இன்றைய சிறுவர்கள் தான் நாளைய தலைவர்களாவர். அவர்களே நாட்டையும் சமூகத்தையும் நிர்வகிக்க இருப்பவர்கள். அதனால் ஒவ்வொரு பிள்ளையையும் சீரான உடல், உள ஆரோக்கியம் மிக்கவர்களாக வளர்த்தெடுப்பது மிகவும் முக்கியமானது. அதற்கான பொறுப்பு பெற்றோர்களிடம் மாத்திரமல்லாமல் மருத்துவத் துறையினரிடமும் உள்ளது.
அந்த வகையில் இலங்கையில் பிள்ளை கருத்தரித்தல் முதல் பிறந்து ஆளாகும் வரையும் பெற்றோரும் அரசாங்கமும் விசேட கவனம் செலுத்தி பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில், கருப்பையில் வளரும் குழந்தையின் நரம்புத்தொகுதி மற்றும் மூளை வளர்ச்சியில் ஒட்சிசன் பெரும் பங்காற்றுகின்றது. இந்த ஒட்சிசன் குழந்தைக்குக் கிடைப்பதில் ஏதாவது சிறு தடங்கல்கள் ஏற்படுமாயின் அது குழந்தையின் நரம்புத் தொகுதியிலும், மூளை வளர்ச்சியிலும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
அவ்வாறான பாதிப்புக்களில் ஒன்றுதான் ஒட்டிசம் (Autism). இது நரம்புத் தொகுதியின் வளர்ச்சியுடன் ஏற்படும் தாக்கத்தினால் தோற்றம் பெறும் பாதிப்பாகும். பொதுவாகக் குழந்தையொன்றின் மூளை வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் குழந்தை கருப்பையில் இருக்கும் போதே மூளை 25வீதம் வர்ச்சியடைந்து விடும். அதனைத் தொடர்ந்து பிறந்த முதலிரு வருடங்களுக்குள் 65வீதத்திற்கும் மேல் மூளை வர்ச்சியடையும் என்று லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நரம்பியல் நிபுணர் பியாரா ரத்நாயக்கா தெரிவித்தார். இக்காலப்பகுதியில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி துரிதமாகவும் மிக வேகமாகவும் இடம் பெறும். குழந்தை வளர வளர அதுவும் வளர்ச்சியடையும். அது இயல்பானது. இவ்வளர்ச்சியில் தாமதம் ஏற்படுவதன் வெளிப்பாடாகவே ஒட்டிசம் பாதிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகின்றது
என்றாலும் இந்நோயைத் தோற்றுவிக்கும் மூலகாரணி இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை. ஆனால் இது பரம்பரை அலகு மூலம் கடத்தப்படும் நோயாக கருதப்படுகின்ற போதிலும், இந்நோய்க்கு சுற்றுச்சூழல் காரணிகளான நோய்களைத் தோற்றுவிக்கும் சில கிருமிகள், இரசாயனப் பொருட்கள், நச்சுப் பதார்த்தங்கள் போன்றன உதவுவதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. குறிப்பாகக் கர்ப்ப காலத்தில் இவற்றின் தாக்கங்களுக்கு உள்ளாகும் பெண்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இப்பாதிப்பு ஏற்படலாமெனவும் நம்பப்படுகின்றது. எனினும் பிள்ளை பிறந்த உடன் பிள்ளைக்கு பெற்றோர் வழங்கும் பராமரிப்பு தொடர்பான தவறுகளால் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இருந்த போதிலும் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான கெனர் 1943ஆம் ஆண்டில் பரீட்சித்த சில பிள்ளைகள் மத்தியில் சில வித்தியாசங்களை அவதானித்தார். அதன் அடிப்படையில் தான் அவர் இந்நோயை முதன் முதலாக விபரித்தார்.
ஆனாலும் உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு 110பிள்ளைக்கும் ஒரு குழந்தை ஒட்டிசம் நோயுடன் பிறப்பதாக மதிப்பிட்டுள்ளது. அதிலும் அண்மைக் காலமாக இப்பாதிப்புடன் பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண் பிள்ளைகள் மத்தியில் இப்பாதிப்பு அச்சுறுத்தல் 3 – 4மடங்கு அதிகம் என்று லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை மனநல மருத்துவ நிபுணர் டொக்டர் சுவர்ணா விஜேதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிகுறிகள்
ஒரு குழந்தை ஒட்டிசம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதா? இல்லையா என்பதைப் குழந்தை பிறந்த உடன் கண்டறிய முடியாது. மாறாக குழந்தை பிறந்து ஒரு வருடமாகும் போது இப்பாதிப்புக்கு உள்ளான பிள்ளைகளின் செயற்பாடுகள் ஏனைய பிள்ளைகளின் செயற்பாடுகளிலிருந்து வித்தியாசப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். குறிப்பாகக் குழந்தையின் ஒரு வயது முதல் இவ்வித்தியாசங்களை அவதானிக்கலாம்.
அதாவது ஒட்டிசம் பாதிப்புக்குள்ளான பிள்ளைகள் பிறந்தது முதல் 12மாதங்கள் கடந்தும் பேச ஆரம்பிக்க மாட்டார்கள். அவர்கள் 18மாதங்கள் கடந்த பின்னரும் தனி வசனங்களை பேச மாட்டார்கள். குறிப்பாக இப்பிள்ளைகள் பேசுவதும் ஏனையவர்களுடன் உறவுகளைப் பேணுவதும் சாதாரணமாக வளர்ச்சியடைந்து வந்தாலும் 15மாதங்களைக் கடந்ததும் இச்செயற்பாடுகளில் வீழ்ச்சியை அவதானிக்கலாம். இப்பிள்ளைகள் தம் கண்களால் மற்றவர்களை நேரே பார்ப்பத்தைத் தவிர்த்துக் கொள்வர். ஒரே வசனத்தையே திரும்பத் திரும்ப உச்சரிப்பர். ஏனைய பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட மாட்டார்கள். இப்பிள்ளைகள் தம் செயற்பாடுகளில் தான் அதிகம் கவனம் செலுத்துவர். பெற்றோரதும் ஏனையோரதும் அழைப்புகளிலும் இவர்களது கவனத்தை திருப்புவதற்கான செயற்பாடுகளிலும் இவர்கள் கவனம் செலுத்த மாட்டார்கள். நடத்தை விளையாட்டு உபகரணங்களை தெரிவு செய்வதிலும் இவர்களிடம் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையே காணப்படும். உதாரணத்திற்கு குறிப்பிடுவதாயின் இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தையொன்றுக்கு விளையாட்டுக் கார் ஒன்றை வழங்கினால் அக்காரின் டயர் சுற்றுவதையே இக்குழந்தை நுணுக்கமாக அவதானிக்குமே தவிர முழுக் காரிலும் கவனம் செலுத்தாது என்று லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை மனநல மருத்துவ நிபுணர் சுதர்ஷனி செனவிரத்ன குறிப்பிடுகின்றார்.
அதன் காரணத்தினால் இவ்வாறான அறிகுறிகளைக் கொண்டிருக்கும் பிள்ளைகள் தொடர்பில் தாமதியாது கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இக்குழந்தைகள் குறித்து உரிய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுடன் சிகிச்சை அளிப்பது மிக முக்கியமானது. அதன் மூலம் இப்பிள்ளைகளை சமூகமயமாக்குவது இலகுவாக இருக்கும்.
அதேநேரம் இந்நோய்க்கு உள்ளாகியுள்ள பிள்ளைகளில் 40வீதத்தினருக்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் மனநலக் குறைபாடு கொண்ட பிள்ளைகளுக்கு வலிப்பு ஏற்படுவது பொதுவான விடயமாகும். மேலும் இப்பிள்ளைகளில் 10 – 15வீத்த்தினருக்கு பெற்றோரின் பரம்பரை அலகுகள் மூலம் கடத்தப்படும் இதர நோய்களும் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளன. அத்தோடு இப்பிள்ளைகள் மத்தியில் தூக்கம் தொடர்பான பிரச்சினைகளும் பொதுவாக காணப்படும்.
அதேநேரம் ஒட்டிசம் நோய்க்குள்ளான பிள்ளைகளின் சகோதர சகோதரிகளுக்கு இப்பாதிப்பு எற்படுவதற்கான வாய்ப்பு சாதாரண குழந்தைகளை விடவும் 50மடங்கு அதிகம். அதனால் அடுத்த கருத்தரிப்புக்கள் குறித்து மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.
இந்நோய் கண்டறியப்பட்டு இற்றைக்கு பல தசாப்தங்கள் கடந்து விட்ட போதிலும் அதனை மருந்துகள் மூலம் குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறைகள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இப்பிள்ளைகளைத் துரித நடத்தைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களைப் பேச வைக்கவும், நடக்கச் செய்யவும், ஏனையவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு சமூகத் தொடர்புகளை ஏற்படுத்தவும் முடியும்.
ஆனால் இது நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கக் கூடிய ஒரு நோய். என்றாலும் அதன் தீவிரத்தன்மையும், அதன் அறிகுறிகளும் காலப் போக்கில் மாற்றமடையலாம். அத்தோடு நீண்ட காலத் தாக்கங்கங்கள் பெரும்பாலும் மாற்றமடையவும் கூடும். சில குழந்தைகள் காலப் போக்கில் நல்ல நிலைக்குத் திரும்பி விடுவர். இன்னும் சில குழந்தைகள் மெதுமெதுவாகவே குணமடைவர். தொடர்பாடல் மற்றும் சமூக இடைச்செயற்பாடுகளில் பலவீனங்கள் காணப்பட்டாலும் சில பிள்ளைகளின் நுண்ணறிவு மட்டம் சாதாரண நிலையை அடைந்து விடலாம். பெரும்பாலான பிள்ளைகள் பேச்சு அல்லது வசனங்களில் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடிய திறனையும் பெற்றுக் கொள்வர். ஆறு வயதுக்கு முன்னர் அவ்வாறு கதைப்பதற்கான திறனையும் சிறந்த நுண்ணறிவு மட்டத்தையும் கொண்டிருக்கும் பிள்ளைகள் நல்ல நிலையை அடைந்து கொள்வதற்கான வாய்ப்பும் மிக அதிகமாகும்.
ஆகவே பிள்ளைகளின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரினதும் பொறுப்பாகும். அதன் மூலம் பிள்ளைகளின் நடத்தை, செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சியில் ஏதும் வித்தியாசங்கள், மாற்றங்கள் தென்பட்டால் மருத்துவ நிபுணர்களை அணுகி ஆலோசனைகள் பெற்றுக் கொள்வதைத் துரிதப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அவை குழந்தைகளின் உடல் உள நல்லாரோக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு ஏதுவாக அமையும்.
(நன்றி – தினகரன்)