அர்ப்பணிப்பான உழைப்புக்கு கிடைத்த பலன்
தேசிய மட்டத்தில் அரச பாடசாலைகளினூடாக மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகின்றது. இதற்காக அரசு பெரும் நிதியை செலவிடுகிறது. அவ்வாறான கல்வியால், மாணவர்கள் எவ்வளவு தூரத்திற்கு முன்னேற்றமடைந்து வருகிறார்கள் என்பதை கல்வி அமைச்சு துல்லியமாக மதிப்பீடு செய்து வருகிறது.
இந்த மதிப்பீடு தேசிய ரீதியில் வருடாவருடம் நடைபெறுகின்ற ஒரு செயற்பாடு. இந்த மதிப்பீடு தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் வகைப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு விடயத்திற்கும் அல்லது செயற்பாட்டுக்கும் கிடைக்கின்ற விளைவை மதிப்பீடு செய்வது நல்லது. இம்மதிப்பீடானது நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்பாட்டில் இருந்து வருகின்ற தவறை வெளிக்கொணரவோ அல்லது கண்டுபிடிக்கவோ உதவும்.
இதனால், இனிவரும் காலங்களில் அவற்றில் பிழை திருத்தத்தையோ அல்லது மாற்றத்தையோ ஏற்படுத்த முடியும். இன்னொரு வகையில் கூறினால், நடைமுறையிலுள்ள செயற்பாடுகளின் முன்னேற்றத்திற்கு, அல்லது அதன் வளர்ச்சிக்கு இந்த மதிப்பீடு நிட்சயமாக உதவப் போகிறது.
கடந்த வருடத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தேசிய ரீதியில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 1,73,781 ஆகும். இதில் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற முடியாமல் போன மாணவர்களின் தொகை 15.490 ஆகும். அதன் வீதம் 8.91 ஆகும்.
இதனை இன்னொரு வகையில் கூறினால் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களில் 100 க்கு 9 பேர் கடை நிலையில் இருக்கிறார்கள். அடுத்தடுத்த வருடங்களில் இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். முடியுமாயின் பூச்சியத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். இந்த விடயத்தில் வடமேல் மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் மூன்று பாடமும் சித்தியடையாதோர் 100க்கு எட்டுப் பேர் ஆவர். இதுவே தேசிய ரீதியில் குறைந்த எண்ணிக்கையாகும்.
கடந்த 5 வருடங்களுக்கான பரீட்சைப் பெறுபேற்றைப் பார்க்கின்ற போது கிழக்கு மாகாணம், 2015ம், 2016ம் ஆண்டுகளில் தேசிய ரீதியில் ஆறாம் இடத்தையும், 2017ம், 2018ம் ஆண்டுகளில் 9ம் இடத்தையும் பிடித்திருந்தது. 2019ம் ஆண்டிலேதான் அது நான்காம் இடத்தை எட்டிப் பிடித்துள்ளது. இந்த வருடத்தில்தான் அது அது தன்னில் ஒரு மாற்றத்தை தோற்றுவித்திருக்கிறது எனலாம்.
இங்கு ஒன்றை எடுத்துப் பார்க்க வேண்டும், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மூன்று பாடங்களிலும் தேர்ச்சியைப் பெறாத மாணவர்களின் வீதம் நூற்றுக்கு 10 ஆகும். இது ஒரு சாதகமற்ற நிலையை எடுத்துக் காட்டுகிறது.
உயிரியல், கணிதம், வர்த்தகம், கலை, உயிர்த் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் என பாடங்களை வகைப்படுத்திப் பார்க்கும் போது இவைகளின் வளர்ச்சி கணிசமான அளவுக்கு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டிருக்கிறது என்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
கிழக்கு மாகாணம் 2019 ம்ஆண்டில் தேசிய ரீதியில் உயிரியல் துறையில் 3ம் இடத்தையும், கணிதத் துறையில் 4ம் இடத்தையும், வர்த்தகத் துறையில் 4ம் இடத்தையும், கலைத் துறையில் 5ம் இடத்தையும், உயிர்த் தொழில்நுட்பத் துறையில் 6ம் இடத்தையும், பொறியியல் தொழில்நுட்பத் துறையில் 8ம் இடத்தையும் பிடித்துள்ளது.
2015ம் ஆண்டில் பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்த கிழக்கு மாகாணத்தின் உயர்தர பரீட்சைப் பெறுபேறு, 2018ம் ஆண்டுவரை பெரிய மாற்றத்தை சந்திக்கவில்லை. 2019ம் ஆண்டில் அது பெறுபேற்றில் ஏற்படுத்திய மாற்றத்தினால் தேசிய ரீதியில் 4ம் இடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக உயிரியல், கணிதம், வர்த்தகம், கலை ஆகிய துறைகள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உயிர்த் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் ஆகியன குறிப்பிட்டு பேசும் அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அப்படி அத்துறைகளின் பெறுபேறுகள் உயர்த்தப்படடிருந்தால் கிழக்கு மாகாணத்தின் பெறுபேறு இப்போதிருக்கும் நிலையை விட இன்னும் உயர்ந்திருக்கும்.
2019ம் வருடத்திற்கான இப்பரீட்சைப் பெறுபேற்றை கிழக்கு மாகாணத்தை எடுத்து தேசிய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும் போதும், ஆராயும் போதும் உயிரியலில் மேல் மாகாணம் 1ம் இடத்தையும், கிழக்கு மாகாணம் 3ம் இடத்தையும், கணிதத்தில் மேல் மாகாணம் 1ம் இடத்தையும், கிழக்கு மாகாணம் 4ம் இடத்தையும், வர்த்தகத்தில் வடமேல் மாகாணம் 1ம் இடத்தையும், கிழக்கு மாகாணம் 4ம் இடத்தையும், கலைத்துறையில் வடமாகாணம் 1ம் இடத்தையும், கிழக்கு மாகாணம் 5ம் இடத்தையும், உயிர்த் தொழில்நுட்பத்துறையில் வடமேல் மாகாணம் 1ம் இடத்தையும், கிழக்கு மாகாணம் 6ம் இடத்தையும், , பொறியியல் தொழில்நுட்பத் துறையில் மேல் மாகாணம் 1ம் இடத்தையும், கிழக்கு மாகாணம் 8ம் இடத்தையும் பிடித்துள்ளன. இறுதியாக ஏனைய பிரிவுகள் என்ற பிரிவை பார்க்கும் போது அப்பிரிவில் 1ம் இடத்தை கிழக்கு மாகாணம் பிடித்துள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா இதுபற்றித் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண கல்விச் யெற்பாடுகள் கடந்த 2018ம் வருடத்தில், தேசிய ரீதியில் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டிருந்தன. அதனால், பல இடைஞ்சல்களுக்கும், மாற்றங்களுக்கும் மனவேதனைகளுக்கும் நாம் ஆளாகினோம். அதனால், இதனை ஒரு சவாலாக ஏற்று எமது அமைச்சின் வெவ்வேறு தரத்தைச் சேர்ந்த அனைத்து உத்தியோகத்தர்களும் ஒன்றுபட்டு உழைத்தார்கள். இது ஒரு கூட்டு முயற்சி. இந்த கூட்டு முயற்சியாலேயே இந்த வெற்றி கிடைத்துள்ளது. இம்முயற்சி ஓய மாட்டாது, இன்னும் முன்னேற்றம் காணும்.
இவ்விடயத்தில், குறிப்பாக மாகாண கல்வித் திகை்களத்தின் பங்கு பாராட்டுதற்குரியது. அத்திணைக்களத்தின் ,சரியான வழிநடத்தலும், பொருத்தமான செயற்பாடுகளும், அர்ப்பணிப்பான சேவையும் இதற்கான காரணிகளாகும்” என்று குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் கருத்துத் தெரிவிக்கையில் “இந்த நாட்டின் மாணவச் செல்வங்களுக்கு கல்வி உரித்துடையது. அவர்கள் கல்வியை சிறப்பான முறையில் பெற வேண்டும். அவர்கள் தாய்நாட்டை காப்பாற்றுவதோடு, நாட்டை வளம் கொழிக்கச் செய்து, சபீட்சத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். நீண்ட இடவெளிக்குப் பிறகு தேசிய மட்டத்தில், கல்வித்துறையில் நான்காம் இடத்தை கிழக்கு மாகாணம் எட்டிப் பிடித்ததையிட்டு மிகுந்த சந்தோசமடைகிறேன். இந்த நிலைக்கு எமது மாகாணத்தை உயா்த்த பாடுபட்ட மாகாணக் கல்வித் திணைக்களத்தையும், மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே. மன்சூரையும், மாகாண கல்வி அமைச்சையும் அதன் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்து பண்டாவையும் மனதார பாராட்டுகிறேன்” என்றார்.
எஸ்.எஸ்.தவபாலன்
(Thinakaran)