல்லாமல் குறிப்பான விடயங்களை பண்புகளை முன்வைத்துப் பாராட்டுதல்.
• அவர்கள் செய்த செயல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி பெருமைப்படுத்துதல்.
• சிறந்த கருத்துக்களையும் அதன் முக்கியத்துவத்தையும் பாராட்டுதல்.
• மாணவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைப் பாராட்டுதல்.
• வசதிக்கேற்ப பரிசில்களை வழங்குதல்.
• மாணவர்களின் பிற நல்ல குணங்களையும் பாராட்டுதல்
• போன்றவகையில் பாராட்டுக்களை செய்வதன் மூலம் மாணவர்களை மகிழ்ச்சிகரமான மனநிலைக்கு கொண்டுவராலம்
மேலும் மாணவர்களை அவர்கள் எவ்விதம் காணப்படுகின்றார்களோ அவ்விதமே ஏற்றுக் கொள்வதும் முக்கியமானதாகும். எவ்வித நிபந்தனையும் எதிர்பார்ப்பும் இன்றி ஆசிரியர் ஒருவர் அவரை ஏற்றுக் கொள்வதும் அவரை அவருக்கே உரிய நிலையில் இருக்கச் செய்வதும் இதன் போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும். ஏற்றுக் கொள்ளல் என்பது:
• மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளல்.
• அவர்களை அவர்களாகவே ஏற்றல்.
• தனியாள் மற்றும் கலாசார வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளல்.
• அவர்களின் செயல்களை அங்கீகரித்தல்.
• மாணவர்களது கருத்துக்களை வரவேற்றல்.
• மாணவர்களின் நிலையில் இருந்து சிந்தித்தல்.
• மாணவர்களின் ஏனைய நல்ல பண்புகளையும் அங்கீகரித்தல்.
• அவர்களின் வெற்றிகளையும் அடைவுகளையும் உயர்ந்தனவாக ஏற்றுக்கொள்ளல்.
• இவ்வாறான செயற்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொள்வதன் மூலம் மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்.
மாணவர்களின் காரியங்களில் உதவுதலும் மாணவர்களின் சுய மதிப்பீட்டை உயர்த்தும் முக்கிய செயற்பாடகும். பொதுவாக வாசிப்பில் இடர்படும் மாணவர்கள் சுய முயற்சியில் தாழ்ந்த மட்டத்தையுடைவர்களாகக் காணப்படுவர். தம்மால் முடியாது என்ற எண்ணம் வலுப்பெற வலுப்பெற அவர்களின் வாசிப்பின் மீதான நாட்டம் குறைவடைந்துகொண்டே செல்லும். அவர்களால் இலகுவில் வாசிக்க முடியாத போது ஆசிரியர்களின் உதவியும் வழிகாட்டுதல்களும் கிடைக்காதா என்ற ஏக்கம் அவர்களுக்கு ஏற்படும். ஆசிரியர்களால் முறையாகக் கவனிக்கப்படாது, தொடர்ந்து உதவிகள் கிடைக்காத போது அவர்கள் நம்பிக்கையிழந்துவிடுவர். எனவே அவ்வாறானவர்களை துரிதமாக இனங்காண்பதும் உடனடியாக உதவுவதும் உரிய பரிகாரங்களைச் செய்து அவர்களையும் ஏனைய மாணவர்களுடன் சமமாகக் கொண்டு செல்வதற்கும் ஆசிரியர்கள் உதவி செய்தல் அவசியமாகின்றது.
மாணவர்களுக்கு வாசிப்பிற்கான வாய்ப்புக்களையும் வசதிகளையும் செய்து கொடுப்பதுடன் அவர்களுக்கு வாசிப்பதற்கான முறைகளையும் வழிகாட்டுதல்கள் ஊடாக வழங்குதல் அவசியமாகும். மாணவர்களை வாசிக்கும்படி கூறும் ஆசிரியர்கள் அதனை எவ்வாறு வாசிக்க வேண்டும் என்ற வழிகாட்டலை வழங்கத் தவறிவிடுகின்றனர். மாணவர்கள் வாசிப்பில் இடர்படும் போது மாணவர்களுடன் சேர்ந்து வாசித்துக்காட்டுவதும் ஒலிகளை அடையாளப்படுது;துதல், எழுத்துக்கள், சொற்கள் மற்றும் வாக்கியங்களை வாசிக்க வழிப்படுத்துவதும் மாணவர்களை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைகின்றன.
மேலும் வாசிப்பில் இடர்படுவோர் வாசிக்க முயற்சிக்கும் போது அவர்களது முன்னேற்றம் பற்றி அறியவும் ஆவலாக இருக்கின்றனர். அவர்கள் என்ன செய்ய வேண்டும் எவற்றைத் தவிர்க்க வேண்டும், வாசிப்பில் திருப்திகரமான மட்டத்தை அடைவதற்குரிய எல்லை யாது, சிறப்பாக வாசிப்பதற்கு பின்பற்ற வெண்டிய வழிமுறைகள் எவை மற்றும் அதனை எவ்வாறு செய்யலாம் என்ற வகையில் அவர்களுக்கான வழிகாட்டல்களையும் உதவிகளையும் செய்வது சிறப்பானதாகும். இவ்வாறு வழிகாட்டுவதனூடாக மாணவர்களிடத்தே நம்பிக்கையை விதைக்க முடியும்.
வாசிப்பில் இடர்படும் மாணவர்கள் மீது அன்பு செலுத்துவதும் முக்கியமாகும். வாசிப்பில் இடர்படும் மாணவர்கள் தாம் தனித்துவிடப்பட்டது போன்ற உணர்வினைக் கொண்டிருப்பர். வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயன்முறையின்போது புறக்கனிப்புக்குள்ளாகும் மாணவர்கள் தானாகவே ஒதுங்கியிருக்கப் பழகிக்கொள்வர். அவர்களைப் பொருத்தவரையில் திறமையானவர்கள் மட்டுமே ஆசிரியரால் விரும்பப்படுவர் என்றும்; தாம் ஆசிரியரின் அன்புக்கு அருகதையில்லாவர் என்ற எண்ணமும் வலுப்பெற்றிருக்கும். இந்நிலை தொடரும் போது வாசிப்பின் மீது வெறுப்பும் வகுப்பறையில் விரக்தியுற்றும் காணப்படுவர். அதனால் கற்றல் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக வேறு விடயங்களில் ஈடுபடுவர்.
அவ்வாறான நிலையில் இருந்து வாசிப்பில் இடர்படும் மாணவர்களை மீட்பதற்கு ஆசிரியரின் அன்பும் பரிவும் இன்றியமையாததாகும். இந்த இடத்தில் வாசிப்பில் இடர்படும் மாணவர்களை நோய்வாய்ப்பட்டவர்களின் நிலைமையோடு ஒப்பிட வேண்டும். பொதுவாக நோயாளிகள் தமது உடல் நிலை பாதிக்கப்படுகின்ற போது தமது அன்புக்குரியவர்களின் அரவணைப்பினையே பெரிதும் எதிர்பார்ப்பர். ஆறுதல் வார்த்தைகள் உதவிகள் என்பன அவர்களுக்கு ஆறுதல்களைத் தரவல்லனவாக அமைகின்றன. அதே போல்தான் வாசிப்பில் இடர்படும் மாணவர்களும் விரக்தியடையும் போது ஆசிரியர்களின் ஆறுதல் வார்த்தைகள் மூலம் ஊக்குவிக்கப்படுவதை, அன்புடன் உதவி செய்யப்படுவதை மற்றும் கனிவுடன் நடாத்தப்படுதலை எதிர்பார்க்கின்றனர். அவ்விதமே ஆசிரியரும் நடந்துகொள்ளும் போது மாணவர்கள் மகிழ்ச்சியுற்று நம்பிக்கையும் புதிய உத்வேகம் கொண்டு தமது முயற்சியைத் தொடர்கின்றனர்.
எனவே, வாசிப்பில் இடர்படும் மாணவர்களை ஆரம்ப கட்டத்திலேயே முறையாக இனங்கண்டு; அவர்களின் சுய எண்ணக்கருவினை உயர்ந்தனவாக மாற்றிக் கொள்ளும் வகையில் அவர்களை ஊக்குவித்து அவர்களது எதிர்காலத்தைச் சீரமைப்போம்.