முகாமைத்துவ செயன்முறையின் தற்கால போக்குகள்
எம்.என்.இக்ராம் Med (Reading @ OUSL)
றிபாத் கலாச்சார நிலையம்
முகாமைத்துவ செயன்முறைகள் கால, சூழல் வேறுபாடுகளுக்கேற்ப விருத்தியடைந்து வந்துள்ளன. ஆரம்பகாலத்தில் நிருவாக ஒழுங்கமைப்பினடிப்படையில் (Hierarchical and organized) அமைந்திருந்த முகாமைத்தவ நடவடிக்கைகள் தற்காலத்தில் நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாகவும் இணக்கப்பாடுடையதாகவும் (Flexible and Adaptable) மாற்றமுற்றுள்ளது.
ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை அடைந்து கொள்வதற்காக செயன்முறைகளில் (Process and Result Driven) கவனம் குவித்த நிலை மாறி கூட்டாக இலக்குகளை அடைவதற்குத் தேவையான அறிவையும் திறன்களையும் தனிநபர்களில் வளர்ப்பதனூடாக (Collaborative and mindful) விளைவுகளை அடைந்து கொள்ளும் முறையில் கவனம் செலுத்தும் நிலை தற்காலத்தில் தோற்றம் பெற்றுள்ளது.
முகாமைத்துவத்தில் தீர்மானங்கள் எடுப்பதில் அதிகாரத்திலும் அதிகார அடுக்குகளிலும்(Authority and Power) தங்கியிருந்த நிலை மாறி நிறுவனத்தின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக கீழுள்ளவர்களுக்கு அதிகாரமளித்து, அதிகாரத்தை கைமாற்றி (Authenticity and Transformational) செயற்படும் நிலைக்கு மாற்றமுற்றது. கட்டளையிட்டு கட்டுப்படுத்தும் (Command and Control) நிலையிலிருந்து புத்தாக்கத்திற்கு இடமளித்து விருத்தி செய்யும் (Innovative and Empowering) நிலைக்கு முகாமைத்துவ செயன்முறை மாற்றமுற்றுள்ளது.
கொள்கைகளையும் விளைவுகளையும் மையமாகக் கொண்ட நோக்கங்களை கொண்ட (Objectives Upon Policy and Result) முகாமைத்துவ செயன்முறையிலிருந்து மாற்றமுற்று குழு அடைவையும் செயலூக்கத்தையும் மையமாகக் கொண்ட நோக்கங்களை கொண்ட (Objectives based upon Team Performance and Dynamics) முகாமைத்துவச் செயன்முறையாக தற்காலத்தில் மாற்றம் கண்டுள்ளது.
முகாமைத்துவத் துறை சார்ந்த இந்த மாற்றங்கள் குறித்து கலிபோனிய பல்கலைக் கழகத்தைச் சார்ந்த Harold Koontz என்பவர் “The Management theory Jungle” என்ற ஒரு ஆய்வுக் கட்டுரையை The Journal of the Academy of Management, Vol. 4, No. 3, இல் 1961 டிசம்பரில் எழுதினார். பின்னர் அதனை மீளமைப்புச் செய்து The Academy of Management Review, Vol. 5, No. 2, இல்1980 ஏப்ரலில் “The Management Theory Jungle Revisited” என்ற பெயரில் பிரசுரித்தார். இந்த ஆய்வுக் கட்டுரை முகாமைத்துவச் சிந்தனைகளும் தத்துவங்களும் எவ்வாறு மாற்றமுற்று வந்துள்ளன என்பது தொடர்பாகவும் பிரதானமாக அவற்றில் உள்ள சிக்கல் தன்மைகள் குறித்தும் ஆராய்கின்றது.
இந்த மாற்றங்களும் வேறுபாடுகளும் தோற்றம் பெறுவதற்கான 11 காரணங்களை அல்லது அணுகுமுறைகளை இந்த ஆய்விலே Harold Koontz முன் வைக்கின்றார். இந்த பின்னணியிலிருந்து பார்க்கும் போது ஆரம்பகால நிருவாக தத்துவ விடயங்களின் அதீத முக்கியத்துவம் தற்காலத்தில் இழக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.
முகாமைத்தவம் என்பது அடுத்தவர்களைக் கொண்டு விடயங்களை செய்வித்தல் என்ற நிலை மாற்றமுற்று நிறுவனத்தை செயற்திறனும் உற்பத்தித் திறனும் கொண்டதாக இயக்குவித்தல் என்ற நிலைக்கு வந்துள்ளது. எனவே, திட்டமிடல், ஒழுங்குபடுத்தல், பணியிலமர்த்தல், நெறிப்படுத்தல் மற்றும் அடுத்தவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் என்ற செயன் முறைத் தொகுதியை விட நிறுவனத்தினுள் தொடர்பாடலையும் தேவையான உள்ளக கட்டமைப்பையும் ஏறபடுத்தல் என்பதற்கான தேவையே இன்று காணப்படுகிறது.
இந்த வகையில் முன்னர் இருந்த நிர்வாக தத்துவ விடயங்களை முற்று முழுதாக செயற்படுத்துவதற்கான தேவை இன்று இல்லை என்றே கூற வேண்டும். அவற்றில் தேவையான பகுதிகளை மாற்றமுற்று வரும் மகாமைத்துவச் செயன்முறை ஒழுங்கிற்கேற்ப பயன்படுத்திக் கொள்கின்ற போக்கே இன்று மேலோங்கி உள்ளது. இன்று புராதன கட்டுப்பாட்டு ஒழுங்கைப் பார்க்கிலும் ஜனநாயக தொடர்பாடல் முறையே சகல மட்டங்களிலும் வரவேற்கப்படுகிறது. இதனால், பணியாளர்களை பயன்படுத்தல் என்பதற்கு பதிலாக பணியாளர்களை விருத்தி செய்தலும் ஊக்கப்படுத்தலுமே முகாமைத்துவத்தில் பிரதான பங்கைப் பெற்று வருவதை அவதானிக்கலாம்.