கடந்த வாரம், நடந்த சம்பவமொன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்:
ஆசிரியரைத்தேடி மாணவர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆசிரியரிடம் அவர் வழங்கிய பயிற்சித் தாள்களைத் தரமுடியுமா எனக் கேட்டுள்ளார். ஆசிரியர், அவற்றைத் தான், ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பி விட்டதாகவும் இலக்கத்தைத் தந்தால், தான் அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறார். மாணவர், பதில் அளிக்காமல் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறார்.
குழம்பிப்போன ஆசிரியர், மறுநாள் மாணவரின் வீட்டைத் தேடிப்போனார். அம்மாணவர், மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிகிறார். அவர்களிடம் கணினியோ, திறன்பேசியோ கிடையாது. குறித்த மாணவரிடம் பேச முயல்கிறார்ளூ மாணவர் வெளியே வந்து, ஆசிரியரைச் சந்திக்க மறுக்கிறார். மாணவரின் தாயார் ”அவர் தன்னிடம் ‘வட்ஸ்அப்’ இல்லாததை அவமானமாகக் கருதுகிறார்” என்று பதிலளிக்கிறார்.. ஆசிரியர், பதிலேதும் இன்றி, விக்கித்து நிற்கின்றார்.
கொரோனா வைரஸ் பரவுகை, கல்வியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மிகப்பெரிது. அண்மையில், வெளியிடப்பட்ட ஆய்வுமுடிவொன்றின் அடிப்படையில், இலங்கையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களைக் (5 முதல் 18 வயதுக்குள்) கொண்ட வீடுகளில், 48 சதவீதமானோரிடமே கணினியோ, திறன்பேசியோ உள்ளது. அதேவேளை, இவர்களில் வெறும், 34 சதவீதமானோரிடமே இணையத் தொடர்பு உள்ளது.
இந்தத் தரவுகள் சொல்கின்ற செய்தி, மிக வலுவானது. இணைய வழிக்கல்வி, தொழில்நுட்பம் கற்பதற்கான புதிய வழிகளைத் திறந்துள்ளதுளூ நவீன கற்றல் போன்ற பேச்சுகளையும் சொல்லாடல்களையும் இப்போது காணக் கிடைக்கிறது. கேள்வி ஒன்றுதான், ‘யாருக்கு, இது வழிகளைத் திறந்துள்ளது?’
பொருளாதார அசமத்துவம் மோசமாக நிலவும் நாடுகளில், இலங்கை முதன்மையானது. செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி, தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, கல்வி, சுகாதாரத்துறைகளில் இவ்வேறுபாடு மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இந்தப் பெருந்தொற்று, மீண்டும் மீண்டும் ஏழைகளையே பல்வேறு வழிகளில் தாக்குகிறது. உதாரணமாக, இன்று மலையகத்துத் தோட்டப்புறங்களில் கல்வி மிக நெருக்கடியான நிலையில் உள்ளது. ஒருபுறம், அடிப்படை வசதிகள் இன்மை, தரமான பாடசாலைகள் இன்மை, கட்டமைப்புகள் இன்மை என்ற பிரச்சினைகள் செறிந்து காணப்படுகின்றன. மறுபுறம், போசாக்குக் குறைபாடு, மெல்லக்கற்கும் மாணவர்கள், பாடசாலை இடைவிலகல்கள் போன்ற நெருக்கடிகளும் காணப்படுகின்றன. இப்போது, இந்தக் கொரோனா வைரஸ் தொற்று, புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.
‘அரச பாடசாலைகளில், 34 சதவீதமானவற்றிலேயே கணினி வசதிகளும் 36 சதவீதமானவற்றிலேயே நூலகங்களும் 74 சதவீதமானவற்றிலேயே கழிப்பறை வசதிகளும் உள்ளன. 16 சதவீதமானவற்றில் நீரைப் பெற வழியில்லை. 15 சதவீதமானவற்றில் மின்சாரம் இல்லை’. இந்தப் புள்ளிவிவரங்கள், இலங்கையில் பாடசாலைக் கல்வியின் அசமத்துவத்தை விளக்கப் போதுமானது.
இன்று, கொரோனா வைரஸின் தாக்கத்தின் விளைவால், முன்தள்ளப்படுகின்ற ‘ஒன்லைன்’ கற்பித்தல் முறையானது, ஏற்கெனவே, கல்வியில் பின்தங்கி இருந்தவர்களையே மோசமாகத் தாக்கும்.
இலங்கையில், 1943ஆம் ஆண்டு, அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வியின் பலன்களை, நாம், ஒன்றன்பின் ஒன்றாக இழந்து வருகிறோம். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இலவசக் கல்வியைச் செயற்படுத்திய ஆசிய முன்னோடிகளுள் இலங்கையும் ஒன்று.
எனினும், அனைவருக்கும் கல்வி வாய்ப்பையோ, எல்லாப் பாடசாலைகளிலும் ஒப்பிடத்தக்க கல்வித் தரத்தையோ உறுதிசெய்ய, இலவசக் கல்விமுறையால் இயலவில்லை. ஆசிய நாடுகளிடையே எழுத்தறிவிலும் பாடசாலைக் கல்வியிலும் ஒரு காலம் முன்னிலை வகித்த இலங்கையில், ஆரம்பக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் பல தசாப்தங்கள் நீண்ட கரிசனையற்ற புறக்கணிப்பால் நெருக்கடியிலுள்ளன.
இலங்கையில் 9,905 பாடசாலைகள் உள்ளன. அரசாங்கம் 1,000 பாடசாலைகளின் விருத்தியை மட்டும் கவனிக்கிறது. பிறவற்றுக்கு என்ன நடக்கும்? இன்று, பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தில், அரைப் பங்கை மட்டுமே அரசு செலுத்துகிறது. மிகுதியைப் பெற்றோர் பொறுப்பேற்க வேண்டும். பெற்றோர், ஏதோ வகையில் பாடசாலைச் செலவுகளைப் பொறுக்க வேண்டும்; இது இலவசக் கல்வியல்ல.
இவ்வாறு, இலவசக் கல்வி நெருக்கடியில் இருப்பதன் பாதகமான விளைவுகள், ஏழை மாணவர்களையே பாதிக்கும். கொரோனா வைரஸ் உருவாக்கியுள்ள ‘ஒன்லைன்’ கற்பித்தல், கல்வி வியாபாரத்தின் இன்னோர் அங்கமாக மாற்றமடையும் ஆபத்தை, நாம் எதிர்நோக்கி நிற்கின்றோம்.
‘ஓன்லைன்’ கல்விமுறை, நகர்ப்புற மாணவர்களுக்குத் தீர்வாக இருக்கலாம். ஆனால், கிராமப்புற, மலையக மாணவர்களுக்கு இது தீர்வாக இருக்க முடியாது. நாம், விரைவாக அதற்கான மாற்றுவழிகள் குறித்து, யோசித்தாக வேண்டும். அந்த மாற்றுவழிகள், நடைமுறைச் சாத்தியமான, இலகுவான வழிகளாக இருத்தல் வேண்டும்.
இலங்கையில், தற்போதைய கணினிப் பாவனையை எடுத்துகாட்டிய ஆய்வுமுடிவைப் பகிர்ந்த ஒருவர், ‘இல்லாதவர்களும் எப்படியும் படிக்கத்தான் வேண்டும். யுத்தகாலத்தில் நாங்கள் எல்லாம் படிக்கவில்லையா?’ என்றொரு வினாவை முன்வைத்திருந்தார். மீண்டும் அதே கேள்வியே.
யுத்தகாலத்தில் யார் படித்தார்கள்? கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் மன்னாரிலும் தினம்தினம் குண்டுகளுக்குப் பயந்து, அஞ்சியிருந்தவர்களா அல்லது, இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தவர்களா. வரலாறு மீளும்; முதன்முறை துன்பியலாக, பின்னர் கேலிக்கூத்தாக…. அவ்வளவே!