ஆசிரிய தலைமைத்துவத்தின் வகிப்பங்குகள்.
க.சுவர்ணராஜா- மாணவர்களின் கற்றல் வெற்றிற்காக ஆசிரியர்கள் பல்வேறு வகிப்பங்குகளை ஏற்கவும், ஆற்றவும் வேண்டியவர்களாக உள்ளனர். ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் வெற்றிக்காக பல்வேறு தலைமைத்துவ வகிப்பங்குகளை விருப்புடன்; ஏற்று நடப்பதால் மாணவர்களிடையே கற்றல் வெற்றியோடு இணைந்து தலைமைத்துவப் பண்புகளும் விருத்தியடைகின்றன.
தலைமைத்துவம் என்பது வற்புறுத்ததில்லாத முறைகளினூடாக மக்களை செயற்பட ஊக்குவிப்பதன் மூலம் அவர்களை ஒரு திட்டமிட்ட திசையில் செலுத்தும் செயன்முறையாகும். நல்ல தலைமைத்துவம் மக்களை அவர்களுக்கு நீண்ட காலத்தில் சிறந்த பயனளிக்கக் கூடிய திசையிலே செலுத்தவல்லாத இருக்கும். மற்றுமொரு கோணத்தில் கூறுவதாயினும் தலைமைத்துவம் தொலை நோக்கினை உருவாக்கி செயல்நுட்பத்தை, நுணுக்கத்தை உருவாக்கி, அதனை நிலைமைக்கேற்ப விருத்தியாக்கி ஒத்துழைப்பை திரட்டி செயற்பாடடை ஊக்குவிக்கின்ற ஒரு செயல் முறையாகும். ஆசிரிய தலைமைத்துவமானது நேரடியாக மாணவர்களின் விருத்தியில் தொடர்புபடுவதால் அவர்களின் தொலைநோக்கும், பணி இலக்கும் மாணவர்களின் கற்றல் விருத்தியுடன் தொடர்புடையதாகவே அமைகின்றது எனலாம்.
ஆசிரியர்களின் தலைமைத்துவ வகிபங்குகள் முறைசார்ந்த முறையிலோ, அல்லது முறைமையில் முறையிலோ அமையலாம், அதாவது பாடசாலை முகாமைத்துவக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட கடமைப்பட்டியலின் ஊடாகவும், ஆசிரியர் தானே உருவகித்துக் கொள்ளும் செயற்பாடுகளின் ஊடாகவும் ஆசிரியர்களின் தலைமைத்துவ வகிப்பங்குகள் தோற்றக் கூடும்.
பாடசாலைகளின் தரம், இயலளவு, பாடசாலையில் இடம் பெறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளின் ஊடாகவும் ஆசிரியர்களின் தலைமைத்துவ பகிபங்குகள் மாற்றமடையவும் கூடும். ஆசிரியர்கள் தமது பாடத்துறைச் சார்ந்தும், தனது விசேடமான சிறப்பாற்றல்களைச் வெளிக்காட்டுவதன் ஊடாகவும் சில தலைமைத்துவம் வகிப்பங்குகளை வெளிப்படுத்தக் கூடும். உதாரணமாக பல ஆசிரியர்கள் தமது விசேட நிபுணத்துவ ஆற்றலில் தமது சகபாடிகளின் தலைவராக செயற்படும் நிலைமைகளைக் குறிப்பிடலாம்.
ஆசிரியர்கள் தமது விசேடமான குணாதிசயங்களை ஏனையவர்களைவிட அதிகமாக வெளிக்காட்டும் ஆளுமை ரீதியான நடத்தைகள், ஆற்றல்கள் என்பவற்றின் ஊடாக மற்றவர்களை ஆட்கொள்ளும் தலைமைத்துவமிக்கவர்களாகக் காணப்படுகின்றனர்.
பொதுவாக ஆசிரியர்கள் ஏற்க வேண்டிய தலைமைத்துவ வகிப்பங்குகள் பல உள்ளன. அவற்றில் பிரதானதான சில வகிபங்குகள் பின்வருமாறு அமைகின்றன. அவையாவன
1. வளப்பகிர்வாளன்
ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களுக்கும் தனது சகபாடி ஆசிரியர்களுக்கும் ஒரு வளப்பகிர்வாளனாக அமைதல் வேண்டும். கற்றல்-கற்பித்தல் தொடர்பான ஆசிரியர் வழிகாட்டிகள், மாணவர் வழிகாட்டிகள் வாசிப்பிற்கான நூல்கள், இணையத்தள முகவரிகள் தன்னால் ஆக்கப்பட்ட குறிப்புக்கள், தன்னால் தயாரிக்கப்பட்ட விசேடமான கற்றல் — கற்பித்தல் சாதனங்கள், என்பவற்றை பகிர்ந்துக் கொள்வதன் ஊடாக ஆசிரியர் வளப்பகிவாளன் என்ற தலைமைத்துவ வகிப்பங்கினை வெளிப்படுத்துகின்றார்.
சில ஆசிரியர்கள் தனது வெப்தளங்கள் ஊடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் ஏனையோருக்கு கற்றல் -கற்பித்தலுக்கான விடயங்களை பரிமாறிக் கொள்கின்றனர். மேலும் பல ஆசிரியர்கள் பாடசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றும் ஆசிரியர்களுக்கு தம்மிடமுள்ள வளங்களை பகிர்ந்தளிப்பதில் காட்டும் அக்கறையானது புதிதாக வரும் ஆசிரியர்களின் விருத்திக்காக மட்டுமன்றி மாணவர்களின் கற்றல் வெற்றிற்கும் ஒட்டு மொத்த பாடசாலை விருத்திக்கும் அடித்தளமாக அமைகின்றன.
2.கலைத்திட்ட — நிபுணன்
பாடசாலைக் கலைத்திட்டத்தில் ஆசிரியர் நிபணத்துவ நிலையானது. கலைத்திட்டம் தொடர்பான ஒரு தலைமைத்துவ வகிப்பங்கினை ஆசிரியருக்கு பெற்றுக்கொடுக்கின்றது. பாடசாலைக்கலைத்திட்டத்தின் உள்ளடக்கம், அவற்றின் தரவேறுபாடுகள், பாடசாலைக் கலைத்திட்டத்தின் பிரிவுகள், என்பன தொடர்பாக ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
கலைத் திட்டத்தை பாடசாலைக்கு ஏற்றவாறு மாற்றி திட்டமிடும் முறை, பாடசாலை கலைத்திட்டத்தின் பல்வேறு இணைப்பு முறைகள், பாடசாலைக்கலைத்திட்டத்தின் பெறுபேறுகள் மதிப்பிடும் முறைகள் தொடர்பில் ஆசிரியர் நிபுணத்துவம் கொண்டிருந்தால் ஏனைய ஆசிரியர்கள் அவரை கலைத்திட்ட நிபுணராகவும், அத்துறைசார்ந்த தலைவராகவும் ஏற்றுக் கொள்கின்றனர்.
கலைத்திட்ட நிபுணராக ஆசிரியர் தலைமைத்துவம் ஏற்கும் போது, பாடசாலை மட்டத்தில் கலைத்திட்த்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், கலைத்திட்டம் தொடர்பாக நியமங்களை பாடசாலைமட்டத்தில் வகித்துச் செயற்படவும், கலைத்திட்டம் தொடர்பான விடயங்களை அவ்வப்போது பகிர்ந்துக்கொள்ளவும், கலைத்திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது அதனை இலகுவாக உள்வாங்கிக் கொள்ளவும் முடிகிறது.
உதாரணமாக தனது பாடத்துறை தொடர்பாகவும், ஏனைய பாடங்கள் தொடர்பாகவும், அது சார்ந்த இணைப்பாடவிதான நடவடிக்கைகள், மாணவர்களை கணிப்பிடும் செய்யும் நுட்பங்கள், கணிப்பிடும் விடயங்களை அறிக்கைப்படுத்தும் முறைகள் என்பன தொடர்பாக ஒரு ஆசிரியர் கொண்டிருக்கும் நிபுணத்துவம் இயல்பாகவே இவரது தலைமைத்துவத்தை ஏற்கும் உணர்வை ஏனையோரிடத்தே ஏற்படுத்துவதைக் குறிப்பிடலாம்.அதாவது ஒரு ஆசிரியர் கலைத்திட்டம் தொடர்பாக கொண்டிருக்கும் நிபுணத்துவமானனது ஏனைய ஆசிரியர்கள் அவரது வழிகாட்டலைப் பெற தூண்டுவதாக அமைகின்றது.
3.கற்பித்தலில் நிபுணத்துவம்.
ஆசிரியர்களின் தலைமைத்துவம் சிறப்பாக செயற்பட ஆசிரியர்கள் கற்பித்தலில் நிபணத்தவம் பெற்றவர்களாகக் காணப்படல் வேண்டும். கற்பித்தலில் ஆசிரியர் தனது சகபாடிகளுக்கு வினைத்திறன்மிகு கற்பித்தல் உபாயங்களை எடுத்துரைக்கும் ஒரு தலைவராக மாற்றமடைகின்றார். பாடசாலைகளில் சிறப்பாக கற்பிற்கும் ஆசிரியர்களை ஏனைய ஆசிரியர்களும் மாணவர்களும் வெகுவாக மதிப்பது நடைமுறையில் காணப்படும் ஒரு உண்மையாகும்.
கற்பித்தல் தொடர்பான நுட்பங்களையும் அடிப்படை எண்ணக்கருக்களையும் கற்பித்தலுக்காக வௌ;வேறு திட்டங்களையும், ஏனைய ஆசிரியர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும்போதும், முன்மாதிரியாக சில விசேட கற்பித்தல் முறைகளை நிகழ்த்திக் காட்டுவதன் மூலமும் ஆசிரியர்களின் கற்பித்தல் நிபுணத்தவ தலைமைத்துவ வகிப்பங்கு வெளிப்படுகின்றது.
சில ஆசிரியர்கள் தமது கற்பித்தல் தொடர்பாக பல்வேறு செயல்வழி ஆய்வுகளில் ஈடுபட்டு அதன் விளைவுகளை ஏனைய ஆசிரியர்களிடத்து பகிர்ந்து கொள்கின்றனர். சில ஆசிரியர்கள் அனுபவம் குறைந்த ஆசிரியர்களின் கற்பித்தலை அவர்களின் அனுமதியுடன் அவதானித்து அது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் ஆசிரிய தலைமைத்துவத்தின் சிறப்பினை வெளிக்காட்டுவதாக அமைகின்றது.
4.கற்பித்தல் சாத்தியப்படுத்தும் வகிப்பங்கு
ஆசிரியர்கள் பாடசாலையில் கற்றலை சாத்தியப்படுத்தும் தலைமைத்துவத்தை ஏனைய ஆசிரியர்களுக்கு வாண்மைத்துவ விருத்திக்கான வசதிகளை ஏற்படுத்தி தர முன்வரும் போது ஏற்கின்றார். ஆசிரியத்தவத்தின் பிரதான இலட்சணங்களில் ஒன்று ஒருவரிலிருந்து ஒருவர் கற்றுக் கொள்வதாகும். ஆசிரிய வாண்மைத்துவ விருத்திக்கு சகபாடி கற்பித்தல் மற்றும் கணிப்பீடு அவசியமானதாகும்.
மாணவர்களின் கற்றல் தொடர்பாகவும் மாணவர்களின் சிறப்புத்தன்மைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தெளிவானப் பார்வையை ஆசிரியர்கள் கொண்டிருக்கும் போது ஆசிரிய தலைமைத்துவம் சிறப்பாக வெளிப்படுகின்றது.
மாணவர்களின் கற்றலை சாத்தியப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் வெளிக்காட்டும் வகுப்பறை முகாமைத்துவதிறன்கள் ஏனைய ஆசிரியர்களுடன் இணைந்து கற்பிப்பதில் வெளிக்காட்டும் ஆர்வம், மாணவர்களின் முன்னேற்றத்திறகான திட்டமிட்டு செயற்படுத்தும் விசேட செயற்திட்டங்கள் கற்பதற்காகப் மாணவர்களுக்கு உருவாக்கி கொடுக்கும் விசேட சந்தர்ப்பங்கள் என்பன ஆசிரியரின் கற்றலை சாத்தியமாக்கும் தலைமைத்துவத்தின் வெளிப்பாடாக அமையும்.
5.தொழிவழிப்டுத்துநர்
தொழில் வழிப்படுத்தல் (ஆநவெழசiபெ) என்பது சிறப்பான வாண்மைசார் வழிகாட்டுதலாகும். ஏனைய ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகவும், ஆலோசனைகள் வழிகாட்டல்கள் வழங்குபவராகவும், நம்பகமான முறையிலும், சினேகபூர்வமான நிலையிலிருந்தும் ஏனைய ஆசிரியர்களின் பிர்சசினைகளிலிருந்தும் விடுபடவும் ஓர் ஆசிரியர் உதவும் போது அவர் ஏனையோர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தொழில்வழிப்படுத்துனராக வகிபாகம் ஏற்கின்றார்.
பாடசாலைக்கு நியமனம் பெற்று வரும் புதிய ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம், கலைத்திட்டம், கற்பிற்கும் முறைகள், கணிப்பீட்டு முறைகள் ,பாடசாலை கொள்கை, பாடசாலை கலாச்சாரம், தொடர்பாக நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்துரைத்தலில் ஆசிரியரின் தொழில் வழிப்படுத்துனர் பணி விரிவடைகின்றது. புதிய ஆசிரியர்கள் பாடசாலையின் புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தம்மை தயார்படுத்துவதற்கு சிரேஷ்ட ஆசிரியர்களையே நாடுகின்றனர். இந்நிலையில் பொறுமையாகவும் நம்பகமாகவும், சினேகபூர்வமானதாகவும் சிரேஷ்ட ஆசிரியர்கள் புதிய ஆசிரியர்களை வழிநடத்தும் போது, சிரேஷ்ட ஆசிரியர்களின் பணி சிறப்புமிகு தலைமைத்துவப்பணியாக நோக்கப்படுகின்றது. புதிய ஆசிரியர்களுக்கு வழிகாட்டுவதற்கு சிரேஷ்ட ஆசிரியர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை நிபுணத்துவம், கால அளவு, என்பனவற்றின் அளிவிலேயே புதிய ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளும் வாண்மைத்துவ விருத்தியின் அளவும் தங்கியுள்ளது எனலாம்.
6.பாடாசலை தலைவர்
ஆசிரியர்கள் பாடசாலை தலைவர் என்ற தலைமைத்துவ வகிபாகத்தையும் வெளிக்காட்டும் சந்தர்ப்பங்கள் பல உள்ளன. சில வேளைகளில் பாடசாலையின் அதிபர் விடுமுறைபெறும்போது அல்லது அவர் உத்தியோக பூர்வ கடமைகளுக்குச் செல்லும் போது தற்காலிகமாக பாடசாலை தலைவர் பொறுப்பு ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைக்கும் போது அச்சந்தர்ப்பத்தில் பாடசாலை தலைவராக ஆசிரியர் தனது செயலாற்றலை வெளிப்படுத்தலாம்.
இதனை விட பாடசாலையில் காணப்படும் பாடசாலை அபிவிருத்திக்குழு, பாடசாலை ஆசிரியர் நலன்புரிச்சங்கம், பாடசாலை இணைப்பாட விதான அபிவிருத்திக்குழு, மாணவர் அபிவிருத்திக் குழு போன்ற குழுக்களின் தலைமைத்துவம் ஏற்று அல்லது அக்குழுக்களில் சிறப்பாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தி தனது தலைமைத்துவ ஆற்றலை வெளிக் காட்ட முடியும்.
மேற்கண்டவாறான சந்தர்ப்பத்தில் ஆசிரியர் ஒருவர் பாடசாலை முன்னேற்றம் கருதி புதிய கருத்துககளை, புதிய திட்டங்களை மற்றும் ஆக்கபூர்வமாக முன்வைக்கலாம். இவை பாடசாலை விருத்திக்கு அடிப்படையாக அமையுமாயின் அக்குறிப்பிட்ட ஆசிரியரின் தலைமைத்துவ சிறப்பு வெளிப்படும் நிலை உருவாகின்றது. பாடசாலை அபிவிருத்தி சார்பான குழுக்களில் பங்காற்றி ஆசிரியர்கள் முன்வைக்கும் விடயங்கள் ஏனைய ஆசிரியர்களாலும், பாடசாலை அதிபராலும் வரவேற்கப் படுமாயின் புதிய விடயத்தை முன்வைக்கும் ஆசிரியர்களின் தலைமைத்துவம் மறைமுகமாக ஏனையோரால் அங்கீகரிக்கப்படுகிறது எனலாம்.
மேலும் பாடசாலை தலைவர் என்ற ஆசிரியர் தலைமைத்து வகிபங்கு பின்வரும் சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றது எனலாம்.
அ. தமது பாடசாலை சார்பாக, அல்லது தமது பாடசாலையிற் பிரதிநிதியாக ஏனைய
பாடசாலைகளின் நிகழ்;ச்சிகளில் பங்கேற்று செயற்படல்.
ஆ. கோட்டமட்ட, வலயமட்ட, மாகாணமட்ட கல்வி அபிவிருத்திபணிகளிலும் இணைப்பாட
விதான அபிருத்தி பணிகளிலும், தமது உயரிய பங்களிப்பினை தாம் சார்ந்த
பாடசாலை சார்;பாக வழங்குவதற்கு ஓர் அசிரியர் முன்வருதல்.
இ. பாடசாலையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சமூகத் தொடர்புகளை ஏற்படுத்தும்
இணைப்பாளராக ஓர் ஆசிரியர் தொழிற்படும் போது பாடசாலை தலைவர் என்ற
வகிபாகத்தை ஆசிரியர் ஏற்கின்றார்.
7.தகவல் பங்களிககும் தலைமைத்துவ வகிபங்கு
ஆசிரியர் என்பவர் தகவல் நிரம்பிய ஒரு வளமாகும். பல்வேறு தரவுகளையும், தகவல்களையும தன்னகத்தே கொண்டள்ளார்.இன்றைய நவீன உலகில் ஒருவர் தகவல் நிரம்பியவராகக் காணப்படுதல் சிறப்பான தொரு வளமாக கருதப்படுகின்றது. இன்றைய நிலையில் ஆசிரியர் தாம் பெற்றுள்ள எல்லா தகவல்களையும் ஆசிரியர் தாம் பெற்றுள்ள எல்லா தகவல்களையும் கற்பித்தல் திறன் விருத்திக்காகவும், பாடசாலையின் விருத்திக்காகவும் பயன்படுத்த முன்வருவதில்லை.
தகவல்களை பொருத்தமாக பெற்று அவற்றை சிறப்பாக களஞ்சியப்படுத்தி, அவற்றை பகுப்பாய்வு செய்து அதன் முடிவுகளை பொருத்தமாக வெளிப்படுத்தும் கலை தலைமைத்துவம் சார்ந்ததாகும். ஓர் ஆசிரியர் இவ்வாறு தகவல்களை வகுப்றைக் கற்பித்தலுக்கும், பாடசாலை அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பயன்படுத்தும் போது அவரது பணி ஒரு தலைமைத்துவ பணியாக மாணவர்களாலும், ஏனைய ஆசிரியர்களாலும் நோக்கப்படுகின்றது.
அது மட்டுமன்றி ஓர் ஆசிரியர் தான் பெற்றுள்ள தகவல் வளத்தை ஏனைய ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளல். பரஸ்பர வாண்மை விருத்திக்கு உதவுகின்றது. உதாரணமாக தாம் கற்பிற்கும் வகுப்றைகளிலுள்ள மாணவர்களிற் பலம், பலவீனம் பற்றிய திரட்டிய தகவல்களை ஏனைய ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளலானது மாணவர்களின் அடைவு விருத்திக்கும், ஆசிரியர்களின் கற்பித்தல் சார்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் ஆதாரமாக அமைகின்றது. இது தகவல்களை மையமாகக் கொண்ட தீர்மானமெடுத்தலுக்கு உதவுவதால் இந்நிலை ஓர் ஆசிரிய தலைமைத்துவ வெளிப்பாடாக அமைகின்றது எனலாம்.
8.மாற்றங்களை தூண்டும் தலைமைத்துவம்
ஆசிரியர் தமது செயற்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பதோடு, தமது செயற்பாடுகளுக்கு பாதிப்பு விளைவிக்கும் காரணிகள் தொடர்பாகவும் கவனமாக இருத்;தலும் வேண்டும். ஓர் ஆசிரியர் தான் நன்கு திட்டமிட்டு செயற்படுத்தும் மாணவர் சார்பான செயற்பாடுகளிற்கு ஏனைய ஆசிரியர்களின் நடத்தை தடையாக இருக்குமாயின் அது தொடர்பாக மாற்றங்களை மேற்கொள்ள முன்வரல்; வேண்டும்.
உதாரணமாக வகுப்பறை முகாமைத்துவ செயற்பாடுகளில் மேற்கண்டவாறான நிலைமைகள் தோற்றம் பெறலாம். ஓர் ஆசிரியரால் முன் வைக்கப்பட்ட மாணவர் தொடர்பான சில பொருத்தமான கட்டுப்பாடுகள் ஏனைய பாட ஆசிரியர்களால் பின்பற்றாது விடப்படுமாயின் தொடர்பான சில பொருத்தமான கூட்டுறவுகள் ஏனைய பாட ஆசிரியர்களால் பின்பற்றாது விடப்படுமாயின் அல்லது அக்கட்டுப்பாடுகள் தொடர்பாக மாணவர் முன்னிலையில் விமர்சிக்கப்படுமாயின் வகுப்பறைக்கட்டுப்பாடு குலைவதற்கு காரணமாக அமையலாம். இவ்வாறானச் சந்தர்ப்பங்களில் ஏனைய ஆசிரியர்களுக்கு விளக்கமளித்து அவர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டியது ஆசிரியரின் தலைமைத்தவ வகிபங்கு ஆகும்.
9.கற்போன்
தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கும் ஓர் ஆசிரியர் ஏனையவர்களுக்கு ஏதோ ஒருவகையில் தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருப்பார். அதாவது தனது கற்றலின் அளவினால் மற்றவர்களின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருப்பார். தொடர்ந்து கற்றல் என்பது ஆசிரியர்களுக்கு தேவையான ஒரு சிறப்பான தகுதியாகும்.
ஓர் ஆசிரியர் தனது தொடர்ச்சியான கற்றலின் ஊடக தனது கற்பித்தலிலும், தனது ஏனைய செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக புதுமைகளை ஏற்படுத்த முடியும். ஆக்கப்பூர்வ தன்மையை வெளிப்படுத்த முடியும். ஒருவரது புதுமை, ஆக்கப்பூர்வதன்மை என்பதை மற்றவரால் விரும்பப்படும் போது அதனை வெளிப்படுத்திய ஆசிரியரின் தலைமைத்துவம் ஏனையோரால் பின்பற்றப்படுகின்றது எனலாம்.
உதாரணமாக சில ஆசிரியர்களின் பாடசாலையில் இடம் பெறும் ஆசிரியர் கூட்டலங்களிலும் ஏனைய நிகழ்ச்சிகளிலும் முன்வைக்கும் புதிய கருத்துக்கள், புதியதிட்டங்கள் அவர்களின் கற்றலின் விளைவாக தோன்றியவை ஆகும். கற்றல ;வழி ஓர் ஆசிரியர் வெளிப்படுத்தும் தலைமைத்துவம், பெறுமதி மிக்கதாகவும், ஏனையோரால் இலகுவாக வரவேற்கப்படுவதாகவும், அமைகின்றது.
10.வகுப்பறை உதவியாளன்
ஓர் ஆசிரியர் வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாடுகள் ஊடாக மாணவர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும் உதவமுடியும். ஏனைய ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்பித்தலை அவதானித்து பின்னூட்டல் வழங்குதல், மாதிரி வகுப்புக்களை நடத்திக் காட்டுதல், ஊடாக ஒரு வகுப்பறை உதவியாளனாக செயற்பட முடியும்.
ஏனைய ஆசிரியர்களின் திறமைகளை அவர்களுக்கு எடுத்துரைத்தல் அவர்களது கற்பித்தல் சார்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை சுய பிரதிபலிப்பின் அவர்கள் பெற வழிகாட்டுதல், மாணவர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கான நுட்பங்களை கலந்துரையாடுவதோடு அவற்றை வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்த உடனிருந்து உதவுதல் என்பன வகுப்பறை உதவியாளர் என்ற தலைமைத்துவ வகிப்பங்கின் வெளிப்படுத்தும் செயற்பாடாகும்.
ஆசிரியர்கள் முறைசார்ந்த முறையிலும் முறைமையில் முறையிலும் தலைமைத்துவத்தினை ஏற்கவும், வெளிப்படுத்தவும் முன்வருதல், மாணவர்களின் வெற்றிற்கும் பாடசாலையின் வெற்றிற்கும் அடிப்படையாக அமையும். சில ஆசிரியர்கள் பொறுப்புக்களை தானாக முன் வந்து ஏற்று தனது பொறுப்பியத்தை வெளிக்காட்டுகின்றனர். சில ஆசிரியர்கள் தமது தலைமைத்துவ திறன்களை தமது சகபாடிகளுடன் மட்டும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.
பொதுவாக ஆசிரியர்கள் தலைவர்கள் என்ற வகையில் பன்முக நோக்கில் தலைமைத்துவ வகிப்பங்குகளை வெளிக்காட்டுதல் வேண்டும். தமது கடமைப்பட்டியல், பொறுப்புநிலைக்கு என்பனவற்றிற்கு அப்பாற்பட்டும் சுயேச்சையான தலைமைத்துவத்தை ஆசிரியர்கள்; வெளிக்காட்டுதல் வாண்மை விருத்திக்கும் மாணவர்களின் கற்றல் வெற்றிற்கும் துணையாக அமையும், அதே நேரத்தி;ல் தமது திறமைகள், ஆற்றல்கள் என்பவற்றை மையமாகக் கொண்டு ஏனையவர்களை நசுக்குதல, அவர்களது திறமைகளை குறைத்து மதிப்பிடல் அளவுக்கதிகமான அதிகாரத்தை வெளிப்படுத்தல்,மற்றவாகளை அச்சுறுத்தி பணிய வைத்தல் என்பன தலைமைத்துவமாக அமையமாட்டாது.