வரை விட்ட சேவை என்றால் என்ன?
புகையிரத திணைக்கள சேவைகளை வரைவிட்ட சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவ்வாறே ஆசிரியர் சேவையையும் வரைவிட்ட சேவையாக மாற்றுவதற்கு அமைச்சரவை உடன்பட்டுள்ளது.
வரைவிட்ட சேவை என்றால் என்ன?
அரச சேவை பல வகைப்பட்டன.
1. ஒன்றிணைந்த சேவை
அரச முகாமைத்துவ சேவை ஒன்றிணைந்த சேவையாகும். இச்சேவையில் உள்ளவர்கள் எந்த திணைக்களத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையில் இடமாற்றம் பெற முடியும்.
2. நாடளாவிய சேவை
நாடளாவிய சேவை இன்னொரு வகையாகும். இலங்கை நிர்வாக சேவை உட்பட்ட 12 நாடளாவிய சேவைகள் இதில் அடங்குகின்றன. இச்சேவையிலுள்ளவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சேவையில் ஈடுபட முடியும். இதில் மாகாண தேசிய நிறுவன வரையறைகள் எதுவும் காணப்படமாட்டாது.
மாகாணப் பாடசாலை ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெறுவதற்கு பல தடைகள் உள்ளன. ஆனால் நாடளாவிய சேவையில் உள்ளவர்களுக்கு இந்த வரையறை இல்லை.
3. வரை விட்ட சேவை
சம்பளம், பொது நலன்கள் மற்றும் சேவை தரப்பண்பு ஆகிய அம்சங்கள் இவ்வகைச் சேவையில் முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றன.
6/2006 இலக்க சுற்று நிருபம் அனைத்து அரச சேவைகளையும் பொது வியூகமொன்றினுள் கொண்டுவருகின்றது. இதன் மூலம் அரச சேவைகள் ஒன்றுக் கொன்று தொடர்பு படுகின்றது. சில தொழில்கள் சமப்படுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக ஒரு தொழில் துறைக்கு சம்பளத்தை அதிகரிக்கும் போது அதனோடு தொடர்பான அல்லது சமமான ஏனைய துறைகளின் பணியாளர்களுக்கும் சம்பளத்தை அதே அளவில் அதிகரிக்க வேண்டும். இல்லையேல் சம்பள முரண்பாடு தோன்றும். தற்போது நடைபெறும் சம்பள முரண்பாட்டின் பின்னணி இதுவேயாகும்.
ஒரு அரச சேவையை வரை வட்ட சேவையாக பிரகடனப்படுத்தும் போது, அந்த சேவை தனியாக நோக்கப்பட்டு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தீர்மானிக்க முடியும். அது சுயாதீனத் தன்மை கொண்டது. உதாரணமாக ஆசிரியர் சேவையில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. இங்கு மேலதிக நேர வேலைக் கொடுப்பனவு, பட்டா கொடுப்பனவு முதலானவை எதுவும் இல்லை. எனவே மேலதிக வருமானம் ஈட்ட முடியாது. ஆசிரியர்கள் அதிகமானவர்களின் சம்பளம் 29000-33000 க்கு இடைப்பட்டதாகும்.
பெரும்பாலான ஆசிரியர்கள் நாளொன்றுக்கு 1000 ரூபா அளவிலே சம்பளமாக பெறுகின்றனர். அதனால் இந்த நிலையைக் கருத்திற்கொண்டு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு 2007 ஆம் ஆண்டு ஆசிரியர் சங்கங்கள் மேற்கொண்ட தொழில் சங்க நடவடிக்கைகளின் போது உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்கள சேவையை மாத்திரமன்றி ஆசிரியர் சேவையையும் வட்ட வரை சேவையாக அறிவிக்க ஒக்டோபர் 1 தீர்மானிக்கப்பட்டது.
அதற்கேற்ப, அது அரச சேவையின் பொது வியூகத்தில் அடங்காது. அதன் மூலம் அச்சேவையின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மற்றய துறைகளைத் தங்கியிருக்காது.
-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் அவர்களின் விளக்கம்
-teachmore-