மாணவர்கள் தாம் தயாராகிய வினாத்தாள் அல்லாத ஒரு வேறு கட்டமைப்பைக் கொண்ட வினாத்தாளுக்கு முகங் கொடுக்க நேர்ந்ததன் பின்னர் இது தொடர்பாக பல்வேறு தரப்புக்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு இதற்கான சலுகை புள்ளிகள் வழங்குவதோடு, பரீட்சைத் திணைக்களம் இது தொடர்பாக விசாரணைகளை நடாத்தி தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
இப்பின்னணியில் இக்கட்டுரை மாணவர்கள் நலன் சார்ந்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனும் நோக்கோடு வெளியிடப்படுகிறது.
———————————————————————————————————-
ஒரு நாட்டின் கல்வித்தரம், எழுத்தறிவுவீதம் மற்றும் அந்நாட்டினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் கல்வியும் அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் நாட்டின் அபிவிருத்திசார்ந்த விளைவுகளும் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவல்லன.
இலங்கையின் முதலாவது கல்வியமைச்சரான மதிப்பிற்குரிய சீ. டபள்யூ. டபள்யூ. கன்னங்கரா அவர்களால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வித்திட்டமும் அக்கல்வித்திட்டத்தில் உள்ளடடக்கப்பட்டிருந்த அம்சங்களும் இந்நாட்டினதும் நாட்டு மக்களினதும் கல்வி வரலாற்றில் ஏற்படுத்திய மாற்றமும் எமது நாட்டின் கல்வித்தரத்திற்கு வழங்கியுள்ள சேவையும் எத்துணை பெறுமதி வாய்ந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மேலும் இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் கல்வியைப் பெற்றுக்கொள்வது எந்தவொரு மாணவனதும் அடிப்படை உரிமையாகக் கொள்ளப்படுவது இதனை மேலும் வலுவூட்டும் ஓர் அம்சமாக அமைகின்றது.
இருப்பினும் எமது நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி நிலை போன்ற பல்வேறுபட்ட காரணிகளால் இலவசமாக ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைப் பயிலும் அனைத்து மாணவர்களுக்குமான உயர்கல்வியையும் இலவசமாக வழங்குவது இலங்கை அரசினால் சாத்தியப்படாத நிலையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை மூலம் போட்டியடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்தேர்வை இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.
நாடளாவிய ரீதியில் பரீட்சைக்குத் தோற்றும் மொத்த மாணவர்களில் சொற்ப வீதமான மாணவர்களே இவ்விலவச உயர்கல்விக்காகத் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான உயர்கல்வி அரச பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் வழங்கப்படுகின்றன. தற்போதுள்ள காலப்பகுதியில் உயர்கல்வியைத் தனியார் கல்வி நிறுவனங்களில் பெற்றுக்கொள்வதென்பது இலங்கையில் வாழும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஒரு பெரும் பொருளாதாரச் சவாலாகவே உள்ளது. துறையடிப்படையில் பாடநெறிகளுக்கான கட்டணங்கள் வேறுபட்டபோதிலும் ஒப்பீட்டளவில் அது ஓர் பெருந்தொகையாகவே உள்ளது. தனியார் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக பல பெற்றார் தங்களது நிலையான சொத்துக்களையே விற்கின்ற நிலைகளையும் நாம் கண்கூடு பார்க்கின்றோம். கல்வி மற்றும் உயர்கல்விக்கான கேள்வி மற்றும் செலவினம் இவ்வாறிருக்கும் நிலையில், இயன்றளவு அரச கல்லூரிகளில் உள்ள தரமான துறையினுள் எப்படியாவது நுழைந்துவிடுதல் என்பது எந்தவொரு சாதாரண மானவனதும் பெற்றோரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. கல்விச்சந்தையில் உரிய தரமான துறையில் கல்விகற்க பாரிய விலை கொடுக்கவேண்டியுள்ள இந்நிலையில், உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இலவசமாக உயர்கல்வியைப் பெற்றுக்கொள்வது எந்தவொரு மாணவனதும் தேவையாக உள்ளது.
மேலும் உயர்தரப் பரீட்சையில் அதிசிறந்த சித்தியைப் பெற்று அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுதல் என்பது ஓர் மாணவன் அவனது குடும்பம் மற்றும் அவன் கல்விகற்ற பாடசாலை போன்றவற்றின் கௌரவம் சார்ந்த விடயமாகவும் பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழகத் தேர்வு எனப்படுவது ஒரு மாணவனின் பாடசாலைப் பருவத்திலிருந்து அவனது சமூகம் சார்ந்த அங்கீகாரத்தினுள் நுழையும் சாவியாகவே கொள்ளலாம். வளர்ந்த ஓர் மனிதனாக ஒரு ஆணோ ஓர் பெண்ணோ தனது சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் முதல் கட்டம் இதுவேயாகும் எனலாம்.
2017ஆம் ஆண்டிலிருந்து புதிய கலைத்திட்டத்திற்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டு 2019 இல் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் புதிய கலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் 2019இன் பின்னர் நடைபெறவுள்ள க.பொ.உயர்தர் மாணவர்களுக்கான இறுதி வினாத்தாள் மாதிரிகளை அச்சிட்டு வெளியிட்டிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வினாத்தாள்களை கல்வி அமைச்சின் தமிழ் மொழிப்பிரிவு மற்றும் மாகாண, வலய, பாடசாலை மட்டங்களில் பரீட்சைகளையும் நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும், இம்முறை இறுதிப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு இதுவரையில் நடாத்தப்பட்டுவந்த மாதிரி வினாத்தாளை முழுமையாகப் புறந்தள்ளி மாணவர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் விடை எழுத முடியாதாவாறான வினாத்தாள் மாதிரிக் கட்டமைப்பை பரீட்சைத் திணைக்களம் அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டமைப்பு வினாப்பத்திரத்தில் காணப்படும் வினா அமைப்பு, வினாக்களின் கட்டமைப்பு. நேர ஒதுக்கீடு எதுவும் பின்பற்றப்படாது பரீட்சை வினாத்தாள் ஒன்றை பரீட்சைத் திணைக்களம் மாணவர்களுக்கு வழங்கியுள்ளதன் மூலம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாதிப்பு, அடுத்த பாடங்களின் பரீட்சைக்கும் முகம்கொடுக்க முடியாத வண்ணம் ஏமாற்றத்தையும் உளரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குரல் எழுப்புகின்றனர்.
குறிப்பாக கலைப்பிரிவிற்கு தெரிவாகும் மாணவர்கள் 9 உயர் திறமைச் சித்திபெற்றவர்களோ அல்லது 5 திறமைச் சித்தி பெற்றவர்களோ இப்பாடத்தை தெரிவு செய்வதில்லை குறைந்த சித்திகளைப் பெற்றவர்களும் கணித பாடத்தை அடுத்த தடவை எடுத்து இணைத்துப் படிப்பவர்களாகவும் எழுத, வாசிக்க மற்றும் கிரகிக்க இடர்படுபவர்களாக பல்வேறு பிரச்சினைகளுடன் உள்ளவர்களுக்கு, பாடசாலைகள் இம்மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான வாய்ப்பை வழங்குவதற்காக பல்வேறு வளப்பற்றாக்குறைகளுக்கும் மத்தியில் இம்மாணவர்களை உருவாக்கி விடுகின்றனர். இவ்வாறான நிலையில் இம் முறை நடைபெற்ற வினாத்தாள் மாதிரி கட்டமைப்பை விடுத்து மாணவர்களுக்கு அறிவிக்கப்படாத புதிய மாதிரி கட்டமைப்பைக் கொண்ட வினாத்தாளை மாணவர்களுக்கு வழங்கப்பட்டதன் நோக்கம்தான் என்ன?. இது பற்றி பரீட்சைத்திணைக்களம் மாணவர்ளுக்கும் கல்விச் சமூகத்திற்கும் உரிய பதிலை வழங்கவேண்டும்.
மேலும் இந்து நாகரிக பாடத்தின் வினாத்தாள் தயாரிப்பு மற்றும் புள்ளியிடுதலின் போது தோட்டப்புற (மலையக) மாணவர்களையும் கருத்திற்கொள்ளப்படவேண்டியுள்ளது. குறிப்பாக இம்மாணவர்களின் நிலையினை வட – கிழக்கு மாணவர்களின் நிலைக்கு ஒப்பிடமுடியாது. இங்கு கற்கும் மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை வளநூல்கள் இன்மை, கருத்தரங்குகள் செயலமர்வூகள் என்பன அரிதானவை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இறுதி வினாத்தாள் கட்டமைப்பு மாற்றமானது இவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பகுதி 1 இல் 45க்கு மேல் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் வினாத்தாள் 11 இல் 5 வினாக்களுக்குப் பதிலாக ஒரு வினா அல்லது இரண்டு வினாக்களுக்கு மேல் தெரிவு செய்யவில்லை என்பதை கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் வினாக்களின் கனதிக்கு ஏற்ப நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் பழைய பாடத்திட்டத்தை விட கூடுதலான பகுதிகள் குறைக்கப்பட்டு வழிகாட்டி நூல்களும், வளநூல்களும் வெளியிடப்பட்டள்ள நிலையில் புதிய பாடத்திட்டத்தின் புதிய வினாத்தாள் கட்டமைப்பில் வினாத்தாள் 11 இன் பகுதி 2 வினாக்கள் ஒவ்வொன்றும் 20 புள்ளிகளுக்கான வினாக்களாகும் அவை ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்ததன. இருந்தும் புள்ளித்திட்டங்கள் எவையும் குறிப்பிடப்படவில்லை.
இலங்கையில் முதல் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துக் கற்றைகள் பீடத்தில் மூன்று துறைகளும், கிழக்கு பல்கலை மற்றும் தென்கிழக்குப் பல்கலை, கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுவதற்கு குறித்த பாடத்துறையில் மாணவர்களின் சித்தியின்மையானது பெரும் தாக்கத்தை எற்படுத்தும் என்ற கருத்துக்கள் பரவலாக காணப்படுகின்றது.
உயர் கல்விக்கான வாய்ப்புகளில் இந்து நாகரிக பாடத்துறையூடாக பல்கலைக்கழகத்திற்கு சட்டம், கட்டட நிரிமாணம், கட்டடக்கலை, வடிவமைப்பு, முகாமைத்துவமும் தகவல், தொழிநுட்பமும், தொழில் முயற்சியும் முகாமைத்துவமும், விருந்தோம்பல் சுற்றுலா முகாமைத்துவம், பட்டினமும் நாடும் திட்டமிடலும், முகாமைத்துவக் கற்கைகள், தகவல் தொழிநுட்ப முகாமைத்துவம், அழகியல் துறைசார் பாடங்கள், நவநாகரிக வடிவமைப்பும் உற்பத்தியும், நிலத்தோற்றம் முகாமைத்துவம் முதலான 26க்கும் மேற்பட்ட துறைகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுன்றமை குறிப்பிடத்தக்கது.
எமது கல்விக் கொள்கையை எடுத்து நோக்கின் இலட்சக்கணக்காண மாணவர்களின் வாழ்வை சிதைத்து விடுவதாகவே காணப்படுகின்றது. இக்கல்விக் கொள்கையானது ஒரு சிலரை மட்டுமே உருவாக்கிக் காட்டும் அடிப்படைக் கண்ணோட்டத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒரு தனி நபரின் சுயநலன் என்ற எல்லையில் தொடங்கும் இலட்சியக் கனவுடன் இது நியாயப்படுத்தப்படுகின்றது. இலட்சக்கணக்கான மாணவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரை தெரிந்து எடுக்கும் முடிவில் மனித அவலம் தொடங்குகின்றது.
ஒருவன் தான் கற்ற 13 வருட கல்வியினால் எதனையும் சாதிக்க முடியாமல் தோற்று போய் விடுவதால் அவனுக்கு மரபு வழி கல்வியே போதிக்கப்பட்டமையால் நவீன தொழில் துறையோடு போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான். ஆகவே இக் கல்விக் கொள்கையானது எதிர்கால நடைமுறை வாழ்வோடு தொடர்பில்லாத கல்வியை வழங்குகின்றதால் அதன் பயனும் பூச்சியமாகவே அர்த்தமற்றதாகி விடுகின்றது. 100 மாணவர்கள் காணப்படுமிடத்தில் 25 மாணவர்களுக்கே உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்குமானால் இது கூட தவறான கல்விக் கொள்கைக்கே வழிவகுக்கின்றது.
எனவே இப்பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆராய்ந்து மாணவர்களின் உயர் கல்வி பாதிக்கப்படாது சரியான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பாரக்கப்படுகின்றது.
இது பல்கலைக்கழகம் முதல் மற்றைய அனைத்து உயர் கல்வி வரை காணப்படுகின்றது. இந்தக் கல்வியானது ஒரு சதவீதமானவர்கள் மீது எவ்வாறான ஒடுக்கு முறையையும் அடிமைத்தனத்தையும் நிலைநாட்டுவதாக அமைகின்றது. உயர்கல்வி அதிகார வர்க்கத்தையும். போலியான மனப்பாங்கை ஏற்படுத்தும் பிரஜைகளையும் உருவாக்குகின்றது. சமூக நலன் சார்ந்த வழிகாட்டிகளை உருவாக்குவதில்லை.
வளப்பற்றாக்குறை, முகாமைத்துவமின்மை காரணமாக மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வி வழங்கப்பட முடியாதுள்ளது. மேலும் இங்கு கோட்பாடு ரீதியான கல்வி வழங்கப்படுகிறது. ஆதலால் பரீட்சைகளிலும் குறைந்த பெறுபேற்றைப் பெறுகின்றனர். பல்கலைக்கழகத்திற்கான மாணவர்கள் தெரிவும் குறைந்து வேலைவாய்ப்பினையும் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.
அத்தோடு படித்தவர்களிடம் ஆங்கிலம் பேசக் கூடிய தகைமையின்மை, உலக பொது அறிவின்மை போன்றன காணப்படுகின்றன. இவற்றிலிருந்து இலங்கையின் கல்வித்தரம் குறைந்துள்ளதினை விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆரம்பம் முதல்- உயர்கல்வி வரை இதனை இனங்காணக்கூடியதாக உள்ளது.
இதன் காரணமாக பெரும்பான்மையானோர் தனியார் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். மேலும் அதிகமான மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 18,00,000 வரை செலவிடுகின்றனர். இவ்வாறு வெளிநாடு சென்று படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதே இதற்குக் காரணமாகும்.
கலைத்திட்ட பொருத்தப்பாடின்மையும் இங்கு நோக்கத்தக்கது. கலைத்திட்டம் மாணவர்களின் நாளாந்த வாழ்வுடன், பிரச்சினைகளுடன் தொடர்புற்றதாக இல்லை. இங்கு கல்வியானது வெறும் தத்துவமாகக் காணப்படுகிறது.இங்கு மாணவர்களின் புத்தாக்கம், இணைபாடவிதானச் செயற்பாடு, ஏனைய செயற்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துவது குறைவாகும்.
மேலும் இது மாணவர்களின் அறிவுப் பெருக்கத்திற்கு ஊக்குவிப்பு அளிக்காமல் மனனம் செய்து பரீட்சையில் தேர்ச்சி பெற ஊக்குவிக்கிறது. மேலும் இவற்றில் மிகப்பழைமையான விடயங்களே காணப்படுகின்றன. ஓப்பீட்டு ரீதியில் புதிய விடயங்கள் குறைவு.
உதாரணமாக இடைநிலைக் கல்வியில் புவியியல், வரலாறு, தமிழ், சமயம், சுகாதாரம் போன்ற பாடங்கள் காணப்படுகின்றன. இவை அறிவு விருத்திக்கு உகந்தன.அத்தோடு இவை அதிகமாக தத்துவ ரீதியாகக் காணப்படுவதால் மனனம் செய்யப்படுகின்றன. அவை வாழ்வூக்குப் பயனளிப்பதாக செயல் வடிவில் இல்லை.
மேலும் தொழில் ஒன்றை மேற்கொள்வதற்கு உகந்தவையூமல்ல. இதனை பல்கலைக்கழகத்திலும் காணலாம். இங்கு சமூக விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல், கலை போன்றவற்றில் அதிகம் கோட்பாடு ரீதியான கற்கையினைக் காணலாம்.இங்கும் நெட்டுருச் செய்தலே முதன்மை பெறுகிறது. இங்கு செயற்பாட்டிற்கு இடமளிக்காததால் மாணவர்களின் புத்தாக்கம், கண்டுபிடிக்கும் ஆற்றல் என்பன மழுங்கிப் போகின்றன.
இருப்பினும் தற்போது தொழில் சார் கற்கை நெறிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. தகவல் தொடர்பால் தொழில்நுட்பம், வாழ்க்கைத் தேர்ச்சி, மனைப் பொருளியல் போன்ற தொழில்சார் கற்கைகள் சேர்க்கப்பட்டிருப்பினும் அவற்றின் செயற்படு தன்மை குறைவு என்றே கூற வேண்டும்.இவை பரீட்சையை நோக்காகக் கொண்டு எழுத்து வடிவிலேயே கற்பிக்கப்படுகின்றன.
செய்முறை ரீதியில் கற்பிக்கப்படுவதில்லை.இதுவே தொழில் நிபுணர்கள் இல்லாமைக்குக் காரணமாகும்.இங்கு தொழில் சார் கல்வி விளைவு 12 வீதமாகவும் நூல் கல்வி வீதம் 16 வீதமாகவூம் காணப்படுகிறது. இதனை இடைநிலைஇ உயர்கல்வியில் காணலாம். இங்கு பாடநூல் விரிவாக அமைந்தாலும் அனைத்து அம்சங்களையூம் தழுவியதாக இல்லை.
கல்வியை வழங்குவதில் பிரதேச ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக நாம் மேல் மாகாண, தென் மாகாண பாடசாலைகளையும், மலையகப் பாடசாலைகளையும் எடுத்து நோக்கும் போது இவ்வேறுபாட்டை அறியக் கூடியதாக உள்ளது. மேல்இ தென் மாகாண மாணவர்கள் பெரும்பபான்மையாக எல்லா வகையான வளங்களினதும் உச்சபயன்பாட்டை நுகரும் வேளை மலையக மாணவர்கள் சிறியளவிலான வளங்களையேனும் நுகர முடியாத நிலை காணப்படுகிறது.
இடைவிலகும் மாணவர் தொகை அதிகரிப்பு மற்றுமொரு பிரச்சினையாகும். பாடசாலையிலே அனுமதி பெற்று முறையாகப் பாடசாலைக் கல்விக் காலத்தை அடைவதற்கு முன்னர் பாடசாலையை விட்டு விலகிய மாணவர்கள் எண்ணிக்கையே இடைவிலகல் ஆகும். இலங்கையில் கட்டாயக் கல்வி வயதெல்லையில் 17 சதவீதமானவர்கள் இடைவிலகியூள்ளனர். இது பெருந்தோட்டப் பிரதேசங்களிலே 20வீதமாகக் காணப்படுகிறது
நகரங்களை விட கிராமங்களிலும்இ ஆண்களை விடப் பெண்களிலும் இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்குக் காரணம் பெண்கள் தம் இளைய சகோதரர்களைப் பராமரிக்க வேண்டும்இஇளவயது திருமணம்இ பெற்றௌரின் கல்விநிலைஇ வறுமைஇ தொழில்இ ஆசிரியரின் பக்க சார்புத் தன்மைஇ ஆசிரியரின் கற்பித்தல் முறைஇ அதிகரித்த பாடசாலைக் கட்டணங்கள் போன்ற பல்றுே காரணங்களுக்காக பிள்ளைகள் பாடசாலையை விட்டு விலகுகின்றனர்.
இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி பெறுவோர் 0.82 சதவீதம். இதில் பொறியியலாளர்கள், வைத்தியர்கள் 0.12 .உயர்தர பரீட்சை எழுதியோரில் 41வீதம் சித்தி பெற்றாலும் 4.7 வீதமானோரே அனுமதி பெறுகின்றனர். இவ் இடைவிலகல் உயர்தர வகுப்பிற்கு செல்ல முடியாதவர்கள், கல்வியை இடையில் விடுபவர்கள் கல்வியைக் கற்க முடியாத சுழ்நிலையைக் கொண்டவர்கள் என விரிந்து செல்கிறது.
உயர் பதவிகளுக்கான நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றில் அரசியல் தலையீடும், ஏற்றத் தாழ்வூம், தகைமையின்மையூம் காணப்படுகின்றன. இவ்வாறான அரசியல் தலையீட்டின் காரணமாக பொருத்தப்பாடற்றவர்கள் பதவிக்கு வருகின்றனர்.
மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் பலர் இருந்தும் அவர்களில் அதிகமானோர் பொருத்தப்பாடற்றவர்களாகவும் தகைமையற்றவர்களாகவும் பயிற்றப்படாதவராகவும் காணப்படுகின்றனர். இவ்வாறான ஆசிரியர்களினால் வழிநடத்தப்படும் மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெறுவதில் குறைபாடுள்ளது.
இதன் காரணமாக காலாவதியான ஆசிரியர்கள் அதிகரிக்கின்றனர். இவர்கள் தம் கல்வி நிலையினை நிகழ்காலத்தோடு இணைத்துக் கொள்ளாமல்இ கடந்த காலத்திலேயே நின்று விடுகின்றனர். இதனால் ஆசிரியர் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை குறைவதால் கல்வி நிறுவனங்களில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதிலும் கடினம் ஏற்படுகிறது.
இவ் அரசியல் தலையீட்டினால் கிராமப் புற பாசாலைகளின் கல்வியினை விருத்தி செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. உதாரணமாக க.பொ.த உயர்தரம் சித்தியடைந்தவர்களை ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாகப் பணிக்கு அமர்த்தலை குறிப்பிடலாம்.
ஆசிரியரின் தொழில் சார்ந்த உளநிறைவில் வீழ்ச்சியூம் கல்வியில் செல்வாக்குச் செலுத்துகிறது. இது கல்வி வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாக்குகிறது. இங்கு ஆசிரியர்களால் ஆசிரியர்கள் தாழ்த்தப்படும் நிலையானது வாண்மைச் செயற்பாடுகளை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. இங்கு உயர்நிலையிலுள்ளோர் மற்றும் தனியார் பாடசாலைகளில் கற்றோர் ஏனைய அரச பாடசாலையில் கற்ற ஆசிரியர்களை இழிவாகப் பார்ப்பதால், நல்ல தகைமையான ஆசிரியர்களும் வாய்மைச் செயலில் திறமையாக ஈடுகாட்டுவதில்லை.
எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் பெறுபேறுகளில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு ஆகக் குறைந்தது இரண்டு வினாக்களுக்கான முழுமையான விடைகளுக்கு புள்ளிகளை மேலதிகமாக வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள கோரிக்கையை பரீட்சைத் திணைக்களம் எவ்வாறு நோக்கப் போகின்றது என்பதை அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
அவ்வாறே இனி வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாத வகையில் பரீட்சை வினாத்தாள்கள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்தவற்குத் தேவையான நடவடிக்கைகளை பரீட்சைத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியர்களதும் கல்வியியலாளர்களதும் அவாவாகும்.
-இந்து நாகரிக பாட ஆசிரியர்கள் சார்பாக –
———————————————————————————————————————–
மாதிரி கட்டமைப்பு வினாத்தாள்
பரீட்சை வினாத்தாள்