நவீன கல்வி முறையியலில் ஆசிரியரின் மாறிவரும் வகிபாகம்
அறிமுகம்
மனித வரலாற்றில் பழம் பெரும் உயர்தொழில்களில் பிரதானமானது ஆசிரியர் பணியாகும். மனிதகுலம் எப்போது உருவானதோ அப்போதிருந்தே கற்றல் பணி தோன்றிவிட்டது. ஆசிரியரும் தோன்றி விட்டார். பண்டைய சமூகங்களில் சமய குரவர்களே பெரும்பாலும் ஆசிரியர்களாக விளங்கினார்கள்.
மேலைநாட்டு பாரம்பரியத்தில் கிறிஸ்தவ பாதிரிமாரும் இந்திய பாரம்பரியத்தில் இந்துமதத் துறவிகளும், பௌத்த மத பாரம்பரியத்தில் பிக்குகளும் ஆசிரியப் பணியாற்றினர். சமயகுரவர்களுக்கே ஆசிரியப்பணியாற்றுவதற்கான நூலறிவும் ஓய்வுநேரமும் இருந்தது. பண்டைய நிறுவன முறையான கல்வி சமயம் சார்ந்ததாகவும் சமய அறிவினையும் ஒழுக்கசீலங்களையும் வலியுறுத்தியமையால், கல்வியானது சமய நிறுவனங்களின் பொறுப்பிலேயே இருந்து வந்தது. மேற்கு, கிழக்கு என்ற வேறுபாடின்றி பண்டைய ஆட்சியாளர்களும் தமது கல்விப் பொறுப்பை சமய நிறுவனங்களிடையே ஒப்படைத்திருந்தனர். இதன் காரணமாகக் கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களும் வழங்கிய கல்வி முற்றிலும் சமயச் சார்பானதாகவே இருந்து வந்தது.
மரபுவழி ஆசிரியரின் வகிபாகம்
சுருங்கக் கூறுமிடத்து மரபுவழி ஆசிரியர்களின் பணியும் வகிபாகமும் பின்வரும் முறையில் அமைந்திருந்தன.
1. ஆசிரியர் சமய அறிவில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.
2. ஆசிரியர்கள் பெரும்பாலும் துறவிகளாகவே இருந்தனர்.
3. கல்வி கற்றலும் பாட ஏற்பாடும் முற்றாகவே சமயம் தழுவியதாகவே இருந்தது.
4. கல்வியின் நோக்கம் பெருமளவுக்கு மாணவர்களை அறவழிப்படுத்துவதாகவும் அவர்களை ஒழுக்கசீலர்களாக்குவதாகவும் அமைந்தது.
5. ஆசிரியர்கள் மாணவர்களையும் வகுப்பறையையும் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.
6. சமயச்சார்பற்ற கல்வியும் மொழி, இலக்கணம், தருக்கம், மருத்துவம், சோதிடம் – துறவிகளான ஆசிரியர்களின் பொறுப்பிலேயே இருந்தது.
7. பண்டைய கல்வி முறையில் இன்று போல் பாடநூல்கள் இருக்கவில்லை. ஆதலின், ஆசிரியர்களே அறிவுப் பெட்டகமாக விளங்கினர். அவர்கள் ஏட்டுச் சுவடிகள் மூலமாகவும் செவிவழியாகவும் பெற்ற அறிவினைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தனர்.
8. ஆசிரியர் கூறுவதைத் திரும்பக் கூறுதல், மனனம் செய்தல், மனனம் செய்ததை சரிபார்த்தல் என்பனவே கற்றல் முறையாகவும் கற்பித்தல் முறையாகவும் விளங்கின. பண்டைய காலக் கல்வி மடாலயங்களையும், கோயில்களையும் மையமாகக் கொண்டு விளங்கியது.
தமிழர் வரலாற்றிலும் சிந்தனை மரபிலும், ஆசிரியரின் வகிபாகம் பற்றிய சில கருத்துக்களை இவ்விடத்து நோக்குதல் வேண்டும். நன்னூல் கூறுகின்ற விளக்கங்களின்படி (சூத்திரம் 26 – 36) ஆசிரியரே சகல அதிகாரங்களும் உடையவர். கடுமையான கட்டுப்பாட்டைப் பயன்படுத்துபவர், மாணவர்களின் நடத்தைகளை முறையாக வழிப்படுத்துபவர், அவரே சகல அறிவுறுத்தல்களையும் வழங்குபவர். ஆசிரியர் மாணவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கி அவர்களின் நன்னடத்தை வளர்ச்சிக்கு உதவுபவர். ஆசிரியரின் ஆளுமையைப் பொறுத்தே மாணவர்களின் ஆளுமையும் நடத்தைப் பாங்குகளும் அமையும்.
இவ்வாறு நன்னூல் ஆசிரியரின் நோக்கில் ஆசிரியரானவர் இறை நம்பிக்கையும் உயர்ந்த இலட்சியங்களையும் உடையவராய் இருத்தல் வேண்டும். பொறுமையில் பூமியை ஒத்தவராய், அறிவில் நூலறிவையும் செயல்முறை அறிவையும் கொண்டவராய் உயர்ந்த பண்பாடுடையவராய் இருத்தல் வேண்டும். நன்னூலார் நோக்கில் அதிகாலை வேளை அல்லது குளிர் தென்றல் வீசும் மாலை வேளையே கற்பித்தலுக்கு சாலப் பொருத்தமானது.
பௌத்த, இஸ்லாமிய, சீன நாகரிகங்களில் ஆசிரியர் அறிவு, பண்பாடு, ஒழுக்கம் என்பவற்றின் உறைவிடமாகத் திகழ்ந்தார். ஊதியத்துக்கான ஒரு தொழிலாக ஆசிரியர் பணி கருதப்பட்டதாகப் பண்டைய நாகரிக வரலாறுகள் கூறவில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம்’, எழுத்தறிவித்தவர் இறைவனாவான்’ என்பது போன்ற மரபுத் தொடர்கள் ஆசிரியர்களுக்கு சமூகம் வழங்கிய உயர் அந்தஸ்தைக் கருதும்.
இஸ்லாமிய, சீன நாகரிகங்களில் ஆசிரியரே அறிவின் உறைவிடமாகக் கருதப்பட்டமையினால், 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவான பாடநூல் கலாசாரம்’ இந் நாகரிகங்களினால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆசிரியருக்குப் பதிலாகப் பாடநூல் அறிவை வழங்கும் சாதனம், ஆசிரியர் இல்லாவிட்டாலும் பாடநூல்களைக் கற்று அறிவை மேம்படுத்தலாம் என்ற கருத்துக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படாமைக்குக் காரணம், ஆசிரியருக்கே அறிவை வழங்கும் தனி உரிமை உண்டு என்ற மரபுவழி சமூக சிந்தனையாகும்.
மேலே எடுத்துச் சொல்லப்பட்ட ஒரு சுருக்கமான பின் புலம் ஆசிரியரின் பணி, வகிபாகம் என்பன பற்றிய மரபுவழிச் சிந்தனையை எடுத்துக் காட்டுகின்றது. இப்பின்புலத்தில் மாறிவரும் ஆசிரியரின் வகிபாகம் பற்றி நோக்கு முன்னர், அவர் பணியாற்றுகின்ற நவீன கல்வி (பாடசாலை) முறைமையின் சில அம்சங்களையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
நவீன கல்விமுறைமையின் அம்சங்கள்
* சமய நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்த மாணவர் கல்வியானது, 18-19ஆம் நூற்றாண்டுகளில், குறியாக ஐரோப்பாவில் தேசிய அரசுகளின் தோற்றத்துடன் அரசின் பொறுப்பின் கீழ் வந்தது. 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிரஷ்ய நாடு (ஜெர் – மனியின் அப்போதைய பிரதான அரசு) ஒரு பலமுள்ள தேசிய கல்வி முறை – யைத் தோற்றுவித்தது. இம்முன்மாதிரி ஏனைய ஐரோப்பிய அரசுகளால் மட்டு மன்றி, தூரகிழக்கிலிருந்த ஜப்பான் நாட்டின் கவனத்தையும் பெரிதும் ஈர்த் தது. நாட்டில் எதனை நான் பார்க்க விரும்புகின்றேனோ அதனை முதலில் பாடசாலைகளில் அறிமுகம் செய்வேன்’ என்று நெப்போலியன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
* தேசிய அரசுகள் தம்மை உறுதிப்படுத்திக் கொள்ளக் கல்வி முறைகளைப் பெரிதும் நம்பின. அரசின் சிந்தாந்தங்களைச் சமூகம் ஏற்றுக்கொள்ளச் செய்யவும், கீழ்ப்படிவுள்ள நற்பிரஜைகளை உருவாக்கவும், கல்வி முறைகள் உதவும் என்பதால் தேசிய அரசுகள் கல்வி முறைகள் மீது தமது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தின. இப்பின்புலத்திலேயே தேசிய ரீதியான கல்வி முறை, தேசிய கல்வித் திட்டமிடல், அரசாங்கக் கல்வி முறை என்னும் கல்விசார் எண்ணக்கருக்கள் உருவாயின.
* கல்வி நிலையங்களில் வழங்கப்பட்ட கல்வியின் சமயச் சார்புத் தன்மை பெருமளவுக்கு அகற்றப்பட்டு, விஞ்ஞானம், கணிதம், சமூக அறிவில், தொழில்நுட்பவியல் போன்ற வாழ்க்கைப் பயனுடைய பாடங்கள் – சமயச் சார்பற்ற கல்வி (secular education) அறிமுகம் செய்யப்பட்டது. இத்தகைய பாடங்களினூடாக சமூகத்துக்குப் பயனுடைய, சமூகத்துடன் பொருந்தி வாழக்கூடிய பிரஜைகளை உருவாக்க முடியும் என்ற புதிய நோக்கு உருவாயிற்று.
* கல்வி என்பது தனிமனித விருத்தி, ஒழுக்கம், ஆன்மீகப் பயிற்சி என்னும் அம்சங்களைக் கொண்டதாய், கல்வியின் விளைவு தனியாளில் ஏற்படுவது என்ற நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, கல்வியானது தனிமனிதனுக்கு அப்பாற்பட்ட புற உலகில் சமூக, பொருளாதாரச் சூழலில் மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கு கல்வி முறையை வழிகாட்டும் தத் துவமாயிற்று.
* ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் நவீன கல்வி முறைமையானது, உயர்ந்த நூலறிவும் புலமையும் மட்டுமன்றி, ஆசிரியர் பணிக்கான விசேட பயிற்சியும் (training in pedagogy) அவசியம் என்பதை வலியுறுத்தத் தொடங்கியது. எவ்வாறு மருத்துவர்களும் வழக் கறிஞர்களும் முறையே மருத்துவக் கல்வியையும் சட்டக்கல்வியையும் பெறுவது கட்டாயமோ, அவ்வாறே அசிரியர்கள் ஆசிரியக் கல்வியைப் பெற வேண்டியது அவசியமாயிற்று. பிறப்பால் ஆசிரியர்’ என்ற நிலைப் பாடு தளர்வுற்று ஆசிரியர் என்பவர் உருவாக்கப்பட வேண்டியவர், பயிற்றப்பட வேண்டியவர் என்ற கருத்து நவீன கல்வி முறையில் வலுப்பெறத் தொடங்கியது.
இவ்வாறான சிந்தனை மாற்றம் ஏற்படுவதுவதற்கு உளவியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களும், குறிப்பாக மனிதனின் கற்றல் நடைபெறுமாற்றை நோக்கிச் செய்யப்பட்ட உளவியல் ஆய்வுகள் காரணமாயின. அத்துடன் கல்வியானது ஆசிரியரின் பாண்டித்திய அறிவையன்றி மாணவரின் விருப்புகளை மையமாகக் கொண்ட பிள்ளை மையக் கல்வியாதல் வேண்டும் என்ற முற்போக் குக் கல்விச் சிந்தனையின் செல்வாக்கும் இத்தகைய மாற்றத்துக்குக் காரணமாயிற்று.
ஆசிரியரின் புதிய வகிபாகம்
இலங்கை நிலைமைகளில் தற்போது ஆசிரியர்களின் அந்தஸ்து மேம்பாடடைவதற்கான சில குறைந்த பட்ச சாதக காரணிகளை இனங்காண முடியும். ஆசிரியர்கள் தமது மாறிவரும் வகிபாகத்தைச் சரிவரச் செய்ய இவ்வந்தஸ்து பேணப்படுவது முக்கியமானது.
1. சகல ஆசிரியர்களும் பயிற்றப்பட்டவர்களாகவும் எதிர்காலத்தில் பட்டதாரிகளாகவும் (All graduates service) ஆசிரியர்கள் மாறுதல் வேண்டும் (பயிற்றப் – படாத , பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்களின் வீதாசாரம் 1996 இல் 23.6 ஆகவிருந்து 2002 இல் 10.6 ஆகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது – தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை , 2003, ப. 59).
2. ஆசிரியர் பணிக்குப் பொருத்தமான உளப்பாங்குடையோரை மட்டுமே அப்பணிக்குத் தெரிவு செய்ய முயலுதல் வேண்டும் என்ற புதிய கொள்கை, நிலைப்பாடு.
3. ஆசிரியர் நியமனம், இடமாற்றம் பதவி உயர்வு என்பனவற்றில் அரசியல் தலையீட்டிற்கு இடமளிக்கப்படக்கூடாது. தகுதி வாய்ந்தவர்களுக்கே பதவி உயர்வு வழங்கப்படல் வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கேற்பவே இடமாற்றங்கள் நடைபெற வேண்டும். சகல அரசியல் கட்சிகளும் அரசியல் தலையீட்டைச் செய்வதில்லை என்ற பிரகடனத்தைச் செய்ய வேண்டும் என்கிறது தேசிய ஆணைக் குழுவின் கோரிக்கை.
4. அண்மைக் காலங்களில் நிறுவப்பட்டுள்ள ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, கல்வி நிர்வாக சேவை என்பன இத்தகைய சாதகமான காரணிகளே.
எவ்வாறாயினும், ஆசிரியர்கள் இன்றைய கல்வி முறையில் தமது வகிபாகத்தை உணர்ந்து ஈடுபாட்டுடன் செயற்படுவதைத் தடைசெய்யும் அல்லது அவர்களை ஊக்கமிழக்கச் செய்யும் அரசியல் தலையீடு, ஊக்குவிப்புகள் இன்மை என்னும் காரணிகள் அவர்களுடைய வினைத் திறனைத் தொடர்ந்து குறைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
புதிய 21ஆம் நூற்றாண்டு தகவல் மைய அறிவுமைய நூற்றாண்டு என்று உருவாகியுள்ள நிலைமை, புதிய நூற்றாண்டில் அறிவு பன்மடங்காகப் பெருக்கெடுத்தோடும் நிலைமை, சமூகங்கள் அறிவார்ந்த சமூகங்களாகவும் (knowledge society) கற்கும் சமூகங்களாகவும் (learning societies) உருவாகி வரும் நிலைமை, இதுவரை காலமும் வர்த்தக, கைத்தொழில் அமைப்புக்கள் (organisation) எனப்பட்டவை தற்போது அறிவார்ந்த அமைப்புக்களாக (knowledge organisations) உருமாற்றம் பெற்று வரும் நிலைமை, உடல் உழைப்பு மற்றும் வெள்ளை ஆடை (அலுவலக) ஊழியர்கள், அறிவுசார் ஊழியர்களாக (knowledge workers) மாறிவரும் நிலைமை, உலகமயமாக்கத்தின் விளைவாக தேசிய தொழிற் சந்தைக்கான பயிற்சியும் கல்வியும் என்ற நிலைமை மாறி, சர்வதேச தொழிற்சந்தையை நோக்கிய பயிற்சியும் கல்வியும் என்ற புதிய நிலைமை உருவாகியுள்ள நிலைமை இவை யாவும் தற்போது ஆசிரியர்களின் வகிபாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இப்பின்புலத்தில் இன்றைய ஆசிரியர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பாட ஏற்பாட்டையும் பாடநூலையும் பின்பற்றி, அவை உள்ளடக்கியுள்ள பாட அறிவை மட்டும் கற்பித்து விட்டால் போதாது. ஆனால், அண்மைக் காலம் வரை ஆசிரியர்களின் வகிபாகம் இவ்வாறானதாகவே இருந்து வந்தது.
ஆனால், தற்போது ஆசிரியர்கள், பாடவிடயத்தைக் (content) கற்பிக் கின்ற அதேவேளையில், மாணவர்கள் சுயமாக, தாமாக கற்கும் திறன்களையும் (learning skills) கற்பிக்க வேண்டியுள்ளது. அதாவது கல்விச் செயற்பாட்டில் இன்று கற்பதற்குக் கற்றல்’ (learning to learn) என்ற புதிய அம்சம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அறிவு வெள்ளம் பீறிட்டெழுந்து பிரவாகம் எடுத்து ஓடும் நாளில், மாணவர்கள் கற்கும் பாடப் பொருள் அறிவு விரைவில் காலாவதியாகிவிடுகின்றது.
எனவே, மாணவர்கள் தமது அறிவைத்தாமாகவே புதுப்பித்துக் (renew) கொள்ள வேண்டிய அல்லது இற்றைப் படுத்திக் கொள்ள (updating) வேண்டிய ஒருகாலப் பகுதியில் வாழ்கின்றனர். இதற்கு உதவும் வகையில் ஆசிரியர்களின் வகிபாகம் மாற்றம் பெற வேண்டி – யுள்ளது.
1996ஆம் ஆண்டின் டெலொர்ஸ் அறிக்கை (delors report) 21ஆம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றியது. கல்வி – யானது பெருஞ் செல்வத்தை உள்ளடக்கியது (treasure within) என வலியுறுத்திய இவ்வறிக்கை 21ஆம் நூற்றாண்டுக்கான கல்வியானது நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டமைய வேண்டும் என்று கூறியது அவையாவன:
1. அறியக் கற்றல் (learning to know)
2. செய்யக் கற்றல் (learning to do)
3. வாழக் கற்றல் (learning to be)
4. பிறருடன் இணைந்து வாழக் கற்றல் (learning to live together)
இதில் முதலாவது அறியக் கற்றல் என்பது பரந்த பொது அறிவையும் சில பாடங்களில் ஆழமான அறிவையும் கருதிய அதேவேளையில், முன்னர் குறிப்பிட்ட கற்பதற்குக் கற்றல்’ என்ற அம்சத்தையும் உள்ளடக்கியிருந்தது. வாழ்க்கையின் பிற்பகுதியில் கற்பதற்குக் கிட்டும் வாய்ப் – புகளிலிருந்து இளந்தலைமுறையினர் இதனால் பயனடைய முடியும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
1992ஆம் ஆண்டின் தேசிய கல்வி ஆணைக்குழு குறிப்பிட்ட ஐந்து வகையான தேர்ச்சிகளில் ஐந்தாவது கற்பதற்குக் கற்றல்’ தொடர்பான தேர்ச்சிகளாகும். ஒருவர் எதனைக் கற்றாலும் அவர் அதனை புதுப்பித்து இற்றைப் – படுத்தல் வேண்டும், அதனைப் பரிசீல னைக்கு உள்ளாக்குதல் வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள தகவல் புரட்சி கற்பதற்குக் கற்றலைத் தவிர்க்க முடியாததாக விட்டது’ என இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.
புதிய அறிவுசார் சமூகத்தில் பாடசாலைப் பாடங்களை விட மாணவர்கள் பெறுகின்ற கல்வியைத் தொடரும் ஆற்றலும் கற்பதற்கான ஊக்கமும் (motivation) அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்று எதிர்காலவியல், முகாமைத் துவம் ஆகிய துறைகளில் புகழ் பெற்ற சிந்தனையாளரான பீட்டர் டிரக்கர் (Peter Drucker) கூறுகின்றார். எதிர்காலத்தில் சிறந்த ஆசிரியர்களாக விளங்கக் கூடியவர்கள் கற்பதற்குக் கற்கும் திறன்களையும் வாழ்நாள் முழுவதும் கற்பதற்கான ஊக்கத்தையும் வழங்குபவர்களே என்பது அவருடைய கருத்து.
அவர் மேலும் கூறுவது போல், புதிய நூற்றாண்டில் கல்வி ஒரு குறிப்பிட்ட வயதில் முற்றுப் பெற்றுவிடப் போவதில்லை. தொடர்ந்து அறிவுத் தொகுதியானது பெருகிக் கொண்டும் மாறிக் கொண்டும் இந்நாளில் கல்வியானது வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இதற்குக் கற்றல் திறன்களை மட்டும் பெற்றுவிட்டால் போதாது. ஆசிரியர்கள் கற்பதற்கான ஊக்கத்தை கல்வித் தாகத்தை மாணவரிடத்து ஏற்படுத்தும் ஒரு புதிய வகிபாகத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
சுருங்கக்கூறின், ஆசிரியர்களின் புதிய வகிபாகமானது மாணவர்களுக்குக் கற்றல் திறன்களை வழங்குவதுடன், அவர்களுடைய கற்றல் ஆற்றலை மேம்படுத்துவதாகவும், அவர்கள் வாழ்க்கை நீடித்த கல்வியைப் பெறும் வகையில் ஊக்கம் வழங்குவதாகவும் மாற்றம் பெற்று வருகின்றது.
ஆசிரியரின் மாறிவரும் வகிபாகம் பற்றிய அண்மைக்கால யுனெஸ்கோ அறிக்கைகளில் காணப்படும் சிந்தனைகளையும் நாம் அறிந்து கொள்ளுதல் பொருத்தமுடையது.
21ஆம் நூற்றாண்டுக்கான ஆசிரியர்கள் உயர்தொழில் தகைமையாளர்களாய் (professionals) அடிப்படைப் பாடநெறிகளில் வல்லுனர்களாதல் வேண்டும்.
பல்வகைக் கற்கைநெறிகளின் அடிப்படையிலான கற்பித்தல் தத்துவங்களை உள்வாங்க வேண்டும்.
மாணவர்களுடன் உரையாடுகின்ற திறனோடு, அவர்கள் தகவல்களைத் தெரிவுசெய்து பயன்படுத்த உதவ வேண்டும்.
வளர்ந்தோர் கல்வியின் அடிப்படைத் தத்துவங்களைப் புரிந்து கொள்ளல் வேண்டும். பெற்றோருடனும் சமுதாயத்துடனும் ஒத்துழைக்கத் தேவையான பயிற்சியைப் பெற வேண்டும்.
தமது தொடருறுகல்வியைக் கட்டுப்படுத்திப் பயனடையத் தெரிய வேண்டும்.
படைப்பாற்றல், மாற்றங்களையும் புத்தாக்கங்களையும் வரவேற்கும் மனப்பாங்கு போன்ற அடிப்படைத் தகைமைகளையும், மாறும் நிலைமைகளுக்கேற்ப இசைவாக்கம் செய்தல், திறனாய்வு மனப்பாங்கு, பிரச்சினைகளை இனங்காணல், அவற்றுக்குத் தீர்வு காணுதல் போன்ற திறன்களையும் கைவரப் பெறுதல் வேண்டும்.
புதிய நூற்றாண்டுக்கான ஆசிரியர் மாற்றங்களை ஏற்படுத்தும் முகவர் என்ற வகிபாகத்தை ஏற்பவர், அதாவது சகிப்புத்தன்மை , சமூக நீதி, சமாதானம், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பவற்றை மேம்படுத்தும் மாற்றத்துக்கான முகவரே ஆசிரியர்.
முடிவுரை
இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவை வழங்குபவர்களாக நோக்கப்படுவதில்லை. மாறாக, மாணவர்கள் தாமாக சிந்திப்பதற்கும் தமக்கான தீர்மானங்களைத் தாமே மேற்கொள்வதற்கும் தமக்காகச் செயற்படுவதற்கும் தேவையான திறன்களை வழங்குபவராக ஆசிரியர் கருதப்படுகின்றார். இத்தகைய மாறுபட்ட, சிக்கலான பணிகளைத் திறம்பட ஆற்ற, ஆசிரியர்களின் நோக்குகள், திறன்கள், ஆற்றல்கள் என்பன நிறைவாக விருத்தி செய்யப்படல் வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் இன்று தொடருறு (continuing) ஆசிரியர் கல்வி’ என அழைக்கப்படுகின்றன. இவ்வகையான கல்வி, தொடர்ச்சியான முன்னேற்றத்தையும், இம்முன்னேற்றமானது தொடர்ச் சியான மாற்றத்தையும் ஏற்படுத்த உதவுகின்றது.
நவீன தகவல் தொழில் நுட்பமானது இன்றைய மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்புகளை நன்கு விரிவுபடுத்தியுள்ளமை பற்றி இவ்விடத்து விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை . ஆயினும், கணினி உதவியுடனான கல்வி (Computer aided education) என்னும் நவீன அம்சமானது, பாடசாலைக் கல்வியில் ஆசிரியர்களின் வகிபாகத்தை உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆசிரியர்களால் மட்டும் செய்யப்படக்கூடிய சில பணிகள் உண்டு. அவர்கள் மாணவர்களுடன் வலுவான, பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்த முடியும்; தகவல் தொழில் நுட்பமானது இப்பணியைச் செய்ய முடியாது; ஆசிரியர் மாணவர்களை ஊக்குவித்து அவர்களைக் கற்றலில் ஆர்வம் செலுத்தச் செய்ய முடியும் ஆசிரியர்கள் மாணவர்களின் மனவெழுச்சித் தேவைகளை (Emotional Needs) இனங்காண முடியும்; தகவல் தொழில்நுட்பம் இப்பணிகளைச் செய்யமுடியாது; கற்றல் சூழலை மேம்படுத்தல், தொடர் கணிப்பீடு மற்றும் மனித தொடர்பு சம்பந்தப்பட்ட பணிகளைச் செய்வதில் ஆசிரியர்களுக்கு மாற்று ஏற்பாடாகத் தகவல் தொழில் நுட்பம் செயற்பட முடியாது எனும் இக் கூற்று கல்விச் செயற்பாட்டில் ஆசிரியர்களின் வகிபாகம் 21ஆம் நூற்றாண்டிலும் வலுவாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.
சோ சந்திரசேகரம்
பேராசிரியர் கல்வியியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்
நன்றி அகவிழி