இலங்கை வரலாற்றின் தொடக்கத்திலிருந்து கல்வி என்பது ஆட்சியாளர்கள் தீர்மாணிக்கின்ற ஒன்றாகவே இருந்துவந்திருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் மற்றும் பொருளாதார தொழினுட்ப செயற்பாடுகளுக்கும் கல்வியின் முக்கியத்துவம் அடிப்படையான வழிகாட்டியாகவும் குறிகாட்டியாகவும் நோக்கப்படுவதே ஆகும்.
விஜயனின் வருகையிலிருந்து குறிப்பாக கி.மு. 543 இற்குப் பின்னரான காலம் தொட்டு மகிந்தர் இலங்கையில் பெளத்த மதத்தை அறிமுகம் செய்து கி.பி 1500 ஆண்டுகள் வரையும், அதன் பின்னர் இலங்கையை ஆட்சி செய்த போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலயர் என்று தொடர்ந்து, சுதந்திர இலங்கையின் இன்றுள்ள ஆட்சிக் காலம்வரை வரலாறு முழுவதும் இலங்கையின் கல்வி ஆட்சியாளர்களால் திட்டமிடப்படுகின்ற ஒன்றாகவே உள்வாங்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக நாட்டில் ஏற்படுகின்ற ஆட்சி மாற்றங்கள் காலத்துக்கு காலம் கல்வி நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது வழக்கமான ஒரு செய்தியாகும். மாறாக அது ஒரு புதிய நடவடிக்கை அல்ல. அந்தவகையில் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பாடசாலைக் கல்வி நடைமுறையில் புதிய சீர்திருந்தங்களை கொண்டுவருவது தொடர்பான கருத்துக்களும் செய்திகளும் ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.
தற்போதுள்ள கல்வி நடைமுறைகள் 1991 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கல்வி ஆணைக்குழுச் சட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை யோசனைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனலாம். தேசிய கல்வி ஆணைக்குழுவின் 1993 ஆம் ஆண்டின் அறிக்கை மற்றும் 1996 ஆம் ஆண்டின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்ட 2003 ஆம் ஆண்டின் அறிக்கைகள் நாட்டின் பாடசாலைக் கல்வி தொடர்பான சீர்திருத்த முன்மொழிவுகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளதை நாம் நினைவுகூரலாம்.
குறிப்பாக தேசிய கல்வி ஆணைக்குழுவின் கல்விச் சீர் திருத்த முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதத்தில் 1997ஆம் ஆண்டை கல்விச் சீர்திருத்தம் மற்றும் மறுசீரமைப்பு என்பனவற்றுக்கான வருடமாக பிரகடனம் செய்தனர். அவ்வாண்டில் அரசாங்கத்தினால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக தேசிய கல்வி ஆணைக்குழு மிக முக்கியமாக 3 விடயப் பரப்புகளை வரையறுத்து ஆலோசனை வழங்கியுள்ளது.
கல்வி வாய்ப்பு
கலைத்திட்டம் தொடர்பான செயற்பாடுகளைப் புதுப்பித்தலும் பொருத்தப்பாடும் கல்வி சார் ஊழியர்களையும் கல்வி முகாமைத்துவத்தையும் தொழில் தகைமை உடையாதாக்கி அதனூடாக வினைதிறனைக் காணுதல். இதுதான் கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் தேசிய கல்வி ஆணைக்குழு கொண்டுள்ள கல்விச் சட்டகம் எனவும் கூறலாம்.
இது இவ்வாறு இருக்க இன்று கல்வி அமைச்சராகவுள்ள பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் ஊடகப் பேச்சுக்கள் கல்விச் சீர்திருத்தம் பற்றிய பல விடயங்கைளை முன்மொழிந்து வருவது பற்றியும் தற்போது கல்விச் சமூகம் உற்றுநோக்க ஆரம்பித்துள்ளது. 2023 ஐ கல்வி சீர்திருத்த ஆண்டாகக் கொண்டு இந்த விடயங்கள் ஆராயப்படுகின்றன.
இதில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் மிக முக்கியமான கருத்து என்பது நாட்டின் தொழில் முறைமைக்கும் கல்வி முறைமைக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது அதனை இல்லாது செய்யும் வகையில் பாடசாலைக் கல்வி முறைமை புதிதாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கிறது.
மிக முக்கியமாக இலங்கையின் கல்வி முறைமை பரீட்சை மையக் கல்வியாகவே இருந்து வருகின்றது.இதனால் பரீட்சை அடைவுகளின் படி கல்வியில் ஒருசாரார் வெற்றிபெற பரீட்சையில் குறைந்த அடைவைப் பெறுகின்ற மறுசாரார் கல்வியின் பயனற்றவர்களாக ஒதுக்கப்படுகின்றார்கள். அது மாத்திரமன்றி பரீட்சை மையக் கல்வி நாட்டின் தொழில் வாண்மைக்கும் தேவைக்கும் ஏற்ற மனித வளத்தை உருவாக்காதும் விடுகின்றது.
இதன் பின்னணிகளும் உணரப்பட்டதன் விளைவாகவும் மாறிவரும் நவீன உலக ஒழுங்கிற்கும் நடைமுறைக்கும் ஏற்ப கல்வி அறிவு மாற்றம் அடைய வேண்டும் என்பதன் அவசியம் மேல் எழுவதாலும் புதிய கல்வி சீர்திருத்த செயற்பாடுகள் இன்றியமையாத அவசியம் உடையதை நாம் மறுக்கவும் முடியாது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்படும் கல்வி சீர்திருத்தங்களில் மிக முக்கியமாக பாடசாலைக் கல்வி ஆண்டு தவணை முறையிலிருந்து Semester முறைக்கு மாற்றம் செய்யப்படும் விடயம் காணப்படுகிறது.
Semester முறை என்பது ஒரு கல்வி ஆண்டின் ஒரு பகுதியாகும் ஒரு கல்வி நிறுவனம் தனது வகுப்புக்களை நடத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நேர அட்டவணையாகும் குறிப்பாக இது 6 மாதங்களை உள்ளடக்கிய 15-18 வாரங்களை கொண்டதாக அமையும்.
Semester முறையானது தற்போது எமது நாட்டின் மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களில் குறிப்பாக பல்கலைக்கழக கல்வி ஆண்டில் நடைமுறையில் இருந்துவருவதனை நாம் அறியலாம். உலக நாடுகள் பலவற்றில் பாடசாலைக் கல்வியில் இத்தகைய Semester முறை நடைமுறையில் உள்ளன. இதற்கு உதாரணமாக அமரிக்கா, லண்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.
இதன் பின்னணியில் தற்போது எமது நாட்டில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கும் Semester முறை எவ்வாறான நடைமுறைகளைக் கொண்டுள்ளது. அதன் உள்ளடக்கம் எத்தகையது என நாம் விளங்க வேண்டும். தற்போது இதுபற்றிய முழு வடிவமும் முடிவாகவுமில்லை அது எமக்கு வெளிப்படவுமில்லை என்றாலும் ளநஅநளவநச என்பதன் பொதுவான நடைமுறைகளை வைத்து நாம் இதனை நோக்கலாம்.
தற்போதுள்ள பாடசாலைக் கல்வி ஆண்டானது முதலாம் தவணை, இரண்டாம் தவணை, மூன்றாம் தவணை என 3 காலாண்டுகளை உள்ளடக்கியதாக பிரிக்கப்பட்டு அதன் கலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த முறையில் மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டுக்கு 3 பரீட்சை மதிப்பீடுகளை எதிர்கொள்கின்றனர். இதனை Semester முறைக்கு மாற்றுவதன் மூலம் வருடத்திற்கு இரண்டு மதிப்பீடு என்ற அடிப்படையில் 15 வாரங்களுக்குட்பட்ட ஒரு Semester காலத்தை கொண்டுவருவது தற்போது முன்வைக்கப்படும் ஒரு மாற்று யோசனையாகலாம்.
அடுத்து இந்த Semester முறையில் பரீட்சை நடைபெறும் போது குறிப்பிட்ட பாடத்திட்டங்கள் அந்த ளநஅநளவநச யுடன் முடிந்துவிடும் அடுத்த Semester க்கு அந்தப் பாடத்திட்டம் தொடர்புபடாமல் புதிய பாடத்திட்டம் கற்பிக்கப்படும். அதாவது 6 மாதங்களை வரையறையாகக் கொண்ட பாடத்திட்டங்கள் அமுல்படுத்தப்படலாம்.
மேலும் Semester முறையில் தற்போதுள்ள பாடநூல்கள் இல்லாமல் கைஏடுகள் மூலமான கற்றல் ஆவணங்கள் ஒவ்வொரு Semester ற்கும் ஏற்றவாறு வாழங்கப்படலாம்.
இதன்படி, கல்வி ஆண்டில் Semester முறையை உருவாக்குவதில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள தவணை முறைக்கும் புதிய Semester முறைக்குமிடையில் காணப்படும் குறை நிறைகள் சாதக பாதகங்கள் என்ன என்பது பற்றியும் நாம் தெளிவு காண வேண்டும்.
இதில் மிக முக்கியமாக மாணவர்கள் பரீட்சைக்கு கற்பதிலும் ஆசிரியர்கள் கற்பிப்பதிலும் உள்ள விடயங்கள்தான் பிரதானமாக கவணிக்கப்படும். அடுத்து இதனை நடைமுறைப்படுத்துவதில் கலைத்திட்டம் உருவாக்குவது அதனை நடைமுறைப்படுத்துவது இதற்கான பாடநூல்கள் தயாரிப்பதில் அரசுக்கு புதிய சவால்கள் உள்ளன என்பதும் தவிர்க்க முடியாததாகும்.
பிரதானமாகக் கூறுவதாயின் எமது பாடசாலையின் கல்வி அடைவு மட்டம் பரீட்சைப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் தற்போதுள்ள தவணை பரீட்சைகளுக்கு மாணவர்கள் ஆயத்தமாகுவது கற்பது பாடங்களை ஒழுங்கு செய்வது என்பது பெரும் சுமையாக இல்லாமல் குறுகிய அளவில் இலகுவாகவுள்ளது. இதற்கமைய கற்பிக்கும் கால அளவும் பாட அலகுகளும் குறைவாக இருக்கிறது.
Semester முறையில் இவ்வாறு இல்லாமல் 6 மாதங்களை அடிப்படையாகக் கொண்ட கற்றல் அலகுகள் ஒரு சுமையாக மாணவர்களால் உணரப்படலாம். உரிய காலத்திற்குள் முழுமையாக பாட அலகுகளை கற்று முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் மாணவர்களுக்கு ஒரு கற்றல் சுமையை ஏற்படுத்தலாம்.
மறுபுறம் Semester முறையில் இத்தகைய கற்றல் சுமை இருந்தாலும் தற்போதுள்ள தவணை முறையில் ஒரு ஆண்டுக்கான பாடத்திட்டத்தினையும் மூன்றாம் தவணையில் முழுமையாகக் கற்க வேண்டும் என்பதால் இறுதிப் பரீட்சையில் ஒரு வருடத்திற்கான பாடச் சுமை மாணவர்களுக்கு ஏற்படுவதுண்டு. Semester முறையுடன் ஒப்பிடும் போது இது அதிகப் பாடச் சுமையுடையதாக அமைந்திருக்கிறது. ஆனால் Semester முறையில் குறிப்பிட்ட Semesterயுடன் உரிய பாடத்திட்டம் முடிவதனால் அடுத்த Semester க்கு புதிய விடயங்களையே கற்க வேண்டி ஏற்படும் இது ஒரு வருட சுமையைவிட குறைவு எனக் கருதலாம்.
அடுத்து தற்போதுள்ள பாடத்திட்டமானது தவணை முறையில் வரையறுக்கப்பட்டாலும் ஒரு வருடத்தை முழுமையாக உள்ளடக்கிய பாடத்திட்டமாகவே கற்பிக்கப்படுகிறது. இதனால் முதலாம் தவணைக்குரிய பாட அலகுகளை இரண்டாம் தவணையிலும், இரண்டாம் தவணை அலகுகளை மூன்றாம் தவணையிலும் கற்பிக்கும் நிலை ஏற்படுவதுண்டு. இது தவறான செயற்பாடு என்றாலும் ஒரு வருடத்திற்குள் கற்பித்து முடித்தால் சரி என்ற மனப்பாங்கில் சிலநேரங்களில் சில ஆசிரியர்களால் இந்த விடயம் கையாளப்படுவதுண்டு.
ஆனால் Semesterமுறையில் இந்த விடயம் சற்றும் சாத்தியம் இல்லை. 6 மாத காலத்துடன் உரிய பாட அலகுகள் கட்டாயமாக முடித்தாக வேண்டும். அடுத்த Semester க்கும் அதற்கும் எந்த தொடர்பும் இருக்காது என்பதால் இந்த நிலை உருவாகும்.
எது எவ்வாறாயினும் Semester முறை என்பது மாணவர்கள் கற்பதற்கும் ஆசிரியர்கள் கற்பிப்பதற்கும் குறுகிய ஒருவரையறையை கொண்டுள்ளது என்பது மேலாக விளங்குகின்ற ஒரு பயனாகத் தெரிகிறது எனலாம்.
நவாஸ் செளபி
தினகரன்