தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வருமானம் குறைந்த பெற்றாரின் பிள்ளைகள் தவிர்ந்த ஏனையோருக்கு கட்டாமில்லை கல்வி அமைச்சு புதிய சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவது மாணவர்களினதும் பெற்றாரினமதும் விருப்பத்தைப் பொறுத்தே அமைய வேண்டும் என்பதும் மாணவர்களையோ பெற்றார்களையோ எந்த வகையிலும் நிர்பந்திக்கக் கூடாது என்றும் இச்சுற்று நிருபம் குறிப்பிடுகிறது.
தரம் 5 உடன் முடிவடையும் பாடசாலைகளின் மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளை வழங்குவது குறிப்பிட்ட பிரதேசத்தின் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உரிய கடமையாகும் என்று சுற்று நிருபம் விளக்கியுள்ளது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விரும்பாத பெற்றார் மாணவர்கள் தொடர்பான சம்மதங்கள் அடங்கிய ஆவணங்களை பாடசாலையில் பேண வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சையைக் கட்டாயமாக்கிய 1995.06.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1995/16 இலக்க சுற்று நிருபம் இரத்தாவதுடன் இதன் பிறகு இந்த புதிய சுற்று நிருபமே செல்லுபடியாகும்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடிப்படை நோக்கத்தை புறக்கணித்து அதிக போட்டி மிக்கதாக பாடசாலைகள் இப்பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் படுத்துவதோடு பெறுபேற்றை அதிகரித்துக் கொள்வதற்கு மாணவர்களின் வயது, அறிவு மட்டம் முதலானவற்றைப் பொருட்படுத்தாது அதிக சுமையை ஏற்படுத்துவது அவதானிக்கப்பட்டது என்று சுற்று நிருபம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லங்காதீப பத்திரிகை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் அவர்களைத் தொடர்பு கொண்டு வினவிய போது,
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கற்பதற்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித் தொகை வழங்கல் மற்றும் தரம் 6 இல் புதிய பாடசாலை ஒன்றை வழங்கல் முதலான நோக்கங்களுக்காக மாத்திரமே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
புலமைப் பரிசில் பரீட்சையின் அடிப்படை நோக்கத்தை புறக்கணித்து பிள்ளைகளிளுக்கு உள ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்கையாக மற்றும் தேவையற்ற வகையிலான போட்டியை ஏற்படுத்தி உள்ளதாக பிள்ளை நல வைத்திர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் பிறகு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் பிள்ளைகள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை என்பதை நேற்று வெளியிடப்பட்ட 8/2019 சுற்று நிருபம் தெரிவிப்பபதாக குறிப்பிட்ட அகில விராஜ் காரியவசம், இதற்கேற்ப பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விருப்பம் பெற்றார் மற்றும் பிள்ளைகளின் விருப்பத்தைச் சார்ந்தது என்றும் குறிப்பிட்டார்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை அடைவுகளை மையப்படுத்திய விளம்பரங்கள் போஸ்டர்கள் முதலானவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்தியடைந்தவர்கள் சித்தியடையாதவர்கள் என்ற பிரிவினை பிள்ளைகளிடம் அதிகம் தாக்கம் செலுத்துவதாகவும் அது அவர்களின் மனவளர்ச்சிக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் வழங்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தரம் 6க்கு பாடசாலை மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வதற்கான சுற்றுநிருபத்தின் படி வசதிகள் சேவைகள் கட்டணம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணம் முதலான அனுமதிக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர வேறு கட்டணங்களோ கொடுப்பனவுகளோ அன்பளிப்புக்களோ வழங்குவதை புதிய சுற்று நிருபம் முற்றாகத் தடை செய்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமற்றதாக மாற்றப்பட்டுள்ளதே தவிர பரீட்சையை ரத்துச் செய்வது பற்றிய தீர்மானம் இன்னமும் எட்டப்படவில்லை. இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ‘புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான நிபுணர்கள் குழு’ இறுதித் தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
நன்றி லங்காதீப
தமிழில் – ஜெஸார்-