கல்வித்துறை வரலாற்றில் மிகப் பாரிய தொழில்சங்க நடவடிக்கைகளுக்காக தொழில் சங்கங்கள் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகி
ன்றன.
இதுவரை காலமும் தனித்தனியாக ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வித்துறை நிறைவேற்று உத்தியோகத்தர்கள் என்றும் தொழில் சங்கங்கள் ரீதியிலும் பிரிந்து பிரிந்து மேற்கொள்ளப்பட்ட தொழில் சங்க நடவடிக்கைகள் தற்போது ஒன்றிணைந்த போராட்டமாக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த 28 ஆம் திகதி கல்வி அமைச்சின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் தாக்குதல்களைக் கண்டித்தும், 22 வருடகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் சம்பள முரண்பாடுகள் மற்றும் இதர பல கோரிக்கைகளை முன்வைத்து ஒரு சில சங்கங்கள் தமது எதிர்ப்பைக் காண்பிப்பதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டத்தை நடாத்துவதற்கு தீர்மானித்தன.
இதில் ஒன்றிணைந்த ஆசிரியர்கள் சங்கம் முன்னிலை வகித்து எடுக்கப்பட்ட தீர்மானம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல ஆசிரியர் சங்கங்களுடனான கலந்துரையாடலின் பின்னர் பாரிய தொழில் சங்க நடவடிக்கையாக மாறியுள்ளமை கவனத்திற்குரியது.
கிட்டத்தட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களும், அதிபர்கள் சங்கங்களும் இணைந்துள்ள இப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தோரையும் இணைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இது வெற்றியளிப்பின் இலங்கை வரலாற்றில் கல்வித் துறை நிகழ்த்திய மிகப் பாரிய தொழில் சங்கப் போராட்டமாக எதிர்வரும் 13 ஆம் திகதி போராட்டம் அமையும் என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதே நேரம் இம்முறை தொழில் சங்க நடடிவக்கை பற்றிய தெளிவுபடுத்துவதற்கான பாரிய பணியினையும் தான் மேற்கொண்டுள்ளதாகவும் அனைத்து ஆசிரியர்களையும் இப்போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகவும் தொழில் சங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.