இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல்கள்….
K.t.Brownsen,
Career Guidance & Counselling,
(J/Aliyawalai C.C.T.M)
எமது நாட்டின் இலவசக் கல்வித்திட்டத்தின் அடிப்படையில் இலங்கைப் பரீட்சைத்திணைக்களத்தினால் மூன்று பொதுப் பரீட்சைகள் பாடசாலை மட்டத்தில் மாணவர்களிற்கு நடாத்தப்படுகின்றன. இதில் க.பொ.த (உ.த) பரீட்சையானது பல்கலைக்கழக தேர்விற்காகவும், வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது. ஒரு மாணவனுடைய 13 வருடகால கல்வியின் பலாபலன்களை எதிர்பார்க்கின்ற அல்லது அறுவடை செய்கின்ற பரீட்சை இது எனலாம். எனவே மாணவர்கள் இப்பரீட்சையினை மிகுந்த அவதானத்துடனும், உத்வேகத்துடனும் எதிர்கொள்ள வேண்டும். இப்பரீட்சையானது தேசிய ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் வெட்டுப்புள்ளியின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்ற தேர்வுப் பரீட்சையாகும். சுமார் வருடா வருடம் மூன்று இலட்சம் மாணவர்களில் 10 வீதம் தொடக்கம் 15 வீதமான மாணவர்களே பல்கலைக்கழத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இது துறைசார்ந்ததாகவும் தேசிய, மாவட்ட மட்ட புள்ளியின் அடிப்படையிலும் தெரிவுகள் இடம்பெறுகின்றன.
இன்றைய உலகத்தின் கொரோனா அச்சுறுத்துலானது இலங்கையையும் விட்டுவைக்கவில்லை எனலாம். இதன் தாக்கம் மாணவர்களுடைய கலைத்திட்டத்தினை முழுமையாக பூரணப்படுத்த முடியாமை, சீரான ஒருமுகப்படுத்தப்பட்ட கற்றல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாமை என்பவற்றைக் குறிப்பிட்டுக் கொள்ள முடியும். இருப்பினும், பரீட்சை திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலுக்கமைய ஒக்ரோபர் மாதம் இடம்பெறவுள்ளது. அவ்வகையில் இந்த சந்தர்ப்பத்தில் பரீட்சைக்கு தயாராவதற்கு முன்பு மன நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் பலமாக வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மேலும் இதற்குப் பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவ்வாறான அவசியமான காரணிகளை பின்வருமாறு நோக்கலாம்.
இவ்வாறான காலப்பகுதியில் மாணவர்களின் பங்களிப்பு……
மாணவர்கள் பரீட்சையின் பெறுமதி மற்றும் அதன் தேவைபாடு, இதில் தவறினால் ஏற்படப்போகும் விளைவு, அதில் வெற்றி பெற்றால் ஏற்படப் போகும் மகிழ்;ச்சி. எனவே சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது. இயன்றளவு வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து செயற்படுவதுடன் வெற்றியும் காணப்படல் வேண்டும்.
1. என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தல்.
2. காலங்களில் சில விடயங்களை தியாகம் செய்தல்.
3. உண்ணும் உணவுகள். (அதிக கார, அமில உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தல்)
4. பரீட்சைக் காலங்களில் குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களுடன் முரண்பாடுகள் மற்றும் மன அழுத்தமின்றியிருத்தல்.
5. உடல்நலம், உளநலம் சீராக இருப்பதான நம்பிக்கையான உணர்வினை வளர்த்தல்.
6. பலவீனமான மற்றும் எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்தல்.
7. நேர முகாமைத்துவத்தை பின்பற்ற வேண்டும்.
8. பரீட்சை எழுதும் நுட்பங்களை அறிந்திருத்தல்.
9. படிக்கும் அறையை சுத்தமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும், உயிரோட்டமுள்ளதாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
10. தனக்கு விருப்பமான நேரத்தில் படிக்கவும், ஓய்வெடுக்கவும் தீர்மானிக்க வேண்டும்.
11. கடந்தகால அனுபவங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் அதனைப் பயன்படுத்தல்.
12. எல்லாப் பாடங்களையும் காட்சிப்படுத்தமால் குறிப்பிட்ட பாடப்பகுதியை மாத்திரம் மேசையில் வைத்தல்.
இவ்வாறான காலப்பகுதியில் பெற்றோர்களின் பங்களிப்பு……
பெற்றோர்களின் பங்களிப்பு மற்றும் குடும்ப பிண்ணனி என்பன மாணவர்களின் பரீட்சைகளில் மிகவும் பாரிய செல்வாக்கை செலுத்துகின்றன. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு பரீட்சை காலங்களில் பெற்றோர் தமது பிள்ளைகளுடன் சீரான முறையில் செயற்பட வேண்டியது அவர்களது கடமையும் பொறுப்புமாகும்.
1. மாணவர்களை ஏனைய மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கமால் இருத்தல்.
2. கடந்தகால பரீட்சை முடிவுகளை வைத்து தீர்மானம் எடுக்காதிருத்தல்.
3. ‘உன்னால் முடியும் நீர் வெற்றி பெறுவாய்” என ஊக்கப்படுத்தல்.
4. ‘உன்னால் இயலாதது ஒன்றுமில்லை” என ஊக்கப்படுத்தல்.
5. நேர் மனப்பாங்குடன் பேசுதல், பழகுதல்.
6. படிக்கக்கூடிய வகையில் வீட்டில் அறையொன்றினை உருவாக்கிக் கொடுத்தல்.
7. சுமார் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது பிள்ளைகளுடன் பரீட்சையைப் பற்றி கலந்துரையாடுதல்.
8. அவர்களுக்குப் பிடித்த உணவை இலகுவில் சமிபாடையக் கூடிய உணவுகளை வழங்குதல், தயார்ப்படுத்தல்.
9. பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து செல்லலும், அழைத்து வருதலும்.
10. பரீட்சை நேர அட்டவணையினை காட்சிப்படுத்துதல்.
11. முடிவடைந்த பரீட்சை பாடத்தை பற்றி தர்க்கிப்பதை தவிர்த்தல்.
12. அன்புடனும், பரிவுடனும் நேசமாக பழகுதல், உறவைப் பேணல்.
13. ஓய்வு எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குதல்.
14. இலத்திரனியற் சாதனங்களின் பயன்பாட்டை குறைத்தல்.
பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பின்வரும் பொருட்களை முதல் நாளே உறுதிப்படுத்தி எடுத்து வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.
1. அத்தாட்சிப்படுத்தப்பட்ட பரீட்சை அனுமதிப்பத்திரம்.
2. தேசிய அடையாள அட்டை.
3. நேர அட்டவணை.
4. பென்சில்.
5. அடிமட்டம்.
6. கணிகருவிப் பெட்டி.
7. சில பேனைகள் ( ஒன்று போதாது)
8. பனடோல், சித்தாலேப
9. தண்ணீர்
10. சிறந்த கைக்கடிகாரம்.
11. கைக்குட்டை
12. கண்ணாடி.( அணிவதாயின்)
13. எக்காரணத்தைக் கொண்டும் இலத்திரனியற் சாதனங்களை கொண்டு செல்வதை தவிர்த்தல். ( இம் முறையில் இருந்து பரீட்சைக்கு கணிகருவி அனுமதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மண்டபத்திற்குள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பான வழிகாட்டல்கள்……
1. வினாப்பத்திரத்தைப் பெற்றவுடன் அறிவுறுத்தல்களை வாசித்து விளங்கிக்கொண்டு எந்தெந்த வினாக்களுக்கு விடையளிக்கிறோம் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
2. தெரிவு செய்யும், புறக்கணிக்கும் வினாக்களை நன்கு நினைவில் வைத்திருக்க வேண்டும்.
3. விடையளிக்கும்போது கட்டமைப்பு வினாக்கள், கட்டுரை வினாக்கள், பல்தேர்வு வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய முறையில் விடையளிக்க வேண்டும்.
4. தெரிவு வினாக்களைத் தெரியும் போது பூரணமாக விடையளிக்கக்கூடிய வினாக்களை தெரிவு செய்து எழுதவேண்டிய வினாக்கள் அனைத்திற்கும் விடையளிக்க வேண்டும்.
5. நேரத்தை ஒவ்வொரு வினாவுக்கும் உரிய வகையில் ஒதுக்கி அதற்குள் எழுதி முடித்துவிட வேண்டும். முழுமையாக எழுதி முடித்தபின்பு திருப்பிப் பார்க்க வேண்டும்.
6. விடை எழுதும் போது வினாக்களின் இலக்கங்கள் சரியாக எழுதப்படல் வேண்டும். ஒரு வினாவிற்கு தொடர்;ச்சியாக விடை எழுத வேண்டும். பகுதி வினாக்கள் எனின் பகுதிகளைக் குறித்துத் தொடர்;ச்சியாக எழுத வேண்டும்.
7. ஒவ்வொரு தாளிலும் சுட்டெண், பக்க எண் குறிப்பிடப்பட வேண்டும். ஒவ்வொரு பாட வினாத்தாளிற்கும் புதிய முகப்புப்பத்திரம் தருவார்கள், அதில் பாடம், பாட இலக்கம், சுட்டெண், எழுதிய பக்கங்கள் போன்ற கேட்கப்பட்ட விபரங்களை மாத்திரம் எழுதுதல் வேண்டும்.
8. பரீட்சை மண்டபத்தில் எழுதுவதற்கு தேவையான விடையெழுதும் தாள்கள் தருவார்கள். முடிந்தவரை வினாவுக்கு மதிநுட்பமாக விடையளிக்க வேண்டும்.
எனவே மேற்கூறப்பட்ட வழிகாட்டல்களை மாணவர்கள் பின்பற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தமக்கும், முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகின்றேன்.