மனித நடவடிக்கைகளால் இரசாயனங்களாக சூழலை வந்தடையும் குளோரின், புறோமின் அணுக்களைக் கொண்ட அலசனேற்றப்பட்ட ஐதரோ காபன்களே ஓசோன் படையை நலிவடையச் செய்யும் பிரதான காரணிகளாகக் கண்டறியப்பட்டன. அத்தகைய பதார்த்தங்களின் உற்பத்தியையும் பாவனையையும் மெதுமெதுவாகக் குறைப்பதன் அவசியத்தை உணர்ந்து சில நாடுகள் ஒன்றிணைந்து 1985 ஆம் ஆண்டு வியன்னா மாநாட்டில் ஓசோன் படை நலிவடைதல் தொடர்பில் சில வசதிப்படுத்தல்களை மேற்கொண்டன.
வியன்னா உடன்படிக்கையானது, ஒசோன் நலிவடைதலைக் கிரமமாகக் கண்காணித்தல், அதனை நலிவடையச் செய்யும் பதார்த்தங்களைக் குறைத்தல், இவற்றுடன் தொடர்புடைய ஆய்வுகள் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்காக அரசாங்கங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வசதிப்படுத்துவதாக அமைந்தது. பின்னர் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 47 நாடுகளின் கூட்டணி இணைந்து கனடா நாட்டின் மொன்ட்றியல் மாகாணத்திலே கூடியது. ஒசோன் படை நலிவடைவதைத் தடுப்பதற்காக உலகளாவிய முயற்சியை ஆரம்பிப்பதற்கான முதலடி அங்கே எடுத்து வைக்கப்பட்டது. இம்முயற்சியைச் சட்டபூர்வமாக்குவதும் உலகளாவிய ரீதியிலே சகல நாடுகளினதும் பங்குபற்றலைப் பெற்றுக் கொள்வதுமே இதன் பிரதானமான நோக்கங்களாகும். தற்போது 197 நாடுகள் இவ்வுடன்படிக்கையின் பங்காளர்களாக அங்கத்துவம் வகிப்பதன் மூலம் இன்றைய உலகில் அதிகளவு வெற்றி பெற்ற ஒப்பந்தங்களுள் ஒன்றாக மொன்றியல் ஒப்பந்தத்தை மாற்றியுள்ளன.
ஆரோக்கிய மற்றும் சூழல் பிரச்சினைகள்:
ஒசோன் படை நலிவடைதலானது பரந்தளவிலான சூழல் மற்றும் ஆரோக்கியப் பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது. தோல் புற்றுநோய், கண் புரை, நோயெதிர்ப்பு சக்திக் குறைபாடு, பாரம்பரிய அலகுகளில் ஏற்படும் பிறழ்வுகள் என இன்னோரன்ன சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. அவை மட்டுமன்றி, சூழல் ரீதியாகப் பார்க்கும் போது அதிசக்தி மிகுந்த புறஊதாக் கதிர்கள் தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிக்குமென அறியப்பட்டுள்ளன. இப்புற ஊதாக் கதிர்கள் நீர்ப்பரப்பினுள் ஊடுருவி மீன்கள் , நீர்வாழிகளின் முட்டைகளை வேகமாக அழித்து விடுகின்றன. ஓசோன் படையை நலிவடையச் செய்யும் வாயுக்கள் பச்சை இல்ல வாயுக்களாகவும் தொழிற்பட வல்லவை. அவை ஒசோன் படையை நலிவடையச் செய்வதோடு மட்டுமல்லாமல், புவி வெப்பமயமாதலையும் ஏற்படுத்துகின்றன. வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க காலநிலையும் வேகமாக மாற்றமடையும்.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்கள்:
வியன்னா ஒப்பந்தம் மட்டுமல்லாது 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த மொன்ட்றியல் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்ட இலங்கை, ஓசோன் படையைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தகு பங்களிப்பை வழங்கியுள்ளது. ஒசோன் படையைப் பாதிக்கும் வாயுப் பதார்த்தங்களான குளோரோ புளோரோ காபன்கள் (CFCs), ஐதரோ குளோரோ புளோரோ காபன்கள் ஆகியன (HCFCs) குளிர்சாதனப்பெட்டிகளின் குளிரூட்டிகளாகவும் வளிச் சீராக்கிகளிலும் பயன்படுகின்றன. ஓசோன் படையை நலிவடையச் செய்யும் இத்தகைய 96 வாயுப் பதார்த்தங்கள் இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 56 பதார்த்தங்களின் உற்பத்தியும் பாவனையும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 40 ஐதரோ குளோரோ காபன்களையும் இல்லாதொழிக்கும் செயற்றிட்டங்கள் 2013 இல் ஆரம்பிக்கப்பட்டதுடன் 2030 அளவில் நிறைவடையுமெனெ எதிர்பார்க்கப்படுகின்றது.
2013 இலிருந்து மேற்கொள்ளப்படும் ஐதரோகுளோரோ காபன்களை இல்லாதொழிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 9 மாகாணங்களிலும் குளிரூட்டி வாயு மீட்பு மற்றும் சீர்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டதால் வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் வாயுக்களின் அளவும் அவ்வாயுக்களால் ஏற்படும் சூழல் பாதிப்புகளும் குறைவடைவதுடன் குளிர்சாதனப் பெட்டிகள் சார்ந்த புதிய சந்தை வாய்ப்பும் உருவாகியுள்ளது. அதாவது பழைய குளிர்சாதனப் பெட்டிகளுக்கான சந்தை மட்டுமன்றி சூழல் தரங்களுக்கேற்ற நியமங்களைப் பின்பற்றுவதற்கான செலவு குறைந்ததுடன் புதிய குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவையும் குறைவடைந்து குளிர்சாதனப் பெட்டிகளின் ஆயுட்காலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
குளிரூட்டல் மற்றும் வளிச் சீராக்கல் சேவைகளில் பொருத்தமான உபகரணங்களையும் கருவிகளையும் பாவித்தல் அவசியம்.
கிடைக்கப் பெற்ற அமைச்சரவை அனுமதிக்கமைய குளிரூட்டல் மற்றும் வளிச் சீராக்கல் சேவைகளை வழங்கும் போது நிறுவனங்கள் பொருத்தமான கருவிகளையும் உபகரணங்களையும் பாவிப்பது 01.01.2019 இலிருந்து கட்டாயமாக்கப்பட்டது. ஐதரோ புளோரோ காபன் பதார்த்தங்களை இல்லாதொழிக்கும் இலங்கையின் செயற்பாட்டை வலுப்படுத்துமுகமாகவே இந்நடைமுறையானது அமுலுக்கு வந்தது. அத்தகைய சேவை வழங்குநர்களுக்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான கட்டாயத் தேவையாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை நிர்ணயித்திருக்கிறது.
குளிரூட்டல் மற்றும் வளிச் சீராக்கி சேவைத் துறைகளில் பணிபுரியும் தொழில் நுட்பவியலாளர்களின் தரவுத்தளம்:
இலங்கையில் ஒசோன் படையை நலிவாக்கும், புவி வெப்பமயமாதலைக் கூட்டும் இரசாயனங்களின் பாவனையில் முன்னணி வகிக்கும் துறைகளில் குளிரூட்டல் மற்றும் வளிச் சீராக்கி சேவைத் துறையும் ஒன்றாகும். அத்துடன் இத்துறைகளில் உள்ள தொழில்நுட்பவியலாளர்கள் அவ்விரசாயனங்கள் தொடர்பிலும் அவற்றின் பாவனையால் ஏற்படும் தீங்குகள் தொடர்பிலும் போதிய அறிவைக் கொண்டிருப்பதில்லையென்பதால் அவ்விரசாயனங்களை எந்தவித பரிகரிப்புமின்றி வளிமண்டலத்தில் கலக்க விடுகின்றனர். அப்பிரச்சினையைத் தீர்க்குமுகமாக சுற்றாடல் அமைச்சானது இலங்கைமுழுவதுமுள்ள அத்தொழில்நுட்பவியலாளர்களின் விபரங்களைச் சேகரிப்பதற்காக தரவுத்தளமொன்றை விருத்தி செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக தேசிய ஓசோன் அலகானது இலங்கை முழுவதுமுள்ள பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள குளிரூட்டல் மற்றும் வளிச் சீராக்கி சேவை வழங்குநர்களின் விபரங்கள் கொண்ட தரவுத் தளத்தை உருவாக்கியுள்ளது.
ஒசோன் படைக்குப் பாதகமான இரசாயனங்களின் பாவனை தொடர்பில் ஒழுங்குவிதிகளை உருவாக்குதலும் இச்சேவைகளைச் சான்றுப்படுத்தலும்:
இலங்கை கைச்சாத்திட்ட சர்வதேச உடன்படிக்கைகளுக்கமைய ஒசோன் படைக்குப் பாதகமான இரசாயனங்களின் பாவனை தொடர்பில் ஒழுங்குவிதிகளை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேசிய ஓசோன் அலகு மேற்கொண்டுள்ளது. அத்துடன் வழங்குநர்களால் மேற்கொள்ளப்படும் குளிரூட்டல் மற்றும் வளிச் சீராக்கி சேவைகளை உத்தியோகபூர்வமாக சான்றுப்படுத்தும் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனிநபர் தொழில்நுட்பவியலாளர்கள் முறையான பயிற்சியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள். ஆயினும் அனுபவத்தாலும் முறைசாராப் பயிற்சிகளாலும் இச்சேவையை வழங்கும் திறனைப் பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர். குளிர்சாதனப் பெட்டி, வளிச்சீராக்கி பழுதுபார்த்தல், சூழல்நேய நுட்பங்கள் தொடர்பிலான தேசிய பட்டறைகள் மூலம் அவர்களுடைய அறிவும் திறனும் முறையே மதிப்பீடு செய்யப்பட்டு பரீட்சையில் தேர்வடைபவர்களுக்கு உரிய தரத்துக்குரிய தொழிற்கல்வித் தராதரச் சான்றிதழானது கற்றலை அங்கீகரித்தல் முறைமையின் மூலம் வழங்கப்படும்.
கிகாலி திருத்தத்தில் கைச்சாத்திடல்:
மொன்ட்றியல் உடன்படிக்கையின் அண்மைய திருத்தமாகிய கிகாலி திருத்தத்தில் 2016 ஆம் ஆண்டு இலங்கை கைச்சாத்திட்டது. அதன் பின்னர் நாட்டின் தொழிற்றுறையும் பொருளாதாரமும் பாதிக்கப்படா வண்ணம் ஐதரோகாபன்களின் பாவனையை மட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் தேவையான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன. கிகாலி திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்திச் செயற்றிட்டமும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் செயற்றிட்டமும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மொறட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கான மதிப்பீட்டறிக்கை தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐதரோ குளோரோ காபனைக் குறைப்பதற்கான தயார்படுத்தல் -கட்டம் 2:
கட்டம் 1 இற்குரிய ஐதரோகுளோரோ காபன் பாவனை 2020 உடன் நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டுக்கும் 2030 ஆம் ஆண்டுக்குமுரிய ஐதரோகுளோரோ காபன் பாவனை கட்டம் 2இற்குரியதாகிறது. அதன்படி, 2020 ஆம் ஆண்டுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கும் இடையே 35 சதவீதத்தாலும் 2025 ஆம் ஆண்டுக்கும் 2030 ஆம் ஆண்டுக்குமிடையே 67.5 சதவீதத்தாலும் 2030 ஆம் ஆண்டளவில் 100 சதவீதத்தாலும் குறைக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மொன்ட்றியல் ஒப்பந்தத்தின் தாபக தினத்தைக் கொண்டாடும் வகையிலே ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதியை சர்வதேச ஒசோன் தினமாகக் கொண்டாடும் வண்ணம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்திலே 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் உலக ஓசோன் தினத்தை வருடாந்தம் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி பல்வேறுபட்ட தொனிப்பொருட்களில் கொண்டாடி வருகின்றன. இந்த வருடத்துடன் வியன்னா உடன்படிக்கை நடைமுறைக்கு வந்து 35 வருடங்களாகின்றன. அத்துடன் ஒசோன் படையைப் பாதுகாப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கியும் 35 வருடங்களாகின்றன.
ஓசோன் படையை நலிவடையச் செய்யும் பதார்த்தங்களின் பாவனை மற்றும் உற்பத்தியை 98 சதவீதத்தால் குறைப்பதற்காக மொன்ட்றியல் உடன்படிக்கையின் கீழ் அரசாங்கங்கள், விஞ்ஞானிகள், தொழிற்றுறை ஆகிய அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து ஒருங்கே இணைத்து செயற்படுகிறார்கள். இதன் மூலம் ஒசோன் படையானது 1980 க்கு முன்னர் இருந்த மட்டத்துக்கு மீளச் செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. பல தடவைகள் மீளத்திருத்தப்பட்ட மொன்ட்றியல் உடன்படிக்கையின் இறுதித் திருத்தமான கிகாலி திருத்தமானது 2019 ஆம் ஆண்டிலிருந்து அமுல்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. ஒசோன் படையை நலிவடையச் செய்யும் ஐதரோ குளோரோ காபன் களைப் பிரதியீடு செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட, புவி வெப்பமயமாதலைத் தூண்டும் வல்லமை அதிகமுள்ள ஐதரோபுளோரோ காபன்களின் உற்பத்தியையும் பாவனையையும் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
உலக நாடுகளைப் போல இலங்கையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட ‘வாழ்வுக்கான ஒசோன் ‘ எனும் தொனிப்பொருளிலே உலக ஒசோன் தினத்தை கொண்டாடியது. சுற்றாடல் அமைச்சினால் இணையவழிப் போட்டிகள் மட்டுமன்றி கலந்துரையாடல்கள் பலவும் நடைபெற்றன. பிரதான நிகழ்வானது கடந்த 16 ஆம் திகதி பத்தரமுல்லவில் அமைந்துள்ள ‘அபே கம’ நாடக அரங்கிலே நடைபெற்றது. சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர பிரதம விருந்தினராகவும் ஒசோன் படையை பாதுகாப்பதில் பங்காளர்களாக இருந்த ஏனைய அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசாங்கங்களுக்கிடையிலான நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். அத்துடன் இலங்கையின் தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
புவி மேற்பரப்பிலிருந்து 12 கி.மீ தொடக்கம் 50 கி.மீ வரை ஒசோன் படையானது பரந்து காணப்படுகிறது. அது புவி மேற்பரப்பைப் பாதுகாக்கும் இயற்கைக் கவசமாகத் தொழிற்பட்டு சூரியனிலிருந்து வெளிப்படும் புறா ஊதாக் கதிர்களிலிருந்து புவியில் வாழும் உயிர்களைப் பாதுகாப்பதுடன் புவியின் வெப்ப நிலையைச் சீராகப் பேணுவதிலும் பங்களிப்புச் செய்கிறது. இந்த ஒசோன் படையானது நலிவடைந்து வருவதை 1970 களிலே விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பல ஆய்வுகளின் பின்னர் ஒசோன் படையை அழிவடையச் செய்யும் இரசாயனப் பதார்த்தத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.