பிள்ளைகளிடம் உயர்ந்த குணங்களை விதைப்போம்
N.M.M. சபீக்
விரிவுரையார், கல்வி உளவியல் துறை,
கல்வி பீடம், கொழும்புப் பல்கலைக் கழகம்.
வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயன்முறையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக மதிப்பிடல் விளங்குகின்றது. மாணவர்களின் அடைவினை மதிப்பீடு செய்யும் அதே வேளையில் அவர்களின் தற்போதைய அடைவு பற்றியும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் முன்வைக்க வேண்டிய தேவையும் ஆசிரியருக்கு உள்ளது. மதிப்பீட்டின் போது மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் உடன்பாடான நிலைமை பற்றி அவர்களுக்கு உணர்த்துவதும் அதனைப் பாராட்டுவதும் பரிசில்கள் வழங்குவதும், உடன்பாடற்ற நடத்தைகள் மற்றும் பின்தங்கிய செயற்பாடுகள் பற்றி எச்சரிக்கை மற்றும் தண்டணைகள் வழங்குவதும் இடம்பெறுகின்றது.
பிள்ளைகளைப் பொருத்தவரையில் தம்மைப்பற்றி உயர்வான மதிப்பீடுகள் செய்யப்படுவதையே விரும்புகின்றனர். தம்மைப்பற்றிய நேரெதிர்க் கருத்துக்களைத் தவிர்ப்பதற்கும் சுய மதிப்பினைப் பேணுவதற்கும் முயற்சிக்கின்றனர். பிள்ளைகள் வெளிச் சூழலுடன் தொடர்புகளைப் பேணும் போது தம்மைப்மைப் பற்றிய உடன்பாடான உயர்வான எண்ணக்கருவினை விருத்தி செய்துகொள்வதற்குப் போராடுகின்றனர். தொண்டைக்கின் கோட்பாட்டின்படி பாராட்டும் தண்டைனைகளும் நடத்தைகளில் செல்வாக்குச் செலுத்தினாலும் தண்டனைகள் பெறுவதை மனிதர்கள் விரும்புவதில்லை. பாராட்டுக்கள் நடத்தையில் ஏற்படுத்தும் உடன்பாடான தாக்கத்தினைப் போன்று தண்டனைகள் அமைவதில்லை. மாறாக தண்டனைகள் பிரிதொரு விரும்பத்தகாத நடத்தைகளுக்கு இட்டுச் செல்கின்றன. அவ்வாறாயின் பிள்ளைகளின் பிழையான நடத்தைகளை திருத்தியமைக்கத் தேவையில்லையா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது. அதற்கு எச்சரிக்கை அல்லது தண்டனை என்பதற்கப்பால் வேறு வழிமுறைகள் பற்றிக் கவனம் செலுத்துவது அவசியமாகின்றது.
பிள்ளைகளின்; கல்வி அடைவுகள் மற்றும் நடத்தைகளின் பின்னணியில் பல்வேறு காரணிகள் இருப்பதாக ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குடும்ப பின்னணி, தனியாள் காரணிகள், அவர்கள் வளரும் சூழல், சமூகக் கலாசார பின்னணிகள், அவர்கள் சந்திக்கும் அனுபவங்கள், மற்றும் பாடசாலை காரணிகள் போன்றவை அவற்றுள் அடங்குகின்றன. வகுப்பறையில் மாணவர்களின் பின்தங்கிய கல்வி அடைவுகள் மற்றும் நடத்தைகளுக்கான சகல காரணிகளையுங் கண்டறிந்து தீர்த்து வைப்பது சாத்தியமற்றது. இவ்விதம் பல்வேறு காரணிகளின் பின்னணியில் வளரும் பிள்ளைகளுக்கு எச்சரிக்கைகளும் தண்டனைகளும் பயனற்றதாகின்றன. எனவே பாராட்டுதல்கள், பரிசில்கள் வழங்குதல் மற்றும் ஊக்குவித்தல்களை அதற்கு மாற்றமாக பயன்படுத்தும் போது பிள்ளைகளின் நடத்தைகளை மாற்றியமைக்கலாம்.
இந்த இடத்தில் மீண்டும் ஒரு கேள்வி வேடிக்கையாக எழுவதும் தவிர்க்க முடியாததுதான். பிள்ளைகள் விரும்பத்தகாத நடத்தைகளை வெளிப்படுத்தும் போதும் அவர்களைப் பாராட்டுவதா? பரிசில்கள் வழங்கச் சொல்கின்றீர்களா என்பதுதான் அது. ஆம் அவர்களைப் பாராட்ட வேண்டும். பரிசில்கள் வழங்க வேண்டும். அவர்களின் பின்னடைவுகளுக்கும் விரும்பத்தகாத நடத்தைகளுக்கும் அல்ல. அவர்களின் ஏனைய நல்ல பண்புகளுக்காக.
மனிதத்துவ அணுகுமுறையாளர்கள் மனிதர்கள் உயர்ந்த வகையில் மதிக்கப்படுவதையும் அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வதையும் வலியுறுத்துகின்றனர். ஒரு பிள்ளை கல்வி அடைவு மட்டத்தில் பின்தங்கியிருக்கலாம். சந்தர்ப்ப சூழல் காரணமாக விரும்பத்தகாத நடத்தையை வெளிப்படுத்தியிருக்கலாம். அல்லது தொடந்தும் அந்த நிலையில் நீடித்திருக்கலாம். அதற்காக முழுமொத்தமாக அவர்களை வெறுத்தொதுக்க முடியாது.
அன்பு செலுத்துதல், கருனை காட்டுதல், தூய்மை பேணுதல், சட்டதிட்டங்களை மதித்தல், பிறருக்கு உதவுதல், தமது உணவினைப் பகிர்து உண்ணுதல், இரகசியம் பேணுதல், படைப்புத் திறன்;, உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறு திறன்களில் ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ அவர்கள்; திறமையானவர்களாக இருக்கலாம். கல்வியில் உயர்ந்த அடைவுகள் பெறும் போது அல்லது சில திறமைகளை வெளிப்படுத்தும் போது சிலவேளைகளில் மட்டும் பாராட்டும் நாம் விரும்பத்தகாத நடத்தைகளை வெளிப்படுத்தும் போது வரிந்து கட்டிக்கொண்டு எச்சரிக்கை மற்றும் தண்டனைகள் வழங்குவதற்கு முயற்சிக்கின்றோம். அதேவேளையில் அவர்களின் ஏனைய நல்ல பண்புகளை மறந்துவிடுகின்றோம். அப்படியல்லாமல் அவர்களின் நல்ல பண்புகளை எடுத்துக் கூறிப் பாராட்டி குறிப்பிட்ட விரும்பத்தகாத நடத்தை அவர்களது ஏனைய நல்ல பண்புகளைப் பாதிப்பதாக உணர்த்தும் போதும் விளைவுகள் பற்றிய விழிப்பூட்டலை முறையாகச் செய்யும் போதும் பிள்ளைகள் தமது நடத்தைகளை மாற்றிக்கொள்கின்றனர். சின்னச் சின்ன பாராட்டுக்களும் அங்கீகாரங்களும் அவர்களை ஊக்குவிக்கின்றன.
மனித உணர்வுகள் சிக்கலானவை. தூண்டல்களுக்கு எதிர்வினையாக உடலியல் மற்றும் உளவியல் நடத்தைகளை வெளிப்படுத்தக்கூடியவை. பிள்ளைகள் கற்றல் செயன்முறையின் போது பெறும் புலக்காட்சி அவர்களை மகிழ்ச்சி நிலைக்கோ அல்லது விரக்தி நிலைக்கோ இட்டுச் செல்கின்றன (Ivanova, Dimova-Severinova, 2021). பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கும் போதும் தாம் மதிக்கப்படும் போதும்; சிறப்பாக கற்கின்றனர் (www.positive.fi). பிள்ளைகள் தம்மைப்பற்றிய நல்ல உயர்வான மதிப்பீடுகள் வெளிப்படுத்தப்படும் போது மகிழ்ச்சியடைவதுடன் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்கின்றனர். எனவே பிள்ளைகளை அவர்களின் நற்பண்புகளுக்காகப் பாராட்டுதல் அவசியமாகின்றது.
பிள்ளைகளைப் பாராட்டுவதில் அவர்களின் நற்பண்புகளை இனங்காணுதல், அப்பண்புகள் பற்றிச் சிலாகித்துப் பேசுதல், அப்பண்புகள் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய சந்தர்ப்பங்களைப் பதிவு செய்தல், மற்றும் நல்ல பண்புகளை விருத்தி செய்தல் ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றலாம்.
நற்பண்புகளை இனங்காணுதல்
தமது வகுப்பில் இருக்கும் பிள்ளைகள் எத்தகைய குணநலன்களுடன் இருக்கின்றனர் என்பதை ஆசிரியர்கள் கண்டறிவது முக்கியமாகும். ஒவ்வொரு பிள்ளையையும் முறையான செயற்திட்டங்களின் அடிப்படையில் அடையயாளப்படுத்தும் போது ஒவ்வொருத்தரும் சிறப்பானவர்களாக மாறுகின்றனர். வெறுமனே கல்வி அடைவு அல்லது விளையாட்டுத் திறன் மட்டும் ஒரு பிள்ளையின் அடையாளமாக இருக்க முடியாது. ஏனெனில் பாடவிதான அறிவில் சிறந்து விளங்கும் பெரும்பாலானோரிடம் அதற்கேற்ற மனப்பாங்கு விருத்தியடைவதில்லை.
பிள்ளைகளிடம் பின்வரும் நல்ல பண்புகளைக் காணவலாம்
• மன்னிக்கும் மனப்பாங்கு
• ஆன்மீக ஈடுபாடு
• சுய கட்டுப்பாடும் சுய ஒழுங்கும்
• நன்றியுணர்வு
• எதிர்காலம் பற்றிய முன்னோக்குப் பார்வை
• குழு ஒற்றுமையும் குழு செயற்பாடும்
• சமூக நுன்னறிவு
• பணிவடக்கம்
• நீதியும் நேர்மையும்
• நியாயம் தவறாமை
• சட்ட திட்டங்களை மதித்ததல்
• நகைச்சுவை உணர்வு
• தலைமைத்துவ திறன்கள்
• படைப்பாற்றல்
• சுய கற்றல் மற்றும் தேடல்
• அன்பும் கருனையும்
• விடாமுயற்சி
• நம்பிக்கை
• வாக்குத் தவறாமை
• கவனத்துடன் கருமமாற்றுதல்
• ஆர்வம்
• உற்சாகத்துடன் செயலாற்றுதல்
• தூய்மை பேணுதல்.
• அழகுணர்ச்சி
• தைரியம்
போன்ற பண்புகள் ஒன்றிலோ பலவற்றிலோ அவர்கள் சிறந்து விளங்கலாம்.
இப்பண்புகளில் சிறந்தவராக அவர்களை அடையாளப்படுத்துவது அவர்களின் தனித்துவ அடையாளமாகும். இவை போன்ற நற்பண்புகளும் திறன்களும் அவர்களது கல்வி அடைவுகளை விட முக்கியமானவை என்பதால் ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாக அடையாளங்காண்பது இன்றியமையாததாகும். கல்வி அடைவுகளில் மட்டும் அவர்களை அடையாளமாகக் கருதாமல் ஏனைய நல்ல குணங்களின் இருப்பிடமாகவும் அடையாளப்படுத்த வேண்டும். அவ்வாறு அடையாளப்படுத்தும் போது அவர்கள் அனைவரும் தனித்துவமான திறன்கள் உள்ளவர்களாக வகுப்பறையின் முக்கிய அங்கத்தவராக மாறுவர்.
நற்பண்புகள் பற்றிச் சிலாகித்துப் பேசுதல்
பிள்ளைகளிடம் காணப்படும் நற்பண்புகளை அடையாளப்படுத்தியதன் பின்னர் அவை பற்றிச் சிலாகித்தப் பேசுதல் அவசியமாகும். பொதுவாக பிள்ளைகளின் தவறுகள் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் அளவுக்கு நல்ல பண்புகள் பற்றி சிலாகித்துப் பேசப்படுவதில்லை. தம்மைப் பற்றியும் தனது நடத்தையின் சிறப்பு பற்றியும் பேசப்படும் போது பிள்ளைகள் மகிழ்ச்சியடைகின்றனர். அதன் காரணமாக தன்னைப்பற்றிய உயர்வான எண்ணக்கருவை விருத்தி செய்து கொள்கின்றனர். பிள்ளைகளின் நற்பண்புகள் மற்றும் திறன்களைப் பாராட்டும் வகையில் ஆசிரியர்கள்:
• உங்களை எனக்குப் பிடிக்கும்.
• நீங்கள் என் அன்புக்குரிய பிள்ளை.
• உங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியடைகின்றேன்.
• நீங்கள் அழகானவர்.
• உங்கள் செயல்கள் அழகானவை.
• உங்களது ஆடை அழகானது.
• உங்களது ஆடை தூய்மையானது.
• உங்களது பேச்சு அழகானது.
• உங்கள் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
• உங்களை நான் நம்புகின்றேன்.
• உங்களால் இதனைச் சாதிக்க முடியும்.
• உங்களால் எதனையும் செய்ய முடியும்.
• உங்களால் சிறந்த செயல்களைச் செய்ய முடியும்.
• உங்களது கருத்துக்கள் சிறந்தவை.
• உங்களது தெரிவுகள் சிறந்தவை.
• உங்களது வார்த்தைகள் உறுதியானவை.
• உங்களது வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை.
• உங்களது தலைமைத்துவ திறன்கள் சிறப்பானவை.
• நீங்கள் சாதிக்கப்பிறந்தவர்.
• நீங்கள் தகுதியானவர்.
• நீங்கள் தைரியசாலி.
• நீங்கள் பலசாலி.
• நீங்கள் சிறந்த புத்திசாலி.
• நீங்கள் இரக்கமானவர்.
• நீங்கள் நியாமானவர். நீங்கள் அநீதியிழைக்கமாட்டீர்கள்.
• நீங்கள் சிறந்த படைப்பாளி.
• நீங்கள் அன்பானவர். கருனையுள்ளவர்.
• நீங்கள் நல்ல பண்புள்ளவர்.
• நீங்கள் நன்றியுணர்வு மிக்க நல்ல மனிதர்.
• நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த மனிதராக வருவீர்கள்.
• நீங்கள் நகைச்சுவையான பிள்ளை.
• நீங்கள் நம்பிக்கையானவர்.
• நீங்கள் வாக்குத் தவறாதவர்.
• நீங்கள் உற்சாகத்துடன் செயலாற்றுபவர்.
• நீங்கள் மதிப்பக்குரியர்.
• நீங்கள் முக்கியமானர்.
• உங்களது மன்னிக்கும் மனப்பாங்கு பாராட்டத்தக்கது
• உங்களது ஆன்மீக ஈடுபாடு சிறப்பானது.
• உங்களது பணிவடக்கம் என்னைக் கவர்ந்துள்ளது.
• உங்களது சட்ட திட்டங்களை மதிக்கும் பண்பினைப் பாராட்டுகின்றேன்.
• உங்களது சுய கற்றறலும் தேடலும் அற்புதமானது.
• உங்களது விடாமுயற்சி உங்களுக்கு வெற்றிகளை அள்ளித் தரும்.
• உங்களது கையெழுத்து அழகானது.
• உங்களது வாசிக்கும் முறை அழகானது.
• உங்களது குரல் அழகானது.
• உங்களது ஆர்வம் என்னைக் கவர்ந்துள்ளது.
• உங்களது மனது அழகானது.
• உங்களுக்கு உதவ ஆவலாக உள்ளேன்.
• நான் உங்கள் வகுப்பை நேசிக்கின்றேன்.
• உங்களது வகுப்புக்கு வரும் போது மகிழ்ச்சியடைகின்றேன்.
• நான் உங்களை நினைத்து பெருமையடைகின்றேன் என்று கூறலாம்.
இவை வெறும் வார்த்தைகளாக மட்டும் அல்லாமல் ஆசிரியர்களின் உள்ளத்திலிருந்து வருவது சிறப்பானதாகும். ஏனெனில் பிள்ளைகளின் விரும்பத்தகாத நடத்தைகளைக் கண்டிக்கும் போது கோபத்தில் உணர்ச்சிவசப்படும் நாம் பாராட்டுவதில் உணர்ச்சி வசப்படுவதில்லை. தண்டணைகள் தொடர்பான விமர்சனங்களில் பெரும்பாலான தண்டனைகள் பிள்ளைகளத் திருத்துவதற்குப் பதிலாக அவர்களின் செயல் நமக்கு ஏற்படுத்திய வெறுப்பிற்காகவே வழங்கப்படுவதாகக் குறிப்படப்படுகின்றது. அதேவேளையில் அவர்களின் செயல்களினால் மகிழ்ச்சியடைந்து உளம் பூரிப்படைந்து பாராட்டுவது அரிதாகவே நடைபெறுகின்றது.
மேலும் பிள்ளைகளின் நற்பண்புகளைப் பலர் முன்னிலையில் பாராட்டும் போது பிள்ளைகள் தமது செயலுக்கான அங்கீகாரத்தை உறுதிசெய்துகொள்கின்றனர். அவர்களது வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் பாராட்டுவது இன்னும் உற்சாகத்தை வழங்கும் அதேவேளையில் பிறரோடு ஒப்பிட்டு நோக்குவதையும் தவிர்த்தல் வேண்டும். ஒவ்வொரு தனியாளும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்ற வகையில் ஒருவரை மற்றொருவரோடு ஒப்பிடுவது நியாயமற்றதாகும்.
நற்பண்புகளைப் பதிவு செய்தல்
பிள்ளைகளின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான அடைவுகள் பெரும்பாலான பாடசாலைகளில் பதிவுகளாகப் பேணப்படுகின்றன. மாணவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளும் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் மாணவர்களால் வெளிப்படுத்தப்பட்ட நல்ல பண்புகள் மற்றும் உயர்ந்த செயல்கள் பதிவு செய்யப்படுவதில்லை. மேற்கூறியது போன்ற நூற்றுக்கணக்கான நல்ல பண்புகளை பிள்ளைகள் பாடசாலையில் வெளிப்படுத்தியிருப்பர். நல்ல செயல்களைச் செய்துமிருப்பர். சில வேளைகளில் பாராட்டப்பட்டாலும் அவை தொடர்பான பதிவுகள் பேணப்படுவதில்லை.
மாணவர் தேர்ச்சியறிக்கை மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட கோவைகளில் அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட நல்ல பண்புகள் ஆவணப்படுத்தப்படல் வேண்டும். பிள்ளைகளுக்கு பாடசாலைக் கல்வியின் இறுதியில் வழங்கப்படும் நற்சான்றிதழ் வெறுங் கண்துடைப்பாகும். ஒருவர் நல்ல பண்புகளில் சிறந்து விளங்க வேண்டுமாயின் அவர் பற்றிய முறையான பதிவுகள் அவசியாகும்.
நல்ல பண்புகளை விருத்தி செய்தல்
பாடசாலைக் கலைத் திட்டம் ஒரு சில நற்பண்புகளை நேரடியாக விருத்தி செய்வதை வலியுறுத்தி மறைமுகமாக பல மனப்பாங்குகளை விருத்தி செய்வதை ஊக்குவிக்கின்றது. என்றாலும் அந்த மறைமுகமான மனப்பாங்குகளின் விருத்தி என்பது தோல்விகரமானது என்றே குறிப்பிட வேண்டும். முக்கியமாக சுதந்திரத்திற்குப் பின்னர் பல கலைத்திட்ட மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும் நாம் இன்னும் பிற மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. கலைதிட்டங்கள் எத்தகைய உன்னதமான உறுப்புரைகளையும் ஏற்பாடுகளையும் உள்ளடக்கி இருந்தாலும் அத்தியசியமான நற்பண்புகள் பல எம்மத்தியில் வளர்க்கப்படவில்லை.
மனிதன் என்ற வகையில் இந்த சமூக அமைப்பில் பிறருடன் இனங்கி வாழ்வதற்கான அனைத்து திறன்களையும் நல்ல பண்புகளையும் நாம் விருத்தி செய்துகொள்ளல் வேண்டும். வீட்டில் இருந்து ஆரம்பித்து பாடசாலை, சமூகம் என பல்வேறு இடங்களிலும் இவை பற்றிக் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
முக்கியமாக நாம் பிள்ளைகளிடத்தே சக மனிதரை மதிப்பதற்கான குண நலன்களை வளர்த்தெடுக்க வேண்டும். தன்னைப் போலவே பிற மனினுக்கும் இரத்தமும் சதையும், உயிரும், உணர்வும் உண்டு என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம். சேவை வழங்குபவர் முதல் பெறுநர் வரை ஒருவர் மற்றொருவரின் உரிமைகள் பற்றிச் சிந்திக்கும் நற்பண்பு அத்தியவசியமானதாகும். கிராமசேவகர் அலுவலகம் தொடங்கி உயர்மட்ட அலுவலகங்கள் வரையும் சேவை பெறுநரை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதோடு சேவை பெறுநர்களும் தமது தேவையைப் பூர்த்திசெய்து கொள்ள முண்டியக்கும் அதேவேளை தனக்கு முன்னால் இருப்பவர் உரிமை பற்றிச் சிந்திப்பதே இல்லை.
பஸ்ஸில் ஏறிய பயணியிடமிருந்து டிக்கட்டிற்கான பணத்தை பெறும் வரை இருக்கும் அவதானம் அவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதில் இருப்பதில்லை. அவரவர் தேவையை முன்னிருத்தி பிறர் என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற மன நிலையை எதிர் வரும் சந்ததிகளில் இருந்தாவது துடைத்து எறிய வேண்டும்.
நாம் எமது உரிமைகளை அடைந்து கொள்வதில் கவனம் செலுத்தும் அளவில் கடமைகளைச் செய்வதில் இருப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் எமக்கான சலுகைகைளை அனுபவிக்க போராடுகின்றோம். அதேவேளையில் நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை மறந்துவிடுகின்றோம். உரிமை என்பது ஒரு வகையான சலுகை. ஆயினும் கடமை என்பது அத்தியவசியான தவிர்க்க முடியாத பொறுப்பு என்ற மனப்பாங்கினை பிள்ளைகள் மத்தியில் விருத்தி செய்தல் வேண்டும்.
தேச நலன், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், பிறர் உரிமைகளை மதித்தல் போன்ற உயரிய குணப்பண்புகளை பிள்ளைகளிடத்தே நேரடியாக வலிறுத்தி வளர்க்க வேண்டும். கலைத்திட்டத்தில் முதலாம் ஆண்டு தொடக்கம் உயர்கல்வி வரையில் இம்மாற்றம் புகுத்தப்படல் வேண்டும். பாடசாலை ஆசிரியர்கள் இதயசுத்தியுடன் முன்னின்று இப்பண்புகளை பிள்ளைகளைப் பாராட்டுவதன் மூலம் வளர்க்க வேண்டும். அதுவல்லாமல் இன்னும் மறைமுக மனப்பாங்கு விருத்தியில் கவனம் செலுத்தினால் இன்னும் நூறு ஆண்டுகளானாலும் நாம் மாறப் போவதில்லை.
மேலும் வாசிக்க – கற்றலுக்காக பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளல்