இலங்கையில் உள்ளடங்கல் கல்வியாக விசேட கல்வியை நடைமுறைப்படுத்தவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள்
திருமதி. சிவகுமார் தஜினி (SLPS– 3),
உதவி அதிபர், பன்மூர் த.ம.வி., ஹட்டன்.
அறிமுகம்
எல்லோருக்கும் கல்வி என்ற உலகளாவிய தத்துவமானது மரபார்ந்த பாடசாலை கலாசாரங்களை மாற்றி எல்லோரும் கல்வி கற்பதற்குரிய பாடசாலைகளாக அவற்றின் கலாசாரத்தை உருமாற்றி வருகின்றது.
இன்றைய கல்வி உலகம் எல்லோரும் கல்வி என்ற நிலையில் இருந்து ஒரு படி சென்று எல்லோருக்கும் தரமான கல்வி என்ற நிலைக்கு நகருகின்றது. தரமான கல்வியில் எல்லோருக்கும் சமத்துவமான சமவாய்ப்பு வழங்கப்படுவதே எதிர்காலப் பாடசாலைகளின் பணி இலக்காக அமையும் என மெல்போன் பல்கலைக்கழக கல்விப்பீடப் பேராசிரியர் Hedly Beare கூறுகின்றார்.
இச்சூழமைவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தரமான கல்விக்கான சமத்துவமான வாய்ப்புக்களை விரிவுப்படுத்துவதே உள்ளடங்கல் கல்வியின் பிரதான இலக்காகும். எமது சமூகச்சூழமைவு விசேட தேவையுடைய மாணவர்கள் நோக்கில் சாதாரண மாணவர்களைப் போல் சமானமான கல்வி (தரமானதாக) வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பல கல்வியாளர்களுக்கு இருப்பதில்லை.
விசேட கல்வி
விசேட கல்வி என்பது விசேட தேவையுடைய கற்றல் இடர்பாடுகள் அல்லது மீத்திறன் கொண்ட பிள்ளைகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட கல்வியே விசேட கல்வி என்ற பதத்தால் உணர்த்தப்படுகின்றது. ஏனைய கற்றல் நிலைமைகளைக் காட்டிலும் விசேட கல்வி நிலைமைகள் பிரதானமாக நான்கு விடயங்களில் முக்கிய அவதானிப்பைப் பெறுகின்றன.
• துறை நிபுணத்துவமுடைய கல்வியூட்டுநர்கள்
• விசேட கற்பித்தல் முறைகள்
• விசேட கற்பித்தல் சாதனங்கள்
விசேட கல்வி என்ற கருத்துநிலைக்குப் பின்னராக 1980 காலப்பகுதியில் “ஒன்றிணைப்பு” என்ற பதம் விசேட தேவையூடைய பிள்ளைகள் தொடர்பாக வலுப்பெறுகின்றது. ஒன்றிணைத்தால் என்பது, மாதிரி எடுத்துக்காட்டான பாடசாலை ஒன்றிலுள்ள வகுப்பொன்றில் சில செயற்பாடுகளில் சாதாரண சகபாடிகளுடன் பங்கு பற்றக்கூடிய வகைகளில் விசேட தேவையுடைய பிள்ளைகளை இணைப்பதைக் குறிக்கின்றனது. இந்த ஒன்றிணைப்பு நான்கு வகையில் இடம் பெறலாம்.
1. உடல் தொடர்பான ஒன்றிணைப்பு சாதாரண பிள்ளைகளுக்கும் விசேட தேவையூடைய பிள்ளைகளுக்கும் இடையிலான உடல் ரீதியான இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
2. செயற்பாட்டு ரீதியாக ஒன்றிணைப்பு – இரு சாராருக்கும் இடையிலான செயற்பாட்டு ரீதியான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது.
3. சமூக ஒன்றிணைப்பு – இரு சாராருக்கும் இடையிலான சமூக ரீதியான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது.
4. சமுதாய ஒன்றிணைப்பு – “முழுமையான பங்குபற்றலும் சமமான நிலையும்” என்ற ஐக்கிய நாடுகள் தாபனத்தின் குறிக்கோளை அடைவதற்கு விசேட தேவையுடையவர்களின் இடையீட்டுத் தொடர்புப்பரப்பை அகலப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டது.
உள்ளடக்கற்கல்வி
இந்நிலையில், ஒன்றிணைப்புச் செயற்பாட்டின் மூலம் விசேட தேவையுடைய பிள்ளைகள் ஏனையவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றார்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால் அவர்களிடம் எதிர் மறையான, அநீதியான விளைவுகள் உண்டாக்கப்படுவது அவதானிக்கப்பட்டது. மாணவர்களின் பல்வகைமைத் தன்மை கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் பின்வரும் மூன்று விடயங்கள் உலகளாவிய நிலையில் விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வியின் மீது கவனத்தைத் திருப்பின.
• 1990 இல் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டின் தொனிப்பொருள் “அனைவருக்கும் கல்வி” என்பதாக அமைந்தது.
• “கட்டாயக் கல்வி” என்ற பிரகடனம்
• 1994 இல் சலமன்கா (Salamanca) என்னும் இடத்தில் நடைபெற்ற மாநாடும் அங்கு வெளியிடப்பட்ட சலமன்கா அறிக்கையும் இவை இரண்டு விடயங்களை வலியுறுத்துவனவாக அமைந்தன.
• விசேட தேவையுடைய பிள்ளைகளை வழமையான பாடசாலை முறைமைக்குள் உள்வாங்குதல்.
• எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வியை உறுதிசெய்தல்
இப்பின்னணியிலேயே “உள்ளடக்கல் கல்வி” என்ற எண்ணக்கரு தோற்றம் பெறுகின்றது.
உள்ளடக்கற்கல்வி என்பது பின்வரும் அம்சங்களில் தங்கியுள்ளது.
1. மாணவர்கள் தனியாள் வேறுபாடுகளை உடையவர்கள் அல்லது பல்வகைமை கொண்டவர்கள் என்பதைக் காட்டிலும் அதிகமாக ஒரே மாதிரியானவர்கள் என்பதால் இயலாமையைக் கருத்திற்கொள்ளாமல் அவர்கள் எல்லோராலும் ஒன்றாகக் கற்கமுடியும்.
2. சகாபடிகளைப் பார்த்துச் செய்தனாலும் அவர்களைப் பின்பற்றுவதனாலும் கற்றல் அடிக்கடி நிகழ்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்
3. பல்வேறுவிதமான போதனா உதவிகள் விசேட தேவையுடைய பிள்ளையொன்றின் இயலாமையை வெற்றிக்கொள்ள உதவும் என்பதால் வழமையான வகுப்பறையில் கற்றலை ஏற்படுத்துதல் சிறந்தது.
4. ஒரே வகுப்பறையில் பல்வேறுபட்ட கற்றல் இயல்புடைய மாணவர்கள் காணப்படுவர் என்பதால் விசேட தேவையுடைய மாணவர்கள் மட்டுமின்றி ஏனைய மாணவர்களும் நன்மையடைவர்.
உட்படுத்தற்கல்வியை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சவால்கள்.
விசேட தேவையுடைய பிள்ளைகள் என்று நாம் பொதுவிற் குறிப்பிட்டாலும் அவர்கள் இரண்டு பிரிவினராக உள்ளனர்.
• உடற்சார்ந்த விசேட தேவைகளை உடையவர்கள்
• மனவிருத்தி சார்ந்த விசேட தேவைகளை உடையவர்கள்
இந்த இருசாராருக்குமான கற்றல் நிலைமைகளை உட்படுத்தற்கல்வியினூடாக வழங்குவதில் காணப்படும் சவால்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.
01. கல்வியை திட்டமிடுவோர் சார்பாக எழும் சவால்கள்
• அதிபர்களுக்கு உள்ளடங்கல் வகுப்பறை தொடர்பாக அவர்களது பயிற்சி நெறிகளில் வழங்குவதில்லை.
உ+ம் PGDEM DSM
• ஆசிரியர் உயர்கல்விஇ பயிற்சி நெறிகள் என்பவற்றில் விசேட கல்வி தொடர்பான கலைத்திட்டத்தை உட்படுத்தாமை.
உ+ம் BED, MED, PGDE
• பரீட்சை மைய பொதுக் கலைத்திட்டமே அனைவருக்கும் அமுல்படுத்திவூள்ளமை.
• மாணவர்களின் கலைத்திட்டத்தில் விசேட கல்வித் தொடர்பான பாடத்திட்டம் உட்படுத்தாமை
• குறைந்தளவு எண்ணிக்கையே ஆசிரியர் கலாசாலைக்கு எடுத்து பயிற்சி வழங்குகின்றமை.
• காணப்படுகின்ற பயிற்சிகளை கரிசனையோடு பெற்றுக்கொள்வதில் ஆசிரியர்கள் காட்டுகின்ற அக்கறை மிகதாழ் நிலையிலே உள்ளது.
• விசேட கல்வி தொடர்பான அறிவை சகலருக்கும் பெற்றுக் கொடுக்காமை
• காலத்திற்கு காலம் புதிய பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில்லை.
• ஆங்கில தினம், தமிழ் மொழி தினம், சிங்கள மொழி தினம் போன்றவற்றில் இம்மாணவர்களை உட்படுத்தக்கூடிய நிகழ்வுகளை ஒழுங்கமைக்காமை.
02. பாடசாலை நிர்வாகம் சார்பான எழும் சவால்கள்
• விசேட தேவையுடைய மாணவர்களது உபகரணங்களை உரிய காலத்தில் பெற்றுக் கொடுக்காமை.
உ+ம் Cane, Chair, Earring
கால தாமதமாக உபகரணங்கள் கிடைக்கும் போது அவர்களது வயதும் கூடி விடுகின்றன.
• பாடசாலை சமூகத்திற்கு விசேட தேவையூடைய மாணவர்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமை
• இவர்களுக்கு கற்பித்தல் துணை சாதனங்களை தயாரிப்பதற்கு பொருட்களை உரிய காலத்தில் பெற்றுக் கொடுக்காமை
• விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய வகுப்பறைகளை மேல்மாடி என்பவற்றில் அமைத்தல்.
உ+ம் கண் தெரியாத மாணவர் உள்ளடங்கிய வகுப்பறையை மேல்மாடியில் அமைக்கும் போது கடினமான சூழல் ஏற்படும். ஆதிபர் வகுப்புகளை ஒரு ஒழுங்கு முறையில் அமைந்துள்ளதாக கூறுவார்.
• பாடசாலை பரிசளிப்பு, இல்ல விளையாட்டு போட்டி, ஆங்கில, தமிழ், சிங்கள தினப் போட்டிகள் என்பவற்றில் இம்மாணவர்களை உள்ளடக்குவதில்லை.
• இவர்களை கொண்டு கலைநிகழ்ச்சிகள் என்பனவும் செய்வதில்லை
03. ஆசிரியர்கள் தொடர்பாக எழும் சவால்கள்
• விசேட தேவையுடைய மாணவர்களை கவனிக்கும் ஆசிரியர்களை ஏனைய ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளாமை.
• விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பான அறிவு சகல ஆசிரியர்களுக்கு இல்லாமை.
• ஒரே மாதிரியான கற்பித்தல் பாங்கை சகலருக்கும் பின்பற்றல்
• விசேட தேவையுடைய மாணவர்களை கவனிப்பதில்லை ஆர்வம் குறைவாக காட்டுகின்றமை.
• வகுப்பறை முகாமைத்துவ அறிவை குறைவாக கொண்டுள்ளமை.
உ+ம் இடவசதிகள் ஏற்ப பார்வை, கேட்டல் குறைபாடுடைய மாணவர்களை ஒழுங்கமைப்பது இல்லை.
• கேட்டல் பயிற்சிகளை சகல மாணவருக்கும் செய்யும் போது பிரச்சினையை எதிர் நோக்குவர்.
• திறமையான மாணவர்களை மட்டுமே போட்டிக்கு அனுப்புதல்
04. மாணவர்கள் சார்பாக எழும் சவால்கள்
• விசேட தேவையுடைய மாணவர் தொடர்பான அறிவு குறைவாக காணப்படல்.
• விசேட தேவையுடைய மாணவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு இல்லாமை.
• சாதாரண மாணவர்கள் விசேட தேவையுடைய மாணவர்களை ஏற்றுக் கொள்ள கூடுதலான காலமெடுக்கும்.
05. சமூக சார்பாக எழும் சவால்கள்
• பெற்றோருக்கு இது தொடர்பான அறிவு குறைவு
• உள்ளடங்கல் வகுப்பறையை பெற்றௌர் ஏற்றுக்கொள்வதில்லை
உ+ம்:- தனது பிள்ளை வாய் பேச முடியாத மாணவனின் சைகை மொழியை வீட்டில் உபயோகித்தவுடன் பெற்றோர் அதனை பெரிய பிரச்சினையாக பாடசாலைக்கு கொண்டுவரல்.
• விசேட தேவையுடைய மாணவர்களை வழிநடத்த பெற்றோர்கள் கூடிய அக்கறை செலுத்துவதில்லை.
• தினமும் பாடசாலைக்கு இம்மாணவர்களை பெற்றோர் அனுப்புவதில்லை.
பரிந்துரைகள்;
உள்ளடக்கற் கல்வி வெற்;றிகரமானதாக அமைய பரீட்சை மையக் கலைத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
• உள்ளடக்கற் கல்வியின் தேவைகள் உள்ளடக்கப்பட்ட கலைத்திட்டச் சீராக்கம், பாடசாலைகளுக்கு அவசியமான வளங்கள், ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி, பாடசாலை மற்றும் சமூக மனப்பாங்குகளில் நேர்மறையான சிந்தனை விசேட தேவையுடையோருக்கு நட்பான பாடசாலைச் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.
• உள்ளடக்கற் கல்வி வெற்றிகரமாக அமைய 3H மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
• ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் கலைத்திட்டங்களில் உள்ளடக்கற் கல்வி சேர்க்கப்பட வேண்டும்.
• விசேட தேவையுடையவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுடன் இணைந்த செயலாற்றும் மனப்பங்கை விருத்தி செய்யக்கூடியதான நிகழ்ச்சிகள் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்படவேண்டும்.
உசாத்துணை நூல்கள்
• பௌநந்தி.அ, கடல், இதழ்13(2016), உட்படுத்தற்கல்வி சாத்தியப்படுத்தல் சவால்நிலைகள், நெல்லியடி, பரணி அச்சகம.;
• திறந்த பல்கலைக்கழக வெளியீட்டு குழு (பதிப்பு 2009), விசேட கல்வி
தொகுதி I, இலங்கை திறந்த பல்கலைகழகம், நாவல.