சம்பள அதிகரிப்பு வரை இடைக்கால கொடுப்பனவை வழங்குக
-தொழிற்சங்கங்கள் மீண்டும் கோரிக்கை
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வாழ்வாதாரத்துக்குப் போதுமானதாக இல்லை
என்றும் 2 இலட்சத்து 63 ஆயிரம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணமாக அடுத்த வரவு – செலவுத்திட்டத்தில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுகளின் மத்தியில் தமக்கு கிடைக்கும் மாதாந்த கொடுப்பனவு போக்குவரத்து, உணவுத் தேவை, அவர்களது குழந்தைகளுக்கான செலவு, பெற்றோர்களுக்கான செலவு உள்ளிட்ட நாளாந்த செலவுகளுக்கு போதுமானதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களை கவனிக்க வேண்டிய மேலதிக பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. மாணவர்களின் போசாக்கு தொடர்பில் கவனம் செலுத்தவேண்டிய காட்டாய பொறுப்பும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கென தனியான உணவு வைப்பகத்தை உருவாக்கி, மாணவர்களுக்கு மேலதிக உணவை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச சேவை தரப்பினருக்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம்
பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். இதற்கு முன்னரும் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளக் கொடுப்பனவில் முரண்பாடுகள் காணப்பட்டன. தொடர்ச்சியான போரட்டங்களின் பின்னர் மூன்றில் ஒரு பங்கை வெற்றி கொண்டோம்.
எனவே, மூன்றில் இரண்டு பங்கு சம்பள முரண்பாட்டையும் தீர்க்க வேண்டும். தீர்வு வழங்க முடியாவிட்டால் அதுவரையில் நிவாரணம் ஒன்றை வழங்க வேண்டும். சுகாதாரம் மற்றும் கல்விக்கு இதுவரை இருந்த இலவசத்தை இல்லாமலாக்குவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளார்கள் என்றார்.
https://sinhala.teachmore.lk/?p=811