ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை
ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய மட்ட பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு கொண்டு வர வேண்டும் என்று எங்களுக்கு ஒரு பெரிய கோரிக்கை இருந்தது. அதற்குத் தேவையான முதற்கட்ட கலந்துரையாடலை இப்போது முடித்துவிட்டேன். அமைச்சரவைப் பத்திரத்துடன் அந்தத் கருத்தாக்கத்தை அறிக்கைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் தொழிலுக்கு தேசிய பல்கலைக்கழகம் உருவாக்குகிறோம். அது உருவாகும் போது, பாடத்தின் வகைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையை நாங்கள் அதிகரிக்க வேண்டும்.” என்றார்
“பல்கலைக்கழகம் மூன்று வருட கோட்பாட்டு கல்வியியையும் ஒரு வருட ஆசிரியர் பயிற்சியையும் வழங்கும். நான்கு வருடங்களில் ஒரு தரமான ஆசிரியர் வகுப்பறைக்கு வருவார். எனவே அந்த தவறான எண்ணங்களோடு இதனைப் பார்க்க வேண்டாம். நான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன், இந்த ஆசிரியர் பல்கலைக்கழகத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் இரவும் பகலும் உழைத்து வருகிறோம்.
“இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்களும் இதில் சேர்க்கப்படுவர். அவர்கள் விரிவுரையாளர்களாகவே இணைத்துக்கொள்ளப்படுவர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிபந்தனைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதன்படி, பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதும், நான்காண்டு படிப்பின் மூலம் பட்டதாரி பயிற்சி பெற்ற ஆசிரியரை வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.