நீங்கள் ஒரு எழுத்தாளராக வரவிரும்பினால் இரண்டு விடயங்களை செய்யவேண்டும். ஒன்று அதிகம் வாசிக்க வேண்டும். அடுத்ததாக அதிகம் எழுத வேண்டும். – Stephen King –
கல்வி அமைச்சின் 10000 புத்தக வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற சூழலில் மாணவரக்ளின் எழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்காக இந்த ஆக்கம் எழுதப்படுகிறது. பொதுவாக மூன்று வகையாக புத்தகங்களை வகைப்படுத்த முடியும்.
1) சிறுவர்களுக்கான நூல்கள்
2) கதை நூல்கள்
3) அறிவு சார் நூல்கள்
இந்த ஆக்கம் அறிவு சார் நூலொன்றை எழுதுவதற்கான இலகு வழிகாட்டல் குறிப்புகளை வழங்குகிறது. பல்வேறு வழிமுறைகளுக்கூடாக நூல்களை எழுத முடியும். இங்கு குறிப்பிடப்படும் வழிகாட்டல்களை அதில் ஒரு வழிமுறையாக எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வழிகாட்டல்களை நீங்கள் முழுமையாகவோ அல்லது நீங்கள் பயன்படுத்த விருமும் வழியிலோ பயன்படுத்த முடியும். இங்கு 12 இலகு வழிகாட்டல் குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறோம்.
1. தலைப்பை தெரிவு செய்தல்
எந்த தலைப்பில் உங்களுக்கு போதிய அறிமுகமும் ஆர்வமும் இருக்கிறதோ அதனை தலைப்பாக தெரிவு செய்யுங்கள். சாதாரணமாக ஒரு நூலை எழுதவிரும்புவர் அவர் தெரிவு செய்யும் தலைப்பில் ஆக குறைந்தது 50 நூல்களை வாசித்திருக்க வேண்டும். ஆரம்ப நிலையிலுள்ள மாணவர்கள் ஆக குறைந்தது 20 நூல்களையாவது வாசிக்கவேண்டும். அதேநேரம் எழுத விரும்பும் தலைப்பில் 30 நிமிடங்கள் கையில் குறிப்புகள் எதுவுமின்றி ஒரு உரையாற்றுவதற்கு தயாராக இருக்கவேண்டும்.
அத்தோடு நூலை எழுதுவதற்கான காரணத்தை தெளிவாக வரையறை செய்யவேண்டும். நூலொன்றை எழுதும் போது கீழ்வரும் மூன்று விடயங்கள் கவணத்தில் கொள்ளப்படவேண்டும்.
1) நீங்கள் தெரிவு செய்யும் தலைப்பில் நீங்கள் எழுத விரும்பும் அதே அமைப்பில் ஏற்கனவே புத்தகங்கள் வெளியாகி இருக்கக்கூடாது. எழுதப்படாத நூலின் இடைவெளியை நிரப்புவதாக உங்கள் நூல் அமையவேண்டும்.
2) ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கும் நூல் எழுதப்பட்ட விதம் வாசகர்களை ஈர்க்கும் அமைப்பில் இல்லை. அந்த குறிப்பிட்ட விடயத்தை நவீன சூழலுக்கு ஏற்ப அழகான முறையில் முன்வைப்பதற்காக நீங்கள் தலைப்பை தெரிவு செய்யமுடியும்.
3) நடைமுறை விவகாரம் ஒன்றை பற்றி எழுதுதல். பரபரப்பாக, பரவலாக எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு விடயத்தை தலைப்பாக எடுத்து நீங்கள் எழுதமுடியும். இன்று எல்லோரும் கொரோனா நோய் தொற்று மற்றும் அதையொட்டி வீடுகளிலும் வியாபாரத்திலும் உலகத்திலும் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பேசுகிறார்கள். அவைகளை பற்றிய ஒரு தொகுப்பை நீங்கள் தலைப்பாக தெரிவு செய்யமுடியும்.
மேலே சொல்லப்பட்ட காரணங்களுள் எந்த காரணத்திற்காக நூலை எழுதுகிறீர்கள் என்பதில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
2. இலக்கை வரையறை செய்தல்
இரண்டாவதாக நூலை எழுதுவதற்கான நோக்கத்தை வரையறை செய்துகொள்ள வேண்டும். அறிவு சார் நூல்களை பின்வரும் இலக்குகளை அடிப்படையாக கொண்டு எழுத முடியும்.
1) தகவல்களை கொண்டு சேர்த்தல்
2) திறமைகளை வளர்த்தல்
3) சிந்தனையை வளர்த்தல்
4) நடத்தையை மாற்றுதல்
குறிப்பிட்ட தலைப்பை நீங்கள் என்ன நோக்கத்திற்காக எழுதப்போகிறீர்கள் என்பதை நீங்கள் வரையறை செய்துகொள்ளவேண்டும். மேலே சொல்லப்பட்ட அல்லது அது போன்ற ஏதோவொரு இலக்கை துல்லியமாக வரையறை செய்துகொள்வது நூலை இலகுவாக எழுதுவதற்கு உதவும்.
3. தகவல்களை சேகரித்தல்
அடுத்த விடயம் தகவல் சேகரித்தலாகும். எந்தவொரு ஆக்கத்தையோ நூலையோ எழுதுவதாயின் அதற்கு அடிப்படையான விடயம் தகவல்கள் ஆகும். நீங்கள் தெரிவு செய்த தலைப்போடு சம்பந்தப்பட்ட 20 நூல்களையாவது உசாத்துணை நூல்களாக எடுத்துக்கொள்ளவேண்டும். அத்தோடு கட்டுரைகள், இணைய ஆக்கங்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றையும் மேலதிகமாக சேர்த்துக்கொள்ளமுடியும். நூல்களை வாசிப்பது கட்டாயமானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இன்னுமொரு விடயம் நீங்கள் தெரிவு செய்த தலைப்பின் நோக்கத்தை மையமாக கொண்டே தகவல்களையும் கருத்துக்களையும் உங்களுடைய உசாத்துணை நூல்களிலிருந்து சேர்க்கவேண்டும்.
4. மன வரைபடம் வரைதல்
மன வரைபடம் உங்களுடைய நூலின் உள்ளடக்கம் எவ்வாறு அமையப்போகிறது என்பது பற்றிய ஆரம்பகட்ட திட்டமிடலுக்கு உதவுகிறது. உங்களுடைய நூல் எத்தனை பகுதிகளை கொண்டது? அந்த ஒவ்வொரு பகுதிகளின் கீழும் என்னென்ன விடயங்களை உள்ளடக்கப்போகிறீர்கள் என்பதை ஒரு வரைபடாமாக ஒரு A4 தாளில் வரைந்துகொள்ளுங்கள். இந்த வரைபடத்தை மனதில் வைத்துக்கொண்டு நூலை எழுத முனையும் போது கவனம் சிதறாமல் நூலை தொகுப்பதற்கு அது உதவியாக இருக்கும். இந்த வரைபடத்தை வரைவதற்கு முன்னர் நீங்கள் உசாத்துணையாக தெரிவு செய்த நூல்களை ஒரு தடவை முழுமையாக வாசித்துக்கொள்வது சிறந்தது.
5.உள்ளடக்கத்தை எழுதுதல்
இது நூலிற்கான திட்டமிடல் பகுதியாகும். நூலை எழுதுவதென்பது ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எழுதிக்கொண்டே இருப்பதல்ல. அழகாக திட்டமிடும் போது எந்த விடயத்தியும் இலகுவாக விருப்பத்தோடு செய்துமுடிக்கமுடியும். அதற்கான ஒரு வழிதான் ஆரம்பமாக உள்ளடக்கத்தை எழுதுவதாகும். நூல் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் நூலின் பகுதிகளை எழுதுவதை விடவும் நூலின் உள்ளடக்கத்தை திட்டமிடுவதில் அதிக காலத்தையும் கவனத்தையும் செலுத்துகிறார்கள். உள்ளடக்கத்தை எழுதும் போது கீழ்வரும் விதியை கவனத்தில் கொள்ளுங்கள்.
மூன்று – ஐந்து விதி:
அதாவது நூலின் அத்தியாயங்களை குறைந்தது மூன்று அல்லது ஐந்தாக வரையறுத்துக்கொள்ளுங்கள். அத்தியாயங்களின் கீழ் வரும் துணை தலைப்புகளையும் குறைந்தது மூன்று அல்லது ஐந்தாக வரையறுத்துக்கொள்ளுங்கள். துணை தலைப்புகளின் கீழ்வரும் ஒவ்வொரு பகுதிகளையும் மூன்று அல்லது ஐந்தாக வரையறுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சிறிய தலைப்பின் கீழும் எழுதும் பந்திகளையும் மூன்று அல்லது ஐந்தாக வரையறுத்துக்கொள்ளுங்கள்.
இந்த விதியை பின்பற்றி உள்ளடக்கத்தை திட்டமிடும் போது இலகுவானதும் அழகானதுமான திட்டத்தை நூலை எழுதுவதற்காக தயாரித்துக்கொள்ளமுடியும். அறிமுகம், அத்தியாயங்கள் மற்றும் முடிவுரை என நூல் ஒரு திட்டமிட்ட அமைப்பில் அமையப்போகிறது என்ற நம்பிக்கையையும் இது ஏற்படுத்துகிறது.
6. நூலின் பக்கங்களை ஒழுங்குபடுத்தல்
இப்போது நீங்கள் தயாரித்த உள்ளடக்கத்தின் ஒவ்வொரு பகுதிகளுக்குமான பக்கங்களை இடுங்கள். இறுதியில்தானே பக்கங்களை இட வேண்டும் என நினைக்கிறீர்களா? உண்மைதான், ஆனால் பக்கங்களை வரையறை செய்வது நூலை இலகுவாகவும் வேகமாகவும் எழுதுவதற்கான ஒரு வழியாகும். ஒவ்வொரு தலைப்பும் எத்தனை பக்கங்கள் வரை வரும் என்பதை திட்டமிட்டு அதற்கேற்ப முழு நூலுக்குமான பக்கங்களை குறித்துக்கொள்ளுங்கள்.
7. உசாத்துணை நூல்களின் பக்கங்களையும் நூலின் பக்கங்களில் இணைத்தல்
நீங்கள் துணை நூல்களாக எடுத்துக்கொண்ட 20 அல்லதை அதற்கு மேற்பட்ட நூல்களை ஒரே மேசையில் வைத்துக்கொள்ளுங்கள். அவற்றிலிருந்து சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பில் எழுதப்பட்ட ஐந்து நூல்களை தெரிவு செய்யுங்கள். இந்த ஐந்து நூற்களும் உங்களுடைய நூலை வடிவமைப்பதில் ஏனைய நூற்களை விட கூடுதல் பங்களிப்பை வழங்குகிறது. இப்போது நீங்கள் தெரிவு செய்த முதல் ஐந்து உசாத்துணை நூல்களில் முதலாவது நூலை கையில் எடுங்கள். உங்களுடைய நூலின் உள்ளடக்கத்தோடு பொருந்திவரும் பகுதிகளை அடையாளம் காணுங்கள். உள்ளடக்கத்தின் ஒரு பிரதியை எடுத்து உசாத்துணை நூல்களின் பக்கங்களையும் ஒவ்வொரு பகுதிகளின் கீழும் எழுதிக்கொள்ளுங்கள். உள்ளடக்கத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் எத்தனை உசாத்துணை நூல்கள் பங்களிப்பு செய்கிறதோ அத்தனை நூல்களின் தகவல்களையும் எழுதிக்கொள்ளுங்கள். இன்னும் நீங்கள் நூலின் ஒரு சொல்லை கூட எழுத ஆரம்பிக்கவில்லை. ஆனால் நூலை எழுதும்போது தேவைப்பட இருக்கும் தகவல்கள எங்கிருக்கிறது என்பதை நீங்கள் உள்ளடக்க ஒழுங்கிற்கேற்ப அறிந்து வைத்திருக்கிறீர்கள்.
8. நூலை எழுதுவதற்காக வாசித்தல்
சாதாரணமாக வாசிப்பதற்கும் நூலை எழுதுவதற்காக வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. உங்களிடம் ஏற்கனவே ஒவ்வொரு பகுதிக்குமான உசாத்துணை நூல்களின் தகவல்கள் இருக்கின்றன. இப்போது உங்களுடைய நூலின் முதலாவது அத்தியாயத்தின் முதலாவது பகுதியோடு தொடர்பான சகல உசாத்துணை நூல்களையும் உரிய பக்கங்களை புரட்டி ஆழமாக வாசியுங்கள். நீங்கள் உசாத்துணை நூல்களை ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொன்றாக முழுமையாக வாசிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
உசாத்துணை நூல்களை குறிப்பிட்ட அத்தியாயத்திற்காக வாசிக்கும் போது ஒவ்வொரு உசாத்துணை நூல்களிலும் இருக்கின்ற ஒவ்வொரு புதிய கருத்துக்களையும் தகவல்களையும் குறித்துக்கொள்ளுங்கள். முதல் ஐந்து நூல்களிலும் கூடுதல் கவனம் கொடுங்கள். ஏனைய நூல்களை வேகமாக உங்களுக்கு புரிந்து கொள்ளமுடியும். இன்னுமொரு முக்கிய விடயம் வாசிக்கும் ஒவ்வொரு விடயங்களையும் சரியாக புரிந்துகொள்ளவேண்டும். வாசித்து புரிந்துகொண்ட விடயங்களை கவனமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
9. நூலை எழுதுதல்
வாசித்து ஆழமாக அவ்விடயங்களை புரிந்து கொள்வதோடு நூலை எழுதும் பனி ஆரம்பிக்கிறது. நூலை எழுதும்போது உள்ளடக்கங்களின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் அதன் பிரிவுகளையும் ஒவ்வொன்றாக உங்களுடைய மொழியில் உங்களுடைய பாணியில் எழுதுங்கள். நூல்களை எழுத முயற்சிக்கும் பலரும் விடும் ஒரு தவறு முதல் தடவையிலேயே பூரணமாக நூலை எந்தப்பிழையுமின்றி எழுத நினைப்பதாகும். நூலை எழுத ஆரம்பித்தவுடன் உள்ளடக்க ஒழுங்கிற்கேற்ப தொடர்ந்து எழுதி முடியுங்கள். ஒவ்வொன்றையும் 100 வீதம் சரிவர எழுதுவதற்காக அதிக நேரங்களை ஒரே பகுதியில் வீணாக செலவிடாதீர்கள். நீங்கள் எழுதுவது ஆய்வு நூலாக இருப்பின் எல்லாவற்றையும் சரியாகவும் நுணுக்கமாகவும் எழுதுவது அவசியமாகிறது.
அறிவு சார் தொகுப்பு நூல்களை பொறுத்தவரை அதில் எப்போதுமே பலகருத்துக்களுக்கு இடம் இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் தகவல்களையும் நூல்களையும் அடிப்படையாக கொண்டு நீங்கள் உங்களுடைய நூலை எழுதுங்கள். ஆரம்ப நிலையில் உள்ளவர்களை இவ்வாறான விடயங்களை பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. பயிற்சியும் அனுபவனும் உங்களுக்கு நிறைய விடயங்களை கற்றுத்தரும். இங்கு மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் சுயமாக பல நூல்களை வாசித்து புரிந்து கொண்ட விடயங்களை, உங்களுடைய மொழியில் உங்களுடைய பாணியில் நீங்களாக எழுதுவதாகும். அதுவே உங்களுடைய நூலை வெளியிடுவதற்கு முன்னரான வெற்றியாகும்.
இன்னொரு முக்கிய விடயம் வாசித்த உடனே நூலை எழுதாதீர்கள். ஏனெனில் நீங்கள் வாசித்த விடயங்களும் அதனை எழுதியவரின் மொழிநடையும் உங்களுடைய நூலில் அப்படியே பிரதிபலிக்க வாய்ப்பிருக்கிறது. வாசித்த விடயங்களை விளங்கி உங்களுடைய மொழியில் எழுதும்போதே உங்களுடைய நூல் வித்தியாசமாகவும் பிரயோசனமாகவும் மாறுகிறது. இன்னொரு நூலை போன்றோ இன்னொருவரை போன்றோ நீங்கள் எழுத்துவதாயின் அப்படியொரு நூலை எழுத அவசியமில்லை என்பதை உறுதியாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
10. தவறவிடப்பட்ட ஆதாரங்களை தேடி எழுதுதல்
நூலை எழுதி முடித்தவுடன் ஒவ்வொரு பக்கமாக ஒரு முறை பாருங்கள். ஏதாவதொரு பகுதியில் ஆதாரங்கள் குறிப்பிடப்படாமல் விடப்பட்டிருந்தால் அவைகளை ஏனைய நூல்கள், ஆய்வுகள் மற்றும் இணையத்தளங்களில் பெற முடியுமா என்று பாருங்கள். அவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களை உரிய முறையில் சேர்த்துக்கொள்ளுங்கள். தொகுப்பு நூல் என்பது நீங்கள் உங்களுடைய சுய கருத்துக்களை சொல்லும் இடமல்ல. அது பல்வேறு கருத்துக்களையும் தொகுத்து புரிந்து கொண்டு உங்களுடைய மொழியில் உங்களுக்கே உரிய பாணியில் சொல்வதாகும். உங்களுடைய மொழியில் எழுதுகிறீர்கள் என்பதற்காக அவைகள் உங்களுடைய கருத்தாகமாட்டாது. ஆகையால் ஒவ்வொருவர் கருத்திற்குமான ஆதாரங்களை இயலுமானவறை ஒவ்வொரு பகுதியிலும் சேர்த்துக்கொள்வது உங்களுடைய நூலின் தரத்தை ஒரு படி உயர்த்திவிடுகிறது.
நீங்கள் எழுத விரும்பும் ஒரு விடயத்திற்கு ஆதாரம் இல்லாத போது உங்களுடைய விளக்கமாக நீங்கள் அதனை குறிப்பிட முடியும். ஆதாரத்தை வேண்டி நிற்கும் ஒன்றாக அக்கருத்து காணப்படின் ஆதரமின்றிய நிலையில் அதனை எழுதாமல் விடுவது சிறந்தது.
இப்பகுதியில் மற்றொரு முக்கியமான விடயம் துணை ஆதாரங்கள் மூலம் கருத்துக்களை மேலும் பலப்படுத்துவதாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் வேத வசனங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள் அல்லது குறியீடுகள் இணைக்கப்படவேண்டும் என நீங்கள் கருதினால் அவற்றையும் இங்கு குறித்துக்கொள்ளுங்கள். இறுதியாக அவைகள் ஒவ்வொன்றயும் இணையத்தளங்களிலிருந்து பிரதி பண்ணி உரிய இடங்களில் இணைத்து விட முடியும். நூலின் ஒவ்வொரு பகுதியிலும் தேவைப்படும் மேலதிக இணைப்புகளை ஒவ்வொரு பகுதியின் ஓரங்களில் குறித்து வையுங்கள்.
11. இறுதிப்பிரதியை எழுதுதல்
சிறிய சிறிய தலைப்புகளாக முழு நூலையும் நீங்கள் எழுதி முடித்திருக்கிறீர்கள். நூலின் இறுதிப்பிரதியை எழுதும்போது கீழ்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது ஒவ்வொரு சிறிய பகுதிகளிலும் மூன்று தொடக்கம் ஐந்து முக்கிய கருத்துக்களை எழுதுங்கள். அந்த ஒவ்வொரு கருத்தையும் ஒரு பந்தியாக எழுதிக்கொள்ளுங்கள். பந்திக்காயும் நீங்கள் அழகாக திட்டமிடமுடியும்.
பந்திகளை எழுதுதல்:
சாதாரணமாக பந்தி என்பது மூன்றில் ஒரு பக்கத்தை கொண்டதாகும். பக்கத்தின் அரைவாசியாக இருப்பதும் தவறல்ல. ஒவ்வொரு பந்தியை எழுதும்போதும் கீழ்வரும் மூன்று வழிகாட்டல்களை பின்பற்றுங்கள்.
1) பந்தியின் முதல் வசனம் அந்த பந்தியின் சுருக்கத்தை கூறுவதாக அமைந்திருத்தல்.
2) பந்தியின் ஏனைய வசனங்களூடாக மேலே குறிப்பிட்ட கருத்தை விளக்கும் வகையிலான உதாரணங்களை குறிப்பிடுதல்.
3) கருத்தை உறுதிப்படுத்தும் வகையிலான வேத வசனங்கள், சம்பவங்கள், கதைகள், அட்டவணைகள் மற்றும் புகைப்படங்களை இணைத்தல்.
ஒவ்வொரு பந்தியை எழுதும்போதும் இயன்றவரை மேலே சொன்ன வழிகாட்டல்களை பின்பற்ற முயற்சியுங்கள். இந்த வழிகாட்டல்களை பின்பற்றினால்தான் அது நூல் என்று புரிந்துகொள்ள தேவையில்லை. ஆனால் இந்த வழிகாட்டல்களை பின்பற்றும்போது நூல் எழுதும் செயற்பாடு மிக இலகுவானதாக மாறுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
முடிவுரையும் முன்னுரையும்
நூலை எழுத தொடங்கியவுடன் முன்னுரையை எழுத தேவையில்லை. நூலை எழுதி முடித்த பின்னரே முன்னுரையை எழுதவேண்டும். ஆகவேதான் முடிவுரையும் முன்னுரையும் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. நூலை எழுதி முடித்தவுடன் முடிவுரையை எழுதவேண்டும் அதன் பிறகு முன்னுரையை எழுதவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
முடிவுரை எழுதும்போது கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய பகுதிகள் கீழ்வருமாறு:
1)நூலின் சுருக்கத்தை எழுதுதல்
2) வாசகர்களுக்கான உங்களது வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் குறிப்பிடுதல்
முன்னுரை எழுதும்போது கவனிக்கவேண்டிய விடயங்கள் கீழ்வருமாறு:
1) நூல் எந்த அடிப்படைகளையம் வழிமுறைகளையும் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதை விளக்குதல்
2) உள்ளடக்கத்தின் அத்தியாயங்களையம் அதன் பகுதிகளையும் மிக சுருக்கமாக விளக்குதல்
3) நூலின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட முக்கிய விளைவுகளை அல்லது முடிவுகளை குறிப்பிடுதல்
உசாத்துணை எழுதுதல்
நூலின் இறுதியில் நூலை தொகுப்பதற்கு உதவிய அணைத்து துணை நூல்களையும் உரிய முறையில் குறிப்பிடுதல் அவசியமானது. அதற்கு கீழ்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்:
1) நூலின் பெயர்
2) நூலை எழுதியவரின் பெயர்
3) வெளியிடப்பட்ட ஆண்டு
4) பதிப்பகம்
இவைகள் அடிப்படையானவை. இதற்கு மேலதிகமான தகவலைகளையும் குறிப்பிட முடியும். பொதுவாக நூலின் இறுதியிலேயே உசாத்துணைகளை குறிப்பிடுவது சிறந்தது. நீங்கள் ஏதாவதொரு கருத்தை அவ்வாறே பிரதி பண்ணி பிறிதொரு நூலிலிருந்து எடுத்து பயன்படுத்தும் போது அக்குறிப்பிட்ட பக்கத்தின் கீழ்ப்பகுதியில் அதன் தகவல்களை குறிப்பிடுவது வரவேற்கத்தத்தக்கது. அத்தோடு நூலுக்கு பங்களிப்பு செய்தவர்களை நன்றியோடு நினைவு கூர்வதோடு தேவையான மேலதிக விடயங்களை நீங்கள் விரும்புவது போல் இணைத்துக்கொள்ள முடியும்.
12. நூலின் இலக்குகளோடு நூலை ஒப்பிட்டு சரிபார்த்தல்
எந்த நோற்க்கத்திற்காக நீங்கள் இந்த நூலை எழுத திட்டமிட்டீர்களோ அந்த நோக்கங்களை நிறைவுசெய்யும் வகையில் ஒவ்வொரு பகுதியும் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை சரிபாருங்கள். சில பகுதிகள் விடப்பட்டிருக்கலாம். அவற்றை இணைத்துக்கொள்ளுங்கள். சில பகுதிகள் அளவுக்கதிகமாக எழுதப்பட்டிருக்கலாம். அவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நூலின் நோக்கத்தோடு ஒத்து வராத பகுதிகளை நீக்கிவிடுங்கள்.
இறுதியாக, இந்த ஆக்கம் அறிவுசார் நூல்களை எவ்வாறு தொகுப்பது என்பது பற்றிய வழிகாட்டல்களை ஓரளவு விரிவாக விளக்குகிறது. அதேநேரம் இதனோடு இணைந்த இன்னும் சிலவிடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக நூலை கவர்ச்சியாக தட்டச்சு செய்தல், தளவமைப்பு செய்தல் மற்றும் நூலை பதிப்பித்து வெளியிடுதல். அவையும் தனியாக பேச வேண்டிய பகுதிகளாகும். அவைகள் இங்கு உள்ளடக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த ஆக்கத்தின் உதவியோடு இயன்றவரை தமிழ் பேசும் சமூக சூழலில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் வாசிப்பு மற்றும் எழுத்துக்கலாசாரம் வளரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதற்கான வழிகாட்டல்களை பெற்றோர்களும் பாடசாலைகளும் சமூக நிறுவனங்களும் வழங்கவேண்டும் என்பதையும் அன்பாக கேட்டுக்கொள்கிறேன். இந்த வழிகாட்டல்களை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த பட்சம் ஒரு நூலை உங்கள் வாழ்நாளில் எழுதுவதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் முயற்சிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
அஷ்ஷெய்க் ஸப்ரி முஹம்மத் (நழீமி) MSc HRM&D (UK)