இலங்கையில் ஆரம்பக் கல்வியில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்
Mr.K.Punniyamoorthy, BA (Peradeniya), PGDE-Merit (NIE), MEd (NIE), MATE (OUSL), M phil in Edu (Colombo)
சிரேஷ்ட விரிவுரையாளர்
தேசிய கல்வியியல் கல்லூரி, மட்டக்களப்பு
இலங்கையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதும் எதிர்பார்த்தளவு மாற்றங்கள் இடம்பெறுவதாகத் தெரியவில்லை என்பது பல்வேறு தரப்பினரதும் குற்றச்சாட்டாகும். குறிப்பாக ஆரம்பக் கல்வியை எடுத்துக்கொண்டால் பெற்றார்களின் எதிர்பார்ப்பிலும் ஆசிரியர்களது மனப்பாங்கிலும் மாற்றங்கள் ஏற்பட்டதாக அவதானிக்க முடியவில்லை.
இலங்கையில் முன்பாடசாலைகளில் ஆரம்பிக்கும் எண், எழுத்து, வாசிப்புச் செயன்முறை தொடர்சியாக மேலோங்கிச் செல்வதை அவதானிக்கின்றோம். முன்பாடசாலைப் பிள்ளைகளை ஆரம்பப் பாடசாலைகளுக்கு ஆயத்தம் செய்ய வேண்டியிருப்பதன் காரணமாக முன்பாடசாலை அனுபவங்கள் அடிக்கடி முறைசார் அனுபவங்களாக மாற்றப்படுகின்றன.
இலங்கையில் இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு எண்ணக்கருவாகும். எண், எழுத்து, வாசிப்பு என்பவற்றைக் கற்பிப்பதே ஆரம்பப் பாடசாலைகளின் கடமையெனப் பெற்றார்கள் கருதுவதால் பிள்ளைகளின் முழுமையான விருத்தியை முன்னேற்றுதல் அதன் பிரதான தொழிற்பாடு என்ற உண்மையை முற்றாக மறந்து விடுகின்றனர். இவை பிள்ளைகள் மீது பொருத்தமற்ற அழுத்தத்தைக் கொடுக்கின்றன.
முதன்மை நிலை 1 இல் வழிப்படுத்தப்பட்ட விளையாட்டுக்களுக்கே முதன்மை கொடுக்கப்படுதல் வேண்டும் என வலியுறுத்தப்படும்போதும் ஆசிரியர்களோ, பெற்றார்களோ எண், எழுத்து, வாசிப்பிலிருந்து மீளுவதாகத் தெரியவில்லை.
ஆரம்ப வகுப்புகளுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஒரு தொடராக நிலைத்திருக்கக் கூடியதாகப் படிமுறைப்படுத்தும்போது ஓர் அந்தத்தில் தமக்கு இயல்பான வேகத்தில் விருப்பமான ஒன்றைத் தனித்தனியாகப் பிள்ளைகள் கற்பதற்கான ஒரு சுதந்திர நிலையை இனங்காணலாம். மறு அந்தத்தில் ஒருவித கட்டமைப்பில் பாடங்களை முழு வகுப்பிற்கும் முன்வைக்கும் மாதிரியொன்றைக் காணலாம்.
முழு ஆரம்பக் கல்வி நிலையிலும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் பிரதான இடத்தை வகிப்பது இரு அந்தங்களுக்கும் இடைப்பட்ட மத்திய பகுதியாகும். அச் செயற்பாடுகளில் இரு அந்தங்களினதும் பொருத்தமான இணைபு இருப்பதுடன் அவை மாணவர் மையமாகவும் இருத்தல் அவசியம். இங்கு பயன்படுத்தக்கூடிய கற்றல், கற்பித்தல் உத்திகளை மூன்று பிரதான பகுதிகளாக வகுக்கலாம்
• திட்டமிடப்பட்ட விளையாட்டுக்கள்
• செயற்பாடுகள்
• எழுத்து வேலைகள்
முதன்மை நிலை 1 இல் திட்டமிடப்பட்ட விளையாட்டுக்களும், செயற்பாடுகளும் அதிக அளவிலும் எழுத்து வேலைகள் குறைந்த அளவிலும் இருத்தலில் கவனஞ் செலுத்துதல் வேண்டும். முதன்மை நிலை இரண்டில் மூன்று பகுதிகளும் சமமாக அமையும். முதன்மை நிலை மூன்றில் எழுத்து வேலைகளும், செயற்பாடுகளும் அதிக அளவிலும் திட்டமிடப்பட்ட விளையாட்டுக்கள் குறைந்த அளவிலும் அமையக்கூடியதாகச் செயற்பாடுகள் அமைதல் வேண்டும், (பொதுக்கல்விச் சீர்திருத்தம்-1997)
சிறு வயதில் எண், எழுத்து, வாசிப்பு என்பவற்றைக் கற்பிப்பதால் ஆரம்பப் பாடசாலைகளில் தரம் 1 இல் கல்வி கற்கும் குழந்தைகள் பெரிதும் அவதியுறுகின்றனர். தரம் 1 இல் விளையாட்டின் மூலம் கற்பதற்கும், எதிர்காலக் கற்றலுக்கும், வாழ்க்கைக்கும் உரிய அத்திவாரத்தைக் கட்டியெழுப்புவதற்குமே முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும் ஆனால் நடைமுறையில் குழந்தைகள் எண்ணக்கருக்கள் பற்றிய சரியான விளக்கமின்றிப் பாடங்களை மனனம் செய்யும் புலமைசார் பயிற்சிக்கு இட்டுச் செல்லும் கடுந் துன்பத்திற்கே ஆளாகின்றனர். (ஆ.பி.ப.ப.வி பற்றிய தேசிய கொள்கை-2004)
3 வயதில் முன்பாடசாலைக்குச் சேரும் குழந்தை 4, 5 வயதுகளிலும் அதே பாடத்திட்டத்தையே கற்கின்றது இதனால் முறைசார் பாடசாலைக்கு நுழையும்போது அக்குழந்தை ஒரு சலிப்புத் தன்மையுடனேயே நுழைகின்றது. இது அக்குழந்தையின் வினையாற்றல்களைப் பாதிப்பதுடன் தரம் 1 ஆசிரியருக்கும் பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.
நடைமுறையில் ஆரம்பப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டித் தன்மையும், தமது தரம் பேணப்படுதல் வேண்டும் என்ற நோக்கமும் காணப்படுகின்றன. இதனால் பிள்ளையின் உள, உடல் வயது மட்டத்தைத் தாண்டிய கல்வி வழங்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இவ்வாறான கல்வித் திணிப்பையே பெற்றாரும் வரவேற்பதை அவதானிக்க முடிகிறது.
ஆரம்பப் பாடசாலைகளில் எண், எழுத்து, வாசிப்பு, என்பவற்றைப் பழக்குவதற்கு முன்னர் குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டுவதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல் வேண்டும். இதுவே ஏனைய செயற்பாடுகளுக்கு அடிப்படையாக அமைய.ம் என Hans,G.Furth.(1970). குறிப்பிடுகிறார்.
தற்போதைய ஆரம்ப வகுப்புக் கலைத்திட்டத்தில் முதன்மைநிலை 1 இல் எண், எழுத்து, வாசிப்புக்குப் பதிலாக விளையாட்டுச் செயற்பாடுகளுக்கே முழுமையான முக்கியத்துவம் கொடுக்கப்படுதல் வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. மதிப்பீட்டு முறைமை முற்றாகத் தவிர்க்கப்படுதல் வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. இதற்கான பல்வேறு செயலமர்வுகள் தொடர்ச்சியாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் மாற்றங்களைத் தான் காணமுடியவில்லை. பழமைகள் தொடர்கதையாகவேயுள்ளன.
ஏன் இந்த நிலமையை மாற்ற முடியாமலுள்ளது?
ஏன் இவர்களை மத்திய, மாகாணக் கல்வி அமைச்சுக்கள் சுற்றுநிரூபங்களின் ஊடாகவோ, அல்லது தொடர்ச்சியான மேற்பார்வைகளின் ஊடாகவோ அல்லது விளக்கம் (Explanation) கோருவதன் ஊடாகவோ அல்லது தண்டனை வழங்குவதன் ஊடாகவோ மாற்றங்களைக் கொண்டு வர முடியாதா?
முதன்மைநிலை 1 ஆசிரியர்கள் சிலரிடம் ஏன் உங்களால் எண், எழுத்து, வாசிப்பிலிருந்து மீள முடியாமலுள்ளது? எனக் கேட்டபோது அவர்களது துலங்கல்கள் பின்வருமாறு இருந்தன.
1. பெற்றௌர்களைத் தங்களால்; சமாளிக்க முடியாமலுள்ளது.
2. தரம் 1 இலிருந்து எண், எழுத்து, வாசிப்பினைக் கற்பிக்கா விட்டால் பிள்ளையை ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயார்ப்படுத்த முடியாது.
3. ஒரு வகுப்பில் சராசரி 40 மாணவர்களுக்கு மேல் இருக்கின்றார்கள் என்னும்போது செயற்பாட்டு முறையில் எவ்வாறு கற்பிக்க முடியும்?
ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களின் கருத்துக்களைச் சீர்தூக்கிப் பார்ககும்போது எம் மத்தியில் உதிக்கும் வினாக்களாவன
1. எத்தனை ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள், பெற்றாருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள்?
2. வாரத்துக்கு எத்தனை தடவை அவர்களைச் சந்திக்கின்றார்கள்?
3. தமது கற்பித்தல் தொடர்பில் பெற்றாரின் அபிப்பிராயங்களை எத்தனை பேர் பெற்றிருக்கின்றார்கள்?
4. கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் எத்தனை பேர் பெற்றாருடன் கலந்துரையாடிருக்கிறார்கள்?
5. பல கிராமியப் பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புக்களில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் இருக்கும்போது ஏன் நகரப் பாடசாலைகள் மிக அதிகளவு மாணவர்களைச் சேர்க்கின்றன?
மேலும் ஆரம்ப வகுப்புக்களில் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடம் முழுவதுமாகச் செயற்பாடு சார்ந்ததாகவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப் பாடத்தைக் கற்பிக்கும்போது ஆசிரியர் மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் செல்வதில்லை வகுப்பறைக்குள் வைத்து அதனை ஒரு வாசிப்புப் பாடமாகவும் எழுத்துப் பாடமுமாகவே நடாத்திச் செல்வதைப் பெருமளவுக்கு அவதானிக்க முடிகின்றது இப் பாடத்தில் அதிகளவு வீட்டு வேலைகள் வழங்குவதையும் காண முடிகின்றது
ஆரம்பப் பிள்ளைப் பருவத்தில் வீட்டுவேலைகளைப் பிள்ளைகள் விரும்பாத ஒரு சூழ்நிலை தோற்றம்பெறும். இதனை ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும் இப்பருவத்தில் பிள்ளைக்குத் தர்க்க ரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் அறிவு இல்லாமலிருக்கும். காரணகாரியங்களைக் கண்டறியும் ஆற்றல் இல்லாமல்போகும். ஒரே நேரத்தில் பல விடயங்களை ஒன்றிணைத்து நோக்கும் ஆற்றல் இல்லாமல் போகும். (அத்துகோரள D.R,1972).
Audrey Curtis NFER Nelson, 1986,Stolberg, Judith,Rothschild,Daniels,Ellen,R.(1998). ஆகியோர் சிறு வயதுப் பிள்ளைகளுக்கு விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்குப் பிள்ளையும் குடும்பமும் தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்கின்றனர். அதன்படி பிள்ளை அனுபவங்களினூடாகவும் விருப்புக்களினூடாகவும் அயற் சூழலுடன் இடைத்தாக்கம் புரிவதினூடாகவும் இதனை மேற்கொள்ள முடியும்.
ஆசிரியர்கள் மாணவர்களின் வளர்ச்சியிலும், விருத்தியிலும் கவனம் செலுத்துவதினூடாகவும், அவர்களது விருப்புக்கள், தேவைகள், பலம், பலவீனம், பாதுகாப்பு, அன்பான சூழலை உருவாக்கல் என்பவற்றினூடாகவும் இதனை மேற்கொள்ள முடியும். மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளில் இந்நிகழ்ச்சித்திட்டத்தினைப் படிப்படியாக மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளனர். இதற்கான ஆசிரிய கைந்நூலையும் தயாரித்துள்ளனர்.
கருப்பொருள்களைக் கற்பிக்கும்போது நிகழ்கால அனுபவங்களைப் பெறக்கூடிய வகையில் கற்பித்தல் வேண்டும.; உதாரணமாக சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடத்தில் “நாம் இலங்கையர்” என்ற கருப்பொருளைச் சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் என்பன வரும் தினங்களில் நடைமுறைப்படுத்தும் வகையில் கற்பிக்கும்போது பிள்ளை அது தொடர்பான நேரடி அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும், அதேபோல் புது வருட காலங்களில் “புத்தாண்டுக் காலம்” என்னும் கருப்பொருளையும் தேசிய வீரர்களின் நினைவு நாள்கள் வரும்போது “எமது பண்டைய தகவல்கள்” என்னும் கருப்பொருளையும் கற்பிக்க முடியும்.
இது தொடர்பில் ஆரம்பக் கல்வி ஆசிரியரிடம் வினவியபோது அவர்களது துலங்கல்கள் பின்வருமாறு இருந்தன.
1. ஆசிரியர் அறிவூரைப்பு வழிகாட்டியில் வழங்கப்பட்டுள்ள ஒழுங்குப்படியே நாம் கற்பிக்கின்றோம்.
2. பொதுப் பரீட்சைகள் வலய மட்டத்தில் இடம்பெறும்போது பாடத்திட்ட ஒழுங்குப்படியே ஒவ்வொரு தவணையும் வினாப்பத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
3. சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களும் பாடத்திட்டம் ஒழுங்கு முறைப்படி கற்பிக்கப்பட்டுள்ளதா? என்பதையே பரீட்சிக்கின்றனர்.
முன்வைக்கும் ஆலோசனைகள்
1. ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் பிரதிபலித்தல் குறிப்பேடுகளை (Reflective Journal) வைத்திருக்கும் நடைமுறை கொண்டுவரப்படுதல் வேண்டும். பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் வீடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளையும் பிள்ளை அதில் குறிப்பிடுதல் வேண்டும். அதில் அவர்களது பிரதிபலிப்புக்களை எழுதுதல் வேண்டும். அவற்றைப் பெற்றார் பார்வையிட்டுக் குறிப்புக்கள் இடுதல் வேண்டும்.
2. ஆரம்ப வகுப்புகளில் ஓவ்வொரு மாணவனும் தனித்தனியே கவனிக்கப்படுதல் வேண்டும் அவனது பலம் பலவீனம் தனியாள் வேறுபாடுகள் ஆசிரியரால் கண்டறியப்படுவதுடன் அது தொடர்பில் பெற்றாருக்கும் அறிவூட்டப்படுதல் வேண்டும். இதற்காக ஆசிரியர் சில மணித் துளிகளை ஒதுக்குதல் வேண்டும்.
3. ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் பூரண சுதந்திரமுள்ள ஆசிரியர்களாகும் அவர்கள் பாடத்திட்டத்தைப் பொருத்தமாக நெகிழ்ச்சியுள்ள விதத்தில் மாற்றிக் கற்பிக்க உரித்துடையவர்களாவர்.
4. கணிப்பீடுகளுக்குக் கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்படுதல் வேண்டும் முதன்மை நிலை இரண்டு மற்றும் முதன்மை நிலை மூன்றில் இறுதித் தவணையில் ஆசிரியரே வினாப்பத்திரங்களைத் தயாரித்தல் வேண்டும்
இதில் வலயக் கல்விக் காரியாலயங்கள் வினாப்பத்திரங்கள் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் ஆசிரிய ஆலோசகர்களுக்குப் பாடத்திட்டத்தை மாற்றிக் கற்பித்தமை தொடர்பில் போதிய விளக்கமளிக்க முடியும்.
5. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில்; ஓரிருவரே வெட்டுப் புள்ளிகளைப் பெறுகிறனர். அந்த ஓரிரு மாணவர்களுக்காக வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களினதும் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துவதா? என்பதைச் சிந்தித்தல் வேண்டும்
6. மேலும் முதன்மை நிலை ஒன்றில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியருக்கு மேலதிகமாக ஒரு உதவியாளர் நியமிக்கப்படுதல் வேண்டும். குழந்தை இயற்கைக் கடன்களைக் கழிக்கும்போது அவர்களுக்கு அவர் உதவுதல் வேண்டும். இவர் சுகாதாரத் துறையினரால் பயிற்சி வழங்கப்பட்ட ஒருவராக இருத்தல் பொருத்தமானதாகும்.
7. மிகவும் சிறிய வயதிலிருந்து பிள்ளை புலனியக்கச் செயற்பாடுகளினூடாகச் சுற்றாடலை ஆய்வு செய்யும் என்பதனால் சுற்றாடலுடன் இசைவாக்கமடைவதற்கான செயற்பாடுகளில் பிள்ளையை அதிகளவு நேரம் ஈடுபடுத்துதல் வேண்டும். அப்போதுதான் முறைசார் பாடசாலைகளில் ஏற்படும் சவால்களுக்குப் பிள்ளையால் முகங்கொடுக்க முடியும் என காரியவசம் இடி.எஸ்இ.(1995) குறிப்பிட்டுள்ளார்.
8. ஆரம்ப வகுப்புக் கலைத்திட்டங்களைத் தயாரிக்கும்போது பாட விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சுயசிந்தனை, குறியீடுகளை அடிப்படையாகக் கொண்ட கற்றல், சிந்தனை வெளிப்பாடு, போன்றவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். இதற்காக அனுபவங்களை வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் வழங்குதல், கதை கூறல், கேட்டல், இசையும் அசைவும், நாடகம், விளையாட்டும் அசைவியக்கச் செயற்பாடுகளும், சேகரித்தலும் வகைபிரித்தலும், கணக்கிடுதல், அளத்தல், வரைதல், கட்டியெழுப்புதல், மாதிரிகளை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளைச் செயற்படுத்த முடியும் (Geva Blenkin & Marian Whitehead, 2002) இக் கருத்தை கலைத்திட்டத்தை உருவாக்குபவர்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் குறிப்பாக நடைமுறைத் தேவைகளும் நடைமுறை விடயங்களும் கலைத்திட்டத்தில் உள்ளீர்க்கப்படுதல் வேண்டும் உதாரணமாக சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடத்தில் நிலைபேண் அபிவிருத்தியை உணர்த்துவதற்குப் பொருத்தமான விதத்தில் கருப்பொருட்கள் மாற்றியமைக்கப்படுதல் வேண்டும்.
எனவே ஆரம்ப நெறிக் கலைத்திட்டத்தைத் தயாரிப்பவர்களும் அதனை நடைமுறைப்படுத்துபவர்களும் வெறுமனே போதனைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறைப் பிரயோகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் இன்றியமையாததாகும்.
(ஆயதனம்)