“முத்திரைகள் என்பது முற்றிலும் அரசியல் கருத்தியலாகும். இதனை நாங்கள் முழுமையாக ஆராய்ந்தால் எமது முழு வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும். அதன் பிரகாரம் மனிதர்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்” என்கின்றார் நிரோஷன பீரிஸ்.
பொழுதுபோக்காக ஆரம்பித்த முத்திரை சேகரிப்பு நாட்டம், பின்னாளில் அவற்றிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அவை எவ்வாறு எமது கலை, கலாசாரம், வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை கற்று அதனை இன்று ஏனையோருக்கு கற்பித்து வருகின்றார் நிரோஷன பீரிஸ்.
‘கியவன முத்தர’ (முத்திரைகளை படித்தல்) என்ற அமைப்பையும் நிறுவி அதனூடாக இப்பணிகளை முன்னெடுக்கின்றார். “முத்திரையின் ஊடாக சமய, சமூக, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள், வாழ்க்கை முறை மட்டுமன்றி நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தலாம்” என கூறும் நிரோஷன, அதற்கான பணிகளை தற்போது நூலக மட்டத்தில் முன்னெடுப்பதாக குறிப்பிட்டார். அத்தோடு, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றார்.
“எமது நாட்டின் ஆரம்ப கால முத்திரைகளை பார்த்தால் இலங்கையின் பெயர் சிலோன் என்பதிலிருந்து ஸ்ரீலங்கா என மாற்றியமை, அரசியல் மாற்றம் என சகல விடயங்களையும் முத்திரைகள் பிரதிபலிக்கின்றன. வரலாற்று பிரசித்தி பெற்ற பொக்கிஷமாக முத்திரைகள் காணப்படுகின்றன. சில முத்திரைகளில் வருடங்கள், பெயர்கள் இல்லை. அவற்றை நான் புத்தகங்கள், இணையங்கள் போன்றவற்றில் தேடினேன். சிறிய முத்திரைகளை பெரிதாக்கி பார்த்த போது அதில் உள்ள விடயங்களை நாம் நன்கறிந்து கொள்ளலாம். இந்த சிறிய முத்திரையை ஆராய்ந்து ஆராய்ந்து செல்லும் போது, பல விடயங்கள் காணப்பட்டன. குயின் விக்ரோரியா, ஆறுமுகநாவலர், சித்திலெப்பை, சேர் பொன். அருணாச்சலம் ஆகியோர் தேசிய வீரர்களாக கருதப்பட்டுள்ளனர். இனம் மொழி பேதத்தை கடந்து அவர்கள் எமது நாட்டிற்காக உழைத்துள்ளனர். ஆனால், அவர்களை எத்தனை பேர் அறிவார்கள் என்பதே சந்தேகம்.
உதாரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் 50வருட பூர்த்தியை முன்னிட்டு முத்திரை வெளியிடப்பட்டது. இப்போது இந்த முத்திரையை வைத்துக் கொண்டு பேராதனை பலகலைக்கழக வரலாற்றை தேட வேண்டும். இலங்கையின் முதல் பல்கலைக்கழகமான இலங்கை பல்கலைக்கழகத்தை (பின்னர் பேராதனை பல்கலைக்கழகமாக மாறியது) நிறுவுவதற்கு இலங்கை பல்கலைக்கழக சங்கம் முன்னோடியாக காணப்பட்டது. இதற்கு சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் ஜேம்ஸ் பீரஸ் மற்றும் சேர் மார்க்கஸ் பெர்ணான்டோ ஆகியோர் வழிகாட்டியாக செயற்பட்டனர். அதன் பின்னர் அதனை எங்கு அமைப்பதென ஒரு சிக்கல் ஏற்பட்டது. கொழும்பு புல்லர்ஸ் வீதியில் அமைப்பதற்கு அப்போதைய அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதைய பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் ஆளுநரான ஹூக் க்ளிஃபோர்ட், நீதியரசர் எம். டி. அக்பர் தலைமையில் குழுவொன்றை நியமித்தார். இக்கதை இப்படியே நீண்டு செல்கின்றது. இந்த ஒரு சிறிய கதையில் பார்த்தால் தமிழ், சிங்களம், முஸ்லிம் இனத்தவர்கள், பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தவர்கள் அனைவரும் எமது நாட்டின் ஆணிவேரான கல்வி கட்டமைப்பை உருவாக்க பாடுபட்டுள்ளனர்.
சாதாரணமாக ஒரு முத்திரையைப் பார்த்தால் சிலவேளைகளில் எதுவும் விளங்காது. டி.எஸ்.சேனாநாயக்க பற்றி ஒரு முத்திரை உள்ளது. இப்போது இணையத்தில் அவர் பற்றி அறியலாம். நகர மண்டப பகுதியில் அவரது சிலையுண்டு. அதற்கு கீழ் அவர் பற்றிய சிறு குறிப்பு குறிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களிடம் கேட்கலாம். நூலகங்களில் புத்தகங்களை தேடிப் படிக்கலாம். இப்படித்தான் தேட வேண்டும். இப்படி ஒவ்வொரு முத்திரைக்கும் பின்னால் பல கதைகள் உள்ளன. முத்திரையில் சொல்லப்படாத பல கதைகளையும் நாம் அறிந்துகொள்ளலாம். அதனை ஆராய்ந்து படிக்கும் போது எம்மில் ஒரு மாற்றம் ஏற்படுவதை மறுக்க முடியாது” என்றார் அவர்.
“உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கையை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த 2020ஆம் ஆண்டு 5முத்திரைகள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன, மத, மொழி பேதமின்றி எமது மக்கள் ஒன்றித்து வாழ்ந்தமைக்கு முத்திரைகள் ஒரு சான்று. சுண்டுக்குழி வித்தியாலயம், ஹாட்லி கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, பொன்னம்பலம் ராமநாதன், அறிஞர் சித்திலெப்பை, தேசிய மீலாதுன் நபி, திருக்குர்ஆன், கலாநிதி என்.எம்.பெரோரா, தமிழ் சிங்கள புத்தாண்டு, உலக சமய தினம் என இவை யாவற்றுக்கும் முத்திரைகள் உள்ளன. இதில் உலக சமய தின முத்திரையில் சகல மத இலட்சினைகளும் உள்ளன. எமது நாட்டின் பழங்குடியின மக்கள் பற்றியும் முத்திரைகள் வந்துள்ளன.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்த விவேகானந்தன் செல்வகுமார் (ஆனந்தன்) என்ற சட்டத்தரணி, உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பெருமைக்குரியவர். நீச்சல் வீரரான இவர் 1984ஆம் ஆண்டு ஆங்கில கால்வாயை நீந்திக் கடக்க முயன்ற போது உயிரிழந்தார். இவரது ஞாபகமாக 1999ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஒரு முத்திரையை வெளியிட்டது. இவரைப் பற்றி அறிவதற்கு அந்த முத்திரையை படிக்க வேண்டும்.
இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மங்கள சமரவீரவின் மாமியான மானெல் அவர்களை திருமணம் செய்திருந்தார். இந்த விடயம் எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆகவே முத்திரையை படிப்பதன் ஊடாக மக்களின் மனநிலையை மாற்றி அதனூடாக சிறந்த சமூகமொன்றை நிச்சயமாக கட்டியெழுப்ப முடியும்.
“முதலில் முத்திரைகளை சேகரிக்க பழக்க வேண்டும். அதன் பின்னர், அதனை வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பின்னர் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி கற்பிக்க வேண்டும். பணம் கொடுத்து வாங்கா விட்டால் பரவாயில்லை. கடிதங்களில் வரும் முத்திரைகள், பழைய முத்திரைகள் என்பவற்றை சேகரித்து வகைப்படுத்த வேண்டும். பின்னர், அதுபற்றி நிச்சயமாக தேட ஆரம்பிப்பார்கள். கண்ணால் பார்த்து கற்பதை விட காதால் கேட்டு படிக்க பழகி விட்டோம். தேசிய கீதம் என்றதும் ஆனந்த சமரக்கோன் நினைவுக்கு வருகின்றார். ஆனால், அவரது முத்திரையை காண்பித்து இவர் யார் என்றால் பெரும்பாலானோருக்கு தெரியாது. காரணம், பெயரை கற்றோமே தவிர முகத்தை பார்க்கவும் இல்லை, தேடவும் இல்லை.
வரலாற்றை தனித்தனியாக படிப்பிக்கின்றனர். அதனை விடுத்து ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி கற்பிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் முத்திரை உண்டு. அதேபோன்று நூலகங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்பது நிரோஷனவின் கருத்தாகும்.
“எமது நாட்டைப் பொறுத்தளவில் முத்திரை சேகரிப்பில் தற்போது பெரும்பாலானவர்கள் ஆர்வமின்றி காணப்படுகின்றனர். சிலர் சேகரித்தபோதும், அதன் பின்னால் உள்ள கதைகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்றே கூறினர்.
அப்படி முத்திரை சேகரிப்பவர்கள் சிலரிடம் கேட்ட போது, முத்திரைகளை சேரித்து அதனூடாக சில விடயங்களை கற்பிக்க சிறுவர்களுக்கு கற்பிக்கலாம். எமது நாட்டின் சுதந்திரத்திற்கு பங்களித்த தேசிய தலைவர்கள் சகல சகல இனம், மதம், மொழி பேதமின்றி உள்ளனர். அவர்கள் பற்றி கற்பிக்கலாம். சிறுவர்கள் முதல் இதனை ஆரம்பிக்க வேண்டும்” என்றார் சட்டத்தரணி சந்துஷ் பெர்ணான்டோ.
‘எமது நாட்டின் சகல விடயங்களும் எம்மை ஒன்றிணைக்கவே உருவாக்கப்பட்டன. பிரிந்து செல்வதற்கல்ல. ஆனால், பின்னர் அந்த நிலை மாறி விட்டது’ என்றார் 82வயதான முத்திரை சேகரிப்பாளரான லக்ஷ்மணன். இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர்.
‘பழைய விடயங்களை மீட்டிப் பார்க்க முத்திரைகள் ஒரு சிறந்த விடயம். பாடசாலைகள், வரலாற்று பிரச்சித்தி பெற்ற இடங்கள், சிலரது முகங்கள் என்பவற்றை சில சந்தர்ப்பங்களில் காண முடியாமல் உள்ளது. நான் பல சந்தர்ப்பங்களில் முத்திரைகளை பார்த்து அவற்றை அறிந்து கொண்டேன்’ என சுமார் 5000முத்திரைகளை சேகரித்து வைத்துள்ள ஆசிரியரான இரத்தினபுரியைச் சேர்ந்த சுதர்ஷன் கூறினார். கிடைப்பதற்கரிய முத்திரைகளை சேகரிப்பதில் அலாதியான ஆர்வம் உள்ளதென தெரிவித்த ரந்திமா பெர்ணான்டோ என்ற முத்திரை சேகரிப்பாளர், அதனூடாக புதிய விடயங்களை தேடுவதாகவும் புதிய நபர்களை சந்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
இவர், எமது நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் காணப்படும் முத்திரை சேகரிப்பு தொடர்பான சங்கங்களிலும் உறுப்பினராக உள்ளார். ஒவ்வொரு சமூகத்தையும் பற்றி புரிந்து கொள்ள, முத்திரை வாசிப்பு சிறந்த அம்சம் என இவர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், முத்திரை சேகரிப்பாளர்களிடம் பொதுவாக உரையாடிய போது பெரும்பாலானவர்கள் இதனை பொழுதுபோக்காக மாத்திரமே செய்கின்றனர் என்ற விடயம் தெளிவாகியது.
தினகரன்