பாடசாலைகளை மீள ஆரம்பித்தலுக்கான முன்மொழிவுகளும் ஆயத்தங்களும்
வடமாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பித்தலுக்காக மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வடமாகாண கல்விச் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், மற்றும் அலுவலர்களுடன் கடந்த மே 21ம் திகதி நடாத்திய கலந்துரையாடலுக்கு இணங்க வடமாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்குரிய யோசனைகள் முன்வைக்கப்பட்டு அதற்கான தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் அரசினால் அறிவிக்கப்படும் திகதியில் இருந்து 4 கட்டங்களாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது.
முதலாவது கட்டமாக பாடசாலைகளை தயார்படுத்தும் துப்புரவு செய்தலும் (01 வாரம்) இதில்
அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலைச் சமூகத்தினரின் பங்கேற்புடன் கைகழுவும் நிலையம், நீர் வசதிகளை ஏற்படுத்தல், டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக சிரமதானம் மேற்கொள்ளல் அத்துடன் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளுக்கான புதிய நேரசூசிகள் தயாரிப்பு, பாடங்களை நடாத்துதல் தொடர்பாக ஆசிரியர்களுடன் ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்ளல், சமூக இடைவெளியைப் பேணக்கூடியவாறு ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருக்கத்தக்கவாறு ஏற்பாடு செய்தலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட வகுப்புக்களைப் பிரித்து இரு வேளை பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் திட்டமிடலை மேற்கொள்ளலும்.
2ஆம் கட்டமாக தரம் 10, 11, 12, 13 வகுப்புக்களை ஆரம்பித்தல் (2 வாரங்கள்) இதில் தரம் 10, 11, 12, 13 வகுப்புக்களை ஆரம்பித்தலும் நாளொன்றுக்கு தரம் 12, 13 இற்கு 4.30 மணித்தியாலங்களும் பாடங்கள் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக தரம் 5, 6, 7, 8 என்பவற்றை ஆரம்பித்தல் (01 வாரம் இதில் தரம் 5, 6, 7, 8, 9 வகுப்புகளை ஆரம்பித்து தரம் 5 இற்கு நாளொன்றுக்கு மூன்று மணித்தியாலங்களும் தரம் 6 தொடக்கம் 11 வரை 4 மணித்தியாலங்களும் 12, 13 இற்கு 4.30 மணித்தியாலங்களும் பாடசாலைகளை நடாத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
4ஆம் கட்டமாக நிலைமைகளை அனுசரித்து பாடசாலையின் சகல நடவடிக்கைகளையும் வழமையான நிலைக்குக் கொண்டு வருதல். அதாவது தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்றவறாகவும் கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமையவும் மாணவர் வரவு, ஆசிரியர் வரவு மற்றும் வழமையான நேரசூசி அமுலாக்கம் என்பவற்றை நியம நிலைக்குக் கொண்டு வருவதுடன் பாடசாலையின் சகல செயற்பாடுகளையும் அதன்பிரகாரம் தொடர்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள், கை கழுவும் செயற்பாடு, முகக்கவசம் அணிந்திருத்தல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதுடன் பாடசாலையில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு சுகவீனம் ஏற்படும் ஓர் நிலையில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பிலும் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களாலும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையைத் திறப்பது தொடர்பில் அரச அறிவித்தலை எதிர்பார்த்துள்ளோம்.
பாடசாலைகளில் கைகழுவும் நிலையங்கள், நீர்வளங்கல் வசதிகள், சுகவீன அறை ஏற்படுத்தல் என்பவற்றிற்காக மத்திய கல்வி அமைச்சினது 9.9 மில்லியன் ரூபா நிதி கல்வி அமைச்சின் பிரமாணங்களுக்கு அமைய பாடசாலைகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வெப்பநிலை அளவிடும் கருவி, சுகவீன ஓய்வு அறைக்கான தளபாடங்கள் என்பன நேரடியாக மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இவை தொடர்பில் கிடைக்கப்பெறும் உரிய நிதி பாடசாலைகளுக்கு விடுவிக்கப்படும்.
இதன் பொருட்டு பாடசாலைகளில் கைகழுவும் நிலையம் மற்றும் நீர் வழங்கல் வசதிகளை ஏற்படுத்தும் ஒத்துழைப்புக்காக வடமாகாணத்தின் 35 கல்விஅ கோட்டங்களிலும் தலா ஒவ்வொரு பாடசாலை வீதம் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க அமைப்பும் கிளிநொச்சி, துணுக்காய் ஆகிய கல்வி நிலையங்களின் மொத்தம் 75 பாடசாலைகளுக்கு இலங்கை சேவ் த சில்ரன் அமைப்பும் மற்றும் கிளிநொச்சியின் 12 பாடசாலைகளுக்கு கொய்கா (KOICA) செயற்திட்டத்தின் கீழ் OFERR நிறுவனமும் முன்வந்துள்ளன.
கொவிட் – 19 பரவல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கு மேற்குறிப்பிட்ட வசதிகள் பாடசாலைகளில் போதுமானவை அல்ல என்பதுடன், இவற்றை ஏற்படுத்துவதற்கு வழங்கப்படும் விசேட உதவிகளும் போதுமானவை அல்ல. எனவே இது தொடர்பில் பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் முதலான சகல சமூக நிறுவனங்களும் தத்தமது பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
-தினக்குரல்-
நன்றி -குகதாசன் குகநேசன்