ஆசிரியத்தில் வெற்றிபெற தொடர்ந்து வாசித்து பிறரும் பயன்பெற பகிர்ந்து விடுங்கள்.இல்லையேல் இப்பதிவை கடந்து செல்லுங்கள்.
(நேரம் பொன்னானது என்பதற்காக)
ஆயிரம் அர்ச்சனைகளை விட ஒரு ஆசிரியரின் வாழ்த்துச்செய்தி மேலானது என்பார்கள்.அத்தகைய வாழ்த்துச் செய்தியை வழங்கக்கூடிய ஆசிரியர்களாகிய உங்களின் கற்பித்தல் வெற்றி பெறுவதில் கல்வி உளவியல் பார்வையில் வகுப்பறை நிர்வாகம் முக்கியத்துவம் பெறுகின்றது.
அந்த வகையில் ஆசிரியர் பாட அறிவை கொண்டு நல்ல கற்பித்தல் முறைகளை பயன்படுத்தினாலும் அவர் தமது வகுப்பறையில் நல்ல நிர்வாகத்தை ஏற்பாடு செய்தாலன்றி அவருடைய பணியில் சித்தி காண முடியாது. ஆகவே வகுப்பறையில் ஒழுங்கு நிலைநாட்டப் படுவது அவசியம் ஆகும். இதனை ஆசிரியர் கடுகடுத்த முகத்துடனும் அதிகாரத் தொனியுடன் நிலைநாட்ட முடியாது.
தமது பாடங்களை ஆயத்த படுத்துவதுடன் ஆசிரியர் தாம் கற்பிக்கும் போது வகுப்பறையில் என்னென்ன இடர்பாடுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் சிந்தனை செய்தல் வேண்டும். பொதுவான சில குறித்த கட்டுப்பாடுகளை ஆசிரியர் ஏற்கனவே ஏற்பாடு செய்து பழக்கத்திற்கு கொண்டு வருதல் வேண்டும். வகுப்பறையில் மாணவர்கள் ஒழுங்குடன் நுழைதல், ஆசிரியர் வரும்போது எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தல், பயிற்சிகளை செய்து முடித்த பின்னர் அவற்றை ஒழுங்காக ஆசிரியரிடம் காண்பித்தல், ஆசிரியர் வாய்மொழி வினாக்கள் கேட்கும்போது ஒழுங்கான முறையில் விடை அளித்தல் போன்ற சாதாரணமான ஒழுங்குமுறைகள் வகுப்பறையில் நடைமுறையில் கொண்டுவரப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் வகுப்பறையில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அதிகாரத்தை பிரயோகிப்பதனால் நல்ல விளைவு கிடைக்காது. தமது ஆளுமை பண்புகளினாலும் கற்பிக்கும் திறமையினாலுமே அவர் கட்டுப்பாடுகளை மாணவர் ஏற்குமாறு செய்யலாம். அனாவசியமாக திணிக்கப்படும் கட்டளைகளை மாணவர்கள் ஏற்க்கமாட்டார்கள்.
வகுப்பறையில் மாணவர்கள் ஊக்கத்துடன் தமது வேலையில் முன்னேறுவதற்கு ஆசிரியர் ஜனநாயக முறையில் கடமையாற்றும் தலைவராக நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் தமது வகுப்பறையில் ஜனநாயக தலைமைத்துவப்பாங்கு (Leadership role) கொண்டவராக இருக்க வேண்டியதன் அவசியத்தை Lewin , Lippit & White ஆகியோர் நடாத்திய பரிசோதனையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அவர்கள் மூன்று தொகுதி மாணவர்களை தெரிவு செய்தனர். இத்தொகுதிகள் ஒவ்வொன்றும் திறமை, வயது, சமூகச் சூழ்நிலை ஆகியனவற்றில் சமமானவர்களை கொண்டதாக காணப்படும். முதலாவது தொகுதிக்கு ஒரு ஆசிரியர் கற்பிக்கும் போது அவர் சனநாயக முறையில் மாணவரின் அபிப்பிராயங்களையும் வரவேற்று அவர்களுடன் கலந்துரையாடி பணியாற்றினர். இரண்டாவது தொகுதிக்கு அவர் சர்வாதிகார முறையில் மாணவருக்கு பணிகளை பங்கிட்டு தனது முறைப்படியே மாணவர்களுக்கு தொழில் ஆற்ற வேண்டும் என்று பணித்தார். மூன்றாவது தொகுதிக்கு அவர் தலையிடாத முறையில் மாணவர் செய்யும் பணிகளில் கரிசனை காட்டாது நடந்துகொண்டார். பரிசோதனையில் கொடுக்கப்பட்ட பணியில் முதலாவது தொகுதியினர் அதிகூடிய முன்னேற்றம் பெற்றனர் என்றும் அத்தொகுதியில் சீரான சமூகக் கவி நிலை (SOCIAL CLIMATE) நிலவியது என்றும் காணப்பட்டது. இரண்டாவது தொகுதி மாணவர் ஆசிரியர் முன்னிலையில் பீதியுடன் பணியாற்றினார் எனவும் அவர் இல்லாத வேளையில் தம் இச்சைப்படி கட்டுப்பாட்டை மீறி நடந்து வந்தனர் எனவும் அறியப்பட்டது. மூன்றாவது தொகுதியினர் செய்வதறியாது குறிக்கோளின்றிஅவதிப்பட்டனரென்றும் பணியில் மனமுறிவே பெற்றனரெனவும் காணப்பட்டது. இப்பரிசோதனை மூலம் சனநாயக முறையில் அமைந்த நிர்வாகமே கூடிய பயனுள்ளது என்பது புலனாகின்றது.
வகுப்பறையில் ஒழுங்கை நிலைநாட்ட ஒரு குறிப்பிட்ட செயன்முறை இல்லை. அது ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்ற வகையில் அமையும் இதற்கு ஆசிரியரின் அனுபவமும் ஓரளவு வேண்டும் எனினும் சில குறித்த உத்திகளை நீங்கள் கையாளலாம்.
1.மாணவரின் பெயர்களை ஆசிரியர் அறிந்து அவர்களை அப்பெயராலேயே அழைத்தல் வேண்டும் இதுவே கூடிய தாக்கம் கொண்டது மாணவர்கள் வகுப்பறையில் குறிப்பிட்ட ஆசனங்களில் எப்போதும் உட்காருவது நன்று அவர்களை ஆசிரியர் அறிந்து கொள்வதற்கு இது உதவும்.
2.விடைத்தாட்களையும் புத்தகங்களையும் மாணவரிடம் பரிமாறுவதற்குரிய சில குறித்த திட்டங்கள் இருத்தல் வேண்டும் எல்லோரும் எழுந்தவாறு அங்கும் இங்குமாக நடமாடித் திரிந்து குழப்ப நிலையை ஏற்படுத்த ஆசிரியர் இடம் கொடுக்கக் கூடாது.
3. ஆசிரியர் மாணவரிற் கொள்ளும் மனப்பான்மை முக்கியமாகும். அவர் புன்முறுவலுடன் மாணவருக்கு ஏற்ற முறையில் உறுதியுடனும் , நேர்மையுடனும், ஒரு சார்பின்றி மாணவரிடம் அன்புடனும் பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
4. ஆசிரியர் பண்பான சொற்களை திருத்தமாக உபயோகித்தல் வேண்டும். கொச்சையான வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது அதிகாரமான தொனியில் கதைக்கக் கூடாது.
5.பாடங்களை ஆசிரியர் ஆயத்தம் செய்து மாணவர் ஒவ்வொருவரும் சித்தி பெறுமாறு செயல்களை கொடுப்பாரானால் அவர்கள் உற்சாகத்துடன் கற்பர். அப்போது ஒழுங்கு தானாகவே நிலவும்.
6.மாணவருக்கு கொடுக்கும் செயல்களும் பயிற்சிகளும் அவர்களுக்குத் தெளிவாக விளங்க வேண்டும் நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் எங்கு தொடங்கி எவ்வாறு முடிக்க வேண்டும் என்பது வரை மாணவருக்கு தெரிய வேண்டும்.
7.ஆசிரியர் கரும்பலகையில் எழுதும்போது எழுதுவதை மாணவர்கள் வாசிக்க முடியாதவாறு மறைத்து நிற்றல் கூடாது இதனால் குழப்ப நிலை உண்டாகலாம். மேலும் நீங்கள் கரும்பலகையில் எழுதும்போது புத்தகங்களை அடிக்கடி புரட்டுவதை அல்லது பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
8. கரும்பலகையில் எழுதும்போது எழுத்துக்களை மறைத்துக்கொண்டு தேவையற்ற விடயங்களை பேசிக்கொண்டும் எழுதுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
9.கொடுக்கப்படும் பயிற்சிகள் உடனுக்குடன் திரட்டப்பட்டு திருத்தம் செய்யப்பட்டு மாணவருக்கு கொடுக்கப்பட வேண்டும்.
10.மாணவரைத் தண்டிப்பதற்கு ஆசிரியர் பாட வேலைகளை பயன்படுத்தலாகாது. சில ஆசிரியர் பாடத்தில் பிற்போக்கான மாணவருக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதுண்டு சிலர் மாணவரை பாடசாலை நேரத்தில் பின் மறியல் செய்வதும் உண்டு இவை கற்பித்தலின் நோக்கத்திற்கு முரண்பட்டவை.
11. கற்பித்தலிலும் பாடவிடயத்திலும் ஆசிரியர் தாமும் உற்சாகத்தையும் விருப்பத்தையும் காட்ட வேண்டும் அப்போதுதான் மாணவரும் ஊக்கம் பெறுவர்.
12. ஆசிரியர் வகுப்பறையில் முழுநேரமும் ஒரே இடத்தில் நின்றவாறே உட்கார்ந்தவாறே கற்பிக்கும் முறையை மாற்றி அமையுங்கள். அத்துடன் சலிப்பு ஏற்படும்படி ஒரே தொனியில் கதைக்கவும் கூடாது.
13.மாணவருடன் வேண்டத்தகாத வாக்குவாதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். குறித்த பாடத்துடன் தொடர்பான கருத்து வாதங்கள் பயனுடையன.ஆனால் அவற்றில் ஆசிரியர் மனவளர்ச்சி உறுதியின்றி தமது சொந்த அபிப்பிராயங்களை திணிக்க முற்படக் கூடாது.
14.மாணவருடன் மரியாதையுடன் ஆசிரியர் நடந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் மாணவர் அவருக்கு கீழ் பணிவர் தண்டனைகளை குறைத்து வெகுமதிகளைக் கூட்டி கற்பித்தல் நன்று.
15.தவறிழைக்கும் மாணவரைப் பிறர் முன் தண்டிப்பது அல்லது தூற்றுவது தவிர்க்கப்படல் வேண்டும். மாணவரின் குற்றத்துக்காக தண்டனை அன்றி குறித்த மாணவரில் உள்ள வெறுப்பு மனப்பான்மையினனாலன்று என்பதை மாணவர் உணருமாறு ஆசிரியர் நடந்து கொள்ள வேண்டும். ஆகவே பழிவாங்கும் நோக்குடன் தண்டனை அளிக்கக்கூடாது.
16. ஆசிரியர் மாணவரின் உடலை வருத்தும் தண்டனை கொடுக்கக்கூடாது. வகுப்பறையில் நிலவும் சிறிய ஒழுக்க பிரச்சனையையும் அவர்தாமே சுமூகமாக தீர்க்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் மேலாதிகாரிகளிடம் அனுப்புவதை தவிர்த்து கொள்ளும் அதேவேளை
மாணவர்களின் முன்னால் டென்ஷன் சலிப்படைவதைத் தவிர்த்து கொள்ளுங்கள்.
17.சாதனங்களைப் பயன்படுத்தும் போது அதை பயன்படுத்தும் நேரத்தில் மாத்திரம் வெளியில் எடுங்கள் முடிந்ததும் உடனே அகற்றி விடுங்கள் இல்லை எனின் அது மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும்.
18.கருத்துக்களைதெரிவிக்கும் போது பேசும்போதும் நடிப்புடன் உணர்ச்சிகள் வெளிப்படக்கூடிய வாறு பேசுங்கள் தெளிவின்மை திக்குதல் இழுத்தல் கவர்ச்சி இன்மை என்பவற்றை தவிர்த்துக்கொள்ளுங்கள்
19. பிள்ளைகளின் சுயமரியாதையை மதித்திட பழகுங்கள்.உறவு நிலைகளில் எல்லைகளை பேணுங்கள்.அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகளின் தனிப்பட்ட விருப்பங்களையும் உணர்வுகளையும் மதியுங்கள்.குழந்தைகளை சமமாக போற்றி நேசியுங்கள். பிள்ளைகளின் ரகசியங்களை பேணுங்கள்.
ஆசிரியர்களான நாம் பிள்ளைகளே முக்கியம் எல்லா பிள்ளைகளும் ஒன்று போல அல்ல என்பதை உணர்ந்து சகிப்புத் தன்மையுடனும் ஏராளமான பொறுமையுடனும் ஈடுபாட்டோடும் நம்மை அர்ப்பணித்தோம் அர்ப்பணிக்கின்றோம் அர்ப்பணிப்போம் எனும் மனநிலையை உருவாக்கி வகுப்பறையை முறையாக நிர்வகித்து கற்றலையும் கற்பித்தலையும் சாத்தியமாக்குவோம்.
S.j.Aathy
Child psychology Teacher.
Mu/vidyananda college.