கால்குலேட்டர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
விஞ்ஞான கணிப்பான்கள் (Scientific Calculator) இல்லாத காரணத்தினால் நாடளாவிய ரீதியில் 30,000 மாணவர்களின் உயர் கல்வி ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருபத்தைந்து ஆயிரம் கணிப்பான்கள் அவசரமாகத் தேவைப்படுவதால், வர்த்தக அமைச்சும், நிதியமைச்சகமும் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு, தேவையான அளவு கணிப்பான்களை இறக்குமதி செய்து
கல்வி அமைச்சின் தலைமையின் கீழ் உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கான கூட்டுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த வருட உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கலை மற்றும் மருத்துவப் பாடநெறிகள் தவிர பெரும்பாலான பாடநெறிகள் தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
இந்த விஞ்ஞானக் கணிப்பான்கள் Scientific Calculator சந்தையில் எங்கும் கிடைக்காததால் அந்தக் மாணவர்களின் கல்வியைத் தொடர்வது பெரும் சவாலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மடிக்கணினிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களிலும் இதே நிலை உருவாகியுள்ளதால், தொலைதூரப் பகுதிகளில் இணையவழிக் கல்வி பெறும் ஏராளமான மாணவர்கள் இந்தப் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் நியாயமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக ஜம்போ அமைச்சரவைகளை உருவாக்கி நாட்டுக்கும் மக்களுக்கும் அரசாங்கம் மாயாஜாலம் காட்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அண்மையில் அவர் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தார்.