அரச துறையில் ஏற்படும் வெற்றிடங்களை மேலதிக ஆளணியினரைக் கொண்டு நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததையடுத்து, 60 வயதிற்குள் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அரச சேவையில் உருவாகும் வெற்றிடங்கள், வேறு அரச நிறுவனங்களில் உள்ள மேலதிக ஊழியர்களைக் கொண்டு நிரப்பப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எனவே, அரச நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறையோ, சேவையை வழங்குவதில் குறைபாடுகளோ இருக்காது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, அரசாங்கம் 2020 இல் 60,000 பட்டதாரிகளை பொதுச் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்தது ஆனால் அவர்களில் பலர் பட்டதாரிகளுக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்வதாகக் கூறப்படுகிறது. இந்த பட்டதாரிகளை கொண்டு அரச துறையிலுள்ள வெற்றிடங்களை அரசாங்கம் நிரப்ப முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை நிதி முகாமைத்துவம் மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய பொருளாதார முகாமைத்துவத்திற்கு தேவையான மூலோபாய வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் பொருளாதாரத்தின் வளர்ச்சி, மீட்சி மற்றும் புத்துயிர் தொடர்பாக பிரதமர் உட்பட ஆறு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.