கொரோனா (COVID-19) தொற்றும், இணையவழிக் கற்பித்தலும் ஓர் பார்வை……
தற்போது உலகவாழ் மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் ஆனது 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் இறுதிப்பகுதியில் ஏற்பட்டதோடு, 2020ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை, 210 க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இது தொடர்ந்தும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மிகவேகமாக பரவிவரும் ஒரு உயிர்க்கொல்லி நோயாகவும் மாறியுள்ளது. இன்றுவரை 11 இலட்சத்துக்கும் அதிகமானோர் பலியானதுடன், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்கு கோடியையும் நெருங்கியுள்ளது. தொடர்ந்தும் உயிர் இழப்புக்கள், பாதிப்புக்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
எமது நாட்டில் இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டில் கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக பிரகடனம் செய்யப்பட்ட ஊரடங்கு உத்தரவு சகல பாடசாலைகளையும் மூடச்செய்தது. அதாவது கிட்டத்தட்ட மூன்று மாத காலம் வரை (மார்ச் தொடக்கம் ஜுன்) சுமார் நானூற்று எண்பது மணித்தியாலங்கள் மாணவர்களின் வகுப்பறைக் கற்பித்தலை இல்லாமல் செய்தது. சமூக இடைவெளி பெரிதும் வலியுறுத்தப்பட்டது. இதனால் பாடசாலைகளை திறப்பதில் பல தடைகள் காணப்பட்டது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் இவ்விடைவெளியைப் பேணுவது கடினமான செயற்பாடாகவும் காணப்பட்டது. இக்கால கட்டத்தில் உலகலாவிய ரீதியில் இடர்காலத்திற்குப் பொருத்தமான கல்வி முறையாக இணையவழிக்கற்றல் (Online Learning) மற்றும் தொலைக்கல்வி (Distance Education)என்பவற்றை ஐக்கியநாடுகளின் கல்வி விஞ்ஞான கலாசார அமைப்பு (UNESCO) முன்மொழிந்திருந்தது.
இது எமது நாட்டிலும் இணையவழி கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மேலும் வழிவகுத்தது. அந்த வகையில் வாய்புறம்(Viber), புலனம் (Whats App)குழுக்கள், Zoom / Google Meet/ Microsoft Teams/WebEx/Discord செயலிகள் ஊடாக கற்பித்தல், முகநூல் (Face Book), இணையவழியூடாக வினாத்தாள் மென்பிரதிகள் மற்றும் சமூக ஊடகங்கள், அரச தொலைக்காட்சி, இ–கல்விக்கூடம் (E-Thaksalawa, Laning Mamagement System) போன்ற இணையவழிக் கற்பித்தல் செயற்பாடுகள் என பல முன்னெடுக்கப்பட்டன.
இதனடிப்படையில் மாகாண, மாவட்ட வலயக்கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன வாய்புறம்(Viber)> புலனம்(WhatsApp குழுக்கள், Zoom, இ–கல்விக்கூடம் (E–thaksalawa), நிகழ்நிலை பரீட்சைகள் (online Exam) மற்றும் இணையவழி மென்பிரதிகள் வங்கிகள் (Learning Material Banks) ஊடாக கற்பித்தலை மேற்கொண்டனர்.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட இணையவழிக் கற்பித்தலில் அனைத்து தரங்களையும் சேர்ந்த மாணவர்கள் முழுமையாக கற்றலில் பங்குபற்றியுள்ளார்களா என்பது கேள்விக் குறியாகவே அமைந்தது. இதனை உறுதிப்படுத்துவதற்கான பாட உதவிக்கல்விப் பணிப்பாளர்களின் அறிக்கைகள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களின் அறிக்கைகள், ஆசிரியர் அறிக்கைகள், தரவுத்தளங்களில் பங்குபற்றிய மாணவர்களின் எண்ணிக்கை போன்ற தரவுகள் சான்று பகிர்கின்றன.
கல்வியில் சமவாய்ப்பு வழங்கப்படும் போது, இவ்வாறான இணையவழிக் கற்றல் செயற்பாடுகள் அனைத்தும் மாணவர்களுக்கு சென்றடைகின்றதா என்பதில் வாதப்பிரதிவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
எனவே இடர்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இணையவழி கல்வியில் நன்மையான விளைவுகள் எனும் போது கற்றல் கற்பித்தலுக்கான வேறு வழிமுறைகள் எதுவுமற்ற சூழலில், கல்விக்கான ஒரேயொரு மார்க்கமாகவும், மீட்பு வழிமுறையாகவும் இணையவழி கற்றலே காணப்பட்டது. அத்துடன் இது முன்னரை விட தற்காலத்தில் அதிக முனைப்பும் பெற்றுள்ளது. அத்துடன் ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோரின் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப அறிவு மேம்படுத்தப்பட்டது. அத்துடன் தரவுத்தளங்களில் கற்றல் கையேடுகள், வினாத்தாள்கள், விடைகள் போன்ற ஆவணங்கள் தரவேற்றப்பட்டுள்ளன. இவற்றின் மென்பிரதிகளை, வன்பிரதிகளாக பெற்று மாணவர்கள், ஆசிரியர்கள் நன்மையடையவும் வழிவகுத்தது.
அதேபோல் சவாலான விடயங்கள் என பார்க்கும் போது, கல்வியில் ஏற்றத்தாழ்வினையும் அதிகரிக்கச் செய்துள்ளது. அதாவது ஆரம்பக்கல்வியறிவு குறைந்த சில பெற்றோர்களின் பிள்ளைகள் மற்றும் சில கிராமப்பபுறத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கு சென்றடையவில்லை அத்துடன் அவர்களுக்கு போதிய வழிகாட்டல்கள் கிடைக்கவில்லை. கணிசமான ஆசிரியர்கள், மாணவர்கள் இதற்குள் உள்வாங்கப்படவில்லை. கற்றல் கற்பித்தலின் தரம் உறுதிப்படுத்தப்படவில்லை, சில இணையவழி கற்பித்தல் உயிர்ப்பற்றதாக காணப்பட்டமை, சில தனியார் கல்வி நிலையங்கள் ஆசிரியரை விளம்பரம் செய்வதாக இருந்தமை, தொடர்ச்சியான கணினி பாவனை கண்பாதிப்பு, மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பாக காணப்பட்டடன, சில நிகழ்நிலை பரீட்சைகள் நம்பகமற்றவையாக இருந்ததையும் காண முடிந்தது. அத்துடன் பொருளாதார பிரச்சினை என்பது எல்லோருக்கும் பொதுவானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் உள்ளது.
எனவே கொரோனா COVID-19 தொற்றுக் காலத்தில் இணையவழிக் கற்பித்தலை சிறப்பாக முன்னெடுப்பதற்கு பின்வரும் வழிகளையும் கையாள முடியும். அதாவது பொருத்தமான மென்பொருளை பயன்படுத்தல் (Zoom/GoogleMeet/ Microsoft Teams / Web Ex / Discord), சிறந்த நிகழ்ச்சி நிரல்((Agenda) ஒன்றை உருவாக்குவதல், பங்குபற்றும் அனைவரையும் ஈடுபாட்டுடன் பங்குபற்றச்செய்தல், சிறந்த தொடர்பாடலை மேற்கொள்ளல், பின்தொடர் செயற்பாடுகளை மேற்கொள்ளல், பெற்றோருக்கு இதுபற்றி தெளிவுபடுத்தல் போன்ற இன்னும் சிறந்த வழிமுறைகளையும் பின்பற்ற முடியும்.
தற்போது கொரோனா தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு இரண்டாம் தவணை விடுமுறைக் காலம் என்பதுடன், தொடர்ந்தும் மாணவர் கல்வியைப் பாதிக்குமோ என்ற கவலையையும் தோற்றுவித்திருக்கின்றது. எனவே எவ்வாறான இடர்கள் வந்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாரான நிலையில் இருக்க வேண்டும். மேற்படி புதிய செயற்பாடுகளும், புதிய பழக்கங்களும் எம்மை விட்டு அகன்றுவிடப்போவதில்லை. அவை எம்முடன் தொடர்ந்திருக்கவே போகின்றன அதனால் “புதிய சாதாரண வாழ்க்கை” ((New Normal ) எனும் புதிய சொல்லாடல் தற்போது வந்துள்ளது.
எனவே கல்வியை தடையின்றி பெற்று குறித்த இலக்கை அடைவதற்கு ஒவ்வொருவரும் தங்களை தயார்படுத்திக்கொள்வதன் மூலமே கல்வியில் வெற்றிபெற முடியும் என்பது திண்ணமாகும்.
ஆசிரியர்
Mr R.Nagendran -SLTS 2-I
(BA, PGDE(Merit) ( NIE), PGDSNE (OUSL), M.Ed (EUSL), M.Phil in Ed(R)-(NIE)
Bt/kk/chenkalady Vivekananda vid.
உசாத்துணைகள்
Aggaraval.J.C, (1996) Principal Methods and technology of teaching, vikas publory hous pvt. ltd.
பரமானந்தம், சு.(2005) பயன்தரு கற்பித்தல் அணுகுமுறை, சேமமடுப் பதிப்பகம்.
பரமானந்தம், சு.(2013) கல்வித் தொழினுட்பம், சேமமடு புத்தகசாலை, கொழும்பு.
நித்திலவர்ணன், ஆ(2020) ஞானம் கல்விச்சேவை பாராட்டு விழா மலர் குழு, வணசிங்கா அச்சகம்.
தனராஜ், தை (2020)கொவிட் -19 தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் கைந்ந}ல். பாத்பைண்டர் மன்றம்.