கற்பித்தல் – கற்றல் செயன்முறையின் விளைதிறனில் வகுப்பறை முகாமைத்துவத்தின் பங்களிப்பு
கலாநிதி எஸ்.எஸ். சரூக்தீன்
முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இரண்டாம் மூன்றாம் கல்வித் துறை,
கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
ஆசிரியர் ஒருவர் தன்னிடமுள்ள பாட நிபுணத்துவத்தின் அடிப்படையில் மிகப் பொருத்தமான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி கற்பித்தல் செயன்முறையை நடாத்தினாலும் அவரிடம் சிறப்பான வகுப்பறை முகாமைத்துவத்திறன் இல்லையெனில் தனது கற்பித்தல் பணியில் வெற்றி காண்பது என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாக மாறிவிடலாம். நல்ல விளைதிறன்மிக்க கற்பித்தல்-கற்றல் செயன்முறைக்கு உயிரோட்டமான முறையில் மாணவர்களை முகாமை செய்கின்ற ஆற்றல் மிகவும் அவசியமானதாகும்.
கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் அடிப்படை அலகுகளாக வகுப்பறைகள் காணப்படுகின்றன. எனவே வகுப்பறை பயன்தருதன்மையுடையதாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் நிருவகிப்பது அவசியம். இச்சந்தர்ப்பத்தில் வகுப்பாசிரியரின் வகிபங்கு வகுப்பறை முகாமையாளராக மாறுகிறது. ஆசிரியருடைய முக்கிய பணி கற்பித்தல் செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் மேற்கொள்வது ஆகும். வகுப்பறையை சரியான முறையில் நிருவகிக்காவிட்டால் இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது. இதனால் ஆசிரியர் ஒருவருக்கு வகுப்பறை முகாமைத்துவம் பற்றிய அறிவு, விளக்கம், ஆற்றல் என்பன முக்கியமானவை ஆகும்.
பொரன் (1985) என்பவர் வகுப்பறை முகாமைத்துவம் என்பதனை பின்வருமாறு வரைவிலக்கணம் செய்கிறார்.
“வகுப்பறை முகாமைத்துவம் என்பது கற்றலுக்கான உதவிச்செயன்முறை என்ற முறையில் வகுப்பறையை ஒழுங்கு செய்வதும் கற்றலுக்கான அணுகுமுறையை ஒழுங்கு செய்வதுமான ஒரு வழிமுறையாக இது உள்ளது. இதன் மூலம் பிள்ளைகளிடம் விரும்பத் தகுந்த அறிவுசார் விளக்கம் ஏற்படும் வகையில் ஆசிரியர்கள் சிறந்த நிருவாகத்தினூடாகத் தமது பணிகளைச் செய்யவும், தமது கற்பித்தலை முன்வைக்கவும் முடியும். இதன்படி வகுப்பறை முகாமைத்துவம் என்பது கற்றலுக்கு சாதகமான ஒரு நிலைமையை உருவாக்கும் நோக்குடைய செயற்பாடு என்பது தெளிவாகின்றது.
ஜோன்சன் மற்றும் புறுக்ஸ் என்போர் (1979) வகுப்பறை முகாமைத்துவம் பற்றி ஒரு விரிவான வரைவிலக்கணத்தையும் ஒரு எண்ணக்கரு ரீதியான மாதிரியையும் எடுத்துக் கூறினர். அவர்களுடைய கருத்தின்படி,
“வகுப்பறை முகாமைத்துவம் என்பது ஒரு அமைப்பு ரீதியான தொழிற்பாடு ஆகும். இத்தொழிற்பாட்டில் ஆசிரியர் பல்வேறு பணிகளை ஆற்றவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர்.
வெவ்வேறு நிலைமைகளில் சில மாற்றக்கூடிய கூறுகளைக் கையாள்வதை இப்பணிகள் உள்ளடக்குகின்றன. இவை பதட்டமான நிலைமைகளைத் தீர்த்து வைப்பதனூடாக விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கத்தை உடையது. சூழ்நிலை சார்ந்த காரணிகளுக்கு ஏற்ப பதட்ட நிலைமைகளின் இயல்புகளும் முக்கியத்துவமும் வேறுபடுகின்றன. பதட்ட நிலைமைகளை தீர்த்து வைத்தல் என்பது பாடசாலைகளினதும் ஆசிரியர்களினதும் சித்தார்ந்த நிலைப்பாடுகளால் பாதிக்கப்படுகின்றன”.
இவ்வரைவிலக்கணத்தை கொண்ட எண்ணக்கரு ரீதியான மாதிரி, உரு 1 இல் தரப்பட்டுள்ளது.
வகுப்பறை முகாமைத்துவம் ஒழுங்கு தொழிற்பாடுகள்
உரு : 1 வகுப்பறை முகாமைத்துவம் சார்ந்த ஒரு எண்ணக்கரு மாதிரி ஆதாரம் : ஜோன்சன் மற்றும் புறுக்ஸ் (1979)
மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள மாதிரியும் வரைவிலக்கணமும் வகுப்பறை முகாமைத்துவம் தொடர்பான பயனுள்ள அகக்காட்சியை ஆசிரியர்களுக்கு வழங்குகின்றன.
குறிப்பாக ஒரு வகுப்பாசிரியர் மிகக்கூடிய நன்மைகளைப் பெறக்கூடியவாறு வகுப்பறையை எவ்வாறு ஒழுங்குபடுத்தி நிருவகிக்க வேண்டும் என்பது பற்றிய குறிப்பான அம்சங்களை இவை வழங்குகின்றன.
வகுப்பறைக் கட்டுப்பாடு
வகுப்பறை முகாமைத்துவம் என்பதால் கருதப்படுவது வகுப்பறைக் கட்டுப்பாடு ஆகும். கட்டுப்படுத்தல் என்பது ஆசிரியரின் பணிகளுள் ஒன்று என்பதைக் கருத்திற் கொள்ளவேண்டும். இப்பணியில் அவர் தோல்வி கண்டால் அவர் பிற வகுப்பறை செயல்களிலும் தோல்வியடைய நேரிடும். மாணவர்களும் பெரும்பாலும் நல்லொழுங்கும் கட்டுப்பாடும் நிலவுகின்ற வகுப்பறையையே விரும்புவர்.
போன்ரானா (1985) வகுப்பறைக் கட்டுப்பாட்டைப் பற்றி பின்வருமாறு விபரிக்கின்றார்:
“வகுப்பறைக் கட்டுப்பாடு என்பது சிறந்த முறையில் வகுப்பறையை ஒழுங்குசெய்து நடத்துவது ஆகும். இவ்வகுப்பறையில் ஒவ்வொரு பிள்ளையும் தமது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இவ்வளர்ச்சியை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அவர்கள் கற்றலுக்கு உதவுபவர்களாக விளங்க வேண்டும். தமது நடத்தைகளுக்குத் தாமே வழிகாட்டியாக அமைந்து அவற்றைக் கண்காணிப்பதற்கான நுட்பங்களையும் பெற்றுக்கொள்வர்’’.
வகுப்பறைக் கட்டுப்பாட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளைப் புரிந்து கொள்வதன் மூலம் வகுப்பறைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும். ஒரு ஆசிரியர் சிறந்த வகுப்பறைக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அவருக்கு அதிகாரம் மட்டும் போதுமானது அல்ல. அவ்வதிகாரம் ஒழுங்குபடுத்தல், தொடர்புகொள்ளல், கண்காணித்தல், தொடர்பான பல திறன்களையும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
மேலும் ஆசிரியர் பிள்ளைகளின் நடத்தைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டவராக இருத்தல் வேண்டும். அத்துடன் பிள்ளைகளின் கல்வி மற்றும் உளவியல்சார் விருத்தியில் உண்மையான அக்கறையுடையவராக இருத்தல் வேண்டும். ஆசிரியர் தமது சொந்த நடத்தை பற்றியும விளங்கியிருத்தல் வேண்டும். இதுவும சிறந்த முறையில் வகுப்பறைக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த உதவும். மாணவர்கள் மீது ஆசிரியர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாகவே வகுப்பறைக் கட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைகள் சில சமயங்களில் எழுகின்றன என்பதனை ஒவ்வொரு ஆசிரியரும் கருத்திற்கொள்ள வேண்டும்.
ஆசிரியரும் வகுப்பறை முகாமையும்
வகுப்பறையானது ஒரு கல்விமுறையின் அடிப்படையான அலகாக விளங்குகின்றது. வகுப்பறையிலேயே உண்மையான கற்றல் கற்பித்தல் தொழிற்பாடு இடம் பெறுகிறது. எல்லாப் பாடசாலைகளிலும் வகுப்பறைகள் உள்ளன. வகுப்பறையென்பது மாணவர்கள் அவர் தம் வயது, ஆற்றல், பாடங்கள் என்பவற்றினடிப்படையில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும். “வகுப்பறை” என்பதன் நேரடிப் பொருள் ஒரு தனியான அறையைக் குறிக்கும். ஆனால் நடைமுறையில் அவ்வாறிருப்பதில்லை. இலங்கையில் பெரும்பாலான வகுப்பறைகள் பெரிய மண்டபங்களிலேயே காணப்படுகின்றன. ஒரு வகுப்புக்கும் இன்னொரு வகுப்புக்குமிடையே சிறிய இடைவெளி உண்டு. இது ஒரு முக்கிய அம்சமாகும். ஏனெனில் இந்நிலைமை வகுப்பறையை நிருவகிக்கும் செயற்பாடுகளையும் பெருமளவுக்குக் கற்பித்தலையும் பாதிக்கின்றது.
ஆசிரியர்கள் பாடசாலைகளில் பல்வேறு வகையான பாத்திரங்களை வகித்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆயினும் ஆசிரியர்களுடைய கற்பித்தல் என்ற பாத்திரமே அதிமுக்கியமானதெனப் பலரும் ஏற்றுக் கொள்வர். ஆசிரியர் இப்பாத்திரத்தை ஏற்க அவருக்குக் குறிப்பிடத்தக்க அறிவும், திறன்களும் இருத்தல் வேண்டும். பாடவிடயம் பற்றிய அறிவு, கற்பித்தல் முறைகள், மீளவலியுறுத்தல் உபாயங்கள், மதிப்பீட்டு முறைகள் தொடர்பான அறிவும திறன்களும் தேவையானவை. கற்பித்தல் தொடர்பான இவ்வாறான கடமைகளை வெற்றிகரமாகச் செய்து முடிக்க ஆசிரியர் வகுப்பறையிலுள்ள சமூக அமைப்பை பயன்படுத்த வேண்டியிருக்கும்.. இதற்கு வகுப்பறை நிருவாகமும் நிறுவன ரீதியான தொழிற்பாடுகளும் முக்கியமானவை. வகுப்பறை கற்பித்தல் வெற்றிகரமாக அமைய கற்பித்தலுக்கும் நிருவாகத்துக்கும் இடையேயுளள தொடர்பு முக்கியமானவை” (லேடெக், 1988). மேலும் ஆசிரியர் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டியது நிருவாகக்கலை என மார்லாந் (1984) குறிப்பிடுகின்றார். நிருவாகக்கலை பற்றி இவர் பின்வருமாறு கூறுகின்றார்:
“வகுப்பிலுள்ள மாணவர்களை நிருவகிப்பது ஒரு கலையாகும். இக்கலை ஆசிரியர்களுக்கு முக்கியமானது. ஓவ்வொரு ஆசிரியரும் இக்கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் முக்கிய அம்சம் என்னவெனில் இக்கலையைக் கற்றுக்கொள்ள முடியும். இக்கலை இயற்கையாக வருவதில்லை. இக்கலையைக் கற்றுக் கொண்டால் நீங்களும் உங்களுடைய மாணவர்களும் வகுப்பறையில் நேரத்தை மகிழ்வுடன் செலவிட முடியும்.
கற்பித்தலும் வகுப்பறை முகாமைத்தவமும் ஒன்றோடன்று பின்னிப் பிணைந்தவை என்ற அடிப்படை உண்மையை வகுப்பாசிரியர் ஒருவர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். வகுப்பறையில் நிகழும் இடைத்தாக்கம் இரண்டு பரிமாணங்களையுடையது: அவை கற்பித்தல் சார்ந்ததும் நிருவாகம் சார்ந்ததும் ஆகும். கற்பித்தல் பணியின் வெற்றி குழுக்களைக் கட்டுப்படுத்தல். காலத்தைச் சரியாகப் பயன்படுத்தல், கற்றல் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல், தொடர்பாடல் மற்றும் அவருக்கேயுரிய முறையில் தன்னை வெளிப்படுத்தல் போன்ற ஆசிரியருடைய ஆற்றலிலேயே தங்கியிருக்கின்றது. உண்மையில் இவையே ஆசிரியருடைய ஆற்றலாகும். ஓர் ஆசிரியர் உயர்ந்த கல்வித் தகைமைகளை பெற்றிருக்கலாம். அவை அவருடைய அறிவுக்குச் சான்றாக இருக்கலாம். ஆயினும் அவர் கற்பித்தல் முறைகளையும் சாதனங்களையும் பயன்படுத்துவதில் நன்கு பயிற்சியும அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வகுப்பாசிரியர்கள் நல்ல வகுப்பறை முகாமைத்தினுடைய முக்கியத்துவத்தை அறிய வேண்டியது மிக அவசியமானது. சிறந்த வகுப்பறை நிருவாகம் ஆசிரியரை முரண்பாடுகளிலிருந்து விடுவிக்கிறது, எதிர்பார்ப்புக்களைத் தவிர்க்கிறது. மற்றும் மாணவர்களுடன் நல்லுறவுகளைப் பேண உதவுகிறது. இத்தகைய பயன்களைப் பெறுவதற்காக வகுப்பறை நிருவாகம் பற்றிக் கற்றுக்கொள்வது ஆசிரியர் எல்லோரும் மனதிற் கொள்ளல் வேண்டும். வகுப்பறை நிர்வாகம் தொடர்பாகக் கற்றுக்கொள்வதில் பின்வரும் நன்மைகளைப் பெறலாம்:
• சொந்த வேலைகள் பற்றி நன்கு சிந்திக்க வைக்கின்றது.
• கற்பித்தலின் பலத்தையும் பலவீனங்களையும் முகாமைத்துவ உபாயங்களையும் அதனடிப்படையில் மாற்றங்களையும் இனங்காணச் செய்கிறது.
• தம்மிடமுள்ள பணிகளின் மீது செறிவாகக் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.
• வகுப்பறையில் என்ன நடைபெறுகின்றது என்பது பற்றிய நிச்சயமான அறிவைப் பெற உதவுகிறது.
• தொழில்சார் தகுதி பற்றிய சாதகமான நம்பிக்கை வாய்ந்த தோற்றப்பாடுகளை விருத்தி செய்ய உதவுகிறது.
மேலும் இது வகுப்பறையில் என்ன நடைபெறுகின்றது என்பது பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெறவும் ஏனையவர்களிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன மற்றும் அவர்களுடைய சொந்த நடத்தையின் விளைவுகள் பற்றிய தொடர்ச்சியான கருத்தைப் பெறவும் பிள்ளைகளுக்கும் உதவுகின்றது.
சிறந்த வகுப்பறை முகாமைத்துவத்தின் அடிப்படை விதிகள்
நேரந்தவறாமை
• நேரத்துக்கு வருதல் பல நிருவாகப் பிரச்சினைகளை அகற்றும்.
• பாடத்தை நேரத்துக்கு நிறைவு செய்தல், மிக நேர்த்தியாக அடுத்த பாடத்தை தொடர வசதியாகவிருக்கும்.
• நேரத்துக்கு சமூகம் தராத ஆசிரியர் வகுப்பிலுள்ளவர்களிடம் நேரந்தவறாமையை வலியுறத்த முடியாது.
நன்கு ஆயத்தமுடையவராக இருத்தல்
• ஆயத்தநிலை ஒழுங்கின்மையைத் தவிர்க்கும். பாடங்களுக்குரிய கற்றல் சாதனங்கள் அனைத்தையும ஒழுங்குபடுத்தி ஆயத்தமாக வைத்திருத்தல்.
• ஆயத்தமின்மை (சாதனப்பற்றாக்குறை, செயலிழந்த துணைச்சாதனங்களை வைத்திருத்தல், எல்லோராலும் பார்க்க முடியாத கட்புல சாதனங்கள் என்பன வகுப்பறையில் குழப்பத்தை ஏற்படுத்தும்)
• ஆயத்தமின்மை ஆசிரியர் கற்கும் சூழலை திறமையாகவும் நுட்பமாகவும் பயன்படுத்துகின்றாரா என்பது பற்றிய சந்தேகங்களை மாணவர்களுடைய மனதில் தோற்றுவிக்கும் போக்கினை உருவாக்கும்.
விரைவாக வேலையில் ஈடுபட ஆயத்தமாதல்
• ஓர் விரைவான, வினைத்திறன்மிக்க அணுகுமுறை மற்றும் தோல்வியுறாத வழிமுறைகள். (உம் – தனியாள் பெயர் கூறி அழைத்தல், கைதட்டுதல் முதலியன) வகுப்பறையை அமைதிப்படுத்தவும், கவனத்தைப் பெறவூம் ஆசிரியர் ஒழுங்கான முறையில் பணியைத் தொடரவும் இது உதவும்.
• பொருத்தமான உபாயங்களினூடாக ஒரு விரைவான, நிச்சயமான ஆரம்பம். உடனடியாக மாணவர்களின் கவனத்தை நீண்டநேர அமைதி.
• விரைவாக ஆரம்பமில்லாவிட்டால், பிள்ளைகள் வேலையை ஆரம்பிக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றிய தீர்மானமின்றியிருப்பர். உளவியல் ரீதியான ஆயத்தநிலை நிலவும் வரை வேலை தாமதமாகலாம். குரலைச் சிறப்புறப் பயன்படுத்தல்
• பெரும்பாலான நிருவாகச் செயற்பாடுகளை ஆசிரியர் பிரயோகிப்பதற்குக் குரல் ஊடகமாக உள்ளது.
• தெளிவான தொடர்பாடலுக்கு சிறந்த குரல்வளம் பயன்படுத்தப்பட வேண்டும். மற்றும் விளக்கமுடையதாகவும் பயன்பட வேண்டும்.
வகுப்பில் என்ன நடைபெறுகின்றது என்பதில் உன்னிப்பாக இருத்தல்
• வகுப்பறைக்குள் உலாவும பொழுதும் பார்க்கும் பொழுதும் பிரச்சினைக்குரிய இடங்களை ஆசிரியர் இனங்கண்டு அதன் மீது விசேட கவனம் செலுத்த வேண்டும்.
• ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு நிலையான வழிமுறைகளையூம் விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும்.
வகுப்பில் என்ன நடைபெறுகின்றது என்பதைப் பகுப்பாய்வு செய்தல்
• ஓர் ஆசிரியர் தவறாகச் சொல்லும் விடயங்களை ஒழுங்காக அவதானித்து அவற்றுடன் தொடர்புபட்டுள்ள காரணிகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். காரணிகளைப் பகுப்பாய்வு செய்யாமல் பரிகார நடவடிக்கைகளை எடுத்தல் ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கலாம். நடத்தை மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அவை சாத்தியமாகாது.
நெருக்கடி நிலைமைகளில் ஈடுபடும் பொழுது தௌpவான நன்கு விளங்கிக் கொண்ட உபாயங்களைப் பயன்படுத்துபவராக இருத்தல்
• நெருக்கடி நிலைமைகளில் கண்ணாடி அல்லது சாடி உடைதல்) தொடக்கம் பெரியவை வரை (மாணவர்கள் சண்டையிடல், வகுப்பைவிட்டு வெளியேறுதல், எதிர்ப்புகள், பயமுறுத்தல்கள் முதலியன) அவற்றைச் சரியாக அணுகவேண்டும். இவை குறித்து வகுப்பினால் அனுமதிக்கப்பட்ட ஏற்றக்கொள்ளப்பட்ட உபாயங்களைக் கையாளுதல் சிறந்ததாக இருக்கும்.
• ஆசிரியர் ஒழுங்காகவும் தொடர்ந்தும் கவனஞ் செலுத்துதல்
• சில மாணவர்கள் மீது சமனற்ற முறையில் கவனஞ் செலுத்துதல், அவர்களுடைய சொந்த விருப்புகளுக்கு இடமளித்தல், குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கலாம்.
• ஆசிரியர் மாணவர் மீதுள்ள பொறுப்பில் கவனக்குறைவுடையவர்களாக இருந்தால் அவை வகுப்பறை நடத்தையைப் பாதிக்கும் வித்தியாசமான முறையிலே வகுப்பறை விதிகளை ஆசிரியர் மீறும்போது நிச்சயமற்ற தன்மைகள் தோன்றும் அல்லது சமநிலையற்ற சந்தர்ப்பம் அல்லது மாணவர்களுக்குப் பொறுப்புக்களை வழங்குவதால் ஏற்படுகின்றது.
ஒப்பீடு செய்தலை தவிர்த்தல்
• நல்ல நடவடிக்கைகளுக்கு பெறுமதி வழங்கும் பொழுது ஆற்றல் உள்ளவர்க்கும் இல்லாதவருக்குமிடையில் பகிரங்கமாக ஒப்புமை செய்தலை ஆசிரியர் தவிர்க்க வேண்டும். இது வகுப்பறையில் பிரிவுகளைத் தவிர்க்கவும ஆசிரியரிடத்தில் ஏற்படக்கூடிய பகைமைத்தன்மையையும், மனக்கசப்பையும் தவிர்த்துக் கொள்ள உதவும்.
நிச்சயமான வாக்குறுதிகளைக் கொடுத்தல்
• நடைமுறை சார்ந்த உண்மைத் தன்மை கொண்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட வேண்டும். பொருத்தமற்ற பாதுகாக்கப்படாத வாக்குறுதிகள் ஆசிரியருடைய சிறப்புகளை அழித்து விடும். அவை பிள்ளைகளிடத்தில் நம்பிக்கையீனங்களையும் உருவாக்கலாம்.
வழமையான வகுப்பறைப் பணிகளை மாணவர்களுக்குப் பகிர்ந்தளித்தல்
• வேலைப்பகிர்வு ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமிடையே நம்பிக்கையான தொடர்புகளை உண்டாக்கும்.
• அது குழுவின் உரிமைத்தன்மையை விருத்தி செய்யும்.
• அது நேர்த்தியான வகுப்பறை செயற்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.
வகுப்பறையை சிறந்த முறையில் ஒழுங்கு செய்தல்
• பௌதீக ரீதியாக வகுப்பறை நன்கு ஒழுங்கு செய்யப்பட வேண்டும். (உதாரணம்: இடவசதி, ஒழுங்கு சாதனங்கள், காற்றோட்டம் முதலியன)
• அது நன்கு நிருவகிக்கப்பட வேண்டும்.
• பிள்ளைகளுக்குச் சரியான வேலைச் சூழலை வழங்க வேண்டும். (உதாரணம்: அசைவுகளுக்கு ஏற்ற இடம் அற்ற, மிகையான மாணவர் தொகையைக் கொண்ட வகுப்பறைகள் அல்லது வேலைகள் வெளிச் சந்தங்களால் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடிய திறந்த வகுப்பறைகள்)
மாணவர்களுடைய பிரச்சினைகளை கவனித்தல்.
• மாணவர் பிரச்சனைகளில் தனித்தனியாக கவனஞ் செலுத்த வேண்டும்.
• முழு வகுப்புப் பிரச்சினைகளையும் வெளிப்படுத்துவதற்குச் சந்தர்ப்பம் வழங்குதல்.
வகுப்பறையின் பௌதீகச் சூழல்
வகுப்பறை முகாமைத்துவத்தில் கட்டுப்படுத்தப்பட வேண்டிய முக்கியமான மாறியாக இருப்பது வகுப்பறையின் பௌதீகச் சூழலாகும். வகுப்பறையில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டாலும் பௌதீகச் சூழலை ஒழுங்குபடுத்துவதற்கு மிகக் குறைந்த கவனமே கொடுக்கப்படுகிறது. இந்தச் சூழல் கற்றலின் செயற்பாட்டினைப் பாதிக்கும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.
ஒரு வகுப்பறையின் பௌதீகச் சூழல், இடவசதி, தளபாடம், காற்றோட்டம் வெளிச்சம் மற்றும் கற்பித்தல் சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும். இத்தகைய அம்சங்கள் கிடைக்கக்கூடியதாக இருத்தல் மாத்திரம் தன்னிச்சையாக சிறந்த கற்பித்தல் சூழலை உருவாக்கிவிடமாட்டாது. ஒரு வினைத்திறன்மிக்க முகாமையாளர் வகுப்பறையில் அறிவுசார் சமூகம் மற்றும் எழுச்சி சார்ந்த கல்வி நிலையை உயர்த்தக் கூடிய வகையில் சூழலிலுள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்தவும் பயன்படுத்தவும் வல்லவராக இருத்தல் வேண்டும்.
வகுப்பறையின் பௌதீகச் சூழல்
• தளபாட ஒழுங்குகள் போதனா நோக்கங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பொருத்துவதாக இருக்க வேண்டும். மற்றும் நெகிழ்வுடையதாகவும் இருக்க வேண்டும்.
• வகுப்பறை, தனியாள் மற்றும் குழுச் செயற்பாடுகளுக்கும் இடைத்தாக்கங்களுக்கும் ஏற்ப மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
• வகுப்பறையின் இடவசதி மாணவர் அசைவுக்கும் சாதனங்களை வைத்திருப்பதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.
நல்ல வகுப்பறை முகாமைத்துவம் என்பது எவ்விதமான சந்தேகமுமின்றி சாதகமான பௌதீகச் சூழலையே தருகின்றது. இலங்கையின் நிலையில் ஒரு ஆசிரியர் அல்லது பாடசாலை அத்தகையதொரு சூழலை உருவாக்குவதில் தடைகளும் கட்டுப்பாடுகளும் நிலவுகின்றன. இங்கே வகுப்பறைகள் திறந்த பெரிய மண்டபங்களிலேயே உள்ளன. மாணவர் அசையும சத்தம் எப்பொழுதும் இருக்கும். மாணவர் தொகை மிகையாக இருக்கும், வளப்பற்றாக்குறை உண்டு. நெகிழ்ச்சியற்ற நேரசூசி ஆகிய ஒழுங்கினால் வகுப்பறை முகாமைத்துவம் ஒரு ஆசிரியருக்கு உண்மையான சவாலாக இருக்கும். இத்தகைய குறைபாடுடைய சூழலுக்கு ஆசிரியர் கீழ்படிந்து போகக்கூடாது. அவர் தமது எல்லைக்குள்ளிலிருந்து வகுப்பறையின் பௌதீகச் சூழலை ஓரளவுக்கேனும் முன்னேற்ற முயற்சிக்க வேண்டும்.
ஆசிரியர் மாணவர் தொடர்பு
கற்றல் என்பது நல்ல ஆசிரியர் மாணவர் தொடர்பின் இறுதி விளைவென கூறமுடியும். இது வகுப்பறையில் நிகழ்வதன் காரணமாக ஆசிரியர் மாணவர் தொடர்பு கவனத்தை ஆசிரியர் மாணவர் உறவு அடிப்படையாக இருக்கும் என்பதை ஆசிரியர்கள் எப்பொழுதும் ஞாபகத்திற் கொள்ள வேண்டும். நல்ல தொடர்புகள் வகுப்பறை முகாமைத்துவத்தில் காணப்படும் பல பிரச்சினைகளை நீக்குவதோடு பிள்ளையின் நடத்தைகளுக்கான உளவியல் ரீதியான விளக்கத்தையும் பெற ஆசிரியருக்கு சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
வகுப்பறை கவின்நிலை
பாடசாலையிற் காணப்படும் உண்மையான செயற்பாட்டு அலகு வகுப்றையாகும். கற்றல் கற்பித்தல் பணிகளின் வெற்றியும் மாணவர்களின் நடத்தையை நிறைவு செய்தல் என்பன, தொழிநுட்ப மற்றும் சாதனங்களையூம் கொண்ட அமைப்பு, உள்ளகச் சூழல் அல்லது கவின்நிலையை உண்டாக்குதல் என்பவற்றில் தங்கியுளளது. அவை மாணவர் ஆற்றலுக்கும், தேவைக்கும் உறுதுணையாக இருக்கும். கற்றல் கற்பித்தல் முயற்சி மற்றும் வினையாற்றல்களில் வகுப்பறை அமைப்பின் செல்வாக்கு, நுட்பம் மற்றும் முகாமைத்துவப் பாங்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் சூழலும் இருப்பதன் காரணமாகக் கவின்நிலை முக்கியமானதாக உள்ளது. ஒரு வகுப்பறை முகாமையாளரின் அடிப்படைக் கவனம் சாதகமான வகுப்பறை கவின்நிலையை விருத்தி செய்வதாக இருக்க வேண்டும்.
ஒரு வகுப்பறைக் கவின்நிலை நான்கு பிரதான அம்சங்களை உடையது.
அவையாவன
• மானிடக் கவின்நிலை
• கல்விசார் கவின்நிலை
• சகபாடிகள்சார் கவின்நிலை
• நிருவாகக் கவின்நிலை
மானுடக் கவின்நிலை
இது வகுப்பறைக்குள் நிகழ்கின்ற மானிடச் சூழலை அல்லது மானுடப் பாணியைக் கருதுகின்றது. குறிக்கப்பட்ட நேரத்தில் இம்மானுடக் கவின்நிலை சாதமானதாக, நடுநிலையானதாக அல்லது சாதகமற்றதாக இருக்கலாம். ஒரு பயன்தரு வகுப்பறை முகாமையாளர் மானுடக் கவின்நிலையின் பல்வேறு அம்சங்களை விளங்கிக்கொள்ள அல்லது கட்டுப்படுத்தக்கூயவராக இருப்பார். இது எப்பொழுதும் மனிதத்தொடர்புகளை அங்கத்தவர்களுக்கிடையில் முன்னேற்றவும் அவர்களுடைய மனப்பாங்குகள் வகுப்பறை பாடசாலை ஆகியவற்றை நோக்கி வளர்க்கவும் உதவும்.
கல்விசார் கவின்நிலை
வகுப்பறையில் உள்ள அங்கத்தவர்களின் உணர்வுகள் நம்பிக்கைகள் ஆகியவற்றிலிருந்து இத்தகைய சூழல் தோன்றுகின்றது. இவை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், ஒப்படைகளில் கற்பித்தல் கற்றல் செயன்முறைகளுடன் தொடர்புடையது. கல்விசார் கவின்நிலையானது வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் கற்பித்தல் கற்றல் அணுகுமுறைகள், கற்றலுக்கு வழங்கப்படும் பாட ஏற்பாட்டு வசதிகள் ஆகியவற்றினாலும் செல்வாக்குக்கு உட்படுகின்றது. ஆரோக்கியமான கல்விசார் கவின்நிலை கல்வியின் தகுதி பற்றிய உணர்வுகளை உண்டாக்க உதவுகின்றது. நன்கு தொழிற்படும் வகுப்பறை மாணவர் தேவைக்குப் பொருத்தமாக இருக்கின்றது. மற்றும் மாணவர் விருப்பத்திற்கும் இடமளிக்கின்றது. இது கற்றலுக்கு பூரண சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
சகபாடிகள் கவின்நிலை
மாணவர்களுக்கிடையே நிலவூம் பலவகைப்பட்ட இடைத்தாக்கத்தின் விளைவாக இத்தகைய கவின்நிலை உருவாகின்றது. மாணவர்களிடையே ஏற்படும் இடைவினைத் தொடர்புகள் வகுப்பறையில் நல்ல கூட்டுறவுடன் கூடிய சூழலை உண்டாக்கும். இது சாதகமான கூட்டு உணர்வுக்கு வழிகோலுவதுடன். வகுப்பறையில் மாணவர்களிடையே தனிப்பட்ட வகையிலும், குழுக்களாகவும் பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும். ஆயினும் பூரணமான, நிலையான சகபாடித் தொடர்பு எல்லா நோக்கங்களிலும் நிகழும் என்பது சாத்தியமில்லை. எனவே சகபாடிகள் கவின்நிலை தளம்பல் தன்மைக்குட்படக்கூடியதாகவும் இருக்கலாம்.
நிருவாகக் கவின்நிலை
வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் நிருவாக நடவடிக்கைகள், முகாமைத்துவப் பாங்குகள் என்பதைப் பற்றிய மாணவர்களின் உணர்வுகளை இவை விருத்தி செய்கின்றன. பாடசாலையின் பரந்த நிருவாக நிலைமைகளின் கீழ் வகுப்பறைகள் நிருவாக மற்றும் முகாமைத்துவ பாங்குகளை உடையவையாக கல்வியின் குறிக்கோள்களை அடைவதற்கான அமைப்புக்களை மேற்கொள்ளலாம். வகுப்பறை நடவடிக்கைகள் பாடசாலை நிருவாக அமைப்புக்களை உள்ளடங்கிய வகையிலேயே வகுப்பறை நடவடிக்கைகள் அமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட வேண்டும்.
பயன்தரு தன்மை கொண்ட வகுப்பறை முகாமையாளர் சாதகமற்ற நிலைமைகளைப் படிப்படியாக நீக்கிச் சாதகமான நிலை நோக்கிச் செல்ல பாடுபடுவார். ஆகவே அவர் நல்ல கவின்நிலையை ஆக்கக் கூடியவராகின்றார். அக்கவின்நிலை வகுப்பறை இடைத்தாக்கத்தின் இலக்குகளை அடைவதற்கு சாதகமாக இருக்கும் எனக் கூறலாம்.
வகுப்பறை ஒழுக்கம்
வழக்கமாக வகுப்பறை முகாமைத்துவம் என்பது ஒழுங்கையும் கட்டுப்பாட்டையூம் பேணும் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. ஆசிரியர் ஓர் ஒழுக்கசீலராக கருதப்பட்டு வந்தார். அவர் மாணவரிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது வகுப்பறைக்குள் மட்டுமின்றி வகுப்பறைக்கு வெளியேயும் எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய நோக்கங்களை அடையும் பொருட்டு பல்வகைப்பட்ட தண்டனை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியர்களாலும் பாடசாலை நிருவாகிகளாலும் வழங்கப்பட்ட தண்டனைகள் பொதுவாக கண்டிப்புத் தொடக்கம் உடல் வருத்தத்தைக் கொடுக்கக்கூடிய தண்டனை வரையில் அமைந்தன. அதிபர் கையில் பிரம்போடு பாடசாலையில் உலவிவருவார். ஆசிரியருடைய மேசையின் மீது பிரம்பு காணப்படுவதும் பொதுவாகக் காணக்கூடியது.
பல்வேறு உளவியற் தத்துவங்களின் அடிப்படையில் இடம்பெற்ற ஆராய்ச்சிகள் குறிப்பாக பிள்ளைகளின் நடத்தை பற்றிய ஆய்வுகள் பிள்ளைகளின் ஒழுக்கத்தை வலியுறுத்துவதற்குத் தண்டனை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைப் பெரும் பிரச்சினைக்குரியதொன்றாக்கின. நவீன உலகிலும் வகுப்பறை ஒழுக்கத்தின் பெறுமானத்தில் இதனை நிலைநாட்டுவதற்குத் தண்டனை ஒரு வழியாகப் பயன்படுவது முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பாசிரியர் பல வகையான ஒழுக்காற்றுப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார். எவ்வாறியினும் இவ்வகையான பிரச்சினைகள் அல்லது நடத்தைகள் கலாசாரத்துக்கும் காலத்திற்கும் எற்ப வேறுபடும் என்பதை ஞாபகத்திற் கொள்ள வேண்டும். பல ஒழுக்காற்றுப் பிரச்சினைகள் எமது வகுப்பறைகளிலும் நிகழ்கின்றன. இவ்வாறான பிரச்சினைகள் உண்மையில் அவை ஒழுக்காற்றுப் பிரச்சினைகளாக உள்ளனவா அல்லது தவறான நிகழ்வுகளின் சீராக்கத்தில் இருந்து எழுகின்றனவா என்ற வாதத்திற்கு இடமளிக்கின்றது.
வகுப்பறைகளில் ஒழுக்காற்று சம்பந்தமாக எழுகின்ற பிரச்சினைகள் பல மாணவர்களால் எதிர்நோக்கப்படும் சீராக்கக் கட்டங்களால் உண்டாக்குகின்றன. பிள்ளைகளிடத்தில் காணப்படும் நடத்தை வேறுபாடுகள் ஐந்து (05) பிரதான அடிப்படைகளிலிருந்து எழுகின்றன. இத்துறைகளைப் பற்றி அறிந்திருப்பது ஆசிரியருக்கு அத்தியாவசியமாகின்றது. ஒழுக்காற்றுப் பிரச்சினைகளின் இயல்புகளை சரியாக அறிந்து கொள்ள இவை உதவும். அத்துடன் பொருத்தமான பரிகார நடவடிக்கைகளை எடுக்கவும் வாய்ப்பாக இருக்கும்.
1. நடத்தையில் வயதுடன் தொடர்புடைய வேறுபாடுகள்
2. நடத்தையில் ஆற்றல் தொடர்புடைய வேறுபாடுகள்
3. நடத்தையில் பால் சம்பந்தமான வேறுபாடுகள்
4. நடத்தையில் சமூக பொருளாதாரம் தொடர்புடைய வேறுபாடுகள்
5. நடத்தையில் கலாசாரம் தொடர்புடைய வேறுபாடுகள்
ஒழுக்காற்றுப் பிரச்சினைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள்
ஒழுக்கத்தைப் பேணும் வழி முறையாகத் தண்டனை கொடுத்தல் சிறந்தது என மரபு ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்றும் ஆசிரியர்கள் தண்டனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது உண்மையே இருப்பினும் மாணவர்களால் பழிவாங்கப்படுதல் அல்லது சட்ட நடவடிக்கைகள் காரணமாக இன்று அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதில் பின்னிற்கின்றனர்.
1. தொந்தரவூ கொடுத்தல் அல்லது விரக்தியூட்டுதல்
2. குற்றஞ் சுமத்துதல் அல்லது சங்கட நிலையேற்படுத்துதல்
3. பயப்படுத்துதல்
தண்டனை வழங்கும் நடைமுறைகள் இன்னமும் சில பாடசாலைகளில் இருந்து வந்தாலும் அவை பிள்ளைகளில் உண்டாக்கும் உளவியற் பாதிப்புக்கள் குறித்து விமர்சிக்கப்படுகின்றன. கடும் தண்டனைகள் பயத்தையும் பதகளிப்பையூம் தூண்டும் எனச் சகல ஆசிரியர்களுக்கும் தெரியும். இன்று தேவையில்லாத பிரச்சினைகள் என்ற நிலையில் விலகிச்செல்லும் போக்கு விருத்தியடைந்து செல்கிறது. இத்தகைய போக்கு ஆசிரியர்-மாணவர் உறவு என்ற நிலையில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமானது. சகல நடவடிக்கைகளையும் வழிப்படுத்துவதன் முக்கிய குறிக்கோள் எதிர்காலத்தில் பிள்ளைகள் பொருத்தமான முறையில் நடந்து கொள்ளவும் வேலையிலீடுபடவும் உதவுவதோடு இன்னொருவருடைய மேற்பார்வை இன்றி தாமே சுயகட்டுப்பாட்டைப் பேணி நடக்கின்ற நிலையை உருவாக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியது பிரதானமானது.
எனவே, மாணவர்களின் தவறான நடத்தைகளைப் போக்குவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளைப் புத்திசாலித்தனமாக தீர்மானிக்கும் ஆற்றல் ஆசிரியருக்கு இருத்தல் வேண்டும் என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.
நன்றி: பார்வை
உசாத்துணைகள்
Thank you for your essay. It's really helpful for my studies. Can you upload this essay as pdf. I unable to download it as web page. When I try it says server error