பாட முன்வைப்போடு தொடர்புடைய கற்பித்தல் திறன்கள் – பாகம் 02
Teaching skills related to lesson presentation – Part 02
S.Logarajah SLTES, Lecturer,
Batticaloa National College of Education.
பாட முன்வைப்பு
(Lesson presentation)
பாட முன்வைப்பு என்பது மாணவர்களால் விரும்பப்படும் கற்றல் பேறுகளை அடைய ஆசிரியர் அமைத்த கற்றல் அனுபவங்களைக் குறிக்கின்றது. இங்கு பல வகையான கற்பித்தல் முறைகள் உருவாக்கப்பட்டு மகத்தான கற்றல் செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர்கள் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு பலவிதமான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவை பயனுள்ள விளைவுகளுக்கு பயன்படுத்தப்படலாம். இதில் உதாரணமாக கண்காட்சிகள், வெளிப்பாடுகள், செய்முறைகள், செயற்பாட்டுப் பத்திரங்கள், ICT, பாத்திரமேற்று நடித்தல், குழு விவாதம் போன்றவற்றை; கூறலாம்.
ஒரு ஆசிரியர் பயன்படுத்தக் கூடிய கற்றல் செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளும் போது, பெரும்பாலும் ஆசிரியரின் பேச்சை சார்ந்திருக்கும் செயல்பாடுகளுக்கும், ஆசிரியரின் நேரடிப் பங்கேற்புடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்குமிடையில் ஒரு பயனுள்ள வேறுபாட்டைக் காணலாம். முந்தையதில் ஆசிரியரின் வெளிப்பாடு, ஆசிரியரின் கேள்விகள், வகுப்பறை விவாதம் என்பன ஆசிரியரின் மூலம் குறைந்தளவோ, கூடியளவோ நடைபெறுகின்றன. இவற்றை ஆசிரியரின் பேச்சு சார்ந்த நடவடிக்கைகள் எனலாம். (Teacher talk activities) பிந்தையதுக்கு எடுத்துக்காட்டுக்களாக, செய்முறைகள், விசாரணைகள், பிரச்சினை தீர்க்கும் நடவடிக்கைகள், செயற்பாட்டுப் பத்திரங்கள், ICT, பாத்திரமேற்று நடித்தல், சிறிய குழு விவாதம் என்பனவற்றைக் கூறலாம் இவற்றைக் கல்விச் செயல்கள் (Academic task) எனக் கூறலாம்.
பாகம் 1 ஐ வாசிக்க – இங்கே க்லிக் செய்யுங்கள்
பாட முன்வைப்போடு தொடர்புடைய கற்பித்தல் திறன்கள் – பாகம் 02
வினாக் கேட்டல்
(Questioning)
வினாக்கேட்டல் திறன் பயனுள்ள கற்பித்தல் திறன்களின் மையப்புள்ளியாக உள்ளன. (Kerry, 2002, Walsh and Settes, 2005, Wragg and Brown, 2001c). ஆசிரியரின் வினாக்கேட்டல் திறனை வெளிப்படுத்தும் ஆராய்ச்சி ஆய்வுகள் வினாக்களைக் கேட்பதற்கு ஆசிரியர் வழங்கிய காரணங்களைக் அடையாளம் கண்டுள்ளன. அந்தவகையில் பாட முன்வைப்பின் போது ஆசிரியர் வினாக்களைக் கேட்பதற்குரிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.
- சிந்தனைகளை ஊக்குவித்தல், கருத்துக்கள் நிகழ்வுகள், நடைமுறைகள், மற்றும் மதிப்புக்களைப் புரிந்து கொள்ளல்.
- புரிதல்,அறிவு, மற்றும் திறன்களைச் சரிபார்த்தல்.
- குறித்த பணியில் கவனத்தைக் குவிப்பதற்கு.
- ஆசிரியர்களுக்கு கற்பித்தல் புள்ளியை நோக்கிச் செல்ல.
- பாடப்பிரவேச செயற்பாட்டிற்கு.
- மறுபரிசீலனை செய்தல், திருத்துதல், கற்றுக் கொண்டவற்றை நினைவுபடுத்துதல், சமீபத்தில் கற்றுக் கொண்டவற்றை வலுப்படுத்துதல், முந்தைய நடைமுறைகளை நினைவுபடுத்ததல்.
- முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு, தீர்வு காணுதல்,.
- மாணவர் அழைப்புக்கள், கேள்விகள், சந்தேகங்களை நிர்வகிப்பதற்கு.
- ஆசிரியரில் அல்லது பாடத்தில் கவனம் செலுத்துத்த தூண்டுதல்.
- தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை செய்தல்.
- மாணவர்களின் பதில்களைக் கொண்டு முழு வகுப்பிற்கும் கற்பிப்பதல்.
- பிரகாசமான மாணவர்களைத் தூண்டுவதால், மற்ற மாணவர்களை ஊக்குவித்தல்.
- கூர்மையான மாணவர்களின் கவனத்தை ஈர்த்தல்.
- விமர்சன ரீதியான பதில்களுக்குப் பின்னர் மாணவர்களின் அறிவைச் சோதிக்கலாம்.
- கேள்வி கேட்ட மாணவரிடமோ அல்லது ஏனைய மாணவரிடமோ மீண்டும் நேரடிக் கேள்கிகளைக் கேட்டலாம்.
- உணர்வுகள், காட்சிகள், வெளிப்பாடுகளை அனுமதித்தல்.
வினாக்களின் வகைகள்
Types of questions
திறந்த மற்றும் மூடிய கேள்விகளுக்கிடையில் பயனுள்ள வேறுபாட்டைக் காணலாம். திறந்த வினாக்கள் பல சரியான பதில்களைக் கொண்டிருக்கலாம். அதே சமயம் மூடிய வினாக்களுக்கு சரியான ஒரே பதில் மட்டுமே இருக்கும்.
உயர் வரிசைக் கேள்விகளுக்கும் (High order), கீழ்வரிசைக் கேள்விகளுக்குமிடையில் (Low order) மற்றுமொரு பயனுள்ள வேறுபாட்டைக் காணலாம். உயர்வரிசைக் கேள்விகளில் பகுப்பு, தொகுப்பு, மதிப்பீடு ஆகியவை அடங்கும். அதே சமயம் கீழ்வரிசைக் கேள்விகள் எளிமையான கிரகித்தல், அல்லது ஞாபகத்துடன் தொடர்புடையவை.
திறந்த உயர்வரிசைக் கேள்விகளைக் காட்டிலும் மூடிய கீழ்வரிசைக் கேளிவிகளையே ஆசிரியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றார்கள் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
திறந்த மற்றும் உயர்வரிசைக் கேள்விகள் மிகவும் அறிவு பூர்வமாக கோருவதுடன் தூண்டலை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன. இந்த வகைக் கேள்விகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
முன்பு சுட்டிக்காட்டிய படி கேள்விகளைக் கேட்பதற்குப் பின்னாலுள்ள நோக்கங்களின் வரம்பை ஆசிரியர் மனதில் கொள்ளுதல் வேண்டும்.
திறந்த மற்றும் உயர் வரிசைக் கேள்விகள் அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் பாடத்துக்குப் பொருத்தமான வேகத்தைப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. பெரும்பாலான மாணவர்களை ஈடுபடுத்துதல் போன்ற பிற நோக்கங்களைக் கட்டுப்படுத்தாமல் இவற்றை அடிக்கடி பயன்படுத்தவது கடினம். கற்பித்தல் திறன்களின் அனைத்து அம்சங்களைப் போலவே ஒரே நேரத்தில் வெவ்வேறு நோக்கங்களின் வரம்பைச் சந்திப்பதில் சமநிலை தேவைப்படுகின்றது.
பயனுள்ள வினா
(Effective questioning)
Kerry (கெர்ரி) (2002) பயனுள்ள வினாவுக்குரிய ஏழு திறன்களைக் குறிப்பிடுகின்றார்.
- வினாக்களுக்கான மொழி மற்றும் உள்ளடக்க அறிவை வகுப்பிற்கு ஏற்ப பொருத்தமாக இணைத்துக் கொள்ளுதல்.
- வகுப்பைச் சுற்றி கேள்விகளை விநியோகித்தல்.
- தேவைப்படும் போது துப்புக்களை வழங்குதல்.
- மாணவர்களின் பதில்களை (தவறானவை கூட) நேர்மறையான வழியில் பயன்படுத்துதல்.
- நேரக் கேள்விகள் மற்றும் கேள்விகளுக்கிடையில் இடை நிறுத்தங்கள்.
- உயர்வரிசைக் கேள்விகளில் அறிவாற்றல் கோரிக்கைகளை அதிகரிக்க முறையாக கற்றுக் கொள்ளுதல்.
- எழுதப்பட்ட கேள்விகளைத் திறம்படப் பயன்படுத்ததல்.
கேள்விகளைக் கேட்கும் போது இரண்டு விடயங்களை மனதில் கொள்ளுதல் வேண்டும்.
- கேள்வி கேட்கும் போது வகுப்பறைக் காலநிலை ஒன்று அவசியம். ஒரு கேள்விக்குப் பதிலளிப்பது, குறிப்பாக வகுப்புத் தோழர்கள் முன் உணர்ச்சி ரீதியாக அதிக ஆபத்துள்ள செயலாகும். எனவே கேள்வி கேட்கும் போது வகுப்பறைக் காலநிலை ஒன்று அவசியம். வகுப்பறைக் கால நிலை என்பது மாணவர்களின் பதிலுக்கு ஆசிரியரும் பிற மாணவர்களும் மரியாதை அளிப்பதைக் குறித்து நிற்கின்றது.
- சில மாணவர்களைக் கேள்விகளை தவிர்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது.
சில மாணவர்கள் தாங்கள் கவனிக்கப்படுவதைத் தவிர்ப்பதில் திறமையானவர்கள் என்பது தெளிவாகியுள்ளது. மேலும் இவர்கள் ஆசிரியரருடனான எந்தவொரு தொடர்பையும் விரைவாக நிறுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். இத்தகைய மாணவர்களும் ஈடுபட வேண்டும், பாடத்திற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
திறமையான வினாக்களைக் குறிக்கும் பல்வேறு அம்சங்கள்
A number of features characterise skilful questioning.
நாம் கேள்வியை முடிக்கும் வரை பதிலளிக்க இருக்கும் மாணவரைப் பெயரிட கூடாது என்பது பயனுள்ளதொரு நுட்பமாகும். இது அனைத்து மாணவர்களும் கவனத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தகின்றது. கேள்வியைக் கேட்கும் போது அது தெளிவாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
மாணவர்களுக்குக் கடினமாக இருந்தால் கேள்வியை வேறு வழியில் மீள்வடிவமைத்தல் அல்லது சாரக்கட்டு முறையைப் பயன்படுத்தவதன் மூலம் மாணவனை ஒரு பதிலை நோக்கி வழிகாட்டுவது பயனுள்ளதாய் இருக்கும்.
கூட்டாளர்களுடன் பேசுவதற்கும், பதில்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் மாணவர்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுப்பது உயர்தர சிந்தனையை மேம்படுத்தவதற்கு பயனுள்ளதாய் இருக்கும்.
மிக முக்கியமாக பதிலில் நாம் ஆர்வத்தோடு இருப்பதை உணர்த்தும் வகையில் கேள்விகளைக் கேட்க வேண்டும். மாணவருடன் கண் தொடர்பைப் பேண வேண்டும்.
மற்ற மாணவர்களுக்கு அமைதியாய் செவிமடுக்கும் மரியாதைப் பண்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒரு மாணவனைத் தூண்டும் போது அல்லது உதவும் போது இதன் நோக்கம் மாணவர்களின் சிந்தனைக்கு உதவுவதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே துப்புக்களைக் கொடுக்கும் போது இது மாணவனின் சிந்தனையைத் தூண்டுவதாய் அமைய வேண்டும்.
இறுதியாக கொடுக்கப்பட்ட பதிலுக்கு ஒரு மாணவர் எவ்வாறு வந்தார் என்பதை சோதித்து பார்ப்பது பயனுள்ளதாய் இருக்கும்.
வகுப்பறைக் கலந்துரையாடலை நெறிப்படுத்துதல்
Directing classroom discussion
இங்கு பேச வேண்டிய முக்கிய விடயம் ஆசிரியரின் ஊடாக நடைபெறும் வகுப்பறைக் கலந்துரையாடலாகும். இது ஆசிரியர் மற்றும் மாணவர் விளக்கங்கள், வெளிப்பாடுகள், வினாக்கள் போன்றவற்றின் கலவையாகும்.
வகுப்பறை விவாதத்தின் போது நாம் எடுக்க வேண்டிய இரண்டு முக்கிய முடிவுகள் உள்ளன. முதலில் வகுப்பறையை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
மாணவர்களை ஒருவருக்கொருவர் பார்க்கவும் கேட்கவும் ஏற்பாடு செய்வது பொருத்தமானதா? என்றவாறு வகுப்பறையை ஒழுங்கமைத்தல் வேண்டும்.
இரண்டாவதாக நாம் விவாதத்தை எந்தளவிற்கு வழிநடாத்தப் போகிறோம் என்பதை கருத்தில் கொள்ளுதல் வேண்டும். விவாதத்தின் ஓட்டத்தையும் வளர்ச்சியையும் வடிவமைப்பதில் முக்கிய பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
வகுப்பறை விவாதத்தை நல்ல விளைவுக்குப் பயன்படுத்துவதற்கு அத்தகைய கலந்துரையாடலின் நோக்கத்தைக் குறிப்பிடுவதும், விவாதம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைக் குறிப்பிடுவதும், முடிவில் என்ன முடிவுகளை எடுக்க முடியும் என்பதை சுருக்கமாகக் கூறிப்பிடுவது பயனுள்ளதாகும்.
வகுப்பறைக் கலந்துரையாடலுக்கான பிரதான நோக்கங்களில் ஒன்று மாணவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும், வளர்த்துக் கொள்ளவும் வாய்பளிப்பதாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இதற்கு ஊக்கமும் தவறான கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கும் சகிப்புத் தன்மையும் தேவைப்படும்.
முழு வகுப்பும் ஊடாடும் கற்பித்தல்
(Whole-class interactive teaching)
சமீபத்திய ஆண்டுகளில் “ஊடாடும் கற்பித்தல்” எனப்படும் புதிய வகை கற்பித்தல் பாணி பரவலாக பேசப்படுகின்றது. (Moyles 2003, hayes, D. 2006).
இந்த கற்பித்தல் பாணி கையிலுள்ள தலைப்பைப்பற்றி உயர்மட்டச் சிந்தனையில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான வெளிப்பாடு மற்றும் கேள்விகளை திறம்பட பயன்படுத்தவதையும் உள்ளடக்கியுள்ளது.
பாடத்திற்கு உயிரோட்டமான மற்றும் மிதமான உணர்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆசிரியர் கேள்விகளுக்கு உயர்தரமான பதில்களை அனுமதிக்க பொருத்தமான நேரத்தில் போதுமான சிந்தனை நேரத்தை மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
பொதுவாக ஆசிரியர், மாணவர்கள் செய்வதற்காக குறுகிய பணிகளைக் கொடுப்பார். அல்லது பதில்களைக் கேட்பதற்கு முன் சில நிமிடங்கள் ஜோடியாக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுப்பார்.
இந்த கற்பித்தல் பாணியானது, மாணவர்களின் ஈடுபாட்டையும், பங்களிப்பையும் தக்கவைத்துக் கொள்வதில் தேவையான திறன்களைச் செயல்படுத்துகின்றது. குறிப்பாக வகுப்பில் குறைந்த திறன் கொண்ட மாணவர்கள் மற்றும் சமூக ரீதியில் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் இப்போதனையால் அச்சுறுத்தப்படுவதில்லை.
இங்குள்ள சிறப்பம்சம் என்னவென்றால் ஆசிரியர் சொல்வதையும், மற்ற மாணவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் விவாதிக்க மற்றும் கருத்துத் தெரிவிக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதாகும்.
இந்த வகையில் உயர்தரமான மாணவர் உரையாடலை உருவாக்குவது ஆசிரியர் எதிர்கொள்ளும் சவாலான மிகப் பெரிய பணியாக உள்ளது. (Myhill 2006).
Board மற்றும் Projector பயன்படுத்துதல்
Using the board and projector
கரும்பலகை அல்லது வெண்பலகை இன்னும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கற்பித்தல் சாதனமாக உள்ளது. கரும்பலகை அல்லது வெண்பலகைப் பயன்பாட்டின் தரமானது நமது கற்பித்தலின் முக்கிய குறிகாட்டியாக இருக்கும்.
நன்கு தயாரிக்கப்பட்ட தெளிவான பயன்பாட்டை உடைய வெண்பலகை அல்லது கரும்பலகைப் பயன்பாடானது வினைத்திறனாக கற்பித்தல் சாதனமாக மட்டுமல்லாது நாம் பயன்படுத்தும் வேலை மற்றும் முன்வைப்பின் தரத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாகவும் உள்ளது.
Board நினைவூட்டுவதற்கும், முக்கிய புள்ளிகளைப் பதிவு செய்வதற்கும் உதவியாக இருக்கலாம் உதாரணமாக, புதிய சொற்கள் அல்லது கடினமான சொற்களின் எழுத்துப்பிழைகளை குறித்தல், மாணவர்கள் குறிப்புக்களை எடுக்க உதவுதல், எதிர்கால பகுப்பாய்வுக்குத் தேவையான மாணவர்களின் ஆலோசனைப் பட்டியலைத் தயாரித்தல்.
Board ஐ பயன்படுத்தும் போது ஆசிரியர் எதிர்நோக்கும் ஆபத்து என்னவென்றால் Board இல் எழுதும் போது முக்கியமாக ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டியிருந்தால், நாம் பேசும் போது வகுப்பை எதிர்கொள்ள நமது தலையைத் திருப்ப வேண்டியிருப்பதாகும்.
ஊடாடும் வெண் பலகைகள் (interactive whiteboards) மற்றும் புரொஜக்டர் பயன்பாட்டிலும் இது போன்ற முக்கிய குறிப்புக்களைக் கூறலாம். இருப்பினும் இங்கு நல்ல விளைவுகளுக்கு முன்கூட்டியே கற்பித்தல் சாதனங்களை தயாரிக்க முடியும். திரையிலுள்ள திட்டம் வகுப்பறை முழுவதும் தெளிவாகத் தெரியும் என்பதையும் காட்சியை, திரையை நாம் மறைக்கவில்லை என்பதையும் எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அனுபவமிக்க ஆசிரியர்களிடையே கூட எப்போதாவது இவ்விடயத்தில் தவறு நடக்கலாம்.
குழுச் செயற்பாடுகள்
Group work
குழு வேலைச் செயல்பாடுகளை அமைப்பது ஆசிரியரின் ஒழுங்கமைப்பில் பல விரிவான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. (Jaques, 2000).
முதலாவதாக, குழுவின் அளவு, குழுக்கள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்ற கேள்வி உள்ளது. எம்மிடம் நான்கு தலைப்புக்களை உள்ளடக்கிய பயிற்சி வேலை இருந்தால் நான்கு குழுக்கள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் மீதமாய் இருந்தால் அல்லது தங்கள் குழுவில் யாராலும் விரும்பப்படாத ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் இருந்தால் என்ன செய்வது என்பது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும்.
இரண்டாவது கேள்வி என்னவென்றால் பயிற்சிப் பணியின் தன்மை பற்றியது. பணியில் என்ன இருக்கிறது? யார் எந்த பாத்திரத்தை ஏற்பார்கள்? பணி எப்படி எப்போது தயாரிப்பது என்பது தெளிவாக இருக்கின்றதா? ஒவ்வொரு குழுவும் சம்மந்தப்பட்ட காரணிகளைப் பற்றி விவாதிப்பதை விட முடிவில் ஒவ்வொரு குழுவும் முக்கியத்துவத்தின் வரிசையில் சம்மந்தப்பட்ட நான்கு முக்கிய காரணிகளின் பட்டியலைக் வழங்குவதா? இது போன்ற தெளிவான அறிவுறுதல்கள் இருக்க வேண்டும்.
பெரும்பாலும் பணியை Board இல் அல்லது ஒவ்வொரு குழுவுக்கும் கொடுக்கப்பட்ட கையேட்டில் எழுதுவது பொருத்தமாய் இருக்கும். ஒவ்வொரு குழுவும் முடிவில் யார் முதலில் அறிக்கைப்படுத்துவது என்பதை ஆசிரியரே தீர்மானிக்கலாம். அல்லது ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு மாணவரைப் பெயரிடலாம். சில மாணவர்களுக்கு இதைச் செய்வதற்கான அனுபவம் வழங்கப்படுவதை உறுதி செய்ய பிந்தைய முறை பயனுள்ளதாய் இருக்கும்.
குழு வேலையின் மூன்றாவது அம்சம் ஆசிரியரின் கண்காணிப்புப் பாத்திரத்தைப் பற்றியது. நெருக்கமான கண்காணிப்பு விரும்பத்தக்கது என்றாலும், குறிப்பாக எல்லோரும் பணியைப் பற்றி தெளிவாக உள்ளார்களா? எனச் சோதிப்பதில் ஆசிரியரின் இருப்பு குழுச் செயற்பாட்டில் தடுப்பச் சுவராக அமைவதற்கும் இடமுண்டு.
மேலும் எல்லாம் ஒழுங்காக இருக்கின்றதா? என்பதை சோதிக்க எந்நேரத்திலும் உட்காந்திருப்பதை விட ஒவ்வொரு குழுவிலும் சிறிது நேரம் மட்டுமே செலவழிப்பது நல்லது.
நான்காவது, நேரமுகாமைத்துவ நெறிப்படுத்தல்கள் பெரும்பாலான குழுச் செயல்பாடுகளுக்கு முக்கியமானவையாக உள்ளன. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு குழுவுக்கும் உரிய நேரம் எவ்வளவு என்பதையும், பணியின் ஒவ்வொருபடியிலும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதையும் சொல்லுவது பயனுள்ளதாய் அமையும்.
குழு வேலை பற்றிய கடைசி அம்சம் வெற்றிகரமாக குழுவேலையில் ஈடுபடுபடும் மாணவர்களிடையே குழு வேலைக்குரிய திறன்களை வளர்க்க உதவுவதாகும். குழுச் செயற்பாடுகளை நல்ல விளைவுகளைப் பெற பயன்படுத்துவதானால் மாணவர்கள் அது தொடர்பாக பல்வேறு திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். நடைமுறையில் உங்களிடமிருந்து வரும் பின்னூட்டல்களும், வழிகாட்டல்களும் அத்தகைய திறன்களை வளர்க்க உதவும்.
Kutnick (2005) என்பவரது ஆய்வில் இந்த நுட்பம் நன்கு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது குழு வேலைகளை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பதற்கான ஆதாரங்களை நோக்காகக் கொண்டது. அந்த ஆய்வு அறிக்கை இதை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- மாணவர்கள் தங்கள் சொந்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு பணிகள் கூறுகளாக்கப்பட்டுள்ளன.
- பணி தொடர்பான குறிப்புக்கள் மற்றும் குழுவேலை குறித்த குறிப்புக்களை வழங்குவதன் மூலம் குழுக்கள் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு துணைபுரிகின்றது.
- ஒவ்வொரு கூறுகளுக்குமான நேரம் வெளிப்படையானது.
தூண்டுதல் மாறுபாட்டுத் திறன்
The Skill of Stimulus Variation
தூண்டுதல்களில் திறமையான மாற்றம் தூண்டுதல் மாறுபாட்டுத் திறன் என அழைக்கப்படுகின்றது. சலிப்பைத் தவிர்ப்பதற்கு, மாணவர்களின் செயலில் பங்கேற்பு உற்சாகத்தையும், படிப்பின் உணர்வையும் அதிகரிக்கத் தூண்டவது ஆசிரியரின் திறமையாகும்.
தூண்டுதல் மாறுபாடு என்பது ஆசிரிய மாணவர்கள் செய்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட சில விடயங்களில் கவனம் செலுத்துகின்றது.
ஒரே இடத்தில் நின்று கற்பிப்பதை முறையாக நகர்த்துவது, மற்றும் தவிர்ப்பது, சைகைகளைப் பயன்படுத்தவது, வாய்மொழி மற்றும் வாய்மொழி அல்லாத முறைகளைப் விருத்தி செய்து பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கான கற்பித்தல் முறைகளை உருவாக்குதல், மாணவர் பங்கேற்பினை உக்குவிப்பதன் மூலமும் தகவல் தொடர்பு முறைகளை மாற்றுவதன் மூலம் ஆசிரியரின் ஒருதலைப்பட்சமான கற்பித்தலில் மாற்றத்தைக் கொணர்வது, பல்வேறு உணர்ச்சி சார் விடயங்களை பயனுள்ளவாறு கட்டுப்படுத்துவது என பல்வேறு விடயங்களை இது சுட்டி நிற்கின்றது.
வகுப்பறையில் ஆசிரியரின் கற்பித்தலின் நோக்கம் பாடத்தை கவர்ச்சியாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதாகும். இதற்காக பல்வேறு வகையான முறைகள் நட்பங்களைப் பயன்படுத்துவது இன்றியமையாததாகும்.
மாணவர்களை ஈர்ப்பதற்காக ஆசிரியர் பல்வேறு வகையான தூண்டதல்களை முன்வைக்கலாம். மற்றும் தூண்டுதலாக செயற்படலாம். உடலின் இயக்கம், சைகை, பேச்சில் மாற்றங்கள், உணர்வை மையப்படுத்ததல், மாணவர்களிடையே தொடர்புப் பாணியில் மாற்றம், இடைநிறுத்தம் மற்றும் ஓடியே வீடியோ சாதனங்களின் வரிசையில் மாற்றங்களைக் கொண்டு வருவது என பல்வேறு தூண்டுதல்களை முன்வைக்கலாம்.
தூண்டுதலாக செயல்படும் இந்த அம்சங்களை மாற்றவதன் மூலம் ஆசிரியர் கற்பவர்களை ஈர்க்கலாம்.
தூண்டுதல் மாறுபாடு என்பது கவனத்துடன் இருக்க உதவுவதன் மூலம் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகும். இது மாணவர்களின் கவனத்தை பராமரிக்கும் ஒரு வழிமுறையாகும். ஆசிரியர் நீண்ட நேரம் பேசினால் மாணவர்கள் ஆசிரியரிடம் ஆர்வத்தை அல்லது கண் தொடர்பை இழக்க நேரிடும்.
மாறுபட்ட தூண்டுதல்களின் மூலம் மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் மாணவர்களுக்கு ஆர்வம் உள்ள வகையில் ஆசிரியர் அதிகம் பேசுவதைத் குறைக்க வேண்டும்.
மாணவர்களின் கற்றல் பெரும்பாலும் தொடர்புடைய தகவல்களின் மூலத்தில் கலந்து கொள்வதைச் சார்ந்திருக்கின்றது. கற்பவர் தகவல்களை கவனமாக கவனிக்க வேண்டும் என்பது உண்மையானது. பயனுள்ள கற்றலுக்கு கவனம் ஒரு முன் நிபந்தனை. மாணவர்களின் கவனத்தைத் தக்க வைக்க ஆசிரியர் ஆசிரியராக என்ன செய்வார், அவர் சொல்ல விரும்புவதை நோக்கி மாணவர்களது கவனத்தை ஈர்க்கவும், பராமரிக்கவும், வேண்டுமென்றே வகுப்பில் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தூண்டுதல் மாறுபாட்டின் திறன், கற்பிக்கப்படும் விடயத்தில் மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும், தக்கவைத்துக் கொள்வதற்கும், ஆசிரியரின் நடத்தை வேண்டுமென்றே மாற்றப்படுவதை உள்ளடக்குகின்றது.
மேலும் சூழலில் தூண்டுதல்களை மாற்றுவதன் மூலம் மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதையும், கவனம் செலுத்துவதையும் குறிக்கின்றது. தூண்டுதல் மாறுபாடு மாணவர்களிடையே அவர்களின் கற்றலில் ஆர்வத்தை உருவாக்குகின்றது. எனவே இது அவர்களின் கல்விச் சாதனைக்கு உதவுகின்றது.
மாணவர்கள் ஒரே விடயத்தில் தொடர்ச்சியாககப் பங்கேற்பது ஒப்பீட்டளவில் அசாதாரணமானது. ஒரு தூண்டுதலுக்கு சில நிமிடங்கள், சில நேரங்களில் சில வினாடிகள் அல்லது அதற்கும் குறைவாக பங்கேற்பது மிகவும் கடினம். எனவே பாடத்தின் மீது மாணவர்களின் கவனத்தை பாதுகாப்பதற்கும் நிலை நிறுத்துவதற்கும் தூண்டுதலில் மாறுபாடுகள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் கற்றலுக்கான முன் நிபந்தனை கவனம்.
ஒரு வளமான ஆசிரியர் கற்பித்தல் முழுவதும் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும், தக்கவைக்கவும் தேவையான திறனை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். மாணவ ஆசிரியர்களுக்கு தூண்டுதல் மாறுபாட்டின் திறன்களை பயிற்றுவிப்பதானது, மாணவர்களுக்கு சலிப்பை எற்படுத்தும் கற்பித்தல் பாணியை அவர்கள் தவிர்ப்பதற்கு உதவுவதை நோக்காகக் கொண்டுள்ளது.
வெவ்வேறு வழிகளில் மாறுபடும் ஒரு தூண்டுதல் மாணவர்களின் நோக்குநிலை நடவடிக்கைகளைப் பராமரிப்பதில் வலுவான தாக்கங்களில் ஒன்றாக உள்ளது. கவனமாகக் கட்டமைக்கப்பட்ட கற்பித்தல் சாதனங்கள் மற்றும் பாடத்துக்கான அணுகுமுறைகள் மற்றும் ஆசிரியர் பாடத்தை நடத்தும் முறை கூட இங்கே ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எந்தவொரு பாடத்தின் வெற்றிக்கும் கற்றல்-கற்பித்தல் செயல்முறையின் போது மாணவர்களின் கற்றலை பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியமாகும்.
மாணவர்களின் பங்கேற்பைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.
- தீவிரம் : ஒரு சத்தமான ஒலி, பிரகாசமான ஒளி, எந்தவொரு கவனத்தையும் ஈர்க்கும். இருப்பினும் சத்தம் மற்றும் பிரகாசத்தின் தொடர்ச்சியானது கவனத்தை ஈர்ப்பதில் விரைவாக குறைந்து வரும் விளைவுகளைக் கொண்டுள்ளன.
- வேறுபாடு : சுற்றியுள்ள சூழலில் உள்ள மற்ற விடயங்களை விட பெரியது எதுவும் கவனத்தை ஈர்க்கின்றது. ஒருவரின் புலனுணர்வு கவனத்தை ஈர்ப்பதில் வித்தியாசத்தை ஏற்படுத்தகின்றது.
- நகர்தல் : ஒரு தலையான விடயத்துடன் ஒரு நகரும் விடயம் நம் கவனத்தை அதிகளவில் ஈர்க்கின்றது. சுயசெயற்பாடு பற்றி அவர்களிடம் கேட்பது அல்லது பணியில் ஈடுபட தேவையான ஆலோசனைகளை வழங்குவது கவனத்தை ஈர்க்கின்றது.
- ஓடியோ – காட்சி சாதனங்கள் : ஓடியோ – காட்சி சாதனங்கள் மாணவர்களின் கற்றலில் உதவ பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன என நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும், வைத்திருக்கவும், யுஏ யனைள ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாய் உள்ளன. உங்கள் கற்பித்தல் மிகவும் பயனுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க பல்வேறு ஓடியோ – காட்சிகளைப் பயன்படுத்த வேண்டும்.
- ஆசிரியரின் தனிப்பட்ட நடத்தைகள் : ஆசிரியர் உற்சாகமாக, சுறுசுறுப்பாக, தூண்டுதலாக, வெளிப்படையாகவும் இருந்தால் அவர் மந்தமாக அல்லது சலிப்பாக இருப்பதை விட அதிக கவனத்தை பெறுகின்றார்.
உசாத்துணை :
Kyriacou CHRIS 2007), Essential Teaching Skills, Nelson Thornes Ltd, Delta Place United Kingdom.
சி.லோகராஜா
விரிவுரையாளர்
தேசிய கல்வியியல் கல்லூரி
மட்டக்களப்பு.