பாட முன்வைப்போடு தொடர்புடைய கற்பித்தல் திறன்கள்
Teaching skills related to lesson presentation
S.Logarajah SLTES, Lecturer,
Batticaloa National College of Education.
பாட முன்வைப்பு
(Lesson presentation)
பாட முன்வைப்பு என்பது மாணவர்களால் விரும்பப்படும் கற்றல் பேறுகளை அடைய ஆசிரியர் அமைத்த கற்றல் அனுபவங்களைக் குறிக்கின்றது. இங்கு பல வகையான கற்பித்தல் முறைகள் உருவாக்கப்பட்டு மகத்தான கற்றல் செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர்கள் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு பலவிதமான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவை பயனுள்ள விளைவுகளுக்கு பயன்படுத்தப்படலாம். இதில் உதாரணமாக கண்காட்சிகள், வெளிப்பாடுகள், செய்முறைகள், செயற்பாட்டுப் பத்திரங்கள், ICT, பாத்திரமேற்று நடித்தல், குழு விவாதம் போன்றவற்றை; கூறலாம்.
ஒரு ஆசிரியர் பயன்படுத்தக் கூடிய கற்றல் செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளும் போது, பெரும்பாலும் ஆசிரியரின் பேச்சை சார்ந்திருக்கும் செயல்பாடுகளுக்கும், ஆசிரியரின் நேரடிப் பங்கேற்புடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்குமிடையில் ஒரு பயனுள்ள வேறுபாட்டைக் காணலாம். முந்தையதில் ஆசிரியரின் வெளிப்பாடு, ஆசிரியரின் கேள்விகள், வகுப்பறை விவாதம் என்பன ஆசிரியரின் மூலம் குறைந்தளவோ, கூடியளவோ நடைபெறுகின்றன. இவற்றை ஆசிரியரின் பேச்சு சார்ந்த நடவடிக்கைகள் எனலாம். (Teacher talk activities) பிந்தையதுக்கு எடுத்துக்காட்டுக்களாக, செய்முறைகள், விசாரணைகள், பிரச்சினை தீர்க்கும் நடவடிக்கைகள், செயற்பாட்டுப் பத்திரங்கள், ICT, பாத்திரமேற்று நடித்தல், சிறிய குழு விவாதம் என்பனவற்றைக் கூறலாம் இவற்றைக் கல்விச் செயல்கள் (Academic task) எனக் கூறலாம்.
ஆசிரியரின் நடத்தைப் பாங்கு
Teacher’s manner
பாடம் முன்வைப்புக்கு வரும்போது நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதைப் போலவே நாம் பின்பற்றவிருக்கும் வழிமுறையும் முக்கியமானது. நாம் கேட்கும் கேள்வி எவ்வளவு பொருத்தமாக இருந்தாலும், எமது குரலும் முகபாவனையும், சோர்வாகவும், சலிப்பாகவும் இல்லாமல் ஆவர்வத்துடன் ஒரு கேள்வியைக் கேட்கும் போது அது நாம் பெறும் பதிலிலும் வித்தியாசத்தை உண்டாக்குகின்றது.
இதே போல் மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் ஈடுபடும் போது நாம் எமது மேசையின் முன்னால் அமர்ந்து மற்றுமொரு பாடத்தின் வேலையைச் செய்து கொண்டிருப்பதை விட வகுப்பறைச் சுற்றி உலாவி மாணவர்களின் முன்னேற்றத்தைக் கணிப்பிடுவது, இடர்படும் மாணவர்களுக்கு உதவுவது மாணவர்களிடேயே பாடத்தின் முக்கியத்துவம் குறித்த மனப்பாங்கை தோற்றுவிப்பதாய் அமையும். இது போன்ற அனைத்துக் கருத்துக்களும் சேர்ந்து மாணவரின் கற்றல் தொடர்ந்து நடைபெறுகின்றது என்பதை உறுதி செய்ய நாம் பாடத்தில் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என்ற பொதுவான உணர்வை உருவாக்குகின்றது.
மாணவர்களால் பயனுள்ள கற்றலை வெளிப்படுத்தவும், பராமரிக்கவும், எமது நடத்தை நம்பிக்கையுடனுடனும், நிதானமாகவும், தன்னம்பிக்கையுடனும். நோக்கத்துடனும், பாடத்தில் ஆர்வத்தை உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும். மேலும் பாடத்தின் போது நாம் அடைய எதிர்பார்க்கும் முன்னேற்றம் குறித்த நேர்மறையான எதிர்பார்ப்புக்களை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
நாம் நம்பிக்கையுடனுடனும், நிதானமாகவும், தன்னம்பிக்கையுடனும். நோக்கத்துடனும், இருப்பதை மாணவர்களுக்குத் தெரிவிப்பதில் பல திறன்கள் உள்ளன. முக்கியமான அம்சம் என்னவென்றால், தொடக்கப்புள்ளி பதட்டமாகவும் கவலையாகவும் இருக்கக் கூடாது. நாம் நிதானமானவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதை எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
தொடக்கப் புள்ளி நன்கு திட்டமிட்டுத் தயாரிக்கப்பட வேண்டும். மேலும் நாம் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளும் போது இந்த நேரான நடத்தைப் பாங்குக்குரிய குறிப்புக்கள் இயல்பாகவும், ஆழ்மன நிலையிலும் வெளிப்படுத்தப்படும். அப்படி இருந்தும் நாம் கவலைப்படும் நேரங்களும் உள்ளன. குறிப்பாக கற்பித்தல் வாழ்க்கையைத் தொடங்கும் போது அல்லது எப்போதாவது எதாவது விடயங்கள் தவறாக நடக்கும் போது நாம் கவலைப்படுவோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் முடிந்தவரை நிதானமாக இருக்க முயற்சிப்பதும், இதை வெளிப்படுத்தும் போது எமது நடத்தை அம்சங்களைப் பற்றி அறிந்திருப்பதும் உதவியாக இருக்கும்.
எமது முக வெளிப்பாடு, குரலின் தொனி, பேச்சு, கண் தொடர்பின் பயன்பாடு, குறிப்புணர்த்துதல், நிலைப்படுத்துதல் போன்றவற்றால் நடத்தைப் பாங்கு பற்றிய நேரான தோரணைகள் வெளிப்படுகின்றன. நாம் பதட்டமாக உணரும் போது இயல்பாகவே பதட்டமாக இருப்போம். கண் தொடர்பைத் தவிர்க்கவும், விகாரமான அல்லது மீண்டும் மீண்டும் சைகை செய்வோம். எனவே நாம் பதட்டமாக இருப்பதை உணரும் போது எமது பேச்சு இலகுவாகவும், தெளிவாகவும் கேட்கக்கூடியதாய் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். மாணவர்களுடன் வழக்கமான கண் தொடர்பைப் பேண வேண்டும். வகுப்பறைறை சுற்றிலும் உன்னிப்பாக அவதனிக்க வேண்டும். வகுப்பறையின் முகப்பு மற்றும் மையப்பகுதியில் நின்று தேவையான போது நிமிர்ந்து நேரத்தைச் செலவிட வேண்டும்.
தொடக்கநிலை ஆசிரியர்களில் பெரும்பாலானோருக்கு இத்திறன்கள் மிக விரைவாக உருவாகின்றன. மற்றையவர்களுக்கு சற்று நேரம் எடுக்கும். சில ஆசிரிய மாணவர்கள் முதல் பாடத்திலிருந்தே வகுப்பறையை வீடாக உணர்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் கற்பித்தலின் முதலாவது அல்லது இரண்டாவது ஆண்டில் நிதானமாக உணரத் தொடங்குகிறார்கள். எவ்வாறாயினும் கற்பித்தல் செயல் எப்பொழுதும் பதட்டத்தைத் தூண்டும் என்பது உண்மை. வகுப்பறையை வீடாக உணர முடியாதவர்களில் பெரும்பாலானவர்கள் கற்பித்தல் தொழிலில் நீண்டகாலம் நிலைத்திருக்க மாட்டார்கள். பயிற்சியின் மூலமாகவும், அனுபவத்தின் மூலமாகவும் ஆசிரியருக்குரிய பெரும்பகுதி வளர்ச்சியடையக் கூடும் என்றாலும் இதன் ஒரு பகுதி ஆசிரியரின் ஆளுமையுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை பெருமளவு பிரதிபலிக்கின்றது. இதனால் தொடக்க நிலை ஆசிரியர்கள் தாங்கள் கண்ட எந்தவொரு குறிப்பிட்ட கற்பித்தல் முறையையும் பின்பற்றுவதற்கு முயற்சிப்பதை விட தங்கள் குறைபாடுகளை குறைக்க தமது பலங்களை பயன்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும்.
ஆசிரியரது நடத்தைப் பாங்கின் ஏனைய முக்கிய அம்சங்கள்
Other important aspects of teacher’s manner
பயனுள்ள கற்பித்தலுக்கு பங்களிப்புச் செய்வதில் ஆசிரியரது நடத்தைப் பாங்கு குறித்த விவாதங்களும், ஆராய்ச்சிகளும் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். (போரிச் 2007, கிரியாகோ 1997) இவற்றின் மூலம் தெளிவான நிலையான படம் வெளிவராவிட்டாலும் இவை பல்வேறு வழிகளில் பயனுள்ளதாய் இருப்பதைக் காணலாம்.
ஒரு ஆசிரியரின் வெற்றிக்கான திறவுகோல் மற்றொரு ஆசிரியருக்கு நிலையானதாக இருக்கின்றது. இது ஒரு சூடான அக்கறையுள்ள மனப்பான்மையிலிருந்து தோன்றக் கூடும். இருப்பினும் பொதுவாக இந்த விடயத்தில் ஆர்வம், ஆர்வத்தை வெளிப்படுத்தும் தரம் என்பன முக்கியமானவையாகும். பொறுமை மற்றும் நகைச்சுவை உணர்வு பரிந்துரைக்கப்பட்டாலும், இவை ஆய்வு ஆதாரங்களினால் குறைவாகவே ஆதரிக்கப்படுகின்றது.
ஆசிரியரின் பேச்சு நடவடிக்கைகள்
(Teacher talks activities)
ஆசிரியர்கள் விரிவுரை, விளக்கமளித்தல், ஆலோசனை வழங்கல், வினாக்கேட்டல், முழு வகுப்பிற்குமான விவாதத்தை நெறிப்படுத்துதல் போன்றவற்றிற்கு அதிகளவு நேரத்தைச் செலவிடுகின்றார்கள். ஆகவே பயனுள்ள கற்பித்தலின் மிக முக்கிய அம்சம் ஆசிரியரின் பேச்சின் தரம் என்றால் ஆச்சரியமில்லை.
உண்மையில் பயனுள்ள கற்பித்தலின் மிக முக்கியமான பண்பு இதுவென பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக விளக்கமளித்தல், விவாதங்களை நெறிப்படுத்ததல், வினாக்களை வினாவுதல், கருத்தரங்குகளை நடாத்துதல், மாணவர்களுடன் திறம்படத் தொடர்பு கொள்ளுதல், போன்ற செயல்பாடுகளின் போது மொழியைத் திறம்படக் கையாள்வது ஆசிரியர்களுக்குரிய முக்கிய திறன்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.
வெளிப்பாடு
Exposition
விளக்கத்தின் தெளிவு (பெரும்பாலும் ஆசிரியரின் தெளிவு) கல்வியின் உயர் அடைவுக்கு பெரிதும் உதவுகின்றது என்ற கூற்றை ஆதரிக்க ஏராளமான ஆய்வுச் சான்றுகள் உள்ளன. ஆசிரியரின் விடயத் தெளிவானது, நிச்சயமாக ஆசிரியரின் பேச்சு நடவடிக்கைகளை மேம்படுத்தவதுடன் பல்வேறு கல்விப் பணிகளின் செயல் திறன் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவுகின்றது. உதாரணம் மாநாடு, விவரணம், பாத்திரமேற்று நடிக்கும் செயல்பாடுகள், செயற்பாட்டுப் பத்திரங்களின் உள்ளடக்கம் மற்றும் அமைப்பு போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.
ஆசிரியரது வெளிப்பாடு பொதுவாக அறிவித்தல், விபரித்தல், விளக்குதல் என பாடம் முழுவதும் நிகழ்கின்றது. எனினும் பாடசாலைகளில் இது ஒரு நீண்ட விரிவுரையின் வடிவத்தை எடுக்கக் கூடாது. நீண்ட விரிவுரைகள் மாணவர்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும். இது பயனுள்ள மாற்றத்தை உண்டு பண்ணாது. எனவே நீண்ட நேர விரிவுரைகளை கையாளக் கூடாது. உண்மையில் இந்த காரணத்துக்காக பல ஆசிரியர்கள் தடையற்ற பேச்சைக் காட்டிலும் தொடர்ச்சியான கேள்விகளைப் பயன்படுத்தகின்றார்கள். கேள்விகளுக்குரிய விளக்கத்தை உடனே வழங்காமல் மாணவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிவார்கள். இது மாணவர்களை அதிகம் ஈடுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் புரிதலை சரிபார்க்கவும் உதவும்.
பாடத்தைத் தொடங்குதல்
Starting the lesson
பாடத்தின் ஆரம்பத்தில் ஆசிரியர் பேசுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது பல செயல்பாடுகளைச் செய்கிறது. முதலில் மாணவர்களது கவனத்தை ஈர்த்து பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். பாடத்தின் தொடக்கத்தில் ஒரு நேர்மறையான மனப்பாங்கை நிறுவுவது பின்வருவனவற்றுக்கு நல்ல உத்வேகத்தை எற்படுத்துகின்றது.
முதலாவதாக பாடம் தொடங்கும் போது மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்துகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துவதனூடாக மாணவரிடையே ஒரு நேர் மனப்பாங்கை உருவாக்கலாம்.
இரண்டாவதாக பாடத்தின் நோக்கம் அல்லது தலைப்பு என்ன?, அதன் முக்கியத்துவம் அல்லது பொருத்தப்பாடு என்ன? என்பதைக் குறிப்பிட்டுக்காட்ட உதவியாய் இருக்கும். பாடத்தின் பிரதான கட்டமைப்பை நீங்கள் கோடிட்டுக் காட்டலாம். பாடப்பிரவேசம் அல்லது ஆரம்பச் செயல்பாடு முந்தைய பாடத்தின் விரைவான மீட்டலாக பயனுள்ளதாகச் செயல்படலாம் அல்லது தற்போதைய பாடத்தலைப்புடன் பயனுள்ளதாக இணைக்கப்படலாம். பாடத்தின் பிரதான பகுதியை அறிமுகப்படுத்தவதானது, ஒரு கேள்வியை விட அல்லது ஒரு அறிக்கையை விட மாணவர்களின் ஆர்வத்தை தூண்டக்கூடியதாகவும், பிரச்சினையைத் தீர்க்கக் கூடியதாகவும் இருப்பதுடன் பின்வருவனவற்றிற்கு உந்துதலாயும் அமைகிறது.
- அமைதியான சூழலை உருவாக்குகிறது,
- செவிமடுப்பதை ஊக்குவிக்கின்றது.
- பின்னணி இரச்சலை கட்டுப்படுத்தகின்றது,
- பாட முன்வைப்பை எளிதாக்குகிறது.
பாடத்தின் நோக்கத்தில் கவனம் செலுத்துவதனூடாக எமது அறிமுகத்தின் மூன்றாவது பணி, மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய முந்தைய பாடங்களுடனான எந்தவொரு உறவையும் அவர்களுக்கு உணர்த்துவதாகும். அல்லது ஏதேனும் குறிப்பிட்ட பிரச்சினைகள் அல்லது இந்த பாடத்தின் கூறுகளை எதைப் பின்தொடரும் என்பதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள அவர்களை விளிப்படையச் செய்வதாகும்.
அத்தகைய தயார்படுத்தலில் அவர்கள் பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள் தொடர்பான விடயங்கள் இருக்கலாம். அல்லது அவர்கள் வேலை செய்ய எதிர்பார்க்கப்படும் வேகத்தின் நடைமுறைகள் இருக்கலாம். இறுதியாக, முக்கிய கற்றல் நோக்கங்கள், வெற்றிகரமான நியதிகளுடன் மற்றும் கற்றல் குறிக்கோள்களுடன் எவ்வாறு தொடர்பு படுகின்றன என்பதையும், பாடம் தொடர்ந்து வரும் பாடங்களுடன் மற்றும் வீட்டு வேலைச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதா என்பதையும், மாணவர்களுடன் கலந்துரையாடலாம் மற்றும் பகிர்ந்து கொள்ளலாம்.
பயனுள்ளவாறு விளக்கமளித்தல்.
Effective explaining
விளக்கமளிப்பது பெரும்பாலும் வினாக்களுடன் கைகோர்த்துச் செல்வதைக் காணலாம். ஆசிரியர் இவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எப்போது வேண்டுமானாலும் மாறலாம். பெரும்பாலும் இந்த திடீர்திருப்பம் பாடத்தின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல உதவுவதற்காக பயன்படுத்தப்படுகின்றது. அதாவது கருத்துக்களை விரைவாக ஒன்றிணைப்பது பொருத்தமாதா? அறிக்கையாக தொகுத்து வழங்குவதா?, ஆசிரியர் அதிக ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக உணர்கிறாரா? மாணவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவது தேவையானது என்பதை ஆசிரியர் விரைவாக உணர்கின்றாரா? என்பதில் இந்த திடீர்திருப்பம் செல்வாக்குச் செலுத்துகிறது.
விளக்குதல் மற்றம் கேள்வி கேட்டல் ஆகிய இரண்டிற்கும் ஆசிரியர் பயன்படுத்தும் மொழியின் தன்மை சிக்கலின்றி மாணவர்களால் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். உண்மையில் மாணவர்களின் தற்போதைய புரிதலின் அளவை கவனத்தில் கொள்வதன் மூலம் மொழியின் பயன்பாட்டை சரியான முறையில் தேர்ந்தெடுப்பதற்கான ஆசிரியரின் திறமை தொடக்க நிலை ஆசிரியர்கள் பெறவேண்டிய முக்கிய கற்பித்தல் திறன்களுள் ஒன்றாகும்.
விளக்கமளித்தல் தொடர்பான ஆய்வுகள் விளக்கத்தின் செயல்திறனை மேம்படுத்தவதில் ஏழு முக்கிய அம்சங்களை எடுத்துக்காட்டுகின்றன.
(கெர்ரி 2002 வ்ராக் மற்றும் பிறோன் 2001).
- தெளிவு : இது தெளிவானது மற்றும் பொருத்தமான மட்டத்தில் உள்ளது.
- கட்டமைப்பு : முக்கிய கருத்துக்கள் அர்தமுள்ள பகுதிகளாக பிரிக்கப்பட்டு தர்க்கரீதியான வரிசையில் வைக்கப்பட்டுள்ளது
- நீளம் : இது மிகவும் சுருக்கமானது, வினாக்கள் மற்றும் பிற செயற்பாடுகளுடன் தொடர்புடையது.
- கவனம் : கவனத்தையும், ஆர்வத்தையும் பராமரிக்க குரல் மற்றும் உடல் மொழியை நன்றாகப் பயன்படுத்துகின்றது.
- மொழி : இது மிகவும் சிக்கலான மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறது. மற்றும் புதிய சொற்களை விளக்குகின்றது.
- எடுத்துக்காட்டுகள் : எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக மாணவரின் அனுபவங்கள், மற்றும் ஆர்வங்கள் தொடர்பானவை. புரிந்து கொள்ளுதல் : ஆசிரியர் மாணவரின் புரிதலை கண்காணித்து சரிபார்க்கின்றார்.
எவ்வாறாயினும் விளக்குதல் திறனிலுள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் பாடத்தின் ஆரம்பத்திலிருந்து பாடத்தை மாணவர்கள் அறிந்தவற்றிலிருந்து எந்த அளவில் படிப்படியாக நகர்த்திச் செல்வது என்பதை தீர்மானிப்பதாகும். இது நாம் விரும்பிய கற்றல் விளைவுகளை பாடத்தின் முடிவில் அடையப்படுவதைச் சாத்தியமாக்கும். சுருக்கமாகக் கூறுவதானால் விளக்கங்கள் கூடுமானவரை பிரதேச பேச்சு மொழியைக் கைவிட்டு மேடைப் பேச்சு மொழியைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டுகள் நன்றாகப் பயன்படுத்தப்பட வேண்டும். மிக முக்கியமாக தொழிநுட்பச் சொற்களை வரைவிலக்கணப்படுத்த வேண்டும். அதிக நேரம் எடுக்கக் கூடாது.
தொடரும்…………..
உசாத்துணை :
Kyriacou CHRIS 2007), Essential Teaching Skills, Nelson Thornes Ltd, Delta Place United Kingdom.
சி.லோகராஜா
விரிவுரையாளர்
தேசிய கல்வியியல் கல்லூரி
மட்டக்களப்பு.