மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சி கொடூர தாக்குதல்
பண்டாரகம, மில்லனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த குழுவின் அதிகாரிகள் குழுவொன்று பாடசாலைக்கு செல்லவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைக்கு சொந்தமான மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சிறுவர்களை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருட்டு தொடர்பில் பல பாடசாலை ஆசிரியர்கள் பிள்ளைகளை அடித்ததாகவும், பின்னர் மில்லனியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு சிறுவர்கள் அந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறித்த சிறுவர்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடூரமான முறையில் தாக்கியதாகவும் ஒரு மாணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதே நேரம் சம்பவத்துடன் தொடர்புடைய மில்லனிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உதயகுமார தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டிற்கமைய, தாம் இது தொடர்பில் செயற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அதிகார சபையின் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றை மில்லனிய பிரதேசத்திற்கு அனுப்பி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை ஆசிரியரின் பணப்பையை காணவில்லை என கூறி பாடசாலையின் நூலக அறையில் 12 மாணவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அதிபர் உட்பட பல ஆசிரியர்களால் மாணவர்கள் மண்டியிட வைத்து கடுமையாக தாக்கி தண்டித்துள்ளனர். பின்னர், சம்பவம் குறித்து அதிபர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, பொலிஸார் பாடசாலைக்கு வந்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் முகத்திலும் உடலிலும் தடியடி தாக்குதல் மேற்கொண்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. பின்னர் கம்பியால் மின்சாரம் பாய்ச்சியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர்களை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
https://sinhala.teachmore.lk/?p=887