உலகுக்குத் தேவையான ஒக்சிஜன் வாயுவில் 20 வீதத்தை வழங்கும் அமேசன் காடுகளை வேகமாக அழிக்கும் ஆபத்தான காரியத்தை தொடங்கி விட்டது பிரேஸில். ஒரு நிமிட நேரத்தில் மூன்று காற்பந்தாட்ட மைதானம் பரப்பளவு காடுகள் அழிப்பு. கடந்த ஜனவரியில் மாத்திரம் 2,253 சதுர கி.மீ காடுகள் முற்றாக அழிப்பு. அமேசன் காடழிப்பு தற்போது 278 சதவீதத்தில் நடைபெறுகிறது. புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் வந்துள்ள ஆபத்து இது!
அமேசன் காடுகள் வேகமாக அழிக்கப்படுவதால் பழங்குடி மக்களின் இருப்பு கேள்விக்குறி
அபிவிருத்தி என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுவது உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றாலும், பிரேசில் நாட்டில் அமேசான் மழைக் காடுகள் அழிக்கப்படும் வேகமானது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அபிவிருத்தி என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுவது உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றாலும், பிரேசில் நாட்டில் அமேசான் மழைக் காடுகள் அழிக்கப்படும் வேகமானது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இத்தனைக்கும் அமேசான் மழைக் காடுகளைப் பாதுகாப்பது என்பது கடந்த 20 ஆண்டுகளாக பிரேசிலின் முக்கியமான சுற்றுச்சூழல் கொள்கையாகவே இருந்து வந்தது.மேலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முன்னுதாரணமாகவும் அக்காடு பார்க்கப்பட்டது.ஆனால், கடந்த ஜனவரியில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக வலதுசாரி தலைவர் ஒருவர் பதவிக்கு வந்ததில் இருந்து எல்லாமே தலைகீழாக மாறின.
‘பூமியின் நுரையீரல்’ என அழைக்கப்படும் அமேசான் மழைக் காடுகள் ஆண்டுக்கு 200 கோடி தொன் கரியமில வாயுவை(காபனீரொட்சைட்) உறிஞ்சிக் கொண்டு, பூமியின் மொத்த ஒக்சிஜனில்(பிராண வாயு) 20 சதவீதத்தை வெளியிடுகின்றன. தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள அமேசான் மழைக் காடுகள், 70 இலட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டவை.
பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசூலா, ஈக்வடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்ச் கயானா ஆகிய 9 நாடுகளில் இக்காடு பரவியிருந்தாலும் இதன் 60 சதவீத பரப்பளவு பிரேசில் நாட்டில்தான் உள்ளது.
இந்நிலையில், பிரேசிலின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற போல்ேஸானரோ, நாட்டின் முன்னேற்றத்துக்காக அமேசான் மழைக் காடுகளின் சில பகுதிகள் அழிக்கப்பட்டு வணிகப் பயன்பாட்டுக்கு விடப்படும் என அறிவித்தார். அதிலிருந்தே அமேசானின் அழிப்பு வேகமெடுக்கத் தொடங்கியது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும் போது 2019-ஆம் ஆண்டு ஜூலையில் காடுகள் அழிக்கப்படுவது 278 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதாவது, கடந்த ஜூலையில் மட்டும் 2,253 சதுர கி.மீ. காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. ஒரு நிமிஷத்துக்கு மூன்று கால்பந்து மைதானம் அளவுக்கு வனப் பரப்பு அழிக்கப்படுகிறது. பிரேசிலின் அரசு நிறுவனமான தேசிய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் இது தெரியவந்தது.
ஆனால், இதை மறுத்த அதிபர் போல்ேஸானரோ, வானிலை ஆராய்ச்சி நிலையத் தலைவர் ரிகார்டோ கல்வாவோவை பதவியிலிருந்து நீக்கி விட்டு, காடுகள் அழிப்பை கண்காணிப்பதற்கு தனியார் அமைப்பு ஒன்றை ஈடுபடுத்தப் போவதாகத் தெரிவித்தார். அரசு அமைப்பு ஆதாரபூர்வமாகத் தெரிவித்த தகவலையே பொய் என்றும், அரசு சாரா நிறுவனங்களுக்காக (என்.ஜி.ஓ) வானிலை ஆராய்ச்சி மையம் இதைச் செய்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறுவதை உலகம் நம்பத் தயாராக இல்லை.
தேர்தலின் போதே போல்ேஸானரோ வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி அமேசான் காடுகள் மீது ‘கைவைக்கப் போவதை’ வாக்குறுதியாகவே அளித்தார். அதன்படி, ஜனாதிபதியாகப் பதவியேற்றதுமே நாட்டின் பிரதான சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிறுவனத்துக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை 24 சதவீதம் குறைத்தார். அமேசான் மழைக் காடுகளில் அத்துமீறுபவர்களுக்கான அபராதம், எச்சரிக்கை, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட கருவிகள் இருந்தால் பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளையும் அரசு திரும்பப் பெற்றது. இது வன ஆக்கிரமிப்பாளர்களுக்கும், கனிமவளக் கொள்ளையர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்து விட்டது. போல்ேஸானரோ இப்படியெல்லாம் செய்வார் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இத்தனை வேகமாகச் செய்வார் என எதிர்பார்க்கவில்லை. அமேசான் காடுகள் அழிக்கப்படுவது பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலோ மெர்க்கலும் அண்மையில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் கூட்டத்தின் போது கவலை தெரிவித்த போது, அவர்களுக்கு எதிராகப் பாய்ந்தார் போல்ேஸானரோ.
“பிரேசிலின் புதிய அரசியல் மாற்றம் பற்றி இந்தத் தலைவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை; இப்போது வலிமையான தலைவர் பிரேசிலுக்கு கிடைத்துள்ளார்” என போல்ேஸானரோ தன்னைத் தானே பெருமையாகக் கூறிக் கொண்டதை உலகம் ரசிக்கவில்லை.
“எங்கள் நாட்டின் பெரும் பகுதியை வெறுமனே பாதுகாக்கும்படி உலக நாடுகள் கூறுவது நாங்கள் முன்னேறி விடுவோமோ என்கிற அச்சத்தால்தான். உலகம் எங்களுக்கு எதிராக செய்யும் சதியின் ஒரு பகுதியே இது” என அவர் கூறும் விளக்கமும் ஏற்புடையதாக இல்லை.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை உணர்ந்து, சுற்றுச்சூழலைக் காப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதுதான் உலக நாடுகள் வேகப்படுத்தி இருக்கின்றன. இந்த வேளையில் உலகின் மிகப் பெரிய மழைக் காடுகளை அழிக்கும் பிரேசிலின் இந்த நடவடிக்கை வெறும் மரங்களை அழிப்பதோடு மட்டும் முடிந்து விடாது. அரிய உயிரினங்கள், அமேசான் காடுகளில் வாழும் அபூர்வ பழங்குடி மக்களுக்கும் ஆபத்தாக மாறியிருக்கிறது.
அரசின் நடவடிக்கைகளால் ஊக்கம் பெற்றுள்ள கனிமவளக் கொள்ளைக் கும்பல் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களால் பழங்குடி மக்கள் கொல்லப்படுவதாக வெளியாகும் தகவலும் கவலை தருகிறது. பிரேசில் மீது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் வல்லரசு நாடுகளின் கவனம் திரும்ப வேண்டிய அவசியத்தையும் இந்நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. முன்னாள் இராணுவ அதிகாரியான போல்ேஸானரோவுக்கு ‘புரியும் பாஷையில்’ விளக்கிச் சொல்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் தயங்கக் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
“அமேசான் காடுகள் உங்களுடையதல்ல, எங்களுடையது” என்று – கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரேசில் ஜனாதிபதி போல்ேஸானரோ கூறியிருந்தார்.
அவரது இக்கருத்துக்கு உலக நாடுகள் இவ்வாறுதான் பதில் கூற முடியும்.
“அமேசான் உங்களுடையதுதான். அமேசான் அழிந்தால் உலகம் அழியும்; உலகம் அழிந்தால் பிரேசில் மட்டும் பிழைத்திருக்குமா என்ன?”
நன்றி – தினகரன்