ஒன்லைன் கற்பித்தலை சம்பள உயர்வுக்கான அளவீடாக்க சில வலயங்கள் முயற்சிப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு சில வலயங்கள் சம்பள ஏற்றங்களுக்கான படிவத்துடன் பூர்த்தி செய்யப்பட வேண்டிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு ஒன்லைன் கற்றல் செயற்பாடுள் தொடர்பான அறிக்கையைக் கோரியுள்ளன.
பிரதான நகர்ப்பகுதிகளில் வசதிமிக்க சூழலில் இவ்வாறு நடைபெறாத போதிலும் கிழக்கு மாகாணம் உட்பட சில வலயங்களில் இவ்வாறான நிர்ப்பந்தங்கள் நடைபெறுவதாக அறியக் கிடைத்துள்ளது.
ஆசிரியர்கள் தன்னிச்சையாக ஒன்லைன் வகுப்பக்களை நடாத்தி வருகின்ற போதிலும், அது தொடர்பான எந்த வித ஏற்பாடுகளும் நிர்வாக ரீதியில் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக ஆசிரியர்கள் மேற் கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகளை சம்பள ஏற்றத்துக்கு நிபந்தனையாக எந்த அடிப்படையில் நிர்வாகிகள் உட்படுத்துகின்றனர் என்பது தொடர்பாக ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மடிக்கணினியோ, பெறுமதிமிக்க கைத்தொலை பேசிகளோ , இணைய வசதிகளோ, அது தொடர்பான உரிய வழிகாட்டல்களோ கொள்கை அடிப்படையிலான தீர்மானங்களோ இல்லாத நிலையில் ஆசிரியர்கள் சுயமாக தமது மாணவர்களுக்கு தமது வசதிக்கேற்ப கற்பித்து வரும் இத்தருணத்தில், அவர்கள் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பது எந்த வகையிலும் நியாயமான நிர்வாக நடைமுறையல்ல என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
அத்தோடு, இது தொடர்பாக அண்மையில் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கல்வி அமைச்சிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
சுயமாக தன்னிச்சையாக ஆசிரியர்கள் மேற்கொள்ளும் இந்நடவடிக்கைகளில் மேற்பார்வைக்கான ஒழுங்குமுறையை மாத்திரம் ஏற்காது, அடிப்படை கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்ளுமாறும், ஆசிரியர்கள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையிலான மேற்பார்வையை நிறுத்துமாறும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மூடப்பட்டுள்ள இவ்வாறான பெருந்தொற்றுக் காலப்பகுதியில் ஆசிரியர்கள் தங்களால் முடியுமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது அழுத்தங்களை மாத்திரம் பிரயோகிக்கும் நிர்வாக நடைமுறையை மாத்திரம் பின்பற்றாது, கொள்கை ரீதியான தீர்மானங்களின் அடிப்படையில் நிர்வாகிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று ஏற்பட்டு ஒரு வருட காலம் முடிந்த பின்னரும், வட்சப் குழுக்களையும் இலவசமாக வழங்கும் அடிப்படை வசதிகளைக் கொண்ட சூம் செயலியையும் மாத்திரம் பயன்படுத்தி, வலுவிவில்லாத இணைய இணைப்பில், விட்டு விட்டு கேட்கும் அமர்வுகளை நடாத்துவதில் ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தீர்ப்பதற்கான எந்த வித கொள்கை அடிப்படையிலான தீர்மானமும் எடுப்பதற்கு எந்த வித முயற்சியும் மேற்கொள்ளாது,
தன்னிச்சையாக ஆசிரியப் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் நிர்வாக மனப்பாங்கை மாற்றிக் கொள்ளுமாறு ஆசிரியர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.