K.t.Brownsen,
Career Guidance & Counseling,
(J/Aliyawalai C.C.T.M) &
Assistant Lecturer (Amazon College)
Career Guidance & Counseling,
(J/Aliyawalai C.C.T.M) &
Assistant Lecturer (Amazon College)
பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி? என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது தான். பிற்காலத்தில் தன்னை காத்து வந்த பெற்றோர்களே இல்லாவிட்டாலும், பணமோ பிற சொத்துக்களோ இல்லாவிட்டாலும், தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து விட்டாலும், தன்னம்பிக்கை இருந்தால் ஒரு குழந்தை மீண்டும் அனைத்தையும் பெற்று பிழைத்துக் கொள்ளும்.
அதனால் இளவயதிலேயே குழந்தையிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்க பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும்.
எல்லா குழந்தைகளுக்கும் சாதாரண வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை அறிவுத்திறன் உண்டு. சராசரியான மனிதனாக இந்த உலகில் வாழ்வதற்கும், அதற்குரிய கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குமான குறைந்தபட்ச I.Q வினை கடவுள் எல்லா குழந்தைகளுக்கும் அளித்திருக்கிறார். அதுதவிர ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதேனும் ஒன்றிரண்டு சிறப்புத் திறமையையும் அளித்திருக்கிறார். ஒரே வகுப்பில் படிக்கும் பல குழந்தைகளில் ஒரு குழந்தை பேச்சு போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாவதாக வருவது அக்குழந்தையின் சிறப்பு I.Q வின் காரணமாகத்தான். அச்சாதனையைக் கேள்விப்படும் பெற்றோர் ‘உன் வகுப்பில் படிக்கும் இன்னுமொரு மாணவன் என்னவெல்லாம் செய்கிறான், நீ உருப்படாதவன்’ என்று தன் குழந்தையை திட்டுவது குழந்தையின் தன்னம்பிக்கையை உடைக்கும் சுத்தியல் அடியாகும். இதைப் போன்று தான் எல்லாப் பெற்றோர்களும் தன் குழந்தையின் வயதை ஒத்த பிற குழந்தைகளின் சாதனைகளை பேசிப் பேசி ‘நீ ஒன்றுக்கும் தகுதியில்லாதவன்’ என்ற முத்திரையை குழந்தையின் மனதில் குத்திவிடுகிறார்கள். பின்னால் குழந்தையே ஏதேனும் சாதிக்கலாம் என நினைத்தாலும் ‘என்னால் முடியாது, நான் எதற்கும் தகுதியில்லாதவன், திறமைகள் அற்றவன்’ என்ற அவநம்பிக்கை அதன் மனதில் தோன்றிவிடுகிறது. இம்மனநிலையைப் போக்கி ‘என்னாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த பின்வருவனவற்றை செய்ய வேண்டும்.
*) குழந்தைகளிடத்தில் எதிர்மறையாகப் பேசுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். ‘நீ இப்படித்தான் தோல்வியடைவாய் என்று எனக்கு முன்பே தெரியும்’ என்பது போன்ற பேச்சுக்களை தவிர்த்து விட்டு ‘இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்து பயிற்சி செய்தால் வெற்றி பெறுவாய்’ என்று சொல்வது நல்லது. அத்தோடு எப்படி பயிற்சி செய்ய வேண்டும்? என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டும்? என்றெல்லாம் பெற்றோர் குழந்தைக்கு செய்து காட்டுவது மிகவும் நல்லது.
*) போட்டிகளில் எப்போதும் முதல் பரிசிற்கே முயற்சி செய்யாமல் மூன்றாம் பரிசிற்கு முதலில் முயற்சி செய்ய கற்றுக் கொடுங்கள். மூன்றாம் பரிசும் முக்கியத்துவம் வாய்ந்ததே என்பதையும், முழுத் தோல்வியை விட மூன்றாம் பரிசு நல்லதே என்பதையும் கூறி குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும். மூன்றாம் பரிசுக்கு முயற்சி செய்த குழந்தை ஆறுதல் பரிசு தான் பெறுகிறது என்றாலும் கூட அதையும் பாராட்டுவது, அடுத்தடுத்து முயற்சிக்க குழந்தையை ஊக்கப்படுத்தும். சிறுசிறு பரிசுகளைப் பெற்ற குழந்தையின் மனம் நாளடைவில் ‘என்னாலும் பெரிய பரிசுகளைப் பெற முடியும்’ என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளும்.
*) தோல்விகளும் வெற்றிகளும் நிகழ்வுகளின் இருவித பரிமானங்களே என்பதை சற்று விளக்கமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ எது நடந்தாலும் செய்யும் காரியத்தை விட்டு விடக் கூடாது, தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதே ஒருவரை திறமைசாலிகளாக மாற்றும் என்பதை எடுத்துக் காட்டுகளுடன் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
*) எல்லாவற்றையும் விட தான் தோல்வியடைந்த விடயங்களிலெல்லாம் தன் குழந்தைகளை வைத்து வெற்றியடைந்து கொள்ளும் மனப்பான்மையை பெற்றோர் விட்டுவிட வேண்டும். பெற்றோர்களின் கட்டாயங்களுக்காக ஆர்வமில்லாத விசயங்களிலெல்லாம் முயற்சித்து தோல்வியடையும் குழந்தைகளே அதிக அளவில் தன்னம்பிக்கை இல்லாமல் வளர்கின்றன. அக்குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோர்களை விட மோசமான தோல்வியாளர்களாக உருவாகின்றனர். தன்மீதான நம்பிக்கை தனக்காக செய்யும்போது தான் அதிகரிக்கும்.
இவ்வாறான வாய்ப்புகளை ஏற்படுத்தி குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.