மாணவர்களின் நடத்தை மீறல்களின் போது ஆசிரியர்களுக்கு ஏற்படும் உணர்வு நிலைகளினூடாக அவ் நடத்தை மீறலின் நோக்கங்களை கண்டறிதலும் அந் நடத்தை மீறல்களை கையாளுதலும்.
ஆசிரியர்களே மாணவர்களின் நடத்தை மீறல் இடம்பெறும்போது வகுப்பறையில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் அல்லது மனநிலைகளை வைத்துக் கொண்டு அந்த மாணவர்களின் நடத்தை மீறல்களின் நோக்கங்களை கண்டுபிடிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் கண்டுபிடிக்க முடியும்.
உங்களுக்கு எரிச்சலான மனநிலை தோன்றுகின்றது என்றால் அங்கு அந்த மாணவனின் நடத்தைமீறல் கவனத்தை ஈர்த்தலை நோக்கமாக கொண்டுள்ளது
உங்களுக்கு கோபம் அல்லது ஆத்திர உணர்வு ஏற்படுகின்றது என்றால் அங்கு அந்த மாணவனின் நடத்தைமீறலின் நோக்கம் வகுப்பின் அதிகாரத்தைக் கைப்பற்றுலை அடிப்படையாகக் கொண்டது.
உங்களுக்குள் மன வேதனையுடன் கூடிய உணர்வு நிலை ஏற்படுகின்றது என்றால் அங்கு மாணவனின் நடத்தை மீறலின் நோக்கம் பழிவாங்குதலை அடிப்படையாக கொண்டதாக காணப்படுகிறது.
உங்களுக்கு ஆர்வக் குறைவு அல்லது எப்படியோ ஒழிந்து போங்கள் எனும் உணர்வு நிலை தோன்றுகின்றது என்றால் அங்கு மாணவரின் நடத்தை மீறலின் நோக்கம் தோல்வியில் இருந்து தப்பி ஓடுதலை அடிப்படையாகக் கொண்டது.
மேற்கண்ட விடயங்கள் சிலருக்கு ஆச்சரியம் தரலாம் ஆனால் நம்மால் ஒவ்வொன்றையும் தனித்தனியே விளக்க முடியும் என்கின்றார் லிசா அரோன்சன் எனும் கல்வி உளவியலாளர்.
முதலில் நாம் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மாணவர்களின் நடத்தை மீறலுக்கு வருவோம்.
ஒவ்வொரு சராசரி மாணவரும் தனக்கென கவனத்தை எதிர்பார்க்கிறார்கள். அது இல்லை எனத் தோன்றும் போதும் நடத்தை மீறி அதை பெறுகிறார்கள். வகுப்பறை ஒழுங்குக் குலைவை தொடர்ந்து ஏற்படுத்தி உங்களை எரிச்சல் அடைய வைத்து கவனத்தை பெறுகிறார்கள்.
முழு வகுப்பே அவரைத் திரும்பிப் பார்க்காத வரை ஓய மாட்டார்.
சரி இத்தகைய மாணவரை கையாள்வது எப்படி? கீழ்கண்ட விஷயங்களை பரிசீலிக்கலாம்.
கவனத்தை ஈர்க்காத பொழுதுகளில் அவர்களை வரிந்து பாராட்டுதல் அவர்களது நடத்தை மீறல்களை கவனியாமல்/ கண்டுக்காமல் புறக்கணித்து பாடத்தின் மீது கவனம் ஏற்பட வைத்தல். முழு வகுப்பின் ஆதரவு நாடி கவனம் பெற வைக்கும் அவரது நோக்கத்தை உடைத்தல்.எதிர்பார்க்காத போது அவர் மீது அதீத கவனம் செலுத்துதல்
அடுத்து நாம் அதிகாரத்தை பெறத் துடிக்கும் மாணவரின் நடத்தைமீறல் பிரச்சனைக்கு வருவோம்.
சில மாணவர்கள் தாங்கள் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். அதிகாரம் தேடி பரிதவிக்கும் அவர்கள் உங்களது அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்துவது அதற்கான ஒரே வழி என நினைக்கிறார்கள். தன் கட்டுப்பாட்டில் தான் வகுப்பறை உள்ளது என அவர்கள் நம்பும் போது மட்டுமே வகுப்பறையில் தாம் இருக்கின்றோம் எனும் உணர்வை பெறுகிறார்கள்.
இத்தகைய மாணவர்களை கையாள்வது எப்படி கீழ்கண்ட விஷயங்களை பரிசீலிக்கலாம்.
நமது அதிகாரம் உரிமை கேள்விக்குட்படுத்தப் அளவற்ற கோபத்தில் உடனடியாக அடி உதை என்ற சபலம் ஏற்படும் சுய கட்டுப்பாடு தேவை. இவ்வகை அதிகாரம் தேடும் குழந்தைகளை சமாளித்து வகுப்பை கட்டுக்குள் கொண்டுவரும் ஒரே தீர்வு சரி… இப்போ உட்கார்ந்து எழுது…. வகுப்பு முடிந்ததும் என்னை வந்து பாரு … என பிரச்சனையிலிருந்து நாம் அதாவது ஆசிரியர்கள் வெளிவந்துவிடுதலே சிறப்பானது. பின்னர் அம் மாணவருடன் கதைக்கும் போது நாளை வகுப்பில் நீதான் விட்டுப் பாட கொப்பிகளை எல்லோரிடமும் பெற்று அடுக்கி வைக்க வேண்டும். நீ நாளை வருகை பதிவேடு எடுத்துக் கொண்டு வரவேண்டும். நாளை முதல் நீ ஒரு மாதம் வகுப்புத் தலைவராக இருக்கவேண்டும் என நாளுக்கு நாள் சொல்லி செய்வியுங்கள் அம் மாணவன் உங்களுக்குள் வந்துவிடுவான்.
அடுத்து பழிதீர்த்தலை புரிந்துகொள்வோம்.
மாணவர்கள் உங்களால் அவமானப்படுத்தப்பட்டதாகவோ தோற்கடிக்கப்பட்டதாக எல்லாத் துன்பங்களுக்கும் நீங்களே காரணம் என நினைப்பதாலோ உங்களை பழிவாங்க அறிந்தோ அறியாமலோ முடிவு செய்கிறார்கள். பழி தீர்ப்பது என்பது உங்களுக்கு உடல் வலி ஏற்படுத்துதல், வார்த்தைகளால் சுடுதல்,வகுப்பறையில் பேசியே உங்களுக்கு எதிராக மாணவர்களை திருப்புதல். சுவரில் உங்களைப் பற்றி எழுதுதல் உங்கள் பொருட்களை சேதப்படுத்துதல் மற்றும் வகுப்பில் கலந்து கொள்ளாமல் பிடிவாதமாக சும்மா இருத்தல் உங்களது அபிமானம் பெற்ற மாணவர்களை அவமதித்தல் என பல வகைகளில் பழிவாங்கும் எண்ணங்களை கொண்ட நடத்தை மீறல்கள் ஏற்படலாம்.
பழிதீர்க்கும் மனநிலை குழந்தைகளை சமாளிப்பது எப்படி ??
ஒன்றை முதலில் நினைவில் வையுங்கள் நம்மை பழி தீர்க்க நினைக்கும் ஒரு குழந்தை ஏற்கனவே அளவற்ற வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறது. இப்போது அதற்கு ஆதரவு, அன்புறவு மற்றும் பாதுகாப்பு அவற்றை வழங்கும் பெரும் கடமை நமக்கு உண்டு எனவே திருப்பி தாக்க நினைக்காதீர்கள். நம்பிக்கை தரும் நல்லுறவை அவரோடு ஏற்படுத்திக் கொள்ளுதல் உங்களது நோக்கமாக இருக்கவேண்டும். அவரை நீங்கள் பழிதீர்க்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது அவரை உங்களது பாடத்தை விட்டே அது வெறுத்து ஒதுக்கி வைத்துவிடும் அவரது வாழ்க்கையையே அது பாதிக்கும் அப்படி செயற்பாட்டை நாம் செய்ய வேண்டாமே…..
மற்றவர்கள் முன் அவரை சின்னச் சின்ன வெற்றிகளுக்குக் கூட பாராட்டி புகழ்ந்து தக்க வைப்பது தான் புத்திசாலித்தனம் தனம். மனம் விட்டுப் பேசி விட அவருக்கு உதவுங்கள். படிப்படியாக அவர் மாறுவதை நீங்கள் பார்க்கலாம்.
தோல்வி பயத்தில் நம்மை புறக்கணிக்கும் குழந்தையைப் பற்றி பார்ப்போம்.
சில குழந்தைகள் தங்களால் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களை கல்வி விஷயத்தில் ஈடுசெய்ய முடியாத மன வலியோடு இருப்பார்கள். தொடர்ந்து லீவு எடுத்தல் அல்லது வகுப்பின் முக்கிய அம்சங்களை கவனியாமல் விட்ட பின்பு எதையும் பின் தொடர முடியாது எனக்கு படிக்கிறது புரியாது எனும் மன நிலைக்கு ஆளாகி மீண்டும் மீண்டும் தோற்பதை விட முயற்சி செய்யாமல் இருப்பதே நல்லது என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
கற்றலில் இருந்து தப்புதல் தோல்வி பயம் மற்றும் போதாமை குழந்தைகளை சமாளிப்பது எப்படி?
பொறுமையுடன் அவர்களுக்கான பயிற்சியை தொடங்க வேண்டும் அவர்கள் எந்த இடத்தில் கல்வியில் இருக்கிறார்களோ அங்கு இருந்து தொடங்க வேண்டும் எங்கே எப்படி இருக்க வேண்டுமோ அங்கு இருந்து அல்ல. அவர்களது வேலைகள் மீதான விமர்சனங்கள் கிண்டல்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.
சிறிய முயற்சியையும் பாராட்டுங்கள் வேண்டுமென்றே சிறு சிறு வேலைகளில் ஈடுபட வைத்து அதனை ஊக்கப்படுத்தி மட்டுமே பெரிய வேலைகளில் ஈடுபாடு வர வைக்க முடியும்.
எனவே மாணவர்களின் நடத்தை மீறல்களின் பின்னே உள்ள நோக்கத்தை நன்கறிந்து நாம் அவற்றுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வகுப்பறையை கற்கும் சொர்க்கபுரியாக மாற்றமுடியும்
செவிலியர் (Nurse) வேலை என்றாலே இரத்தம் கண்டு மலசலம் கண்டு அருவருக்காமல் பொறுமையோடும் நோயாளியே குறியாக இருந்து பணியாற்றுவது போல ஆசிரியர்களான நாம் பிள்ளைகளே முக்கியம் எல்லா பிள்ளைகளும் ஒன்று போல அல்ல என்பதை உணர்ந்து சகிப்புத் தன்மையுடனும் ஏராளமான பொறுமையுடனும் ஈடுபாட்டோடும் நம்மை அர்ப்பணித்தோம் அர்ப்பணிக்கின்றோம் அர்ப்பணிப்போம் எனும் மனநிலையை உருவாக்கி கற்றலையும் கற்பித்தலையும் சாத்தியமாக்குவோம்.
S.j.Aathy
Child psychology
Mu/ vidyananda college.