மாணவர்கள் எதிர்நோக்கும் தொழில்நுட்ப சவால்கள்
நாட்டின் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படுவது தொடர்பான வதந்திகளை இந்த நாட்களில் நாம் அடிக்கடி கடந்து வந்திருக்கின்றோம். கிட்டத்தட்ட நான்கரை லட்சம் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும், இரண்டரை லட்சம் ஆசிரியர்கள் மற்றும் இன்னும் சில ஆயிரம் இதர கல்விச் சேவை ஊழியர்கள் என இலங்கை சனத்தொகையின் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கினர் இந்த கொரோனா நோயின் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான சீரற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அறிவுப் பொருளாதாரத்தை நோக்கிய வளர்முக நாடுகளின் போக்கிலே தற்போதைய நிலைமையானது மிகவும் சவாலானதாக அமைந்துள்ளது. இது நாடு என்கிற ரீதியில் இலங்கைக்கு பின்னடைவான நிலைமையே!
தற்போது கொரோனா தாக்குதலை சமாளிக்க இலங்கை கல்விப்புலமானது தகவல் தொழிநுட்பத்தை கேடயமாக ஏந்தி நிற்கின்றது. whats-app, Zoom, Google Forms, YouTube, Telegram போன்ற செயலிகள் என்றுமில்லாதவாறு பயன்படுத்தப் படுகின்றன. அநேகமாக ஒவ்வொரு ஸ்மார்ட் அலைபேசியும் நிரம்பும் அளவுக்கு தகவல் பரிமாற்றமானது நடந்தேறி வருகின்றது. கொரோனா அவசரகால நிலைமையில் Work From Home (WFH) என்னும் எண்ணக்கரு அதிகமான நாடுகளில் தற்போதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை இலங்கை அரசாங்கமும் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தது. இலங்கையின் அரச துறைகளை பொறுத்த மட்டில் பெரும்பாலும் MANUAL முறைமையே கைக்கொள்ளப்படுகின்றது. அநேகமாக அனைத்து துறைகளுக்கும் WFH என்பது மக்களுக்கான உயரிய சேவை வழங்கலாக அல்லாது அடுத்த தசாப்தங்களில் எதிர்நோக்கக் கூடிய இணைய அடிப்படையிலான முழுமையான சேவை வழங்கலுக்கான அடித்தளமாகவே அமைந்துள்ளன. இம் முயற்சியானது வரவேற்கத்தக்கதே! WFH இன் தாக்கம் எந்தளவுக்கு ஏனைய துறைகளில் ஆக்கபூர்வமாக இருந்ததோ கல்விப் புலத்தில் சற்றே அதிகளவு காணப்பட வேண்டிய தேவையும் வாய்ப்புக்களும் நிலவியது உண்மையே. கல்வி நிறுவனங்களின் நடவடிக்கைகள் எல்லாம் வெளிப்படையாக பார்க்கும் போது மிகவும் சுறு சுறுப்பான இயக்கம் போல தோன்றினாலும் இவை எமது நாட்டின் தன்மைக்கு ஒத்துப் போகக் கூடியதா? என்று நாம் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திப்போமாகில் சாதகமான நிலைமைகளோடு பாதகமான நிலைமையும் காணப்படுகின்ற்து என்பதே உண்மையாகும்.
முதலில் இலங்கையின் தகவல் தொழிநுட்ப கல்வி வளர்ச்சி தொடர்பாக நோக்கும் போது, இங்கு கல்வி நடவடிக்கைகள் 1939ம் ஆண்டின் 31ம் இலக்க கல்விச்சட்டத்தினால் ஆளப்பட்டுவருகின்றது. 1945 முதல் கன்னங்கராவின் அயராத முயற்சியின் வரப்பிரசாதமே இலங்கைப் பிரசைகளுக்கான இலவசக்கல்வி ஆகும். இலங்கைப் பாடசாலைக் கல்வி வரலாற்றில் பல்வேறு தொழிற்கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும் கிடைத்த மாற்றம் பெரிதாய் எதுவுமில்லை. மேலும் 2006 ம் ஆண்டளவில் தான் க.பொ.த சாதாரண தர பாடத்திட்டத்தில் 3ம் தொகுதியில் ஒரு பாடமாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் சேர்க்கப்பட்டது. அத்துடன் க.பொ.த உயர் தர பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் சேர்க்கப்பட்டதுடன் தகவல் தொழிநுட்பம் எனும் பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்கலைக்கழகங்களிலும் மேற்படி தொடர்புடைய பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்பு 2012 இல் முதன் முதலாக தரம் 6 இலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடநெறியானது நடைமுறைச் சாத்தியமாக ஆண்டு 2018 ஆனது. இவற்றின் வெளிப்பாடாக இலங்கையில் கணனி அறிவு வீதமானது நகர்ப் புறங்களில் 39.2% ஆகவும் கிராமப் புறங்களில் 25.5% ஆகவும் மலையகத்தில் 9% ஆகவுமே காணப்படுகின்றது.
இந்த நிலைமையிலும் நாட்டின் எதிர்கால வித்துக்களை தேடலின்பால் இட்டுச்செல்லும் மிக முக்கியதொரு பரிணாமத்தை கொரோனா நமக்களித்திருக்கின்றது. கல்வி வளங்களை தேடியறிவதற்கும் அவற்றை பயன்படுத்துவதற்குமான சந்தர்ப்பங்களை அது வழங்கியிருப்பதனை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எனினும் தகவல் தொழிநுட்ப உலகில் மிகவும் பிரபலமான சித்தாந்தம் இலக்கமுறை இடைவெளி ‘Digital Divide’ என்பதாகும். பின்நவீன நகரம் முதல் கடைக்கோடி கிராமம் வரைக்கும் தகவல் தொழிநுட்ப அணுகலில் காணப்படும் இடைவெளியினை இது பேசுகின்றது. அதாவது இலங்கையினை பொறுத்தவரையில் பால் ரீதியில், புவியியல் ரீதியில், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ரீதியில் கணணியை பயன்படுத்துவதற்கான மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன என UNICEF இன் ஆய்வு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
சாதாரணமாக நமது குடும்பங்களில் அநேக ஆண் பிள்ளைகள் கணணியை அல்லது ஸ்மார்ட் தொலைபேசியை பயன்படுத்தும் அதே வேளைகளில் பெண் பிள்ளைகளுக்கு அவை மறுக்கப்பட்டிருக்கின்றன. மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்தோடு இன்னும் நாட்டின் பல்வேறு கிராமங்களில் ஒரு கணனி கூட இல்லாத நிலைமையும் காணப்படுகின்ற அதேவேளை பல பகுதிகளில் இன்னமும் சரியான தொலைபேசி COVERAGE கூட முறையாக இல்லை. இவ்வாறு இருக்க நாட்டில் சுமார் 7 கட்டண இணைய சேவை வழங்குநர்கள் (ISP ) காணப்படுகின்றார்கள். இவர்களது இணையச் சேவை வழங்கலின் தராதரம் ஊரறியும். இணையத்தினை அணுகும் வசதியானது நகர் புறத்தவர்களுக்கே முறையாக வாய்த்துள்ளது.கிராமத்தவர்கள் வசதி இருந்தாலும் இணைய அணுகலுக்கான வீச்செல்லை பற்றாக்குறை காரணமாக விரைவான அணுகலை இழக்கின்றனர். எனின் அன்றாடம் சோற்றுக்கே கஷ்டப்படும் குடும்பங்களை உள்ள பிள்ளைகளின் நிலை குறித்து நாம் பேசவும் வேண்டுமா????
இலங்கை வரலாற்றில் அரசானது நாட்டில் இலக்கமுறை இடைவெளியினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் உள்ளது. உதாரணமாக ICTA அனுசரணையில் நாட்டின் மிகவும் பின் தங்கிய இடங்களில் Nenasala ஆய்வுக்கூடங்கள் , ஆயிரம் பாடசாலைகளின் தொழிநுட்ப ஆய்வு கூடங்கள் (மகிந்தோதய) என்பனவற்றை குறிப்பிடலாம். எனினும் இவற்றை பயன்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளை எமது நாட்டின் அடிமட்ட சமூகம் எதிர் நோக்குகின்றது. இதற்க்கு காரணம் இவை அமைக்கப்பட்ட நோக்கத்தை மறந்து இவற்றின் பயன்பாடுகள் அமைந்துள்ளதுதான்.
சரி! உருவாக்கப்பட்ட whats App குழுக்கள் பற்றி ஆராயலாம். ஒவ்வொரு பாடசாலைகளும் தனக்கேற்றபடி ஒவ்வொரு தரத்துக்கும் ஒவ்வொரு குழுப்படி உருவாக்கி உள்ளது. இலங்கையில் காணப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை வகுப்பு ரீதியில் வகைப்படுத்தும் போது ,
1-5 வரையான தரங்கள் = 3884
1-8 வரையான தரங்கள் = 181
1-11 வரையான தரங்கள் = 3262
1-13 வரையான தரங்கள் = 1866
6-11 வரையான தரங்கள் = 20
6-13 வரையான தரங்கள் = 981
என மொத்தமாக இலங்கையில் 10194 பாடசாலைகள் காணப்படுகின்றன. சராசரியாக 11 குழுக்களை கணக்கு வைத்தாலும் கிட்டத்தட்ட 121000 குழுக்கள், காணப்படும் 98 கல்வி வலயங்களில் பாடரீதியாக ஒரு வலயத்துக்கு 20 குழுக்கள் எனக் கொண்டால் அண்ணளவாக அதில் ஒரு 2000 குழுக்கள் ஆக மொத்தம் 123000 குழுக்கள். மேலும் இவை போதாதென ஒவ்வொரு கல்வி வலயமும் தரம் 5, தரம் 11, தரம் 13 மாணவர்களுக்கு என online பரீட்சைகளை நடாத்துகின்றன (அநேகமாக எல்லாத் தரங்களுக்கும் நடைபெறுகின்றன). இப் பரீட்சைகளில் அனைத்து மாணவர்களும் இணையத்தின் மூலம் பங்கு பற்ற முடியும். மேலும் இன்னும் புதிதான தனியார் கல்வி விடயதானங்களுக்கான சில Facebook கணக்குகள் மற்றும் you tube கணக்குகள் என பல ரகங்கள். எனினும் இந்த Whats App குழுக்கள் மூலம் நாட்டின் குறித்தளவு மாணவர்களே இக் கல்வி நடவடிக்கைகளில் இணைந்து கொண்டுள்ளனர் அல்லது பலவந்தமாக பெற்றோரால் இணைக்கப்பட்டுள்ளனர்.
பல மாணவர்களுக்கும் குடும்பங்களுக்கும் இவை எட்டாக் கனியாக உள்ள போதும் மேற்படி வசதி வாய்ப்புகள் அமைந்த ஒரு பிள்ளை ஒருநாளைக்கு எதனை கற்பது? எந்த online பரீட்சையை செய்வது? எந்தக் குழுவில் இடப்படும் வினாத்தாள்களை செய்வது? எந்த காணொளியை பார்த்து சுயகற்றலை செய்வது? ஆசிரியர் மையக் கற்பித்தலில் இருந்து மாணவர் மையக் கற்பித்தல் எண்ணக்கரு விருத்தியடைந்திருந்தாலும் இன்னமும் அநேக பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் ஆசிரியர் மையமாகவே மாணவர்கள் பழகி விட்டார்கள். அத்தோடு வகுப்பறைக்கு கல்விக்கும் தான். இதனை நியாயப்படுத்தவில்லை மாறாக தற்போதைக்கு யதார்த்தம் இதுதான். மேலும் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு பல்வேறு கவனக்கலைப்பான்கள் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் புறம் தள்ளி அவர்கள் இந் நடைமுறையை பின்பற்றுவது என்பது சர்ச்சைக்குரியதே!
சராசரியான ஒரு பிள்ளைக்கு ஸ்மார்ட் போனை வழங்கி விட்டு அது பாடத்தை மட்டுமே கற்கும் என நம்புவது முட்டாள்தனமாகும். சோற்றையே காணாதவனுக்கு பிரியாணி கிடைத்தால் என்ன நிலைமையோ அதுதான் பலவீடுகளில் இன்று. சாதாரண ஒரு Whats App குழுவை எடுத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு சுமார் 20 விடயதானங்கள் இடப்படுகின்றன.பெரும்பாலான ஆசிரியர்கள் இதனை எவ்வாறு கையாள்கிறார்கள் என்றால் அந்த குழுவில் வருவதை இந்த குழுவுக்கும் இந்தக் குழுவில்வருவதை அந்தக் குழுவுக்கும் தள்ளிவிட்டு விட்டு ‘WFH’ படிவத்தை நிரப்பி கொடுத்துவிட்டு சமத்தாக இருக்கிறார்கள். மேலும் சில ஆசிரியர்கள் மினக்கெடும் அளவுக்கு அவர்களுக்கான வரவேற்பும் குறைவாகவே காணப்படுகின்றது.
இலங்கை அரசானது மும்மொழிக்கும் என தனித்தனியாக மாணவர் தரங்களுக்கு Whats App குழுக்களை உருவாக்கி அக் குழுக்கள் மூலம் மாத்திரம் பிரதான கற்பித்தலை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அதனை விடுத்து ஏன் தொலைக்காட்சி நிகழ்ச்சி (குரு கெதர) மூலம் பாடங்களை கற்பிக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் மேற்கூறப்பட்ட இலக்க முறை இடைவெளியே! இணைய வசதி அற்றவர்கள் வீணே புலம்பாது தங்களுக்குள்ள தொலைக்காட்சி மூலம் கற்றலை மேற்கொள்ளலாம். இருப்பினும் இத் திட்டம் கூட முழுமையான தீர்வாகாது என்பதே உண்மையாகும்.
மேற்படி கல்வி நிறுவனங்களின் கொரோனா தீர்வான நிகழ்நிலைக் கற்றல் கற்பித்தல் என்பது ஏற்றத்தாழ்வானது என்பதுடன் சமத்துவத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. எனவே அரச பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் போது அதன் பின்னரான கல்வி நடவடிக்கைகளின் ஊடாகவே பிள்ளைகளை மதிப்பிட முடியும். அதாவது சாதாரண தவணை பரீட்சைகளாகட்டும், பொதுப் பரீட்சைகளாகட்டும் மீளவான கல்வி நடவடிக்கைகளின் பின்னர் அல்லது பாடத்திட்டங்களை குறைப்பதன் மூலமே நடாத்தப்படலாம். சமமானவர்கள் சமமாக மதிக்கப் படவேண்டும் எனும் சமத்துவக் கொள்கையின் கீழ் ஒரு பிள்ளைக்கேனும் இந்த இணையம், தொலைக்காட்சி ஊடான கற்றல் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் திரும்பவும் அனைத்தையும் பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும்.
அப்போ என்னதான் இதற்கு தீர்வு! என்றால் பிள்ளைகளை அவர்கள் பாட்டில் விடுங்கள்! அவர்கள் சற்றே சுதந்திரமாக இருப்பது இங்கு பலருக்கும் எரிச்சலூட்டுகின்றது. இது உங்களுக்கு கிடைக்காத அவர்களுக்கு வாய்த்திருக்கும் அரிய காலம் என எண்ணிக் கொள்ளுங்கள். பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளியுங்கள்! அவர்களை சற்றே நிதானித்து வழிப்படுத்துங்கள்… புத்தகங்களை வாசிக்க கொடுங்கள்… இயற்கையோடு உறவாட கற்றுக் கொடுங்கள்! மற்றவர்களுக்கு உதவி செய்ய, அவர்களோடு பகிர்ந்து கொள்ள தூண்டுங்கள்! அவர்களை அவர்களாக இருக்க வழிவிடுங்கள்… இக்காலத்தை அவர்களுக்காகவே கொடுங்கள்… நாட்டின் பெரும்பாலான மாணவர்கள் வயல் வெளிகளிலும்… மைதான வெளிகளிலும்… ஓடித்திருந்து விளையாடுகின்றனர். .. நகர் புறங்களில் நாம் அதிகம் அழுத்த அழுத்த அவர்கள் கரங்களில் விதைத்துள்ள உபகரணம் … அந்த வித்துக்களை முளைக்க விடாமலே செய்து விடும்…
T. Kisnakanth
BSc Physical Science
LLB (reading) OUSL