இலவச சீருடைக்கான வவுச்சர் விநியோகம்
இலங்கையின் கல்விச் சேவைகளில் இனமத பேதங்கள் கடந்து, மாணவர்களின் நலன் கருதி சம உரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கான முதலாவது வாய்ப்பு இலவசக் கல்வி திட்டமாகும்.1943இல் இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தை என வர்ணிக்கப்படுகின்ற சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கராவின் விதப்புரையின் பேரில் 1945 இல் இந்த இலவசக் கல்வித் திட்டம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனாலும் மாணவர்களின் வறுமை காரணமாக அவர்களின் வரவில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் மாணவரின் இடைவிலகல் அதிகரித்து இலவசக்கல்வியைக் கொண்டு செல்வதில் பலத்த சவால்களை அரசு சந்திக்க நேரிட்டது. இவற்றிலிருந்து மாணவரை மீட்டெடுத்து நாட்டின் கல்வித்துறையை காப்பாற்றுவதற்கு இலவசக் கல்வி மட்டும் வழங்குதல் உசிதமானதல்ல என உணரப்பட்டது. எனவே இலவச பாடப்புத்தகங்களும், அதனைத் தொடர்ந்து இலவச மதிய உணவுத் திட்டம், இலவசச் சீருடை என்று பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கற்பதற்கு கல்வியை இலவசமாகவும், அதற்காக புத்தகங்களை இலவசமாகவும், மதிய உணவை இலவசமாகவும், அணிந்து வருவதற்கு சீருடையையும் வழங்கும் உலகின் ஒரேயொரு நாடு இலங்கைதான்.
இலங்கையில் கல்விச் சேவையானது இலாபமீட்டும் முயற்சியில் செயற்படுத்தப்படாமல் மக்கள் நலனோம்பு சேவையாகவே செயற்படுத்தப்படுகின்றது. என்றாலும் இலங்கையின் பொதுக்கல்வித்துறையின் வீழ்ச்சிக்கும், குறைபாட்டுக்கும் காரணங்களும் இல்லாமல் இல்லை. இலங்கையின் பொதுக்கல்வித்துறையை பாதிக்கின்ற விடயங்களாக தவறான ஆளுகை, தவறான திட்டமிடல், அரசியல் தலையீடுகள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
1993இல் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் தலைவராக இருந்த ரணசிங்க பிரேமதாசவினால் மாணவரின் நலன் கருதி இலவச சீருடை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இலவச சீருடை திட்டத்தினால் மாணவர்கள் நன்மைகள் பெற்ற அதேவேளை, பல எதிர்வினைகளை அரசாங்கம் சந்தித்து வந்துள்ளது.
அதிலும் கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட பாடசாலை மாணவருக்கான சீருடைக்கான வவுச்சர் வழங்கும் திட்டம் நீடித்து நிற்குமா என்ற ஐயப்பாடு இப்போது ஏற்பட்டுள்ளது.
கொள்வனவு செய்கின்ற சீருடைத் துணிகளை களஞ்சியப்படுத்துவதனால் ஏற்பட்டு வருகின்ற தேவையற்ற செலவுகள், அத்துணிகளை மாகாணங்களுக்கு எடுத்துச் செல்லும் போது ஏற்படுகின்ற தேவையற்ற போக்குவரத்து செலவீனங்கள், இடைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறவும், அரசினால் ஒதுக்கப்படும் இதற்கான நிதி எந்தவொரு மூன்றாந் தரப்பினருக்கும் செல்லாது நேரடியாக மாணவருக்கு கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்தவுமென சீருடைத் துணிகளுக்குப் பதிலாக பாடசாலைகளில் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் அதிபர்களுக்கு இம்முறைமை தலைவலியை உண்டாக்கி வகுப்பாசிரியர்களுக்கு மேலதிக வேலைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தில் புதிதாக ஆடை விற்பனை நிலைய உரிமையாளர்களையும் இணைத்து சிக்கல் ஏற்படுத்தும் செயற்பாடாக இதனைப் பார்க்க வேண்டியுள்ளதாக பலரும் கருதுகின்றனர்.
ஏற்கனவே மாணவர் அடைவு வேலைத் திட்டங்கள் என்ற போர்வையில் ஆசிரியர்கள் தாங்கொணா மேலதிக வேலைகளை செய்து கொண்டு இருக்கும் நிலையில், இன்னுமொரு மேலதிக வேலை தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
உதாரணமாக வகுப்பிலுள்ள 35 இற்கும் அதிகமான மாணவர்களின் பெயரை எழுதியும், பாடசாலை கணக்கு இலக்கத்தை பதிந்தும், பிள்ளைகளதும்,பெற்றோரதும் கையொப்பங்களை கவனமாக வாங்கியும், வவுச்சர் பத்திரம் தொலையாதவாறு மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தும் ஆசிரியர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது.
மீண்டும் அடுத்த வருடத்திற்கான பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது துணியை வாங்கிய விற்பனை நிலையத்து பற்றுச்சீட்டை எதிர்பார்த்து ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டும். வவுச்சரின் நியாயத்தன்மைக்கான கணக்கறிக்கை காட்டுவது என்றெல்லாம் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக குறை கூறப்படுகிறது.
அதாவது,மாணவர்கள் வவுச்சரை பெற்றுக் கொண்டதிலிருந்து கடையில் துணியை வாங்கி அணிந்து கொண்டு வரும் வரைக்கும் ஆசிரியரே கல்வியமைச்சுக்கு பொறுப்புக் கூறும் நபராக உள்ளார்.
அத்துடன் இறுதியாண்டுப் பரீட்சைகள் நடந்து பெறுபேறுகள் வழங்குவதற்காக வினாத்தாள் மதிப்பீடுகளில் ஈடுபட்டும் இருக்கும் நிலையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வவுச்சர் வழங்கும் வேலை சுமையை ஏற்படுத்துகிறது. இவ்வாறான காரணங்களால் திருப்திகரமாக வகுப்பாசிரியர்கள் தங்களுக்குரிய வேலைகளை செய்து கொள்ள முடியாதுள்ளதாக குறை கூறப்படுகிறது.
மாணவர்களின் வகுப்பேற்றம், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் இலவச பாடப் புத்தக விநியோகம் என்பவற்றில் மாணவர்களை சமாளிக்க முடியாமலும்,பெற்றோரை சமாளிக்க முடியாமலும் இருக்கும் நிலையில் வவுச்சர் வழங்குவது பலத்த அசௌகரியங்களை உண்டாக்கி வருவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு வழங்கப்படும் வவுச்சர்களை கொடுத்த ஒரு சில நாட்களிலேயே தொலைத்து விட்டு மீண்டும் வகுப்பாசிரியர்களின் வீட்டுக்கே பெற்றோர் தேடி வந்து கேட்டுப் பயமுறுத்துவதும் உண்டு. இடைவிலகிய மாணவர்களின் பெற்றோர் வவுச்சர் என்றதும் வகுப்பாசிரியரை வீடு தேடி வந்து வவுச்சர் கேட்டு தொல்லைப்படுத்துவதும் உண்டு.
பாடசாலைகளில் நேரடியாக சீருடைத் துணியை வழங்கும் போது இருந்த ஓரளவு பாதுகாப்புக் கூட தற்போது இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
வழங்கப்படுகின்ற வவுச்சர் பத்திரங்களைக் கொடுத்து விற்பனை நிலையத்தில் வேறெந்தப் பொருளும் கொள்வனவு செய்யக் கூடாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் எப்படி இது சாத்தியமாகும்? கடைக்காரருக்கும்,பெற்றோருக்குமிடையிலான இரகசிய புரிந்துணர்வு காரணமாக வேறு பொருட்களை பெற்றோர் கொள்வனவு செய்யவும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் பிரதேசத்தில் குறிப்பிட்ட சில துணி விற்பனை நிலையங்களே கல்வியமைச்சின் அங்கீகாரம் பெற்ற கடைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் வலயக் கல்வி அதிகாரிகளிடம் ஏனைய விற்பனை நிலையங்கள் முரண்பட்டு வருவதையும், தங்களுக்கு வழங்குமாறு வற்புறுத்தியும் வருகின்றன. கல்வி அமைச்சின் அங்கீகாரம் பெற்ற கடைகள் என்று சொல்லிக் கொள்வதில் வரும் பெருமைகளால் விற்பனை நிலையங்களுக்குள் கசப்புணர்வுகள் ஏற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
யூ.எல்.எம்.ஹரீஸ்
வாழைச்சேனை விசேட நிருபர்
வாழைச்சேனை விசேட நிருபர்