இன்றைய நவீன உலகில் துரித மாற்றங்களுக்கு தொழில்நுட்ப விருத்தி அடிப்படையாக உள்ளது.
எனவே இவற்றை உள்வாங்கிக் கொண்டு பணி புரிவது ஆசிரியர்களுக்கு அவசியம். ஆசிரியத் தொழில் புதுமையும் ஆக்கத்திறனும் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக உள்ளது.
ஆசிரியர் வாண்மை மேம்பாட்டை பின்வரும் பரிமாணங்களில் முன்னெடுக்க வேண்டி உள்ளது. அவை இலக்குகள், இடைநிலையம், நீட்சி, முறைகள், விளைவுகளின் மட்டங்கள் போன்றனவாகும்.
ஆசிரியர்களுக்கு தமது தொழில் சார்ந்த வாண்மை பற்றிய பெறுமானங்களை உணரச் செய்தல் வேண்டும். அவரவர் அதனை உணர்ந்து செயற்படும் வகையில் சேவையாற்றுவதற்கு முன்வர வேண்டும். தங்களின் நிலை கருதி அதற்கேற்ற வகையில் சிறந்த உன்னதமான பணியை மேற்கொள்ள ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
தமது வாண்மையை வளப்படுத்துவதற்கான ஆற்றல், நேர்முகப் பின்னூட்டல்களை பெறுதல் அவசியமாகின்றது. பாடசாலை மட்டங்களில் ஆசிரியர்களின் அறிவு மட்டம் வியாபகம் பெற்றதாக காணப்படுதல் அவசியமாகும். மாணவர்களின் சூழ்நிலைக்கேற்ப தம்மை ஆயத்தப்படுத்தி அவர்களின் ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ச்சியான அவதானிப்பு, சேவை மதிப்பிடல் என்பன ஆசிரியர்களிடம் காணப்படுதல் முக்கியமானதாகும்.
தொழில்சார் உயர் நிறைவு மற்றும் ஊக்கல்களைப் பெறத் துணிதல் முக்கியமானதாகும். பல்வேறு மட்டங்களில் அறிவினை பெறுவதில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். குறுகிய மனப்பான்மையற்று பொதுவான எல்லாத் துறை சார்ந்த அறிவையும் கொண்டிருத்தல் சிறந்தஆசிரியர் வாண்மையாகும். தமது தொழில் நிலையில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுவதோடு அதில் ஏனைய சமூக மட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான ஆலோசனைகளையும் ஊக்கத்தினையும் பெற்றுக் கொள்ள வேண்டும். வெறுமனே ஆசிரியர் என்ற நிலையில் இருக்காமல் சிறந்த,முழுமையான ஆசிரியராக மாற தம்மை ஆயத்தப்படுத்த வேண்டும்.
குறித்த பாடத்திற்கான ஆசிரியர் என்ற நிலையில் மாத்திரம் இல்லாமல் பாடசாலையின் வளங்களின் தேவையை அறிந்து சூழலுக்கு ஏற்ற வகையில் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் தம்மை சகலதுறை ஆட்டக்காரர்களாக உருவாக்கிக் கொள்வது சிறப்பானதாகும். ஒரு சில பாடசாலைகளில் குறித்த பாடத்திற்கு ஆசிரியர் வராவிட்டால் அப்பாடத்தினை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லையென்று தட்டிக்கழிக்கும் நிலையே இங்கு காணப்படுகின்றது. இந்நிலை மாறி ஆசிரியர்கள் மத்தியில் அபிவிருத்தி ஏற்பட வேண்டும்.
பாடசாலையின் மேம்பாட்டு ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்வதற்கு உதவுதல் ஆசிரியர்களின் முக்கிய கடப்பாடாகும். பாடசாலையின் முகாமைத்துவ திட்டமிடலுக்கு கட்டுப்பட்டவர்களான ஆசிரியர்கள் அதிபரின் ஆலோசனைகளுக்கு செவிசாய்ப்பவர்களாக அவருடன் இணைந்து செயற்படுவர்களாக இருக்க வேண்டும். பாடசாலையில் காணப்படும் வளங்களின் தன்மைக்கேற்ப அதனைப் பயன்படுத்தி பாடசாலையின் மேம்பாட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக தேசியமட்டங்களில் நடைபெறும் பரீட்சைகளுக்கு மாணவர்களை முறையாக ஆயத்தப்படுத்தி சிறந்த பெறுபேற்றின் ஊடாக பாடசாலையை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும்.
குறிப்பாக ஒவ்வொரு ஆசிரியர் மத்தியில் குழு செயற்பாடு,ஒத்துழைப்பு, இணைந்து செயற்படுதல்,சேவை மனப்பான்மை,பாடசாலை மீதான அக்கறை காணப்படுதல் அவசியமாகும். (தினகரன்)
சி. அருள்நேசன்
(கல்வியியல் சிறப்புக்கற்கை
மாணவன், கிழக்குப் பல்கலைக்கழகம்)
(கல்வியியல் சிறப்புக்கற்கை
மாணவன், கிழக்குப் பல்கலைக்கழகம்)
நல் வாழ்த்துகள்