ஆரம்ப பிரிவுக்குள் உள்ளடங்கும் தரம் 5 மாணவர்களுக்கு பல்வேறு அடிப்படையில் கல்வி புகட்டப்படுகின்றது. இக்கல்வி ஆரம்பத்தில் மாணவர்களின் கற்றல் தேர்ச்சிகளை வலுப்படுத்தும் நோக்கிலே வழங்கப்பட்டது. ஆனால் தற்காலத்தில் பெற்றோரின் கௌரவத்திற்காகவும் , கற்பிக்கும் ஆசிரியர்களின் போட்டித் தன்மைக்காகவும்,பாடசாலையின் வலுவை உறுதிப்படுத்துவதற்காகவும் மாத்திரமே கல்வி புகட்டப்படுகின்றதா என்ற சந்தேகம் தோன்றுகின்றது.
தரம் 5 மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி குறிப்பிட்டளவு கற்றல் தேர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் கற்பிக்கப்பட்டாலும், தற்காலத்தில் அது ஒரு சுமையாக தென்படுகின்றது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெறும் மாணவர்களில் குறைவான எண்ணிக்கையினரே உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்கின்றனர்.காரணம் கல்வியானது தரம் 5இல் திணிக்கப்படுவது போல தரம் 6இல் கற்பிக்கப்படுவதில்லை.
இவ்வடிப்படையில் பார்த்தால் பத்து வயதையுடைய பிள்ளைகளுக்கு போதிக்கப்படும் கல்வியின் வேகத்தை அறியக் கூடியதாக உள்ளது. தரம் 5 இல் புகட்டப்படும் கல்வியைப் போல் அடுத்து வரும் தரங்களில் கல்வி புகட்டப்படும் வீதம் குறைவாக இருப்பதனால் மாணவர்களின் இடைநிலைக் கல்வியானது வற்றிப் போகின்றது. உளவியலாளர்களின் கருத்துப்படி பத்து வயதுப் பிள்ளை விளையாட்டிலும், கல்வியிலும் சரிசமனாகவே ஈடுபடுதல் வேண்டும்.
ஆனால் இங்கு தரம் ஐந்து மாணவர்கள் என்றாலே விளையாட்டுக்கு இடமில்லை. இம்மாணவர்களை எந்நேரமும் பாடசாலையிலும், தனியார் வகுப்புச் சூழலிலுமே காணக் கூடியதாக இருக்கின்றது. ஒரு மாணவன் தனது கற்றலை பாடசாலைச் சூழலில் இருந்து மாத்திரம் பெற்றுக் கொள்வது சாத்தியமற்ற விடயமாகும். பல்வேறு சூழல்களில், பல்வேறு விதமான கற்றலை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
தரம் 5 மாணவர்களுக்கு பாடசாலையிலும் சரி , தனியார் வகுப்புகளிலும் சரி வெறும் புத்தகப் பாடமே புகட்டப்படுகின்றது. மாறாக செய்முறைப் பயிற்சிகள் அதாவது பரிசோதனை செய்து கற்றல் முறையானது பெரிதளவில் கற்பிக்கப்படுவதில்லை. இன்றைய நிலையில் ஒரு மாணவன் எவ்வளவு மனனம் செய்து படித்தாலும் அதை விட பரிசோதனை செய்து சுயகற்றல் மூலமே அதிகமான விடயங்களை உள்வாங்குகின்றான் என ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு இருக்கையில், வெறும் புத்தகப்படிப்பானது எவ்வகையில் நினைவிலிருக்கும்?
இம்மாணவர்களுக்கு இந்த வயதிலே தாய்ப் பாசம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்பு என்பவை அத்தியாவசியமானவையாகக் காணப்பட்ட பொழுதும், தரம் 5 மாணவர்களுக்கு இந்த அரவணைப்பு கிடைக்காமல் போகின்றது. இம்மாணவர்கள் தங்களது வீடுகளில் நிம்மதியாகத் தங்கி இருப்பதற்கே நேரம் போதாமல் உள்ளது.
அதுஒருபுறமிருக்க, பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களின் நிலைமை பெரும் பரிதாபமாகும். சித்தியடையாத மாணவர்கள் சிறுவயதிலேயே உளரீதியாக பாதிக்கப்படுவது மட்டுமன்றி ஏமாற்ற உணர்வுக்கு உள்ளாகின்றனர்.
எது எவ்வாறிருப்பினும், இலங்கையின் எழுத்தறிவு வீதமானது 98% ஆகக் காணப்படுவதற்கு தரம் 5 மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியும், அதன் வெற்றியும் ஒரு வகையில் காரணமாக இருந்தாலும் இது பயனற்றதேயாகும். தரம் ஐந்தில் வழங்கப்படுகின்ற கல்வி மாணவர்களுக்கு ஒரு சுமையாக இல்லாத வண்ணம் திட்டமிடப்பட வேண்டும்.அவர்கள் சின்னஞ்சிறியவர்கள் என்பதை மறந்து விடலாகாது.
(Thinakaran)
பொ. யந்துஜா,
(இரண்டாம் வருட சிறப்புக்கற்கை,
கல்வி, பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்)
(இரண்டாம் வருட சிறப்புக்கற்கை,
கல்வி, பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்)